நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 28, 2015

திரு ஓணம்

இது நூறாவது யாகம்.. அதுவும் அஸ்வமேத யாகம்!..

எவ்விதக் குறைவுமின்றி நிகழ்ந்து -
வேள்வித் தீயில் - பூர்ணாஹூதி சமர்ப்பிக்கப்பட்டு விட்டால் -

திவ்ய பலன் வேண்டி யாகத்தை நடத்தியவனை எவரும் வெல்ல முடியாது..

யாகத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருப்பவர் - அசுர குரு சுக்ராச்சார்யார்..

அவரின் எதிரே தன் மனைவியுடன் அமர்ந்திருப்பவன் - மாவலி சக்ரவர்த்தி..

வெற்றி பெறப்போகும் களிப்பில் - மாவலியின் கண்கள் மின்னின..

சக்ரவர்த்தியாகிய மாவலி - ஸ்ரீ பக்த பிரகலாதனின் பேரன்..

இப்படி நூறாவது யாகத்தை நடத்துதற்கும் ஸ்ரீநரசிம்ஹ அவதாரத்திற்கு மூல காரணனும் ஆன ப்ரகலாதனின் வம்சத்தில் பிறப்பதற்குமான புண்ணியம் எது?..

சிவாலயத்தின் தீபச்சுடர் தனைத் தூண்டி விட்டது தான்!..


ஆதியில் ஒரு எலி..

திருமறைக்காடு எனும் தலத்தின் திருக்கோயிலினுள் சுற்றித் திரிந்திருந்தது. ..

அந்த எலிக்கு வேலை - நாளும் சிவாலயத்தின் திருவிளக்குகளில் ஊறிக் கிடக்கும் நெய்யினைச் சுவைப்பது தான்!..

ஒரு நாள் இரவு. அர்த்த ஜாமம் முடிந்து - திருநடை அடைக்கப்பட்டு விட்டது..

யாருமற்ற அந்தப் பொழுதில் வழக்கம் போல எலி கருவறையுள் நுழைந்தது..

திருவிளக்கில் நிறைய நெய் இருந்தாலும் - தூண்டுவாரில்லாததால் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது..

நிறைந்திருந்த நெய்யைக் கண்டதும் எலிக்குக் கொள்ளை ஆனந்தம்..

அவசரமாக நாவினை நீட்டி சுவைக்க முற்பட்டபோது - எதிர்பாராத விதமாக தீபச்சுடரில் மூக்கினைச் சுட்டுக் கொண்டது..

மூக்கின் நுனியில் - சுரீர்!.. - எனச் சுட்டதும் பதறித் துடித்தது.

அந்த வேளையில் நிகழ்ந்த பதற்றத்தால் - கருகிக்கொண்டிருந்த சுடர் தூண்டப் பெற்றது. மூலத்தானத்தினுள் ஒளி பரவியது..

அதே வேளையில் பஞ்ச வாத்யங்களின் ஒலி கேட்ட எலி அதிர்ந்து நின்றது..

தான் காண்பது கனவா.. நனவா!.. என்று.. தன்னையே நம்பமுடியவில்லை!..

இப்படியெல்லாம் நடக்குமோ!?.. - தன்னைத் தானே கிள்ளிக் கொண்டது.

நிஜம் தான்!.. தன் எதிரில் காட்சியளிப்பது  - ஸ்ரீபரமேஸ்வர சிவம் தான்!..


கண்ணீர் பெருக , இறைவனை வலம் வந்து  - வணங்கி நின்றது!..

திருக்கோயிலின் தீபத்தினைத் தூண்டிவிட்ட புண்ணியத்திற்காக - ஈசன் - அந்த எலியினை வாழ்த்தி மறைந்தார். 

ஈசன் விதித்தபடி - தன்னுடலை நீத்தது - எலி.. 

அசுர குலத்தில் ஸ்ரீபக்த ப்ரகலாதனின் வழித்தோன்றலாகப் பிறந்தது..

இதனை,

நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைக் 
கறைநிறத்து எலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட 
நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்ட வானுலகம் எல்லாம் 
குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே!. (4/49/8) 

- என்று , திருநாவுக்கரசர் திருக்குறுக்கை வீரட்டானத்தைத் தரிசிக்கும் போது - பாடி மகிழ்கின்றார்.

இப்படி - எலியானது சிவபுண்ணியம் பெற்ற திருமறைக்காடு - இன்றைக்கு வேதாரண்யம் என வழங்கப்படுகின்றது..

காசியப முனிவருக்கு - திதி என்றும் அதிதி என்றும் இரு மனைவியர்..

காலமல்லாத காலத்தில் கணவருடன் கூடி - திதி பெற்ற பிள்ளைகளே அசுரர்கள்...

வானுலக நிர்வாகத்தை தங்களுடைய சகோதரர்களாகிய சுரர்களிடமிருந்து பெறுவதில் நிகழ்வதே தேவாசுர யுத்தங்கள்...

கடுந்தவங்களினால் வல்லமையைப் பெற்று வானுலகைக் கைப்பற்றுவதும் - தமது மடைமையினால் தேவர்களிடமே அதை இழப்பதும் வாடிக்கையானது..

குலகுருவான சுக்ராச்சார்யார் எவ்வளவு கூறியும் கேட்பாரில்லை..

இந்த சூழ்நிலையில் அசுர குலத்தில் வந்து தோன்றிய மாவலியை - வழி நடத்தினார் சுக்ராச்சார்யார்..

மாவலிக்கு மூவுலகையும் தன் கைக்குள் கொண்டு வரவேண்டும் என்ற பேராவல் ஏற்பட்டது..

அசுரப்படைகளுடன் சென்று தேவலோகத்தைத் தாக்கினான்.. 

கடுமையான அந்த யுத்தம் - இந்திரனுக்குச் சாதகமாக முடிந்தது.

இதன் பின் - மீண்டும் பலம் பெற்றான்.. எப்படியாவது தேவர்களை ஜெயிக்க வேண்டும் என்ற ஆவேசத்துடன் - பெரியதொரு யாகத்தை நடத்தி - ஆயுதங்களுடன் கூடிய பொன் ரதத்தினைப் பெற்றான். 

அந்த  ரதத்துடன் - மீண்டும் தேவலோகத்தை முற்றுகையிட - தேவர்கள் இந்திரன் தலைமையில் - வெற்றிகரமாகத் தோற்று - ஓடிப் போயினர்..

அசுர வேந்தன் அணுக முடியாத மறைவிடத்தில் தங்கிக் கொண்டு  - தேவகுரு பிரகஸ்பதியின் ஆலோசனையின்படி, ஸ்ரீமந் நாராயண மூர்த்தியைச் சரண் அடைந்தனர்.

அசுர வேந்தனின் ஆளுகைக்குள் அமராவதி வந்தது. மாவலி ஆசைப்பட்டபடி மூன்று உலகங்களையும் கட்டி ஆண்டான். 

தவிர,  மகரிஷிகளையும் மற்றவர்களையும்  மதித்து அவர்களுக்கு எல்லா வசதிகளையும்  குறைவின்றி செய்து கொடுத்தான்.

இதற்கிடையே - தன் மைந்தர்கள் நாடிழந்து வாடுவதனால் வருந்திய அதிதி கணவராகிய  காசியப முனிவரிடம் முறையிட்டு வருந்தினாள். 

அவரோ பரந்தாமனைத் தியானிக்கப் பணித்தார்.
அதன்படி அதிதி - ஸ்ரீ ஹரிபரந்தாமனைத் தியானித்தாள்..

ஸ்ரீ ஹரிபரந்தாமன் - அவளுடைய கர்ப்பத்தில் - தான் உதிப்பதாக வரமளித்தார்.


அதன்படியே, காசியபர் - அதிதி தம்பதியர்க்கு, அருந்தவ புத்ரனாக -

ஆவணி சுக்ல பட்சம், திருவோண நட்சத்திரத்தில் - உச்சிப் பொழுதில் - கோடி சூர்ய ப்ரகாசத்துடன் சங்கு சக்ரதாரியாக அவதரித்து அவர்கள் மடியில் பாலனாகத் தவழ்ந்தார்.

பெருமானுக்கு வாமனன் எனும் திருப்பெயர் சூட்டப்பட்டது.

மகரிஷிகள் வாமனனுக்கு உபநயனம் செய்து அட்சரம் பயிற்றுவித்தனர்.

தகவல் அறிந்து மகிழ்ச்சியுற்ற தேவர்கள் ஓடோடி வந்து வணங்கினர்..
பெருமானின் திருவருளையும் வேண்டி நின்றனர்.

நிகரற்ற பேரும் புகழும் பெற்று வாமனன் வளர்ந்து  வந்த வேளையில் -

அமராவதி கையில் இருந்து நழுவாமல் இருக்கும்படிக்கு - நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்யுமாறு பலி சக்ரவர்த்திக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதன்படி - மாவலி செய்யத் தொடங்கியதே - அஸ்வமேத யாகம் .


மாவலியிடம் - மூவுலகையும் கவர்ந்து கொண்டதன்றி வேறு குற்றம் ஒன்றும் காணப்பட வில்லை.

எனவே,  வையம் உள்ளளவும் புகழுடன் இருக்கும்படி  - மாவலிக்கு அருள் புரியத் திருஉளங்கொண்டார் பெருமான்.

மாவலி அஸ்வமேத யாகம் நடத்தும் யாக சாலைக்குச் சென்றார். 

ஸ்வாமியின் தேஜஸைக் கண்டு பிரமித்து மயங்கினர் அனைவரும். 

வாமன மூர்த்தியை வரவேற்று மரியாதை செய்த மாவலி, 

ஐயனே!.. தாங்கள் வேண்டுவது யாது!.. - எனக் கேட்டான்..

நான் உன்னிடம் விரும்புவதெல்லாம் எனது காலடியினால் மூன்றடி நிலமே!. அதற்கு மேல் எதுவும் எனக்குத் தேவையில்லை!.. - என்று திருவாய் மலர்ந்தார்.

மாவலி - மகிழ்ந்தாலும் சற்றே வருந்தினான்..

ஸ்வாமி!.. பச்சிளம் பாலகனாகிய தங்களின் பிஞ்சுக் காலடியால் மூன்றடியா!.. அதிலே தங்களுக்கு என்ன கிடைத்து விடும்?.. வேறு பல செல்வங்களைக் கேட்டுப் பெறலாமே!.. விரும்பியதைத் தருவதற்கு சித்தமாக உள்ளேன்!..''

- என்று கூறினான் - பணிவுடன்..

பெருமானோ - ''.. தான் அளக்கும் மூன்றடி நிலமே போதும்!..''  - என்றார்.

அதன்படி - பாலகன் கேட்டதைத் தானம் தருவதற்கு ஆயத்தமானான் - மாவலி.

மூன்றடி மட்டும் போதும் - என வந்திருப்பவன் யார்?..

- என, சுக்ராச்சார்யார் - தனது மூளையைக் குடைந்ததில் - தானம் கேட்டு வந்திருப்பவனின் சுயரூபம் அகக்கண்ணில் வெளிப்பட்டு நின்றது..

திடுக்கிட்ட சுக்ராச்சார்யார் - தானம் வழங்கப்படும் வேளையில்,

 ''..வந்திருப்பவன் மாயவன்!.. அவன் கேட்டபடி வழங்காதே!..'' - என்றார்.

அசுர வேந்தன் மாவலியோ - பண்பின் சிகரமாக,

எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ - தகவு இல் வெள்ளி!..
கொடுப்பது விலக்கு கொடியோய்!.. உனது சுற்றம் 
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்!..
(கம்பராமாயணம்)

- என்று மறுமொழி கூறி நின்றான்.

தன் பேச்சைக் கேட்காமல் - கிண்டியிலிருந்து நீரை வார்த்து - தானம் செய்கையில் மனம் பொறாத சுக்ராச்சார்யார் - வண்டாக மாறி, கிண்டியினுள் விழுந்து நீர் வழியை அடைத்தார்.

அதை உணர்ந்த பெருமான் தர்ப்பையினால் கிளற, நீர் வழியை அடைத்த சுக்ராச்சார்யார் ஒரு விழியை இழந்தார். விழியினை இழந்த சுக்ராச்சார்யார் விலகி ஓடினார்..

ஆக, நீர் வழியினை அடைப்பவர்களுக்கு என்ன நேரும் என்று அன்றே சொல்லப்பட்டிருக்கின்றது!..

தடை நீக்கப்பட்டதும், பெருகி வழிந்த நீரை வார்த்து -  அசுரவேந்தன் தானம் கொடுத்ததும் வாமனன் - த்ரிவிக்ரமனான வளர்ந்து ஓரடியால் உலகினையும்  மறு அடியால் விண்ணையும் அளந்தார்.


மூன்றாவது அடிக்கு இடம் இல்லை!.. மீண்டும் வாமனத் திருக்கோலம் பூண்ட பெருமான் - ''..மூன்றாவது அடியை எங்கே வைப்பது?..'' என்றார்.

வந்திருப்பவன் ''பரந்தாமனே!..'' - என்பதைப் பரிபூரணமாகக் கண்ட பலிச் சக்ரவர்த்தி,

 ''..பெருமானே!.. என்னையே தருகின்றேன். இதோ என்தலை மேல் தங்களின் திருவடியை வைத்து மூன்றாவது அடியை அளந்து கொள்ளுங்கள்!..'' - என்று சிரம் தாழ்த்தி நின்றான்.

அப்போது ஸ்ரீப்ரகலாதர் வானிடையே தோன்றி தன் பேரனை வாழ்த்தினார்.

நான்முகனும் மற்ற மகரிஷிகளும் சுற்றி நின்று வாழ்த்தினர்..

ஹரிபரந்தாமனாகிய ஸ்ரீ மஹாவிஷ்ணு புன்னகையுடன் திருவருள் புரிந்தார்.

''..தனது  தானத்தால் - எல்லாமே பறிபோகும் என அறிந்தும் , குரு சுக்ராச்சார்யார் தடுத்தும் கூட, அதைக் கேளாமல், தன் வாக்கு தவறாமல் தானத்தை வழங்கினான். யாராலும் கடக்க முடியாத மாயையைக் கடந்த பலி சக்ரவர்த்தியே அடுத்த மன்வந்த்ரத்தின் இந்திரன்!..''

- என வாழ்த்தி யாகத்தினைத் தொடர்ந்து நிறைவேற்றும்படிக் கூறினார். 
அதன்படி யாகமும் நிறைவேறியது.

பெருமான் - அசுர வேந்தனிடம்,  வேண்டும் வரம் யாதெனக் கேட்க -

''..ஆண்டுக்கு ஒரு முறை என் மக்களை நான் வந்து சந்திக்கும்படியாக வரம் தருக!..'' - என வேண்டிக் கொண்டான். அவ்வண்ணமே வரமும் பெற்றான்.

அதன்பின் ஸ்ரீமந்நாராயண மூர்த்தியின் அருளாணைப்படி, பாதாள லோகத்துக்கு அதிபதியாகினான் - மாபலிச் சக்ரவர்த்தி.

இப்படி நிகழ்ந்த வாமன அவதாரத்தினை,

மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடு முட்டச் 
சேவடி நீட்டும் பெருமான் மருகன் தன் சிற்றடியே!..
(கந்தர் அலங்காரம்) 

- என, மாமனையும் மருகனையும் - அருணகிரிநாதர் வர்ணிக்கின்றார்.


தமிழகத்தில் குறிப்பாக - திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் திருக் கோயிலில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் கோலாகலமாக நிகழ்வுறும்.

இருபத்தேழு நட்சத்திரங்களுள் சிவபெருமானுக்கு உரிய ஆதிரை, மஹா விஷ்ணுவுக்கு உரிய ஓணம் இவை இரண்டு மட்டுமே ''திரு'' எனும் அடை மொழியுடன் கூடியவை.

திருவோணத் திருநாளுடன் மங்கலகரமான வரலக்ஷ்மி விரதமும் சேர்ந்து இன்றைய நாள் (28/8) பெருஞ்சிறப்பினை உடையதாகத் திகழ்கின்றது..


அருகில், 

கேரளத்தில் - திருவோணக் கொண்டாட்டங்கள் மிகப் பிரசித்தமானவை.

பரசுராம க்ஷேத்ரம் எனும் கேரளம் - மகாபலியின் ஆளுகைக்குள் இருந்ததாக ஐதீகம்.

மண்ணையும் விண்ணையும் ஈரடியால் அளந்த பெருமானுக்கு மூன்றாவது அடியாக தன்னையே தந்தபோது - ஆண்டு தோறும் ஒருநாள் என் மக்களைச் சந்திக்க வரம் அருள வேண்டும்!..  என, வரம் பெற்றதனால் - 


திருஓணத்தின் போது மாவலி சக்ரவர்த்தி பூவுலகுக்கு வருவதாகக் கொண்டு -

அவரை வரவேற்கும் விதமாக ஆவணியின் - அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் - என, பத்து நாள் பண்டிகையாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.


தங்களைக் காண வருகை தரும் சக்ரவர்த்தியை வரவேற்று, வீதிகள் தோறும் இல்லங்கள் தோறும் பல வண்ண மலர்களால் கோலமிட்டு தோரணங்கள் கட்டி அழகு செய்கின்றனர். 

இல்லங்களில் பெரியவர்கள் அனைவருக்கும் நல்லாசி வழங்குவதுடன்,
ஓண சத்யா எனும் சிறப்பான விருந்து உபசரிப்பிலும் மகிழ்கின்றனர்.. ஓணத் திருநாளை முன்னிட்டு கேரளம் முழுதும் சகல திருக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன..

சபரிமலையில் ஸ்ரீ ஐயப்பன் சந்நிதி நடை திறக்கப்பட்டு விசேஷ வழிபாடுகள் நடக்கன்றன..

எல்லாம் சரிதான்!.. 
மாவலியிடம் தானம் பெற்றதை - பெருமாள் என்ன செய்தார்!..


உரியது இந்திரர்க்கு இதென்று உலகம் ஈந்து போய்
விரி திரைப் பாற்கடல் பள்ளி மேவினான் -
கரியவன் இலகு எலாம் கடந்த தாளிணை 
திருமகள் கரம் தொடச் சிவந்து காட்டிற்றே!..
(கம்பராமாயணம்)

தான் பெற்றதை இந்திரனுக்கே அளித்து விட்டு - திருமகள் பாதசேவை செய்ய -  மீண்டும் பள்ளி கொண்டாராம் எம்பெருமாள்!..
* * *

இந்த வாமன மூர்த்தியைத் தானே - 

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே!.. - என,  கோதை ஆண்டாள் - கொஞ்சு தமிழில் கூறினாள்.
* * *

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு..

அனைவருக்கும் ஓணத்திருநாள் நல்வாழ்த்துகள்!..

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!..
ஓம் ஹரி ஓம் 
* * *

24 கருத்துகள்:

 1. அருமையான பகிர்வு மனதிற்கு மகிழ்வைத் தந்தது வாழ்த்துக்கள் ஐயா !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 2. அருமை அருமை ! எலிக்கு அடித்த அதிர்ஷ்டத்தைப் பாருங்களேன். அட அதுக்கும் ஒரு குடுப்பினை வேண்டும் அல்லவா. எனக்கு சிவராத்திரிக் கத்தியும் ஞாபகத்திற்கு வந்தது. புலிக்குப் பயந்து வில்வமரத்தின் மேல் ஏறி இருந்து தூங்காமல் இருக்க ஒவ்வொரு இலையாக பிய்த்துப் போட அது கீழிருந்த சிவலிங்கத்தின் மேல் விழவும் விடிந்தவுடன் அவன் சொர்க்கம் சென்றதும். .....
  ஏனையவை தெரிந்தவை. எலிக்கதை இப்போ தான் அறிந்தேன்.நன்றி ! வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 3. வணக்கம்,
  தெரிந்த கதைகள் எனினும் தாங்கள் சொல்லும் விதம் அருமை, படிக்க படிக்க ஆர்வம் மேலிடச் செய்யும் விதமாய் கொண்டுச் செல்லும் விதம் அருமை.வாழ்த்துக்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   எங்கே சில நாட்களாக காணோம் என்றிருந்தேன்!..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   அன்பின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
  2. வணக்கம்.
   என் இணைய இணைப்பில் இயற்கையின் சீற்றம் செய்த விளையாட்டால் சில பதிவுகளைத் தவற விட்டேன். ஆனால் அனைத்தையும் என் கைப்பேசியில் படித்துவிட்டேன். அதில் எனக்கு பதில் தரத் தெரியவில்லை.
   இப்போ சரியாகியது.
   நினைவிற்கு நன்றிகள்.

   நீக்கு
  3. அன்பின் வருகைக்கு நன்றி..
   இணைய இணைப்பு சரியாகி இருக்கும் என எண்ணுகின்றேன்..

   வாழ்க நலம்!..

   நீக்கு
 4. வணக்கம் ஜி சரித்திர நிகழ்வுகளுடன் அழகாக விவரித்த விதம் அருமை தங்களுக்கு ஓணம் ஆசம்ஸகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   இனியவாழ்த்துரைக்கு நன்றி..

   தங்களுக்கும் நல்வாழ்த்துகள்..

   நீக்கு
 5. அருமையான , அழகான பாடல்கள், படங்களுடன் பதிவு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 6. தகவல்களுக்கு நன்றி! பாடல்களுடன் தந்தமைக்கு! .ஓணம் வாழ்த்துகள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   இனிய வாழ்த்துரைக்கு நன்றி..

   தங்களுக்கும் ஓணம் நல்வாழ்த்துகள்..

   நீக்கு
 7. அனைவருக்கும் ஒணத்திருநாள் வாழ்த்துக்கள் ஐயா!

  அருமையான பதிவு! வரலஷ்மி பூசை வழிபாடும் இன்றானதால்
  வருகைதர தாமதமானேன். மகாலஷ்மியை வேண்டிக் கொண்டேன்!
  தங்கள் பதிவுடன் பதிகங்களும் படங்களும் மிக அருமை ஐயா!

  நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

   அன்பின் வாழ்த்துரைக்கு நன்றி..
   தங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்..

   நீக்கு
 8. திரு ஓணம் திருநாள் நல் வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய வாழ்த்துரைக்கு நன்றி..

   தங்களுக்கும் நல்வாழ்த்துகள்..

   நீக்கு
 9. தெரிந்த கதைகள் என்றாலும் அழகு தமிழில் ப‌ழந்தமிழ்ப்பாடல்களுடன் தாங்கள் கதைகளைச்சொல்லிய விதம் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   அன்பின் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 10. திருவோணம் விழாவைப் பற்றி திருமறைக்காட்டில் ஆரம்பித்து பல இடங்களுக்கு அழைத்துச்சென்று, உரிய படங்களுடன், பகிர்ந்தமைக்கு நன்றி. காஞ்சீபுரத்தில் உலகளந்தபெருமாள் கோயில் சென்றுள்ளோம். கருவறையில் பெருமாள் நிற்கும் கோலம் பார்ப்பவர் கண்களில் பதிந்துவிடும். அவ்வளவு அழகு. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றதில்லை..
   மேலதிக தகவல் கண்டு மகிழ்ச்சி

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 11. பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு