நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 13, 2015

பிடியொடு வரும் களிறு

திருஐயாறு..

தஞ்சையின் வடக்கு எல்லையில் தவழும் வடவாற்றைக் கடந்தால் சற்று தூரத்தில் வெண்ணாறு..

இந்த வெண்ணாற்றின் கரையில் தான் ஏழு திருக்கோயில்கள் திகழ்கின்றன..

வெண்ணாற்றைக் கடந்து நடந்தால் - வெட்டாறு, குடமுருட்டி..

குடமுருட்டியின் கரையில் தான் - நான்முகனின் சிரம் அறுபட்ட தலமாகிய- திருக்கண்டியூர்.. வீரட்டானத் திருத்தலம்.. 

கண்டியூரிலிருந்து சிறிது தூரத்தில் வான் பொய்ப்பினும் தான் பொய்யாத திருக் காவேரி!..

இதன் வடகரையில் தான் - திருஐயாறு..

அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாய தரிசனம் அருளப் பெற்ற திருத்தலம்..

திருஐயாற்றில் - கயிலாய தரிசனம் அருளப்பெற்ற நாள் ஆடி அமாவாசை..


சிவ தரிசனம் காண வேண்டி - உண்ணவும் இல்லை. 
ஓரிடத்தில் இருந்து உறங்கவும் இல்லை!.. 

விளைவு!.. 

தளராத ஊக்கத்துடன் - கயிலாய மாமலையில் பயணம் செய்த நாவுக்கரசர் - ஒரு நிலையில் - மேலும் தனது பயணத்தைத் தொடர இயலாத நிலைக்கு ஆளானார்..

நடக்க முடியாத நிலையில் தவழ்ந்து சென்றார்.. 
அதுவும் இயலாத நிலையில் ஊர்ந்து சென்றார்..

பனிப் பாறைகளின் ஊடாக - ஊர்ந்து சென்ற அப்பர் பெருமானின் உடல் நலம் - கயிலாய மலைச்சாரலில் இருந்த மானசரோவரப் பொய்கையின் அருகில் - ஒரு அடி கூட கடக்க இயலாத அளவுக்கு பாதிக்கப்பட்டது...

கரடு முரடான நிலத்தில் ஊர்ந்ததால், மார்புத் தசைகள் தேய்ந்தன.. கைகால் எலும்புகளும் முறிந்து சிதறின..


அந்நிலையிலும் - அப்பர் பெருமானின் நெஞ்சம் - 
ஐயனின் ஆனந்தக் காட்சியினைக் காண்பதிலேயே குறியாக இருந்தது..

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்!..

- என அவரது - இதயம் துடித்துக் கொண்டிருந்தது..

நாவுக்கரசரின் நெஞ்சுரம் கண்டு கயிலை மாமலையும் உருகியது. 

கயிலை மாமலையே  - உருகிய போது கருணை வடிவான கயிலை நாதனின் நெஞ்சம் உருகாமல் இருக்குமா!.. உருகிற்று!..

எம்பெருமான் அவரது நிலையைக் கண்டு மனம் இரங்கினான்..

தவயோகி என உருக் கொண்டு நாவுக்கரசரின் - முன்னெழுந்து,

''..உடலெல்லாம் காயப்பட்ட நிலையில் இங்கு என்ன காரணம் கொண்டு வந்தீர்?..''  - என வினவி நின்றான்!..

''..வண்டுலாவும் மலர்க் கூந்தல் உமாதேவியுடன் , எம்பெருமான் கயிலையில்  வீற்றிருக்கும் திருக்காட்சியினைத் தரிசிக்க விருப்புற்று வந்தேன்!..'' - என்றார் அப்பர்.

''..தேவர்களுக்கே அரிதானது கயிலை!.. அதனை நாடி வந்து இத்தனை துன்பம் அடைகின்றீரே!.. உம் போன்ற மானுடர்க்கு அது அத்தனை எளிதல்ல!.. எனவே
இங்கிருந்து மீண்டு செல்வீராக!..''

''ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை காணாமல், மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்!..'' - என, திடமாக மறுத்து உரைத்தார் - சுவாமிகள்!..

தன் அடியாரின் மன உறுதியைக் கண்டு - ஈசன் எம்பெருமான் வியந்து நின்றனன்...

''நாவுக்கரசரே!.. இதோ இந்தப் பொய்கையுள் மூழ்கிக் கயிலைக் காட்சியினைக் காண்பீராக!..'' - என மொழிந்து மறைந்தான்...

- திகைத்தார் ஸ்வாமிகள்.

நாவுக்கரசரா!?..

அந்தப் பெயர் அதிகை வீரட்டானத்தில் ஐயன் அருளியதாயிற்றே!.. அப்பெயரை யான் மறந்தும் வெகுநாளாயிற்றே!..  இங்கே அதை அறிந்து அழைத்தவர்  யாராயிருக்கக் கூடும்?..  

அந்த அளவில் - வந்தது இறை என்றுணர்ந்து  அகமகிழ்ந்த - அப்பர் பெருமான் - அருகில் இருந்த மானசரோவர பொய்கையில் மூழ்கினார் . 

திருஐயாறும் திருக்கயிலையும்
மூழ்கி எழுந்தபோது அவர் கண் முன் தெரிந்தது பஞ்சநதீஸ்வரம் - எனப்பட்ட திருஐயாறு!..

அப்போது -  திருக்கயிலைக் காட்சி பேரானந்தப் பெருங்காட்சியாக விரிந்தது!..

கணபதி, கந்தன், திருமால், நான்முகன் -  சூழ்ந்திருக்கக் கண்டார்.

இந்திரன் முதலான தேவர்களுடன் அசுரர்கள்,சித்தர்கள், மகரிஷிகள், வித்யாதரர்கள், கின்னரர்கள், யட்சர்கள்,  நாகர்கள் - என  அனைவரும்  திரண்டு நின்று வணங்கிடக் கண்டார். 

கங்காதேவி மங்கல நீர் வார்க்க - சிவகணங்களும் பூதவேதாள கணங்களும் பலவகையான வாத்தியங்களை இசைத்துப் போற்றிட - 

தேவ மகளிரின் பாடலும் ஆடலும் முழவு ஒலியும் எழுகடலின் ஓசை என எங்கும் எதிரொலிப்பதைக் கேட்டார்.

இறைவனின் ஆணைப்படி, வருபவர்க்கு வழிபாடு செய்விக்கும் பொறுப்பினை உடைய நந்தியம் பெருமான் நடுவில் நின்று விளங்கிட, 


வெள்ளி மலையென விளங்கும் விடை வாகனத்தின் மீது உமா தேவியுடன் - வீற்றிருக்கும் காட்சியைக் கண்டு கை தொழுது வணங்கி இன்புற்றார்.  

அந்த அளவில் -

அம்மையும் அப்பனும் ஆனந்த ஸ்வரூபமாக - ஆடி வருவதைக் கண்டு இன்புற்றார்.

நிற்பனவும் நடப்பனவும் ஆகிய உயிர்கள் அனைத்தும் - சக்தியும் சிவமும் ஆகிப் பொலிந்தன..

அத்தன்மையில், பற்பல உயிர்களின் பிறப்பு விளங்கும் முறைமையைக் கண்டார். 

அப்பர் ஸ்வாமிகளின் கண்களிலிருந்து ஆனந்தம் வழிந்தது..

அமுதத் தமிழில் திருப்பதிகம் பிறந்தது..

காதல் மடப்பிடியோடுங் களிறு
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந் தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்!..
 

கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து
வரிக்குயில் பேடையொடு ஆடி
எரிப்பிறைக் கண்ணியானைத் ஏந்திழையாளொடும் பாடி 
முரித்த இலயங்களிட்டு முகமலர்ந்தாடா வருவேன்
அரித்தொழுகும் வெள்ளருவி ஐயாறடைகின்றபோது
வரிக்குயில் பேடையொடாடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.. (3)

சிறையிளம் பேடையொடு ஆடிச் சேவல்
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து
ஏடு மதிக் கண்ணியானைத் ஏந்திழையாளொடும் பாடிக் 
காடொடு நாடு மலையுங் கைதொழுதாடா வருவேன்
ஆடல் அமர்ந்துறைகின்ற ஐயா றடைகின்றபோது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.. (5)

 வண்ணப் பகன்றிலொடு ஆடி
கருங்கலை பேடையொடு ஆடிக் கலந்து
விரும்பு மதிக் கண்ணியானைத் மெல்லிய லாளொடும் பாடிப் 
பெரும்புலர் காலைஎழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி உந்தும் ஐயா றடைகின்றபோது
கருங்கலைப் பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.. (8)

நற்றுணைப் பேடையொடாடி நாரை
பைங்கிளி பேடையொடு ஆடி
திங்கள் மதிக்கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி 
எங்கருள் நல்குங்கொல் எந்தை எனக்கினியென்னா வருவேன்
அங்கிள மங்கையராடும் ஐயாறடைகின்ற போது
பைங்கிளி பேடையொடாடிப் பறந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.. (10)

இளமண நாகு தழுவி வரும் ஏறு
வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததோர் காலங் காண்பான் கடைக்கணிக் கின்றேன்
அளவு படாததோ ரன்போ டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்!..
 (4/3/11)


திருநாவுக்கரசு சுவாமிகள்  பாடினார். ஆடினார். அழுதார். தொழுதார்.. 

''சுவாமிகளுக்கு அங்கு நிகழ்ந்தனவற்றை யார் சொல்ல வல்லார்?.  எவரும் இலர்!..'' - என்கின்றார் சேக்கிழார் பெருமான் - பெரிய புராணத்தில்!...

அப்பர் பெருமான் கண்ட கயிலாயத் திருக்காட்சி ஆடி அமாவாசை தினமாகிய - நாளை (ஆகஸ்ட்/14) திருஐயாற்றில் பெருங்கோலாகலமாக நிகழ்கின்றது.

திருஐயாற்றில் கயிலைக் காட்சி கண்டால் கயிலாயம் தரிசித்த புண்ணியம் என்பர். 

நாமும் மனதார மாமலைக் கயிலையைத் தரிசிப்போம்!..


தேவார பாராயணம் செய்தபடி - நாள்முழுதும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கோயிலினுள் குழுமியிருக்க, மாலை வேளையில்  - திருக்கயிலாயக் காட்சி தந்தருளும் வைபவம் நிகழ்வுறும்.

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி ஸ்ரீஐயாறப்பருடன் வலம் வந்து அருளும் - பக்திப் பரவசமான காட்சியினைக் காணக் கண்கோடி வேண்டும். 

அடியார்களாகிய நம் பொருட்டு
பிடியொடு வருங்களிறென 
அம்பிகையுடன் ஐயன் எழுந்தருள்கின்றனன்..

வலஞ்செய்து வணங்கி வளம் பெறுவோம்..
வாழ்வதற்கு இனிய வரம் பெறுவோம்!..  

கயிலாய நாதனைக் கண்டு தரிசிப்போம்!..  
கண் கொண்ட பயனைப் பெறுவோம்!.

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி.. போற்றி!..
திருநாவுக்கரசர் (6/55) 

சிவாய திருச்சிற்றம்பலம்.. 
* * *

16 கருத்துகள்:

 1. வணக்கம்,
  தற்போது தான் நினைத்தேன், உடன் தங்கள் தளத்தில் பதிவு. ஆம் , செய்தித்தாளில் நாளை திருவையாறு கைலாயக் காட்சி படித்தேன், தாங்கள் அது பற்றி பதிவிடலையே, ஒரு வேளை நாளை வரும் என்று நினைத்தேன், வந்தால் இங்கு பதிவு,
  ஆம் ஒவ்வொன்றும் தன் இணையுடன்,,,,,,,,
  அழகான விளக்கம்,
  அழகிய புகைப்படங்கள்,,,,,,,,
  வாழ்த்துக்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 2. அன்பின் ஜி பதிவு அருமை எப்படித்தான் இவ்வளவு அழகான புகைப்படங்கள் சேகரிக்கின்றீர்களோ... கொஞ்சம் எனது காதோரம் ஓதுங்களேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   இணையத்தில் இருந்து தான் படங்களைப் பெறுகின்றேன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 3. மாதர் பிறைக் கண்ணியானை..... கயிலைக்காட்சி கண்டோம். உங்களால். உங்களுக்குகோடானுகோடி நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
   இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 4. திரு ஐயாறு எனது சொந்த ஊர்
  படிக்கப் படிக்கப் பெருமைதான் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 5. மனம் குளிர்ந்தது பக்தி பரவசம் நிறைந்த பதிவினை படித்தபோது,
  மனமொன்றிய சேவையை சேவித்தேன். வாழ்க திருநாமம்! வளர்க திருச் சேவை!
  நன்றி அய்யா
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 6. திருஐயாறு கயிலைக் காட்சி கண்டு களித்தேன். படங்கள், செய்திகள் மிக அருமை.
  நன்றி. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
   இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 7. அழகிய் படங்கள். சிறப்பான தகவல்கள்.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 8. படங்களை எங்கிருந்து பெறுகின்றீர்கள்? அந்தக் கயிலாயம் மிக அழகு....தகவல்களுக்கு மிக்க நன்றி...கயிலாயம் செல்ல வேண்டும் என்ற ஒரு அவா உண்டு...பார்ப்போம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   படங்கள் இணையத்தில் கிடைத்தவை..
   கயிலாய மலையுடன் திருவையாறு ராஜகோபுரத்தை Water Mark செய்தேன்.. ரிஷப வாகனக் காட்சி நண்பர் ஒருவர் அளித்தது..

   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..