நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 20, 2024

திரு ஆரூர்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 7
புதன் கிழமை

திரு ஆரூர்
மூலட்டானம்
ஃஃஃ


ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநா ளென்(று)
ஊரூர்கள் தோறும் உழலுவீர் நேரே
உளக்குறிப்பை நாடாத ஊமர்காள் நீவிர்
விளக்கிருக்கத் தீத்தேடு வீர்.
-: பட்டினத்தார் :-


சோழ வளநாட்டின் காவிரித் தென் புறத்தில்  தேவாரத் திருப்பதிகம் பெற்ற எண்பத்தேழாவது தலமாகத் திகழ்வது திருஆரூர்..

சைவ மரபில் தில்லைத் திருச்சிற்றம்பலம்  கோயில் என வழங்கப் பெற்றாலும் திருமூலட்டானம் எனப் போற்றப்படுவது திரு ஆரூர்..

இத்திருக்கோயில்
பூங்கோயில் எனவும் வழங்கப்படும்..

பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலம் (மண்ணின் பகுப்பு).

இறைவன் இங்கே புற்று வடிவானவர்.. எனவே வன்மீகநாதர் - புற்றிடங்கொண்டார்..

கோயில் ஐந்து வேலி
குளம் ஐந்து வேலி - என்றொரு சொல்வழக்கு..

வேலி என்பது பழைய நில அளவை..
ஒரு வேலி = 6.17 ஏக்கர் 
ஐந்து வேலி 30.85 ஏக்கர்
திருக்கோயிலுக்குச் சமமான பரப்பளவை உடையது கமலாலயத் திருக்குளம்..
 
ஸ்ரீ முசுகுந்த சக்கரவர்த்தி தேவலோகத்தில் இருந்து கொணர்ந்து பிரதிஷ்டை செய்த விடங்க ஸ்தலங்களில் முதலாவதாகத் திகழ்கின்றது... 

சோழ மன்னர்கள் முடி சூட்டிக் கொள்ளும் நகரங்களில் திரு ஆரூரும் ஒன்று..

திரு ஆரூர் திருவாசகத்திலும் பாடப்படுகின்ற திருத்தலம்.. 

பசுவிற்கும் நீதி வழங்கிய மனு நீதி சோழர் ஆட்சி செய்த திருத்தலம்..

நமிநந்தியடிகள் நீரால் திருவிளக்கேற்றி  வழிபட்டதான ஆரூர் அரநெறி இத்திருக்கோயிலினுள் மேற்கு நோக்கி விளங்குகின்றது.. 

சுந்தரர் பொருட்டு  
சிவபெருமான் பரவை நாச்சியார் திருமனைக்கு நடுச்சாமத்தில் இருமுறை தூதாக நடந்து சென்றனர் என்ற பெருமையை உடையது திரு ஆரூர்..

சாயரக்ஷை எனும் அந்திக்காப்பின் போது தேவேந்திரன் வந்து தியாகேசப் பெருமானை வழிபடுவதாக ஐதீகம்.. 

இதனால் தியாகேசர் சந்நிதியில் ஸ்ரீ நந்தியம்பெருமான் நின்ற வண்ணமாக சேவை புரிகின்றார்..

இறைவனின் சோமாஸ்கந்த திருக்கோலமே விடங்க மூர்த்தி.. 

விடங்க மூர்த்தி - 
விடங்கம் எனில் உளி கொண்டு செய்யப்படாதது..
இறைவன் தாமே தாம் உகந்த திருமேனி.. திருக்கயிலை திருவோலக்கத் திருக்கோலம்..

இங்கே தியாக விடங்கர்.. இவரது நடனம் அஜபா.. மூச்சுக் காற்றைப் போல்வது..

இது திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனால் சிந்திக்கப்பட்டு  நெஞ்சகத்தில் நிலை பெற்றிருந்ததாகும்.. 

இத்திருக்கோலம் - தேவேந்திரன் வேண்டிக் கேட்டபோது அவனுக்காக வெளிப்பட்ட திருமேனியாகும்.. 

இதனை முசுகுந்தர் விரும்பிக் கேட்க  - அதன் பின் நிகழ்ந்தவை அற்புதங்கள்.. 

அதனை வேறொரு சமயத்தில் காண்போம்..

இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் அருளிச்செய்த  திருப்பதிகங்கள் 6

திருநாவுக்கரசர் அருளிச்செய்த 21 திருப்பதிகங்கள் 

சுந்தரர் அருளிச்செய்த திருப்பதிகங்கள்  8 

ஆக 35 திருப்பதிகங்கள் கிடைத்துள்ளன.. 

திருத்தொண்டத் தொகை - எனும் அடியார் பெருமையை சுந்தரர் பாடியது இக்கோயிலில் தான்..

தவிரவும்,
வேறு பல பதிகங்களிலும் திரு ஆரூர் பேசப்படுகின்றது..

மாணிக்கவாசகப் பெருமானும் - ஆரூர் அமர்ந்த அரசே போற்றி என்று போற்றுவதுடன் பற்பல இடங்களிலும் ஆரூரைக் குறிப்பிடுகின்றார்.. 


பெருஞ்சிறப்புடைய திருத்தலத்தில் நாளை வியாழக்கிழமை ஆழித்தேர் உற்சவம் நடைபெறுகின்றது..

பதிவில் உள்ள படங்கள் எனது தொகுப்பில் இருப்பவை..


கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் காமனை
மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர்
தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல்
அங்கண்மந்தி முந்தியேறும் அந்தணாரூ ரென்பதே.. 2/101/7
-: திருஞானசம்பந்தர் :-

கற்றவர்கள் உண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர் தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 6/32/1
-: திருநாவுக்கரசர் :-

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாந் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறி ஒண்ணா
எம்மானை எளி வந்த பிரானை
அன்னம் வைகும்வயற் பழனத்து அணி
ஆரூரானை மறக்கலுமாமே..
7/59/1
-: சுந்தரர் :-

பூங்கமலத்து அயனொடுமால் அறியாத நெறியானே
கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறா வெண்ணீறாடீ
ஓங்குஎயில் சூழ் திரு ஆரூர் உடையானே அடியேன்நின்
பூங்கழல்கள் அவையல்லாது எவையாதும் புகழேனே..
-: மாணிக்கவாசகர் :-

ஆருரா தியாகேசா
ஆருரா தியாகேசா

ஆரூர் பெருமான்
அனைவரையும் காக்க
 **
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

 1. ஓம் நமசிவாய
  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
 2. திருவாரூரானே போற்றி போற்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு ஆரூரானே போற்றி போற்றி.

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. தகவல்களுக்கு நன்றி. ஒரு முறையேனும் இங்கே தேரோட்டம் காண ஆசை உண்டு. ஈசன் அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
 4. திருப்பதிகங்களை பாடி ஆரூரானை வணங்கி கொண்டேன்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..