நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 01, 2021

கதிரவன் போற்றி..

      

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

சில தினங்களுக்கு முன்பு
அன்புக்குரிய
ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள்
தமது தளத்தில் வெளியிட்டிருந்த
அருணோதயப் படங்களே
இன்றைய பதிவுக்குக் காரணம்..

இந்தப் பதிவில் வெளியிடுவதற்கு
அவர்களது பதிவிலிருந்து
படம் ஒன்றைக் கேட்டிருந்தேன்..
மகிழ்வுடன் இசைவு தந்தார்கள்..

அப்படி பெறப்பட்டதே
மேலேயுள்ள படம்..

மேலும்
புதிய பதிவுக்காக இந்தப் படம்
என்று கேட்டதும்
ஞாயிறு போற்றுதும்..
ஞாயிறு போற்றுதும்!..
- என, எழுதப் போகின்றீர்களா?..
என்று கேட்டது தான்
எனக்கு ஆச்சர்யம்..

அவர் தமக்கு
நெஞ்சார்ந்த நன்றி..

அன்றைக்கு
அன்புடன் கேட்டிருந்தார்கள் - 
பேத்திகளுக்குக் கவிதை
எழுதி அனுப்புவீர்களா?.
- என்று..

அந்த வகையில் தனியாக
ஏதும் எழுதவில்லையே
தவிர
பதிவில் எழுதுவதெல்லாம்
அவர்களுக்காகத் தான்..

மேலும் - அவர்களுக்கு
அருகில் தமிழ்ப் பள்ளி ஏதும்
இல்லாததால்
இன்னும் முறையாகத் தமிழ்
பயிலவில்லை..

காலம் விரைவில்
கைகூடி வருவதற்கு
வேண்டிக் கொள்வோம்..

இதோ இன்றைய கவிதை..
கீழுள்ள படங்கள்
இணையத்தில் பெறப்பட்டவை..

இதனை எழுதி முடித்த பிறகு
கண்ணிகளை எண்ணிப்
பார்த்தேன்..

பன்னிரண்டாக
அமைந்திருந்தன..

நமது புராணங்களின்படி
ஆதித்யர்கள் பன்னிருவர்
என்பது நினைவுக்கு வந்தது..
அந்த அளவில்
நெஞ்சமும் நெகிழ்ந்து நின்றது..

எல்லாம்
எனையாளும் ஈசன் செயல்..


கதிரவன் உதயம் கண்ணிற்கழகு...
காண்பன அனைத்தும் மண்ணிற்கழகு..
புல்லின் நுனித் துளி பருகிக் களித்து
புவனம் காப்போன் பூரித் தெழுந்தான்.. 1

கழனியும் நீரும் கைத்தலம் பற்றுதல்
கதிரவன் அன்புப் புன்னகையாலே..
நாற்றும் காற்றும் முத்தாடுவது
முன்னவன் திருவிழிப் பார்வையினாலே.. 2


சிறகினை விரித்த பறவைகள் எல்லாம்
சில்லென இசைப்பது செங்கதிராலே
சீற்றம் மிகுத்த சிறுபுலி அதுவும்
சீறிப் பாய்வதும் வெங்கதிராலே... 3

வேரும் நீரும் பின்னிப் பிணைவது
ஆதவன் அருளும் நன்மையினாலே
வேந்தன் அவனது செங்கோல் ஒளியும்
வெயிலோன் நல்கும் கருணையினாலே.. 4


கமலமும் தழைத்து கடுமனம் தீர்ப்பது
கதிரவன் வழங்கிய மேகங்களாலே..
பாரினில் மேன்மைகள் செழிப்பது எல்லாம்
பகலவன் வழங்கிய தாகங்களாலே.. 5


காவிரி ஆடும் மீனினம் எல்லாம்
கரையினில் ஆடுதல் கதிரவனாலே
கானிடை ஊறும் தேனினை மாந்தர்
களிப்பதும் அந்தப் பகலவனாலே.. 6

கோமதி சங்கரி குளிர் முகங்கண்டு
கோவிந்த மலைமுடி மனதினில் கொண்டு
குறையற குவலயம் காக்கின்றான்
நிறைவே நிதமும் சேர்க்கின்றான்.. 7


கயிலையைக் கண்டு கைதொழும் கதிரோன்
கலப்பையில் கண்கொண்டு இணைகின்றான்..
கழனியில் உழைக்கும் உழவர் தோளில்
வியர்வைத் துளியாய் வழிகின்றான்.. 8

கதிர் அவன் களிப்புடன் எழுகையிலே
அதிர்கின்ற இருளும் மறைகின்றது..
உதிர்கின்ற வியர்வைத் துளிகளினாலே
குதிர் அது குன்றாய் நிறைகின்றது.. 9

செந்தீப் பிழம்பாய் தகித்திருந்தாலும்
செல்வமும் அவனே அவனே செங்கதிர்
சென்றிடும் வழியில் சிற்றுயிர் காத்தால்
சிறப்புடன் மேவும் நாளும் நம்கதி.. 10


பல்லுயிர்த் திரளும் பரிதியைப் போற்ற
பண்புடை மக்களும் பரிதியை ஏற்ற
பரிதியின் வடிவாம் இயற்கையைக் காக்க
பரம்பரைச் சந்ததி தினம்நம்மை வாழ்த்தும்.. 11


கதிர் ஒளி நன்றாம் மாசினி ஏது!..
கதிர் இலை என்றால் காசினி ஏது?..
கதிர் முகம் கண்டு கை தொழுவோர்க்கு
கதிர்த் தமிழ் பெருக பிழைகளும் ஏது!..  12
***

ஸ்ரீ உஷா பிரத்யுஷா சமேத
ஸ்ரீ சிவ சூர்ய நாராயணாய நம..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

9 கருத்துகள்:

 1. ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம்ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்
  ஸர்வமங்கல மாங்கல்யம் ஸர்வபாப ப்ரணாசனம்
  சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தன முத்தமம் ரச்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்
  ஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வீ ரச்மிபாவன:
  ஏஷ தேவாஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி:
  ஏக்ஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:
  மஹேந்த்ரோ தனத: காலோ: யம: ஸோமோ ஹ்யமாம் பதி

  பதிலளிநீக்கு
 2. கதிரவனைப் பற்றிய கவிதை சிறப்பு.  பேத்திகளுக்காகத்தான் பதிவுகளே என்பது நெகிழ்ச்சி.  சீக்கிரமே அவர்கள் தமிழ் பயில வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. கதிரவன் கவிதை அருமை.
  பேத்திகளுக்கு தான் நீங்கள் எழுதும் பதிவுகள் என்று அறிந்து மகிழ்ச்சி.தமிழ் கற்றுக் கொண்டு தாத்தாவின் பதிவுகளை, கவிதைகளை படித்து மகிழ வேண்டும் பேத்திகள்.


  காசினி யிருளை நீக்கும்
  கதிர் ஒளி வீசி எங்கும்
  பூசனை உலகோர் போற்றப்
  புசிப்போடு சுகத்தை நல்கும்
  வாசி ஏழுடைய தேர்மேல்
  மகாகிரி வலமாய் வந்த
  தேசிகா எனை ரட்சிப்பாய்
  செங்கதிரவனே போற்றி!

  பல்லூயிரும் வாழ பரிதியை போற்றி வணங்குவோம். நிறைவே நிதமும் சேர்க்கட்டும்.ஈசன் அருள்தான் எல்லாம்.

  வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 4. விடியலுக்கான அற்புதாமான வரிகள் ஜி

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  இன்றைய பதிவு அருமையாக உள்ளது.
  சூரியனை போற்றிப் பாடிய கவிதை நன்றாக உள்ளது வரிகளை அருமையாக கோர்த்து பகலவனுக்கு பரிசாக தந்த தங்கள் தமிழ் புலமைக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள்.

  தங்கள் பேத்திகள் விரைவில் தமிழ் பயின்று உங்கள் அழகான பொருள் நிறைந்த தமிழமுதத்தை அள்ளிப்பருகிட என் வாழ்த்துகளும் அவர்களுக்கு என்றும் உண்டு.

  ஆதித்யஹ்ருதயம் படித்தது போன்ற நிறைவை தந்தது உங்கள் கவிதை. அழகாக படைத்த உங்களுக்கு நன்றிகள். உங்களின் இந்த அருமையான இக் கவிதைக்கு மூலமாக இருந்து உதவிய சகோதரி கோமதி அரசு அவர்களுக்கும் என் அன்பான நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. ரசனையான படங்கள். ஆழமான கருத்துகள். மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 7. விரைவில் உங்கள் பேத்திகள் தமிழில் எழுதப் படிக்க வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும் தாத்தா எப்படிப் பட்ட ஆசுகவி என்பது அவர்களுக்கும் புரியணும். அருமையான பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. சிறப்பான கவிதை வரிகள் ஐயா. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு