நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 21, 2024

ஆழித்தேர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 8
வியாழக்கிழமை

திரு ஆரூர்
ஆழித்தேரோட்டம்


போழொத்த வெண்மதியஞ் சூடிப் பொலிந்து இலங்கு
வேழத்து உரிபோர்த்தான் வெள்வளையாள் தான் வெருவ
ஊழித்தீ அன்னானை ஓங்கு ஒலி மாப்பூண்டதோர்
ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே.. 4/19/7
-: திருநாவுக்கரசர் :-

மேற்கண்ட திருப்பாடலில் இருந்து ஆழித்தேரோட்டத்தை
திருநாவுக்கரசர் தரிசித்திருக்கின்றார் என்பது தெரிய வருகின்றது..


ஆழித்தேரினை இழுப்பதற்கு நான்கு வடங்கள் - ஒவ்வொன்றின் நீளமும் சுமார்  425 அடி.  
அலங்கரிக்கப்படாத தேரின் உயரம் 30 அடி. விமானம் வரை சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி . விமான உயரம் 12 அடி. தேரின் கலசம் 6 அடி - ஆக அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடி.  அலங்கரிக்கப்பட்ட தேரின் எடை சுமார் 300 டன் ஆகும்.. 

ஆழித்தேர் வீதியுலா வருகின்ற இந்நாளில்
அவனருளால் அவன் தாள் வணங்குவோம்..
 

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ
மான்மறி கை ஏந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.. 6/34/1
**

திருநாவுக்கரசர் அருளிச்செய்த
போற்றித் திருத்தாண்டகம்

ஆறாம் திருமுறை
திருப்பதிக எண் 32


கற்றவர்கள் உண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட்கு ஆகாரமுதம்  ஆனாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..1

வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி
மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித் தோலாடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 2

மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
சிலையால் அன்றெயில் எரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 3


பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப் படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னும் அவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..4

நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 5


சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 6

வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி
நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 7


உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளை ஏறேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 8


பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
திருமாலுக் காழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை ஆண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 9

பிரமன்தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி
கரநான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க் கரசே போற்றி
அன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ்
சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 10


ஆருரா தியாகேசா
ஆருரா தியாகேசா

ஆரூர் பெருமான்
அனைவரையும் காக்க
 **
சிவாய 
திருச்சிற்றம்பலம்
***

5 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம். எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் பூரண அருள் புரியட்டும்.

  ஆழித்தேர் - வரும் வருடங்களில் தரிசிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும். பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 2. இன்றைய தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. தேரோட்ட வைபோக படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. திருவாரூர் ஆழித்தேரை கண்டு இறைவனை வணங்கி கொண்டேன். இங்கிருந்தபடியே தேராட்ட காட்சிகளை கண்டு களிக்க உதவிய தங்கள் பதிவுக்கு என் மனமார்ந்த நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. திருவாரூர் ஆழித்தேர் காட்சிகள் அருமை. பதிகம் பாடி வணங்கிக் கொண்டோம்.

  தியாகேசா சரணம்.

  பதிலளிநீக்கு
 5. ஆழித்தேர் திரும்பும் காட்சி அதை திருப்ப செய்யும் ஏற்பாடுகள் வாட்ஸ் அப்பில் அனுப்பினார்கள். பார்த்தேன். ஒரு முறை திருவாரூர் தேர் திருவிழாவிற்கு போய் இருக்கிறேன்.
  இன்று இங்கும் தேர் பார்த்து விட்டேன்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..