நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 17, 2024

நந்தீசன்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
 பங்குனி 4
ஞாயிற்றுக்கிழமை


நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக் ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே..
-: திருமூலர் :-

சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் இவர்களுடன் சிவயோக மாமுனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகிய மூவர். தன்னையும் சேர்த்து எண்மர் என்பது திருமூலர் திருவாக்கு..
**

வடதிசைக்கு அதிபதியாகிய குபேரனிடமிருந்த  புஷ்பக விமானத்தைப் பிடுங்கிக் கொண்ட ராவணன் - ஆணவத்துடன் அதில் பயணித்த போது திருக்கயிலாய மலையால் அவனது பயணம் தடைப்பட்டது..

ஆத்திரம் கொண்ட ராவணன்
மலையைப் பெயர்த்து எடுக்க முயன்றான்.
 
அப்போது - " இப்படிச் செய்யாதே.. இது தகாது.. " - என நந்தியம்பெருமான் ராவணனுக்கு அறிவுறுத்தினார்.
அந்த அறிவுரையைக் கேட்காத ராவணன் - " குரங்கு போல முகம் கொண்டவனே நீயா என்னைத் தடுப்பது?.."  - என, ஏளனமாகப் பேசினான். 

கடும் சீற்றம் கொண்டார் நந்தியம் பெருமான்...

" அடே.. மதி கெட்டவனே.. நீயும் உன் நாடும் குரங்குகளால் அழியக் கடவீர்கள்.. " -  என்று சாபமிட்டார்..

அதன்பின் -
காலப்போக்கில் நடந்ததை நாம் அறிவோம்..

திருக்கயிலாய குரு பரம்பரையின் முதல் குரு நந்தியம்பெருமான்..

ஈசனைப் போலவே நந்தியம்பெருமானின் நட்சத்திரமும் திரு ஆதிரை..

நெற்றியில் கண்ணும் ஒளி நிலாவும் திகழ நான்கு புயங்கள் மான் மழு இவற்றுடன் பொற்பிரம்பு ஒன்றும் தாங்கிய வண்ணம் சிவ ஸ்வரூபமாகத் திகழ்கின்றார்..

நந்தியம்பெருமானின்  சீடர்களுள் ஒருவர் திருமூலர்.

சிந்து சமவெளி நாகரிகத்தில் நந்தி முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நந்தியம்பெருமான் ஞானத்தின் அடையாளம்..
தர்மத்தை மீறிச் செயல்படுபவர்களை தண்டிப்பவராக  திகழ்கின்றார்..

நான்கு வேதங்களையும் நான்கு பாதங்களாகக் கொண்டவர்..

திருக்கயிலாயத்தின் காவல் நாயகம் நந்தியம்பெருமான்..
அதிகார மூர்த்தி..


கொடி மரத்திற்கு அருகில்  அதிகார நந்தி..

சில ஆலயங்களில் அடுத்து ஒரு நந்தி விளங்கும். அது விஷ்ணுநந்தி (மால்விடை) 

திரிபுர சம்ஹாரத்தின் போது தேவர்கள் ஒன்றுகூடி தேர் வடிவாகினர்.. தேர் ஈசனுக்காக என்று அவர்களுக்குள்ளும் ஆணவம் மூண்டது.. 

இதை உணர்ந்த ஞானவிநாயகர் அந்தத் தேரின் அச்சினை ஒடித்துப் போட்டு விட்டார்.. அச்சமயத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணு நந்தியாகத் தாங்கினார் என்பதாக ஐதீகம்.. இதனாலேயே மால் விடை.

வேறு சில  கோயில்களில் முன் மண்டபத்தில் ஒரு நந்தி காட்சி தருவார். இவர் பிரம்ம நந்தி..

மூலஸ்தானத்தில்
சிவபெருமானுக்கு அருகில் தர்ம நந்தி... இவரே ஊழிக் காலத்தில் ஈசனுடன் இருப்பவர்..

மூலஸ்தானத்தில் லிங்கத் திருமேனியின் நாபியை உயிர் நிலையாகக் கொண்டு, அந்த நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது...


அனைவரும் அறிந்துள்ள பெருஞ்சிறப்பு தஞ்சை பெரியநந்தி.. 
இவரது கழுத்தில் சிவமணி மாலையில் சிவலிங்கம் திகழ்கின்றது..

கங்கை கொண்ட சோழபுரம்,
ராமேஸ்வரம், திருஇடைமருதூர், கீழ்வேளூர்  - இத்தலங்களில் நந்தி மிகப் பெரிதாக சுதை வடிவில் விளங்குகின்றார்..

பட்டீஸ்வரம், திருப்பூந்துருத்தி ஆகிய தலங்களில் ஞானசம்பந்தருக்காக விலகிய நந்தி - திருநாளைப் போவார் எனும் நந்தனாருக்காக விலகியுள்ள தலம் திருப்புன்கூர்..

திருவைகாவூர் தலத்தில் யமனை விரட்டுவதற்காக கிழக்கு நோக்கி விளங்குகின்றார்.. மயிலாடுதுறையில் ரிஷப தீர்த்தக் கட்டம் உள்ளது..

அடியவர்களுக்கு ரிஷப வாகனராகக் காட்சியருளி ஆட்கொள்வதே கயிலாய தரிசனம்...

சிவத்தலங்களின் திருவிழாக்களில் ரிஷப வாகனம் சிறப்புடையது.. 

திருமயிலை பங்குனித் திருவிழாவில் ஈசன் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருள்கின்றார்..

தஞ்சை பிள்ளையார்பட்டி கோயிலில் ஸ்ரீ விநாயகருக்கு முன்பாக நந்தி வாகனம்..
திருப்பரங்குன்றம், திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கு முன்பாக நந்தி வாகனம்..

தஞ்சை ஸ்ரீ சிறை காத்த ஐயனார் சுதை வடிவில் ரிஷப வாகன தரிசனம் அருள்கின்றார்.. 

தஞ்சை ஸ்ரீ கோடியம்மன், ஸ்ரீ உக்ர காளியம்மன் கோயில்களில் சந்நிதி முன்பாக நந்தி வாகனம்..

இத்தனை சிறப்புடைய நந்தியம்பெருமான் நாளை திங்கள் திரு ஐயாறு -  அந்தணக் குறிச்சியில் ஜனன வைபவம்..

மறுநாள்
செவ்வாய்க்கிழமை திருமழபாடியில்
சுயம்பிரகாஷிணி தேவியுடன் திருமணம் காண்கின்றார்..

நாளைய பதிவில் திருமண அழைப்புடன் மேலும் விவரங்கள்..

ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்
நேற்று பங்குனி  3 (சனிக்கிழமை) தஞ்சை கரந்தை ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனாகிய வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் உதயாதி வேளையில் சூர்ய கிரண  வழிபாடும் அதைத் தொடர்ந்து  சிறப்பு பூஜைகளும்  நடைபெற்றது.. இன்றும் நாளையும் சூர்ய கிரண வழிபாடு தொடர்கின்றது..


நெற்றி மேல் நிமிர் கண்ணும் நிலா ஒளிர் 
பொற்றடம் புயம் நான்கும் பொருந்துறப் 
பெற்றெம்மான் அருளால் பிரம்பு ஒன்று கைப் 
பற்றும் நந்தி பரிவொடு காப்பது..
-: கந்த புராணம் :-

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்
நந்தி அருளாலே மூலனை நாடினேன்
நந்தி அருளாவது என்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நான்இருந்தேனே.. 
-: திருமூலர் :-

திருமந்திரத் திருப்பாடல்கள் 
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

 1. நந்தியெம்பெருமான் தரிசனமும், தர்ம நந்தி, பிரம்ம நந்தி என்றும், ஒவ்வொரு தலத்திலும் அவர் எழுந்தருளியிருக்கும் விவரங்களும் அருமை. ஆமாம் தஞ்சை பெரிய நந்தி! கம்பீரத் தோற்றம் நம்மை வியந்து பார்க்க வைப்பார்!

  கீதா

  பதிலளிநீக்கு
 2. நந்தியம்பெருமானின் சிறப்புகள் அறிந்தேன்.  வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகு. நந்திகேஸ்வரரை பற்றிய விபரங்கள் அருமை. பதிவு படிக்கவே சுவாரஸ்யமாக இருந்தது. கோவில்களின் ஒவ்வொரு இடத்திலும் அவர் இருக்கும் விபரங்களும் அதற்கேற்ற பெயர்களும் படித்து அறிந்து கொண்டேன். நந்தியம்பெருமானை வணங்கி கொண்டேன். உலகத்தை காத்து ரட்சிக்கும் சர்வேஷ்வரரின் அத்தனை சிறப்புகளையும் பெற்ற அவர் அனைவருக்கும் உடல்நலத்தையும், தேக பலத்தையும் தந்தருளுமாறு பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. நந்தியம்பெருமானின் தரிசனம் - மனதில் மகிழ்ச்சி. தகவல்கள் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. நந்தியம்பெருமான் தரிசனம் பெற்றோம்.

  பதிலளிநீக்கு
 6. அருமையான நந்தியம்பெருமான் விவரங்களும் , படங்களும் அழகிய தரிசனம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..