நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 26, 2022

திரு ஆதனூர்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
சென்ற மாதம் (28/5) கும்பகோணத்திற்கு அருகில் கோயில் திருவிழாவில் இருந்தபோது கிடைத்த நேரத்தில் அருகிருக்கும் ஆதனூர் திவ்யதேச தரிசனம்..

ஏறத்தாழ முப்பது வருடங்களுக்குப் பின் மறுபடியும் காணக் கிடைத்திருக்கின்றது.. அப்போது  இருந்த நிலையில் இருந்து இத்திருக்கோயில் அகோபில மடத்தின் ஜீயர் அவர்களால் மீட்கப்பட்டு முழுமையாக திருப்பணி செய்யப் பட்டிருக்கின்றது..
இத் திருக்கோயில் வழிநடை வரிசையின்படி பதினோராவது திவ்ய தேசமாகும்..

திருத்தலம்
திரு ஆதனூர்

ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன்
ஸ்ரீ ரங்கநாதன்

பார்க்கவி, ஸ்ரீரங்கநாயகி

தலவிருட்சம்
புன்னை, பாடலி 
தீர்த்தம் 
சூர்ய புஷ்கரணி 

பிரணவ விமானம் புஜங்க சயனம் 
கிழக்கு திருமுக மண்டலம்

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்..

நன்றி கூகிள்

நன்றி கூகிள்

நன்றி கூகிள்

நன்றி தினமலர்

நன்றி கூகிள்

வழக்கம் போல சாபம் பெற்றான் தேவேந்திரன்.. இந்த முறை பிருகு முனிவரிடம் இருந்து..
கலங்கிக் கண்ணீர் சிந்தினான் இந்திரன்..
பிறகென்ன சாப விமோசனம் தான்.. இதற்காக பிருகு முனிவருக்கு மகளாகத் தோன்றினாள் மஹாலக்ஷ்மி..
மாலவன் அவளது கைத்தலம் பற்றிய வேளையில் இந்திரனுக்கு சாப விமோசனம்.. அது இத்தலத்தில் நிகழ்ந்தது..

தெய்வப்பசு காமதேனு தன் மகள் நந்தினியுடன் பெருமாளின் சயனத் திருக்கோலத்தை இத்தலத்தில் தரிசித்திருக்கின்றாள்..

ஈஸ்வரனின் கையில் ஒட்டிக் கொண்ட பிரம்ம கபாலத்தைச் சாம்பலாக்கிட முனைந்த அக்னி தேவனை தோஷம் பற்றிக் கொண்டது.. அது நீங்கியது இத்தலத்தில்..

திருமங்கை ஆழ்வாருக்கு மரக்காலுடன் ஏடும் எழுத்தாணியும் ஏந்தி வந்து திருக்காட்சி நல்கிய பெருமாள்.. மரக்காலைத் தலைக்கு வைத்தபடி சயனத் திருக்கோலம்.. 

திரு அரங்கத்தில் கோயில் வேலை செய்தவர்களுக்கு அவரவர் வேலைக்கு ஏற்ப அளந்தளித்த மரக்கால் இது..

நேர்மையாய் பணி செய்தவர்களுக்குப் பொன்னாகக் கிடைக்க  மற்றவர்களுக்குக்
கிடைத்த விதத்தைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை..
இப்படி பெருமாள் அங்கே அளந்த படியால் பெரும் கலவரம் மூண்டது..

வேலைக் களவாணிகள் ஒன்று சேர்ந்து துரத்தினர்..
மண்ணளந்த மாயன் விலகி ஓடினான்..
ஆழ்வார் பெருமாளை விரட்டிப் பிடித்து யாரென்று கேட்டதற்கு  ஏட்டில் எழுதிக் காட்டி பெருமாள் அவரை ஆட்கொண்டார் என்பது ஐதீகம்..

பிரணவ விமானத்தின் கீழ் கருவறை.. திரு அரங்கத்தைப் போல பெரிய பெருமாள்.. ஸ்ரீ ரங்கநாதன் எனும் திருப்பெயரும் வழங்கப்படுகின்றது.. பெருமாளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. திகட்டாத பேரழகுப் பெட்டகம்.. 

கிழக்குத் திருமுகமாக புஜங்க சயனம்.. நாபிக் கமலத்தில் நான்முகன்.. பெருமாளின் அருகில் ஸ்ரீதேவி பூதேவி.. காமதேனு தன் மகள் நந்தினியுடன்..

அக்னி தேவன், பிருகு முனிவருடன் திருமங்கை ஆழ்வாரும் இருக்கின்றார்.. ஸ்வாமி சந்நிதிக்கு வலப்புறமாக ஸ்ரீ ரங்கநாயகி சந்நிதி கொண்டிருக்கின்றாள்.. பிருகு முனிவரின் மகள் என்பதால் பார்க்கவி என்ற திருப் பெயரும் வழங்கப்படுகின்றது..

சுவாமிமலையில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளது ஆதனூர்.. 

இங்கிருந்து ஒரு கி.மீ தொலைவில் மற்றொரு திவ்ய தேசமான புள்ளபூதங்குடி ஸ்ரீ வல்வில் இராமன் திருக்கோயில்..

கும்பகோணத்தில் இருந்து திருவைகாவூர் செல்லும் பேருந்துகள் இவ்வூர் வழியே செல்கின்றன..இடரான ஆக்கை யிருக்க முயலார்
மடவார் மயக்கின் மயங்கார் - கடவுளர்க்கு
நாதனூ ராதரியார் நானெனதென்னார் அமலன் 
ஆதனூர் எந்தை யடியார்..
-: திருமங்கையாழ்வார் :-
*
ஆதிரங்கேஸ்வரம் வந்தே பாடலி வந ஸமஸ்திதம் ப்ருகு, அக்னி, காமதேனு ப்யோ தத்தாபீதம் தயாந்திரம் விமானே ப்ரணவே ரங்க நாயக்யா ஸு ஸ மாசரிதம் 
ஸுர்ய புஷ்கர்ணி திரே சேஷஸ்யோ பரி ஸாயிநம்..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
***

20 கருத்துகள்:

 1. காலையில் தரிசனம் நன்று விபரங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 2. அழகிய கோவில்.  சுவார்யமான விவரங்கள், புராணம், சிறப்பான படங்கள்..  தரிசனத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 3. பெயரில்லா26 ஜூன், 2022 07:32

  திருஆதனூர், புள்ளம்பூதங்குடி மற்றும் இன்னும் இரு கோவில்களை தரிசிக்க ஆட்டோ அமர்த்தியிருந்தும், கடைசி நேரத்தில் அலைச்சலைத் தவிர்க்கும்பொருட்டு செல்லமுடியாமல் ஆகிவிட்டது.

  இந்தக் கோவிலில் தலமரத்தில் சங்கு வடிவம் உண்டல்லவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   தாங்கள் சொல்வது கூடலூர் ஆடுதுறை ஸ்ரீ ஜகத் ரக்ஷகப் பெருமாள் கோயில்..

   இம்மாதத்தில் வெளியாகியிருக்கும் கூடலூர் 2 என்ற பதிவில் சங்கு அடையாளத்துடன் கூடிய பலா மரத்தைக் காணலாம்..

   வருகைக்கும்
   கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. கோவில் படங்கள் வழக்கப்படி மிக அழகாக உள்ளது. கர்ப்ப கிரஹத்தில் அனந்த சயனத்திலிருக்கும் பெருமாளை பக்தியோடு தரிசித்துக் கொண்டேன். விமான தரிசன படங்களும், ஸ்வாமியின் வாகனப்படங்கள் அனைத்தும் அருமை. கோவில் ஸ்தல புராணங்களும் விபரமாக தெரிந்து கொண்டேன். உங்கள் விவரணையாக பதிவில் கோவிலை காணும் ஆவல் பிறக்கிறது. தங்களுக்கே முப்பது வருடங்களுக்குப் பின் தரிசனம் கிட்டியது என்றால் என்னால் எப்படிச் அங்கு செல்ல முடியும்... உங்கள் பதிவின் வாயிலாக கோவிலையும் எம்பெருமானை யும் தரிசித்து திருப்தி அடைந்தேன். நாராயணன் அனைவரையும் உடல் நலமுடன் காக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன் . பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   உண்மையில் பெருமாளைக் கண்ட மாத்திரத்தில் நெஞ்சம் நெகிழ்ந்து கண்கள் கலங்கி விட்டன.. பெருமாளை விட்டு வருவதற்கு மனம் இல்லை..

   அன்பின்
   கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. திரு ஆதனூர் அழகிய சயன பெருமாள் .தரிசனம் பெற்றோம். கோவிலும் படங்களும் நன்றாக இருக்கிறது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி தனபாலன்..

   நீக்கு
 7. எப்போவோ ஒரே ஒரு முறை போன நினைவு இருக்கு. ஏனெனில் அந்த மரக்கால்! மரக்காலைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்திருக்கும் பெருமாளை இங்கே தான் தரிசித்தேன் என நினைக்கிறேன். பெரிய பெருமாளாகவும் நினைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவரும் பெரிய பெருமாள் தான்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

   நீக்கு
 8. படங்களும் தகவல்களும் சிறப்பாக வந்துள்ளன. வரிசை வைச்சுண்டு பார்க்காட்டியும் பல திவ்யதேசக் கோயில்களைப் பார்த்திருக்கோம். வரிசைப் படுத்திப் பார்க்கணும். :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவலுக்கு மகிழ்ச்சி..

   தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. கோயில் படங்கள் மிக அழகு. விவரங்களும் சிறப்பு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி .. சகோ..

   நீக்கு
 10. பல வருடங்களுக்கு முன் போய் இருக்கிறோம் இந்த கோயில்.
  படங்கள் எல்லாம் அழகு.
  பெருமாளின் முக தரிசனம் அருமை.நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு