நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2015

வாழ்க சகோதரம்!..

நேற்று ஆவணி மாத பௌர்ணமி..

வருடந்தோறும் இந்நாள் ரக்‌ஷா பந்தன் எனும் திருநாளாகக் கொண்டாடப்படுகின்றது..

குறிப்பாக - பெண்களால் கொண்டாடப்படுவது ரக்‌ஷா பந்தன்..

பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு
ராக்கி எனும் மங்கலக் கயிற்றினை கையில் அணிவிப்பதே ரக்‌ஷா பந்தன்..

அதேசமயம் அன்புடன் பழகுபவர்களையும் சகோதரர்களாகக் கொண்டு-

அவர்களுக்கும் அணிவிக்கப்படுவது - ரக்‌ஷா பந்தன்..


சகோதரியின் அன்பும் வாழ்த்தும் சகோதரனுக்கு உரியதாக -
சகோதரனின் அன்பும் பாதுகாப்பும் சகோதரிக்கு உரியதாக ஆகின்றன..

ஒரு பெண் அணிவிக்கும் ராக்கியை ஏற்றுக் கொள்ளும் ஆடவன் -
அந்தக் கணத்திலிருந்து அந்தப் பெண்ணுக்கு சகோதரனாகின்றான்..

அவளுடன் பிறந்த சகோதரனைப் போல - அவளது பாதுகாப்பிற்கும் நலத்திற்கும் உற்ற துணையிருக்கக் கடமைப்பட்டவனாகின்றான்..

ராக்கி கட்டப்பட்டதும் - அந்தப் பெண்ணுக்கு பாதுகாவலாக இருப்பதாக உறுதி கூறி வாழ்த்தி இனிப்புகளுடன் பரிசுப் பொருட்களை வழங்குவது சம்பிரதாயம்


இந்த ரக்‌ஷா பந்தன் வைபவத்திற்காக சொல்லப்படும் புராதன சம்பவம் -இதோ!..

அரசியல் சூழ்ச்சியால் அனைத்தையும் இழந்து நின்றனர் - பாண்டவர்கள்..

அடுத்த சிறுபொழுதில் நகரை விட்டு நீங்க வேண்டும் - வன வாசத்திற்காக!..

சித்தப்பா - விதுரன் முன்நிற்கின்றார். அருகில் ஸ்ரீகிருஷ்ணன்!..

மூத்தவனாகிய தர்மபுத்திரன் - சூதாடத் துணிந்த வேளையில் ஸ்ரீகிருஷ்ணனை நினைக்கவில்லை என்பது பெருங்குறை..

அதை நினைவில் கொண்டாள் - துருபதனின் குலவிளக்கு திரௌபதி..

இனிவரும் நாட்களில் நாங்கள் உன்னை மறந்தாலும் நீ எங்களை மறவாதிரு!..

- என்று சொல்லியபடி - ஸ்ரீ கிருஷ்ணனின் கையில் தனது முந்தானையைக் கிழித்துக் கட்டினாள்..

ஸ்ரீகிருஷ்ணன் புன்னகைத்தான்..

அதன் பலனாக - பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட துன்பங்களை -
பரந்தாமனின் துணையுடன் கடந்ததாக பாரதம் கூறுகின்றது..

அதை நினைவு கூர்வதே - ரக்‌ஷா பந்தன் எனும் வைபவம்..


முகத்தை மூடிக்கொண்டு, நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த அராபியர்கள் -
பொன் பொருளைக் கவர்ந்ததுடன் - பெண்களையும் கவர்ந்தனர்...

எதிர்த்துப் போர் புரிந்த வீரர்களையும் மற்ற ஆடவர்களையும் மூர்க்கத்துடன் கொன்று குவித்து விட்டு -

நிர்க்கதியாக நின்ற பெண்கள் மீது நிகழ்த்திய வன்கொடுமைகளை -
வரலாற்றின் பல பக்கங்கள் இன்றளவும் பேசிக் கொண்டிருக்கின்றன..

அப்படிப்பட்ட அசாதாரணமான வேளைகளில் - அபலைப் பெண்களை
ஓரளவுக்காவது காத்து நின்றது ரக்‌ஷா பந்தன்!..

ரக்‌ஷா பந்தன் - வழக்கமான உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் நேற்று கொண்டாடப்பட்டிருக்கின்றது..


அண்ணன் தங்கை, அக்கா தம்பி - பாசம் என்பது காலங்களைக் கடந்து நிற்பது..

திருநாவுக்கரசர் நமக்குக் கிடைத்ததற்குக் காரணம் - திலகவதியாரின் பாசம்!..

விண்ணுயர்ந்து விளங்கும் பெரிய கோயிலைக் கட்டியவன் மாமன்னன் ராஜராஜ சோழன்!..

மும்முடிச்சோழன் என்பது ராஜராஜனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று..

அத்தகைய புகழ் கொண்ட சோழ மாமன்னன் - 
சகோதரி குந்தவை நாச்சியாரின் அன்பினில் கட்டுண்டு கிடந்தான்!..

அதனால் அல்லவோ -
தனது மகளுக்கு - குந்தவை எனப் பெயர் சூட்டி அழைத்து மகிழ்ந்தான்!..


முன்பெல்லாம் - தமிழகம் முழுதும் கேட்டிருக்கும் குரல் - அண்ணே!..

இப்போதெல்லாம் அப்படியில்லை..

திரைப்படங்கள் சிலவற்றில் -
இந்த வார்த்தையும் சிதைத்துச் சீரழித்துப் போட்டார்கள் - கதை எழுதிய சிலர்.

ஆயினும், காலத்தினால் வெல்ல முடியாதது சகோதர பாசம்!..

அத்தகைய அன்பின் நிலையை -

கண்ணின் மணியாக மணியின் 
நிழலாக கலந்து பிறந்தோமடா!..
இந்த மண்ணும் கடல் வானும் 
மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா..
உறவை பிரிக்க முடியாதடா!..

- என்று, கன்னித் தமிழ் கொண்டு சிறப்பித்தார் - கவியரசர் கண்ணதாசன்.


இதோ - இந்தக் காணொளியை சற்று முன் -  Facebook -ல் கண்டேன்..

இந்தக் காணொளிதான் இந்தப் பதிவுக்கு அடிப்படை..

நீங்களும் காணுங்கள்!..


சில விநாடிகளிலேயே - கண்கள் கசிந்து கண்ணீர் பெருகி வழிந்தது..

அன்பின் நெஞ்சங்கள் கொண்ட பாசத்திற்கு கண்ணீரே காணிக்கையாகின்றது..

மனிதனை மனிதனாக்கும் நாட்களுள் ரக்‌ஷா பந்தன நாளும் ஒன்று!..


அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கு 
ரக்‌ஷா பந்தன் என்பது - நூல்வேலி!..

மெல்லிய நூலிழைகளைக் கையில் கட்டுவது கூட, ஒரு சம்பிரதாயத்திற்குத் தான்!..

ஆண்கள் எந்த சூழ்நிலையிலும் - எல்லா விதத்திலும் -
பெண்களைக் காத்து நிற்கக் கடமைப்பட்டவர்கள்..

தமிழினத்தின் தனிப்பெரும் சிறப்புடைய வார்த்தை - 

அம்மா!..

அம்மா - எனும் சொல்லைக் கொண்டுதான் அனைத்துப் பெண்களையும் அழைத்தார்கள்..

இன்றும், அதுவே தமிழரின் நெறியாக பல குடும்பங்களில் - பல ஊர்களில் விளங்குகின்றது.. 

அன்பினால் வார்த்தெடுக்கப்பட்ட நெஞ்சங்கள் அந்த நெறியினை மீறுவதே இல்லை..

ஐந்தறிவு என பகுக்கப்பட்ட யானையே 
ஒரு சிறிய அங்குசத்திற்கு அடங்குகின்றது. 
கட்டுப்பட்டு நிற்கின்றது..

ஆறறிவு என ஆர்ப்பரிக்கும் மனிதன் 
அன்பெனும் நூலுக்கு அடங்க மாட்டானா!.. 
கட்டுப்பட மாட்டானா!..

ஆண்மை கட்டுப்படவேண்டும்..
பெண்மை காக்கப்படவேண்டும்..

என்றென்றும் போற்றப்படவேண்டும்!..

வாழ்க நலம்!.. 
* * *  

20 கருத்துகள்:

 1. மகாபாரதம் தொடங்கி, திலகவதியார், குந்தவை என்ற பல படிநிலைகளில் அழைத்துச் சென்று ரக்ஷாபந்தன் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி. அண்மைக்காலமாகத் தான் தமிழ்நாட்டில் இது கொண்டாடப்படுகிறது என்று நினைக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அருமை.... அருமை ஐயா... அசந்துட்டேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 3. அந்த விழியம் நெக்குருக வைக்கிறது!!! சகோதரப்பாசம் உண்மையில் ஈடு இணை அற்றது!! ரக்ஷா பந்தன் வாழ்த்துகள் அய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..
   கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அன்பின் ஜி காணொளி கண்டு கண் கலங்கி விட்டேன்
  ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 6. வணக்கம், தங்கள் தொகுப்பு அருமை. காணொளி மனதில் ஏக்கத்தை அதிகப்படுத்தியது. சகோதர பாசம் பெரிது தானோ,,,,,
  அருமை, வாழ்த்தக்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   சகோதர பாசம் பெரிது தான்..
   அதை விட பாசமுமிகு நட்பு என்றென்றும் பெரிது..

   தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. ரக்க்ஷா பந்தன் எனும் பண்டிகை பற்றி முழுமையாக அறிந்து கொண்டேன். அருமையான பதிவு சகோதரா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 8. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. ஆஹா! அருமையான பதிவு! எப்படி எங்கள் கண்ணிலிருந்து விடுபட்டது! பலசமயங்களில் இப்படித்தான்....அருமை அருமை

  ரக்ஷா பந்தன் பற்றி இத்தனை தகவல்களா! அட போட வைத்தது..தங்கள் மேற்கோள்கள், சொல்லப்பட்ட கதைகள் ,,,இதனுடன் இணைத்துச் சொல்லியவிதம் சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா! அருமை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   அந்தக் காணொளியைக் கண்டதும் தான் - அவசரமாக இந்தப் பதிவினை வெளியிட்டேன்..

   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 10. அருமையான கதைகள் கண்ணீர்வரவைத்த காணொளி என்று பதிவு அசத்தல். கடைசியில் சொன்ன வார்த்தை அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   அன்பின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..