நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 07, 2015

சக்தி தரிசனம் - 4

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே!..

- என்று தனித்தமிழில் தண்ணமுதைப் பொழிபவர் மாணிக்கவாசகர்!..

மேலும்,

பால் நினைந்தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே!..

- என்று, தானும் உருகி - நம்மையும் உருக வைக்கின்றார்..

இவ்வாறே -

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுந்துயராயின வெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன் நாராயணா எனும்நாமம்!. (956)
(இரண்டாவதாயிரம் -முதற்பத்து - முதல் திருமொழி)

- என்று திருமங்கை ஆழ்வாரும் உருகுகின்றார்..


உறங்கிக் கிடக்கின்றதே.. என் பிள்ளை.. அதற்குப் பசிக்குமே!.. - என்று உருகித் தவித்துத் தாவியணைத்து - தளிர்க்கரத்தில் ஏந்தி - தலை கோதியவாறு - கனதனம் தந்து அமுதூட்டுபவள் -

தாய்!..

தாய்க்கும் - அவள் அரவணைத்துத் தரும் அமுதிற்கும் ஈடாக -
ஈரேழு பதினான்கு லோகங்களிலும் எதுவும் இல்லை!..

அப்படி ஒன்று உண்டென்றால்,

அது - தன்னை யார்க்குங் காட்டாது ஒளித்திருக்கும் தெய்வம்!..

அந்தத் தெய்வம் தான் - தன்னைக் காட்டுகின்றது - தாயின் வடிவில்!..

அதுவும் பாலூட்டும் தாயின் வடிவில்!..


ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் - தாய்ப்பால் வாரம்!.. - என, உலகெங்கும் அனுசரிக்கப்படுகின்றது..

ஏன் இவ்வாறு அனுசரிக்கப்படவேண்டும்?..

பிள்ளைக்குத் தாய் அமுதூட்டுவதில் - அவலம் ஏற்பட்டது..

குழந்தைக்குப் பாலூட்டுவதிலும் குதர்க்கம் விளைவிக்கப்பட்டது..

தாயென்றும் பிள்ளையென்றும் தழுவிக் கிடந்த மக்களிடையே -
கீறல் விழச் செய்ததில் வெற்றி கண்டது -  மேலைத் தேசத்து நாகரிகம்.

அதனால் விளைந்த பாதகம் - அவர்களையும் பற்றிக் கொண்டது..

ஆகவே, வாலறுந்த நரிகளாகிய வண்கணாளர்கள் - மீண்டும் குரலெடுத்தனர் - தாய்ப்பால் வாரம் என்று!..

அவர்களுக்குத் தெரியாது -

தாய்ப்பால் குடித்தவர்கள்தான் - ஓடும் நீரில் கரையாத களிமண்ணைக் கொண்டு கற்களை அடுக்கிக் கல்லணையைக் கட்டினார்கள் என்று!..

அவர்களுக்குத் தெரியாது -

தாய்ப்பால் குடித்தவர்கள்தான் - இமயத்தில் ஏறிப் பெருங்கல்லைப் பெயர்த்துக் கற்புக்கரசி கண்ணகிக்குச் சிலை எடுத்தனர் என்று!..

அவர்களுக்குத் தெரியாது -

தாய்ப்பால் குடித்தவர்கள்தான் - குன்றுகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களை எழுப்பிக் குன்றாப் புகழ் கொண்டனர் என்று!..

அவர்களுக்குத் தெரியாது - 

தாய்ப்பால் குடித்தவர்கள்தான் - கைகளால் மலைகளைப் பிளந்து - கால்களால் கற்களை உருட்டி - கால காலத்திற்கும் கண்டவர் மனம் மலைத்து நிற்கும்படி -தஞ்சையில் ராஜராஜேஸ்வரத்தை எழுப்பினார்கள் என்று!..

அவர்களுக்குத் தெரியாது -

தாய்ப்பால் குடித்தவர்கள்தான் - ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வங்கக்  கடல் கடந்து கடாரத்தைக் கைக் கொண்டு புலிக் கொடியை நாட்டினர் என்று!.. 

தாய்ப் பால் வாரம் கொண்டாடும் அவர்களுக்கு இன்னமும் தெரியாது -

தாய்ப் பால் வரம்!.. - என்பது..

அதனால் தானே, பெரியாழ்வாரும் - 

அம்மமுண்ண வாராய்!.. - என,  பாசப் பெருக்கினால் தாயாகிப் பரிதவித்தார்..

அன்று கோகுலத்தில் ஆயர்பாடியில் - யசோதைக்குத் தெரியாது -
அரவணையில் கண் துயிலும் அச்சுதன் தான் - இச்சுவையாய்
மார்மீது முகம் வைத்து மடிமீது கிடக்கின்றனன் என்பது..

ஆனால் பெரியாழ்வாருக்குத் தெரியுமே!..

அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத் துயிலெழாயே
இரவும்உண்ணாது உறங்கி நீபோய் இன்றுஉச்சி கொண்டதாலோ
வரவுங்காணேன் வயிறசைந்தாய் வனமுலைகள் சோர்ந்துபாய
திருவுடைய வாய்மடுத்துத் திளைத்துதைத்துப் பருகிடாயே!.. (186)
(முதலாயிரம் - இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி)

தாயின் தவிப்பினைத் தரணிக்குக் காட்டும் திருப்பாசுரம் இது!..

பிள்ளைக்குத் தாய் பாலூட்டும் போது நல்ல நினைவுகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பர் பெரியோர்..

தாயின் எண்ணங்கள் தான் - பாலாகி - பிள்ளையின் உடலில் கலக்கின்றது.

சான்றோர்களையும் மகா வீரர்களையும் சிறப்பித்துப் பேசும்போது - 

தாய்ப்பாலுடன் தமிழையும் ஊட்டி வளர்த்தாள்!.. என்றும்,

தாய்ப்பாலுடன் வீரத்தையும் ஊட்டி வளர்த்தாள்!.. - என்றும் தாய்மை சிறப்பிக்கப்படுகின்றது..

அதற்கான சாட்சியங்கள் கண்முன்னே ஆயிரமாய் விரிந்து கிடக்கின்றன..

ஆனாலும், நமது சமுதாயம் - தவறிழைத்து விட்டது.. 

உள்ளேஉயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுத்து
அள்ளிஇடும் போதெல்லாம் அன்பையே சேர்த்தெடுத்து
தொல்லை தனக்கென்றும் சுகமெல்லாம் உனக்கென்றும் 
சொல்லாமல் சொல்லியிடும் தேவதையின் கோயிலது!..

 -என்று புகழ்ந்துரைப்பார் கவியரசர்..

பாலூட்டும் போதும் மடியேந்திச் சீராட்டும் போதும் தாயோடும் மகவோடும் பின்னிப் பிணைந்திருந்த மற்றொன்று - தாலாட்டு!..

செல்லத் தாலாட்டு, சிணுங்கற் தாலாட்டு முதல் வீரத் தாலாட்டு, வெற்றித் தாலாட்டு வரை கண்டது - தமிழர் மரபு..

வயற்காட்டில் காலார நடக்கும் போது - கானக் கருங்குயிலோடு கன்னித் தமிழில் கச்சேரி நடத்திய காலங்கள் எல்லாம் மலையேறிப் போயின..

வயற்காட்டையே அழித்தொழித்த பெருமைக்குரியவர்களாகிய நாம் -

மகவுக்குப் பாலூட்டுதலையும் தாலாட்டுதலையும் விட்டு வைப்போமா!..


பெண் கல்வியின் சதவீதம் மிகக் குறைவாக உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் தாய்ப் பாலூட்டுவோர் ஐம்பது சதவீதம்..

ஆனால்,

பெண் கல்வியில் 73.86% சதவீதம் கொண்ட தமிழகத்தில் -
மகவுக்குப் பாலூட்டும் தாய்மார்களின் சதவீதம் - பத்தொன்பது (18.8%).

தமிழ் நாட்டில் பரவலாக தாய்ப் பாலூட்டுவோரின் சதவீதம்:-

கன்யாகுமரி - 35%
தஞ்சாவூர் - 13%
ஈரோடு - 12%
திருவாரூர், தேனி - 10% 

சென்னை - 7% (!..)

தமிழகத்தில் தாய்ப்பாலூட்டியோர் 2007 - 08 -ன் ஆய்வின்படி - 22.4% ..

ஆனால், தற்போது தாய்ப்பாலூட்டுவோர்- 18.8% மட்டுமே!.. 

இந்தப் புள்ளி விவரங்களை வழங்கியோர் - UNICEF.,


கருவிலிருக்கும் குழந்தை - சுகப்பிரசவமாக - 
பூமிக்கு வந்த அந்த கணத்தில் சுரப்பது தான் தாய்ப்பால்!..

தாய்க்கும் சேய்க்கும் இடையே உள்ள அளப்பரிய அன்பின் இணைப்புத் தான் தாய்ப்பால்!..

முதலில் சுரக்கும் சீம்பால் - நோய் எதிர்ப்பு சக்தியுடையது..

ஒருமணி நேரத்திற்குள்ளாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்..

தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு ஆறு மாதங்கள் வரை - வேறு எந்த இணை உணவும் தேவையே இல்லை.

குறைந்த பட்சம் இரண்டாண்டுகள் வரைக்கும் குழந்தைக்குத் தாய்ப் பால் கொடுக்க வேண்டும்..

குழந்தை சாதாரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்தக் கூடாது..

- என்றெல்லாம் பல்வேறு செய்தி ஊடகங்களில் டாக்டர்கள் சிறப்புரை செய்கின்றனர்.

நிலவி வரும் சூழ்நிலையில் - பிரசவத்திற்குப் பின் - சில பெண்களுக்கு இயற்கையாக பால் சுரப்பதில்லை.. 

இன்னும் ஒரு கொடுமையாக - பிறந்த சில நிமிடங்களிலேயே - பெற்றவளால் கைவிடப்படுகின்றன - ஒருபாவமும் அறியாத பச்சிளங்குழந்தைகள்.... 

நாட்டின் பலபகுதிகளிலும் சிசுக்கள் - அதிலும் குறிப்பாக பெண் சிசுக்கள் கண்டெடுக்கப்படுகின்றன..

இத்தகைய சூழ்நிலையில் பச்சிளம் குழந்தைகளின் துயர் தீர்க்க - தமிழகத்தில்
சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையிலும் மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சை, தேனி - ஆகிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவ மனைகளிலும் தாய்ப்பால் வங்கி திறக்கப்பட்டுள்ளது..

தாய்ப்பால் பற்றாக்குறையால் பரிதவிக்கும் குழந்தைகளுக்கும் ஆதரவற்ற சிசுக்களுக்கும் பால் தேவைப்படுகின்றது..

அதிக பால் சுரக்கும் தன்மையுடைய இளந்தாய்மார்கள் - ஆதரவு கரம் நீட்டி பால் தானம் வழங்குதற்கு ஏதுவானவை - தாய்ப்பால் வங்கிகள்..

தாய்ப்பால் வங்கியில் தானம் செய்யப்படும் பால் தக்க முறையில் சேமித்து வைக்கப்பட்டு - தேவையுள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படுகின்றது..

மேலும், தற்போதைய சூழலில் ஒரு பெண் தன் குழந்தைக்கு பொது இடத்தில் பாலூட்டுதல் என்பது இயலாத காரியமாகி வருகின்றது..

வக்கிரம் பிடித்தவர்களின் கொடூரப் பார்வைக்கு எதுவும் தப்பமுடியவில்லை..

எவரையும் சகோதரிகளாகக் கண்ட காலங்கள் கனாக் காலங்கள் ஆகின..

இதைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு தமிழகத்தில் பல நகரங்களிலும் பொது இடங்களில் தயக்கமின்றி பாலூட்டுதற்கு வசதியாக பாதுகாப்பான அறைகளை அமைத்து உதவியிருக்கின்றது..

அந்த வகையில், தஞ்சை மாநகரில் - அரசு மருத்துவமனையில் பத்து லட்சம் ரூபாய் செலவிலான தாய்ப்பால் வங்கி அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு,
பழைய பேருந்து நிலையத்தில் இரண்டு,
அரசு விரைவு பேருந்து நிலையத்தில் ஒன்று

- என, குழந்தைகளுக்குப் பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உலக தாய்ப்பால் வாரத்தில் - மக்கள் நலனுக்காக தமிழக அரசு செய்துள்ள பணிகள் இவை.

செய்ய வேண்டியுள்ள இன்னொரு நல்ல காரியம் - மதுவிலக்கு..


ஆதரவற்ற குழந்தைகளுக்குப் பாலூட்டுவது முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்றாகும்..

பால் தானம் வழங்குவோரின் வம்சாவளியை -
அம்பிகையாகிய பராசக்தி காத்தருள்வதாக திருக்குறிப்பு!..

இதற்கு ஆதாரம் வேண்டுமா?.. இதோ!..

சூர சம்ஹாரத்திற்காக - எம்பெருமானின் நெற்றிக் கண்களில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்பட்டன.. 

அவை - சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாகித் தவழ்ந்தன..

அந்த ஆறு குழந்தைகளையும் அரவணைத்து அம்பிகை பாலூட்டவில்லை..

சரவணத்தில் உதித்த திருக்குமரனுக்கு திருமுலைப் பாலூட்டியவர்கள் அறுவர்..


அவர்கள் அறுவரும் தான் - கார்த்திகைப் பெண்கள்..

அந்த அறுவருக்கும் - கார்த்திகை எனும் நட்சத்திரப் பேற்றினை அருளுமாறு ஈசனிடம் விண்ணப்பித்துக் கொண்டவள் - அம்பிகை!..

எதிர்வரும் சனிக்கிழமையன்று ஆடிக் கிருத்திகை!..

வேண்டிய நல்லனவற்றை எளிதாக எய்துதற்கு இயைந்த நாள்!..

இத்தகைய நன்நாளில் நாமும் மற்றோரை ஊக்குவிப்போம்!..


தாய்ப்பால் ஊட்டுவதென்பது தலையாய பணி..

நல்ல எண்ணங்களுடன் சந்தோஷமாக - தாய் - தன் குழந்தைக்குப் பாலூட்டுவாள் எனில் - அந்தக் குழந்தையின் எதிர்காலம் சிறப்படைகின்றது..

அந்தக் குழந்தையால் பெற்றோரின் பெயர் சிறந்து விளங்குகின்றது..

அந்தக் குழந்தையால் வீடும் நாடும் உயர்வடைகின்றன...அம்பிகையின் அருள் நிலையாகக் குறிக்கப்படுபவை - திருத்தன பாரங்கள்..

சமய இலக்கியங்கள் பலவற்றிலும் அம்பிகையின் திருமேனி அழகு சிறப்புடன் குறிக்கப்படுகின்றது..

பக்திப் பனுவலாக விளங்குவது அபிராமி அந்தாதி..

பற்பல அந்தாதிகள் விளங்கினும் தனித்தன்மையாகத் திகழ்வது அபிராமி அந்தாதி!..

அபிராமவல்லி அம்பிகையை முதற்பொருளாகக் காண்கின்றார் பட்டர்..

அதிலும், ஐயனுடன் இணைந்து பொலிபவளாகவே நமக்குத் தரிசனம் செய்விக்கின்றார்.

திருக்கடவூரின் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக் கிழமையான இன்று - அபிராம வல்லியின் சந்நிதியே நமது தரிசனம்!..

பல்வேறு சிறப்புகளை உடையது அபிராமவல்லியின் சந்நிதி..

அபிராமவல்லியைக் குறித்து பல பதிவுகள் உள்ளன நமது தளத்தில்!..

திருக்கடவூரின் சிறப்புகளுள் ஒன்று - அபிராமி அந்தாதி!..

அந்தாதியின் திருப்பாடல்கள் - வறுமை நீக்கி - இம்மை மறுமை நலன்களை அளிக்க வல்லவை..

அம்பிகையின் சிறப்புகளைக் கூறும் அந்தாதியின் பாடல்கள் பலவற்றிலும் அன்னையின் திருத்தன பாரங்களைக் குறிக்கின்றார் - அபிராம பட்டர்..


அம்மா.. நீ பல்வேறு சிறப்புகளை உடையவள். உன் சிறப்புகள் அனைத்தையும்  இங்கு உரைக்க என்னால் இயலாது.. என்னால் மட்டுமல்ல.. எவராலும் இயலாது... ஆயினும் நீ என் முன் வரவேண்டும்.. வந்தருளல் வேண்டும்!..

எப்படி வரவேண்டும் தெரியுமா!..

எந்தை எம்பெருமானின் கண்ணிலும் கருத்திலும் நிறைந்து விளங்குவதும் பொன்மயமான மேரு மலையினை விஞ்சி விளங்குவதும் பேரருளின் நிலைக்களமாக விளங்கி பால் அழுத பிள்ளைக்கு பரிவுடன் நல்கியதுமாகிய திருத்தன பாரங்களும் அவற்றின் மீது தவழ்ந்திருக்கும் முத்து மணி மாலைகளுமாக

கரும்பு வில்லையும் பஞ்ச பாணங்களையும் செங்கரத்தினில் ஏந்தியவளாக சிவந்த இதழ்களினூடாக மயிலிறகின் வெளுத்ததாக விளங்கும் புன்னகை தரித்தவளாக -

நீ என் முன் வந்தே ஆகவேண்டும்!.. 

அந்தத் திருக்காட்சியன்றி யான் யாதொன்றும் வேண்டேன்!..

கருத்தன எந்தைதன் கண்ணன வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்தென் முன்நிற்கவே!.. (9)

நான் முன் செய்த புண்ணியம் ஏது
என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே!..

ஓம் சக்தி ஓம்..  
* * *

16 கருத்துகள்:

 1. தாய்ப்பால் ஊட்டுவது என்பது தலையாய பணிதான் ஐயா
  இன்றைய பெண்கள் தங்களின் அழகு போய்விடும் என்று எண்ணி
  புறக்கணிப்பது வேதனைதான்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 2. அன்பின் ஜி தாய்ப்பாலின் மகத்துவத்தை இதற்க்கு மேல் இவ்வளவு விளக்கவுரையுடன் யாரும் கொடுக்க முடியாது இந்த பதிவு இன்றைய சந்ததிகளுக்கு ஒரு பாடமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி!..

   நீக்கு
 3. அனைவரும் அறிய வேண்டிய சிறப்பான பகிர்வு ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. அருமையான பதிவு. தாய்மையின் மகத்துவத்தை காட்டும் அரிதான படங்கள் என்று பதிவு மிகவும் அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 5. வணக்கம்,
  சமூக சிந்தையில் முகிழ்த்த மற்றொரு முத்து பதிவு, நல்ல விளக்கம், காலத்திற்கு ஏற்றது,
  அழகான பாடல், அருமையான விளக்கம்,
  வாழ்த்துக்கள்,
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 6. தாய்ப்பாலின் முக்கியத்துவம், தாய்மையின் பெருமை குறித்த பதிவு நல்ல பயனுள்ள செய்திகளைக் கொண்டிருந்தது. தாங்கள் தேர்ந்தெடுத்த புகைப்படங்களைப் பார்க்கும்போது அப்பொருண்மையின்மீதான தங்களது ஈடுபாட்டினையும், அதனைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற தங்களின் எண்ணத்தையும் அறியமுடிகிறது. மாணிக்கவாசகர் தொடங்கி பக்தி இலக்கியங்களில்தாங்கள் தந்த ஒப்புமை மிகவும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. தாய்ப்பாலின் மகத்துவம் குறித்த உங்கள் பகிர்வு மிக அருமை.

  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. தாய்ப்பால் பற்றிய விளக்கம் அதுவும் ஆன்மீகத்துடன் அருமை. அந்தக் குழந்தை பசுவின் அடியில் பால் குடிக்கும் படம் மிக மிக அருமை ரசித்தோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு