நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 20, 2014

குருவி.. குருவி..

இந்நேரம் வந்திருக்க வேண்டுமே!.. ஏன் இன்னும் காணோம் !.. - என்று நான் நினைத்து முடிவதற்குள் -

சொல்லி வைத்தாற்போல் - ஜன்னல் அருகில் நிழலாட்டம்..

வாங்க.. வாங்க.. வணக்கம்!..


வந்து விட்டோம்!.. என்ன நலம் தானே?..

நலம் தான்!.. என்ன சாப்பிடுகின்றீர்கள்?.. கம்பு, கேழ்வரகு, உடைத்த பருப்பு - என்ன வேண்டும் உங்களுக்கு?..

அதெல்லாம் தின்று வெகு நாட்களாகின்றன.. இப்போது தான் அங்கே ரொட்டித் துண்டுகளை உடைத்து நொறுக்கிப் போட்டார்கள்.. ஒரு கை பார்த்து விட்டு  - பறந்து வருகின்றோம்.. அப்புறம் என்ன சேதி!..

நீங்கள் தான் சொல்ல வேண்டும்!.. அப்புறம் - இன்று சர்வதேச சிட்டுக் குருவிகள் தினம்!.. நல்வாழ்த்துக்கள்!.. ஆல் போல் வேரோடி அருகு போல் தழைத்து -

அதான் ஆலமரங்களை எல்லாம் அழித்து விட்டீர்கள்!.. மண்ணில் விஷத்தைப் போட்டு - அருகம் புல்லுக்கும் ஆபத்தைக் கொடுத்து விட்டீர்கள்!.. இதில் நாங்கள் என்ன  - நீங்களும் தழைக்க முடியாது!..

உண்மைதான்.. மாறி வரும் கால சூழ்நிலையில்..


கால சூழ்நிலை ஒன்றும் தானாக மாறவில்லை. நீங்கள் தான் மாற்றி விட்டீர்கள். இல்லாவிட்டால் - நாங்கள் இங்கு வந்து பாலை வனத்தில் வாழ வேண்டும் என்ன தலையெழுத்தா!..

தப்பு தான்!.. முதலில் - தாகத்துக்கு ஏதாவது?.. தண்ணீர் வேண்டுமா!.. இல்லை.. பெப்சி கோலா!..

என்னது .. பெப்சி கோலா.. வா!..

நீங்கள் எல்லாம் குவைத் குருவிகளாயிற்றே!.. அது தான் - கோகோ கோலா..

இந்த கிண்டலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை!.. இருந்தாலும் குடிக்கிற தண்ணிக்கே அலையற நிலைமை வரப்போவுது உங்களுக்கு!.. ஆனா - இவங்க - கடல்ல இருந்து ( Seawater Desalination Plant) உப்புத் தண்ணிய நல்ல தண்ணியாக்கி - எவ்வளவோ செஞ்சுக்கிட்டு இருக்காங்க..

சரி.. விடுங்க.. உங்க மலரும் நினைவுகளை சொல்லுங்களேன்!..


என்னத்தச் சொல்றது.. வயலு, வரப்பு, வைக்கோல் போர் - ன்னு சுதந்திரமா திரிஞ்சோம்!.. ஓட்டு வீடு கூரை வீடு..ன்னு கூடு கட்டிக் கிடந்தோம். இப்ப எல்லாம் நவீனமயம் ஆகிப் போச்சு.. இதுல சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு... ன்னு பாட்டு வேற...

ஆமாமா!.. சிட்டுக்குருவி.. சிட்டுக்குருவி.. சேதி தெரியுமா... ன்னு கூட கேட்டாங்க..

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து... ந்னு அது வேற!.. ஏ.. உனக்கு என்ன வெட்கம்...

அது சரி.. நான் கேட்கவே இல்லை.. இவங்க எல்லாம் யாரு?..

இவங்களா.. இதோ இவங்க... ரெண்டு பேரும் என்னோட டார்லிங்ஸ்....

சரிதான்!... அவங்க...

அவங்க.. அடுத்த வீடு.. என் டார்லிங்கோட தோழி... 

அப்படியா!.. அவங்களோட  டார்லிங் வரவில்லையா?..

இல்லை.. அவர் முக்கியமான வேலையா இருக்கார்.. 

முக்கியமான வேலையா.. அது என்ன!..

அது.. வந்து.. அடைகாக்கிறார்!..

என்னது.. அடைகாக்கிறாரா!?..

ஆமா.. நாங்க என்ன மனுசங்களை போலவா?.. எனக்கென்ன... ன்னு போறதுக்கு!. இன்பம் துன்பம்,  அடைகாக்கிறது, பிள்ளைகளைப் பராமரிக்கிறது ... இப்படி எல்லாத்திலயும் எங்களுக்கும் சரிபங்கு!..

ஆகா.. என்ன இருந்தாலும் உங்களைப் போல வருமா!.. நீங்க எல்லாம் எங்க நாட்டில சுத்தி திரிஞ்ச அந்த காலத்திலேயே ... உங்ககிட்டயிருந்து இதை எல்லாம் கத்துக்காம போய்ட்டோம்!..

குதிரை ஓடிப் போன பிறகு கொட்டகையை பூட்டி வைக்கிறவங்க தானே நீங்க!.. அட.. ஓடிப் போன குதிரை திரும்பி வந்துன்னு வைச்சுக்கங்க.. கொட்டகை பூட்டிக் கிடந்தா... நஷ்டம் யாருக்கு!... இதையெல்லாம் சிந்திக்க வேணும்!.. மக்களே!..

நீங்க சொல்றது உண்மைதான்!.. இன்னமும் திருந்தாம.. வயல் வரப்பு, குளம் குட்டை, மரம் மட்டை.. ந்னு எல்லாத்தையும் அழிக்கிறதிலேயே குறியா இருக்கோம்.. தான் மட்டும் வாழணும் ..ன்னு நினைக்கிறது பெரிய தப்பு ..ன்னு யாரும் உணரலையே..


நீங்க.. உங்க மனைவி மக்கள் சொந்தக்காரங்க - மட்டும் சமுதாயம் இல்லை. அந்த பூமியில இருக்கிற எல்லா உயிர்களும் சேர்ந்ததுதான் சமுதாயம்.. ஈ எறும்பு எண்ணாயிரங்கோடி..ன்னு உங்க பெரியவங்க ... சொல்லி இருக்காங்க.. அதையெல்லாம் படிச்சதில்லையா!..

படிச்சோம்... அதெல்லாம்.. மார்க் வாங்கறதுக்காக படிச்சது... அதுல.. இதெல்லாம் வரல்லே.. அடுத்தவன் தோள்ல ஏறி மாங்கா பறிக்கிறது எப்படிங்கறது...தான் - எங்க படிப்புன்னு ஆகிப் போச்சு!.. சமுதாயம் பண்பாடு.. அப்படின்னு.. சொன்னா யார் மதிக்கிறாங்க!..

சமுதாயம் பண்பாடு..ங்கறது எல்லாம் உங்களை நீங்களே நல்லபடியா வாழ வச்சுக்கிறதுக்கு!..  ஈ எறும்பு, புழு பூச்சி, தேனீ தும்பி..ன்னு ஆரம்பிச்சு எங்கள மாதிரி ... அப்புறம் ஆடு மாடு ஆனை .. ந்னு அத்தனை ஜீவன்களையும் அழிச்சு போட்டுட்டு நீங்க மட்டும் நல்லா இருக்கணும்..ன்னு கோயில் கோயிலா ஏறி இறங்குறீங்க.. உங்களை எல்லாம் பார்த்தா கோயில்ல இருக்கிற சாமியே எழுந்திரிச்சு ஓடிப் போகும்!..

இப்ப கூட நெறய ஆர்வலர்கள் மரங்களைக் காப்பாத்தணும் .. பறவைகளைக் காப்பாத்தணும் ..ன்னு ..  மக்கள் கிட்ட பேசி வர்றாங்க... 

பேசி!?.. இனி என்ன ஆகப்போவுது?. நீங்க மூச்சை விட்டாலும் பேச்சை விட மாட்டீங்களே!.. செல்பேசியோ.. கைபேசியோ.. என்னமோ ஒண்ணு  அதை விட்டுடுவீங்களா!.. கண்ணை வித்துட்டு தானே சித்திரம் வாங்கறீங்க?..

அதனால தான் குருவிங்களுக்கு கதிர்வீச்சு  பாதிப்பு..ன்னு சொல்றாங்க!.. அதெல்லாம் இல்லே.. வேற பல காரணங்கள்..ன்னு கொஞ்சம் பேர்.. பலரும் பலமாதிரி  சொல்றாங்க!.. ஆனா... எங்கள மாதிரி அப்பாவிங்களுக்கு நீங்க எல்லாம் திரும்பவும் வரணும்.. அதான் ஆசை!..


நீங்க ஆசைப்பட்டு என்ன ஆகப்போகுது!.. இந்த படத்தைப் பாருங்க.. இப்படியெல்லாம் ரோடு போடுறேன்னு மரத்தை எல்லாம் வெட்டி சாய்ச்சா.. நாளைக்கு நீங்க கூட இந்த மண்ணுல வாழ முடியாதே... ரோடு அவசியந்தான்.. அதுக்காக... ரோடு மட்டுமே அவசியம் ஆகிடுமா!..

நியாயமான பேச்சு!...

பொன்னு விளைஞ்ச பூமி!.. அதில உரம்..ன்னு விஷத்தைக் கொட்டி, புழு பூச்சி, ஈசல் கறையான் எல்லாம் ஒழிஞ்சது.  கிராமங்கள்ல கூட தோட்டம் துரவு.. ன்னு - இருந்த வாழ்வாதாரத்தை எல்லாம் அழிச்சா எங்களுக்கு வாழ்வு ஏதுங்க!.. கொசுவை நாங்க ஒழிக்கலையா?.. விஷ பூச்சிகளை அழிச்சு உங்க புள்ளகுட்டிகளைக் காப்பாத்தலையா?.. 
பாருங்க.. பாருங்க.. இந்த கொடுமைய என்னன்னு சொல்றது?.. கூடுகட்ட இடம் இல்லாம வாழை இலையிலயும் வாழைத் தார்லயும் - அடைஞ்சு கிடக்கிற அவலத்தை கண்குளிரப் பாருங்க!.. 


Thanks -The Hindu

தஞ்சாவூர் பக்கம் பாருங்க... முப்போகம் விளையற நஞ்சை. வயலும் வாழ்க்கையுமா இருந்த பூமியில எங்கெங்கிருந்தோ மண்ணைக் கொண்டு வந்து கொட்டி - இந்த மண்ணுல கால காலமா இருந்த நூற்றுக் கணக்கான ஜீவராசிகளை உயிரோட கொன்னு புதைச்சி  சமாதி கட்டி அதுக்கு மேல போர்டு வைக்கிறான்...  

சந்தோஷ் நகர்.. ன்னு!.. வசந்தம் நகர்.. ன்னு!.. பசுமை நகர்.. ன்னு!.. 

எங்க சந்தோஷத்தை அழிச்ச பின்னால உங்களுக்கு ஏது சந்தோஷம்?.. உங்களுக்கு ஏது வசந்தம்?.. உங்களுக்கு ஏது பசுமை?.. இப்ப நீங்க வாழ்ற வாழ்வுக்குப் பேரு பசுமை இல்லே!.. வெறுமை!.. வெறுமை!.ஆறறிவு.. அது இது..ன்னு சொல்லிக்கிட்டு, எங்கள மாதிரி அற்ப ஜீவன்கள அழிக்கிறீங்களே  - இதுவா உங்களுக்கு பெருமை!.. இல்லே.. சிறுமை!.. சிறுமை!..

விருந்தினராக வந்திருந்த - அந்த எளிய குருவிகளின் கண்களில் கண்ணீர் வழிந்தது..

என்னால் ஒன்றுமே சொல்ல முடியவில்லை.. தொண்டையை அடைத்தது.

உங்க ஊர் கவிஞர் பாட்டுல எழுதினார்.. பறவையும் அழ அறியாது..  ன்னு!.. எங்களையும் அழ வெச்சிட்டீங்களே!..

குருவிக்கும் மேலே பேசமுடியவில்லை... கூட வந்த குருவிகளோ திகைத்து மிரண்டன!..

எங்களுக்கு என்ன!.. எங்களுக்கு..ன்னு நாலு தானியம்.. ரெண்டு சொட்டு தண்ணி.. எங்கேயாவது கண்டிப்பா கிடைக்கும்... ஆனா.. நீங்க... உங்க நிலைமையை நினைச்சுப் பாருங்க. மழை இல்லாம.. தண்ணி இல்லாம.. நீங்க போட்ட ரோட்லயே..  நிப்பீங்க... நிக்க கூட நிழல் இல்லாம!..

உடன் வந்த பெண் குருவி தடுத்தது.

வேணாம்..வேணாம்.. ஒண்ணும் சொல்லாதீங்க!.. அவங்க வேணா எப்படி வேணாலும் நினைக்கட்டும்!.. நாம அந்த மாதிரி விபரீதமா எதுவும் நெனைக்க வேணாம்.. அவங்க.. மனுஷங்க.. நல்லா இருக்கட்டும்!..

குருவிக்கு இருக்கும் எண்ணம் கூட இல்லாமல் போனதே மனிதனுக்கு - என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் போல இருந்தது.

மனம் தேறிய ஆண்குருவி சொன்னது.

சரி.. சரி.. நட்பினை நாடியே வந்தோம். அது வாழட்டும்.. வளரட்டும்!..

என் கண்களிலும் கண்ணீர்.


யார்  தவறு செய்திருந்தாலும் மன்னித்துக் கொள்ளவும்.  ஊர்க்குருவி என வீட்டுக் குருவி என சுற்றித் திரிந்த உங்களை நோகச் செய்ததில் எல்லாருக்கும் பங்குண்டு..  மனம் வருந்துகின்றோம். நீங்களும் மனம் விரும்பி வாருங்கள். மீண்டும் உங்களோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகின்றோம்..

குருவிகள் கீச்.. கீச்.. என்று சிரித்தன.

நாரையும் குருவியும் மயிலும் கழுகும் சிவபூஜை செய்யவில்லையா!..  அம்பாள் கரத்திலும் ஆண்டாள் கரத்திலும்  கிளி தானே அழகு!.. சிங்கார வேலனுக்கு மயிலே வாகனம்.. சேவலே கொடி!. அன்னமும் மயிலும் காக்கையும் கருடனும்  தெய்வ வாகனங்கள்..   சுகமுனிவர் கிளி ரூபம். புஜண்ட மகரிஷி காக ரூபம். அன்னமும் புறாவும் அன்பின் அடையாளம்..

இவ்வளவு தானா!.. இன்னும் இருக்கிறதா?..

அப்பரும்ஆழ்வாரும் - புழுவாய் குருகாய் மீனாய் பிறக்க விரும்பவில்லையா!. ஆண்டாள் ஆனைச்சாத்தனைப் பாடவில்லையா!. மாணிக்கவாசகர் தும்பியை தூது அனுப்பவில்லையா..  கூந்தலை விடவும் வாசமுள்ள பூக்கள் இருக்குதா.. ன்னு கேட்டது தும்பி கிட்டதானே!..

எங்கள மாதிரி சிற்றுயிரையெல்லாம் அழிச்சிட்டு - நீங்க எதை ஆண்டு அனுபவிக்கப் போறீங்க!..

நான் விடை சொல்லத் தெரியாமல் விழித்தேன்.

குருவிகள் ஆறுதலாக என்னைச் சுற்றிப் பறந்தன.

சரி.. மிக்க நன்றி.. நாங்கள் புறப்படுகின்றோம்!.. - என்றபடியே அங்கு கிண்ணங்களில் இருந்த சிறு தானியங்களை சீரிய அலகால் அளைந்தன.


ஆ.. தோழனே!.. இன்று உங்களது கல்யாண நாள் அல்லவா!.. வாழ்த்துக்கள்!.. நாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்.. அப்படியே நாங்களும் நினைக்கின்றோம். உங்களுக்கும் உங்கள் மனை மங்கலத்திற்கும் நல்வாழ்த்துக்கள்!.. நல்லறமே இல்லறமாக விளங்கட்டும்!..

வாழ்த்துக்கள் உங்களுக்கு மட்டுமல்ல!.. நாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் - அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

தங்கள் அன்பினுக்கு நன்றி!.. மீண்டும் சந்திப்போம்!.. - கையசைத்தேன்.

சிட்டுக்குருவிகள்  - விர்.. என்று வெளியே பறந்தன -  திறந்திருந்த ஜன்னல் வழியாக!..

ஜன்னல் -  இனி என்றும் திறந்திருக்கும்!..

மார்ச் 20
சிட்டுக் குருவிகள் தினம்
சிற்றுயிர்களைக் காப்போம்!.. சிறப்புடன் வாழ்வோம்!..

கருங்குருவிக்கு அன்று அருளினை போற்றி!..
கயிலை மலையானே போற்றி போற்றி!..

16 கருத்துகள்:

 1. உணர வேண்டிய... விழித்துக் கொள்ள வேண்டிய... பல கருத்துக்கள் கொண்ட உரையாடல் ஐயா...

  அழகான படங்கள்...

  சிறு வயது இனிய நினைவுகளும் ஞாபகம் வந்தன...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!,,

   நீக்கு
 2. விழிப்புணர்வுக் கருத்துக்களை வாரி வழங்கும் உரையாடல்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 3. நட்பினை நாடியே வந்தோம். அது வாழட்டும்.. வளரட்டும்!.

  குருவிகள் நலம் வாழ்ட்டும்..அருமையான வித்தியாசமான பகிர்வுகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 4. குருவிகளின் புலம்பல் எல்லோர் காதையும் எட்டினால் குருவிகளுக்கு மட்டுமல்ல நமக்கும் நமையே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   அனைவருடைய மனக் கதவும் திறக்க வேண்டும்..
   தங்களுடைய வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 5. அருமையான பகிர்வு துரை....

  முன்னேற்றப் பாதையில் மனிதன் என்று சொல்லிச் சொல்லியே பின்னாலே போய்க்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் இருக்கும் பல விளைநிலங்கள் பசுமை நகர் என்று மாறிக் கொண்டிருக்கிறது பார்க்கும்போதெல்லாம் வருத்தம் தான் மனதில்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 6. உங்கள் திருமண நாளுக்கு வாழ்த்துக்கள். நேற்றே
  சொல்லி இருக்க வேண்டும்.
  பதிவைப் பார்க்கவில்லை.

  வாழைதாரில் முட்டையிட்ட குருவி படம் அழகு.
  அருமையான அழகான பதிவு.
  சிற்றுயிர்களை காப்போம்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களுடைய நல்வாழ்த்துக்களுக்கு நன்றி..
   தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 7. சிட்டுக் குருவியுடனான கற்பனை உரையாடல் அருமை. பல விஷயங்களைச் சொல்லிப் போகிறது. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்களுடைய நல்வாழ்த்துக்களுக்கு நன்றி..
   தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 8. வேணாம் வேணாம் அவங்க வேனுமின்ன என்னவேன்றாலும் நினைக்கட்டும் அந்தமாதிரிநாம நினைக்கவேண்டாம் ஆஹா! எத்தனை நல்லெண்ணம் தான் அதுங்களுக்கு. நல்ல கருத்துக்கள் பல தந்தீர்கள்.வித்தியாசமான சிந்தனை! படங்களும் குருவிகளுடனான உரை யாடலும் அருமை! வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 9. அன்பின் சகோதரி..
  வருகை தந்து இனிய கருத்துரை வழங்கிய தங்களுக்கு - நன்றி..

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..