நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூலை 14, 2018

திருமலை தரிசனம் 6

திருமலைப் பயணத்தின் மூன்றாம் நாள்..
திருமலையில் இரண்டாம் நாள்..

காலை உணவு -
மாத்ருஸ்ரீ வெங்கமாம்பா அன்னப்ரசாத கூடத்தில்!..

தங்கியிருந்த இடத்திற்குச் சென்று
அங்கிருந்த பொருட்களை திரும்பப் பெற்றுக் கொண்டோம்..


திருமலை வனத்துக்குள் காணவேண்டிய இடங்களான
ஸ்ரீ ஸ்வாமி பாதம், சிலாதோரணம், சக்ர தீர்த்த அருவி,
ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி திருக்கோயில், ஆகாச கங்கை,
பாபவிநாச தீர்த்தம் - ஆகியவற்றைக் காண்பதற்குப் புறப்பட்டோம்...

அதற்கு முன்பாகத் தங்களுடன் சில செய்திகள்...

சென்ற ஞாயிற்றுக் கிழமையிலிருந்து - வலுக்கட்டாயமாக -
என் மீது எட்டு மணி நேர வேலை கூடுதலாகச் சுமத்தப்பட்டுள்ளது... 

நல்லது தானே.. Overtime செய்தால்!...

குறைந்த ஆட்களுடன் நிறைந்த வேலை!.. 
- என்று, மேலிடத்துக்கு எழுதிக் கொடுத்துவிட்ட தடியன்கள்...

நல்ல மனோபாவம் இல்லாத தள மேலாளர்கள் (Location Managers)...
இவர்களுள் ஒருவன் தமிழன் என்பது கூடுதல் விசேஷம்... 

எனவே - 
இவர்களுடன் Overtime செய்வதில் எனக்கு விருப்பம் கிடையாது.. 

இரவு எட்டு மணிக்கு தூக்கத்திலிருந்து எழுந்து வேலைக்கு ஆயத்தமானால்
மறுநாள் மதியம் இரண்டு மணிக்குத் தான் வேலை முடித்து வரமுடியும்...

திரும்பவும் இரவு எட்டு மணிக்கு எழுந்து ஓட வேண்டும்...

அந்த மதிய நேரத்தில் 
மாமியார் மருமகள் மாதிரி - கணினியில் இணையம் இணையாது... 
இழுபறியாக இருக்கும்.. உனக்கா.. எனக்கா!.. - என்று...

நுண்ணலைபேசியை வைத்துக் கொண்டு தான் 
சில வித்தைகளைக் காட்டிக் கொண்டிடுருக்கின்றேன்... 

எனவே, 
தளத்திற்கு வருவோர்க்கு பதிலளிப்பதும்
( ம்க்கும்!.. அப்படியே பதிலளித்து விட்டாலும்!?...)
நண்பர்களின் தளங்களுக்குச் செல்வதிலும்
பெரும் சிரமமாக இருக்கின்றது...

பொறுத்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்...

வெள்ளிக்கிழமை மட்டும் காலையில் ஓய்வு..
அதைப் பயன்படுத்தி புற வேலைகள் எல்லாவற்றையும் முடித்தாயிற்று...

இதோ, இப்பொழுது - தங்களுடன்!...

திருமலையில் ஆங்காங்கே - சுற்றிக் காட்டுவதற்காக
அனுமதி பெற்ற ஓட்டுநர்கள் ஜீப்புகளுடன் காத்திருக்கின்றனர்...

நமது முக விலாசத்தைக் கண்டதுமே
புன்னகையுடன் அருகில் வருகின்றனர்...
சுந்தரத் தெலுங்குடன் தமிழையும் கலந்தடித்து பேசுகின்றனர்...

ரூபாய் 150 ல் ஆரம்பித்து 120 ல் நின்று கொண்டார்..

நாங்கள் பேரம் பேசவில்லை...

மேலும், நாலு பேரை ஏற்றிக் கொண்டார்...
அவர்கள் கன்னடர்கள் என்று புரிந்தது...

அவர்களிடம் ஆளுக்கு 100 ரூபாய் பெற்றுக் கொண்டது
அப்புறமாகத் தான் தெரிந்தது... எனினும் பெரிதுபடுத்தவில்லை...


முதலாவதாக நாங்கள் சென்ற இடம் ஸ்ரீ ஸ்வாமி பாதம்...

திருமலையிலிருந்து பத்து நிமிடம் வனத்துக்குள் பயணம்..
பரந்தவெளி..  தெற்கு முகமாக 100 அடி உயர சிகரம்..

வட்டத்துக்குள் - ஸ்ரீ ஆனந்த நிலையம் 
அலர்மேல் மங்கையைச் சந்திப்பதற்கு
முன்பாகவோ பின்பாகவோ -
வேங்கடேசப் பெருமான் இங்கெல்லாம் சுற்றி நடந்திருக்கின்றார்....

ஸ்ரீ வேங்கடேசன் - இந்த சிகரத்தில் நின்றபடி கீழே நோக்கிய இடத்தில் தான்
இன்றைய ஆனந்த நிலையம்!..

ஸ்ரீ ஸ்வாமி பாதங்கள்
ஸ்வாமி பாதத்துக்கு அருகில் பெரிய விருட்சம்..
அதன் கீழாக -வீடு வாசல் மனை - நல்லபடியாக அமைவதற்காக
சிறு சிறு கற்களை அடுக்கி வைக்கின்றனர் -


 2015 ல் சென்றபோது கரடு முரடாக இருந்தன படிக்கட்டுகள்
இப்போது சீரமைக்கப் பட்டிருக்கின்றன...

நூற்றுக்கணக்கான வாகனங்கள்... சுற்றுலாத் தளம் போல இருக்கின்றது..
கொடைக்கானலுக்கு வந்ததைப் போல மக்களிடம் குதூகலம்.. கும்மாளம்...

ஸ்ரீ பாத தரிசன படிக்கட்டுகளிலும் தள்ளுமுள்ளு....
நின்ற நின்ற இடத்திலெல்லாம் ஆக்கங்கெட்ட செல்ஃபி...

ஸ்வாமி பாதத்திலிருந்து கிழக்காக நோக்கினால்
ஆனந்த நிலையம் தெரிகின்றது...

அங்கிருந்து - சிலா தோரணம்...
இதன் வயது 250 கோடி வருடங்கள் - என்று கணக்கிடப்பட்டுள்ளது..

ஆதியில் -
ஸ்ரீ மகாலக்ஷ்மியைத் தேடிவந்த -
ஸ்ரீ ஹரிபரந்தாமன் இங்கிருந்து வெளிப்பட்டதாக ஐதீகம்...

சிலா தோரணம் 


சிலா தோரண தோட்டம் அழகாக பராமரிக்கப்படுகின்றது..

அந்த வனத்துக்குள்ளேயும் இரண்டு மயில்களையும்
சில வான்கோழிகளையும் கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கின்றார்கள்...

அங்கிருந்து - சிறிது தூரம் நடந்து
இருபதடி ஆழ பள்ளத்தில் இறங்கினால்
சக்ரத் தீர்த்தம் என சிற்றருவி...

சக்ர தீர்த்தம் - 2015 
சக்ர தீர்த்தம் - 2018
மழைக் காலத்தில் இந்த சிற்றருவியைக் கடக்க முடியாது...

இப்போது அந்த சிற்றருவில் தண்ணீர் இல்லை..
ஆனாலும் செல்ஃபி கூட்டம் விடுவதாக இல்லை...

ஆபத்தான அந்த இடத்தை ஆண்களும் பெண்களுமாக
அதகளம் செய்து கொண்டிருந்தார்கள்...

முட்டாள்களான வாலிபர்கள் அந்தப் பள்ளத்துள் குதித்து
அப்படியும் இப்படியுமாகத் தாவி - வீரத்தைக் காட்டிக் கொண்டிருந்தனர்..

மலையிடுக்குகளையும் விட்டு வைக்கவில்லை - இந்த மூடர்கள்!...

அந்தக் கூட்டத்தின் இடையே படமெடுக்க விரும்பவில்லை...

அருவியைக் கடந்து அந்தப் பக்கம் கரை ஏறினால்
கரையில் ஸ்ரீ விநாயகரும் ஸ்ரீ சிவலிங்கமும் நந்தியும்...
புடைப்புச் சிற்பங்களாக ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மர்.. ஸ்ரீ சுதர்ஸனர்...

ஸ்ரீ சிவ தரிசனம் 
ஸ்வாமி தரிசனம் செய்தபின் அங்கிருந்து புறப்பட்டோம்..
அடுத்த இலக்கு - பாபவிநாச தீர்த்தம்...

வழியில்
ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில்...

ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில் 
இந்த வேணுகோபால ஸ்வாமி திருக்கோயில் வளாகத்தில்
ஸ்ரீ ஹதிராம் பாவாஜி அதிஷ்டானம்...


ஸ்ரீ ஹதிராம் பாவாஜியுடன் பெருமாள் தாயம் விளையாடியதாக வரலாறு...

ஸ்ரீ ஹதிராம் பாவாஜி அதிஷ்டானத்தில் -
நிறைய பெண்கள் சேவித்துக் கொண்டிருந்ததால்
வழக்கப் போல படங்கள் எடுக்கவில்லை...

அதன்பின் - அங்கிருந்து ஆகாச கங்கா..

ஆகாச கங்கா என்பது சிற்றருவி...
சாலை மட்டத்திலிருந்து கீழே இறங்குவதற்கு அருமையான படிக்கட்டுகள்...

ஆகாச கங்கை 
இருநூறடி பள்ளத்தில்
ஸ்ரீ அஞ்சனாதேவி திருக்கோயில்...

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் அவதார ஸ்தலம் என்கின்றார்கள்...


சிற்றருவிக்கு மேல்கரையில்
ஸ்ரீ அஞ்சனாதேவி திருச்சந்நிதி.. தரிசித்துக் கொண்டோம்...

அவ்வளவாக தண்ணீர் பொழியவில்லை என்றாலும் -
பத்தடிப் பள்ளத்தில் இறங்கினால் சிலுசிலு என தண்ணீர்...

படிக்கட்டுகளைக் கடந்து விட்டால் பாறைகள் வழுக்குகின்றன...

நாங்கள் இறங்கி தீர்த்தம் எடுத்துக் கொண்டோம்...
மகன் தீர்த்தமாடிக் கரையேறினான்....

பாபவிநாச தீர்த்தக் கட்டம் 
அடுத்தது பாபவிநாச தீர்த்தம்...
திருமலைக்குரிய தீர்த்தங்களுள் முக்கியமானது...

நன்றி - கூகுள்
தீர்த்தக் கரையில் சிறு அணைக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது...

இதன் ஒரு பகுதியாக -
ஸ்ரீ வேங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா இலங்குகின்றது..

சாலையிலிருந்து சரிவான படிக்கட்டுகள்
தீர்த்த கட்டத்திற்கு இட்டுச் செல்லுகின்றன....

நன்றி - கூகுள்
குளுகுளு என காற்று வீசுகின்றது..
தீர்த்தக் கரையில் சிறியதாக ஒரு கோயில்...

ஸ்ரீ கங்கா தேவியும் ஸ்ரீ ஆஞ்சநேயரும் திருக்கோயிலில் திகழ்கின்றனர்....

ஆகாச கங்காவிலிருந்து புறப்பட்ட போதே
கைத்தொலைபேசியில் மின்சக்தி தீர்ந்து போயிருந்தது...

பாபவிநாசக் கரையில் சூழ்நிலை இருந்தும் எந்த ஒரு படமும் எடுக்கவில்லை...
எதற்கும் ஒரு மிச்சம் மீதி வைக்க வேண்டுமல்லவா!..

மாலைப் பொழுது நெருங்கிக் கொண்டிருந்தது...

சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டபின் -
ஆனந்த நிலையத்தை மீண்டும் வணங்கி விடைபெற்றுக் கொண்டோம்...

திருமலை பேருந்து நிலையத்திலிருந்து -
திருப்பதியை வந்தடைந்து விட்டோம்...

அன்று பிரதோஷம்...
எங்கள் இலக்கு - திருக்காளத்தி...

திருமலையில் எடுக்கப்பட்ட படங்கள் - இன்றைய பதிவில்..
எப்படியிருக்கின்றன என்பதைச் சொல்லுங்கள்!...
***


அறுபத்து இரண்டாவது வயதினைக் கடக்கும்
இந்நாளில் இந்தப் பதிவு வெளியாவது மகிழ்ச்சி..

கன்னி ராசிக்குரியவன் புதன்..
அதிபதி ஸ்ரீமந்நாராயணமூர்த்தி...

அவனருளால் அவன் தாள் வணங்குதல் ஆனந்தம்..
அந்த ஆனந்தம் என்றென்றும் நிலைத்திருக்க அருள்வானாக!..
***

இறையாய் நிலனாகி எண்திசையும் தானாய்
மறையாய் மறைப் பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன்..(2320) 
-: பேயாழ்வார் :- 

ஸ்ரீ வேங்கடேச சரணம்.. சரணம் ப்ரபத்யே..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
***

30 கருத்துகள்:

 1. பிறந்த நாள் வாழ்த்துகள் துரை அண்ணா! தங்களின் ஆசியும் வேண்டி....

  பதிவு பார்த்துவிட்டு வரேன்...படங்கள் அழகாக இருக்கிறது!

  கீதா

  பதிலளிநீக்கு
 2. இனிய காலை வணக்கம் மற்றும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜி.

  பதிலளிநீக்கு
 3. //இவர்களுள் ஒருவன் தமிழன் என்பது கூடுதல் விசேஷம் //

  தமிழ் நண்டு!!!

  பதிலளிநீக்கு
 4. சிலா தோரணம் பாறைகள் முதமிடுவது போன்ற படம் செமையா இருக்கு...அந்தப் பாறைகளின் உருவங்கள் இடப்பக்கம் சிங்கம் போன்றும் வலப்பக்கம் முதலை போன்றும் இருக்கோ....அந்தப் படம் செமையா இருக்கு அண்ணா....வாவ்!!! ரொம்ப அழகான கோணத்தில் எடுத்திருக்கீங்க...நான் சென்ற போது படங்கள் எடுக்கவில்லை அப்போது கேமரா இல்லை...இனி சென்றால் படங்கள் எடுக்க வேண்டும்....மீதி பார்த்துவிட்டு வரேன் சில கடமைகள் ஆற்றிவிட்டு

  கீதா

  பதிலளிநீக்கு
 5. உங்கள் பணிகளை முடித்துக்கொண்டு போதிய ஒய்வு எடுத்துக்கொண்டு வாருங்கள் துரை ஸார்.. அதுதான் முக்கியம்.

  பதிலளிநீக்கு
 6. நின்ற நின்ற இடத்திலெல்லாம் ஆக்கங்கெட்ட செல்பி...

  ஹா... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 7. முட்டாள் வாலிபர்கள் கன்னியரின் பார்வை உரசல் வேண்டி சாகசம் செய்கிறார்கள் போலும்!​

  பதிலளிநீக்கு
 8. படங்களுடன் பதிவை ரசித்தேன். பிறந்தநாளுக்கு என்ன கொண்டாட்டங்கள்? எந்தக் கோவில்?

  பதிலளிநீக்கு
 9. என்னோட தம்பி வயசு தான் உங்களுக்கும். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். ஆசிகள். எ.பி.யில் முதலில் கண்களில் பட்டது உங்க பிறந்த நாள் என்பதே! உங்கள் வேலைப்பளு குறைந்து விரைவில் நல்லபடியாக எப்போதும்போல் குறிப்பிட்ட பணி நேரம் அமையப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 10. இந்த இடங்கள் எல்லாம் 2007 ஆம் ஆண்டில் பார்த்தது. இன்னமும் வனப்பகுதி அழிக்கப்படாமல் பசுமையும் , பாறைகள் வெட்டப்படாமலும் காட்சி அளிப்பது சந்தோஷமாக இருக்கிறது. இங்கேயும் ஆஞ்சி பிறந்த இடம் என்கின்றனர். அதே போல் கர்நாடகாவில் கிஷ்கிந்தையிலும் அஞ்சநாத்ரி (?)
  மலையில் தான் ஆஞ்சி பிறந்தார் என்கிறார்கள். அங்கேயும் பார்த்தோம். ஆனால் ஹரித்வாரிலும் ஓர் அஞ்சனாத்ரி மலை உள்ளது. அங்கே அஞ்சனா தேவி ஆஞ்சிக்குப் பாலூட்டும் கோலத்தில் காட்சி அளிப்பாள். அதையும் பார்த்தோம். நான் சில வருடங்கள் முன்னர் ஆஞ்சி பத்திய தொடர் ஒண்ணு எழுத ஆரம்பிச்சேன். அப்போச் சில அரிய தகவல்கள் ஓர் தளத்தில் கிடைத்தது. அதைச் சேமித்துவிட்டுப் பின்னர் மறுநாள் சென்றால் தளத்துக்குச் செல்ல முடியவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை அதை முயற்சி செய்து பார்த்தும் தளம் திறக்கவே இல்லை. இப்போ அதை ஒட்டித் தான் ஏதோ ஒரு சானலில் ஆஞ்சி பத்தித் தொடர் வருதுனு சொல்றாங்க. பார்க்கிறதில்லை! நான் ஆரம்பிச்ச தொடர் பாதியிலேயே நிற்கிறது. இது மாதிரிப் பலவும்! :(

  பதிலளிநீக்கு
 11. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
  இறைவன் அருளால் எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ்க!
  சாரும் உங்களுக்கு தன் வாழ்த்துக்களை தெரிவிக்க சொன்னார்கள். எங்கள் இருவர் ஆசிகளும்.
  வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்.

  பதிவு படிக்க அப்புறம் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 12. அன்பின் ஜி
  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  அழகிய படங்களும், விளக்கமும் நன்று.

  பதிலளிநீக்கு
 13. ஸ்ரீ ஸ்வாமி பாதம், பாபவிநாச தீர்த்தம் - இந்த இரு இடங்களுக்கு மட்டும் சென்றதுண்டு...

  பதிலளிநீக்கு
 14. ஒவ்வொரு படமும் செய்திகளும் மிக அருமை...

  தங்கள் பிறந்தநாளுக்கு எங்கள் வாழ்த்துக்களும், வணக்கங்களும்..

  பதிலளிநீக்கு
 15. படங்கள் எல்லாம் அழகாய் இருக்கிறது.அஞ்சனா தேவி கோவில், ஸ்ரீ ஸ்வாமி பாதம், பாபவிநாச தீர்த்தம் போனது இல்லை.

  பதிலளிநீக்கு
 16. துரை அண்ணா என்ன இப்படி கூடுதல் பணி அதிலும் ஆப்பு வைப்பவர்களுள் நம்ம ஆளு வேற....ஹூம் என்ன சொல்ல? எப்படி இப்படி எல்லாம் மனிதர்கள். ..வேண்டாம் வேண்டாம் இன்று நோ வேதனை...ஹேப்பி பர்த்டே மட்டுமே...

  கீதா

  பதிலளிநீக்கு
 17. துரை சார், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  திருமலைப் படங்கள் நான் முன்பு கண்டிராதவை. ஏனெனில், இந்த இடங்களுக்கெல்லாம் போனதேயில்லை. திருமலைபற்றிய உங்களது தொடர்பதிவுகள், அலங்கரித்த நேர்த்தியான படங்கள் என்னை அங்கேயே கொஞ்சம் மானசீகமாக உலவவிட்டுக் கூட்டிவந்திருக்கின்றன. புண்ணியமெல்லாம் உங்களுக்கு.

  பதிலளிநீக்கு
 18. கரன்ட் போய் போய் வருது.

  அண்ணா நீங்க எப்ப உங்களுக்கு நேரம் நல்லபடியாகக் கிடைக்கிறதோ அப்ப வந்தால் போதும். சிரமப்படுத்திக் கொள்ளாதீங்க. தூக்கம் வேறு சரியில்லை...மொபைலில் இருந்து எவ்வளவு கொடுக்க முடியும்...அது மிக சிரமம். உடல்நலம் முக்கியம் மெதுவாக வந்துக்கோங்க பிரச்சனையே இல்லை..

  கீதா

  பதிலளிநீக்கு
 19. நம்ம அலமேலுவை ........வெங்கட் இங்கெல்லாம்....அந்த முழு வரிகளும் செம நான் சிரித்துவிட்டேன்.. ரசித்தேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 20. படிக்கட்டுகள் சீரமைக்கப்பட்டுள்ளதா...சூப்பர். அப்போ நீங்கள் சொல்லியிருப்பது போல் மிகவும் கரடுமுரடாக இருந்தது..

  சிலாத்தோட்டம் கூட இன்னும் அழகாக ஆனது போல இருக்கு. அந்தப் பாறைகள் வாவ் போட வைக்குது...

  நாங்க போன போது மயில் இல்லை வான் கோழியும் இல்லை. அது சரி ஏன் கூட்டிற்குள் அடைக்க வேண்டும். ஃப்ரீயாக விடலாமே வேலி போட்டுவிட்டு...

  உங்கள் புகைப்படம் ஏதோ பெரிய சினிமாக்களில் பார்ப்பது போல இருக்கிறது அண்ணா சக்ரதீர்த்தம் செமையா இருக்கு. தண்ணீர் இருக்கிறதே!! ஓ 2015ல்...வெகு அழகு...இப்ப இல்லை போல இருக்கு வெயில்காலம் நீங்க சென்றது இல்லையா...நாங்கள் சென்ற போதும் தண்ணீர் இல்லை...தண்ணீர் இருக்கும் போது செல்ல வேண்டும்..

  ஆகாசகங்கை இப்போது எடுத்ததா அண்ணா தண்ணீர் இருக்கிறதே...நாங்கள் சென்ற போது தண்ணீர் இல்லை தேங்கியிருந்த தண்ணீரும் கொஞ்சம் அழுககக இருந்தது. நான் மிக மிக ஆர்வத்துடன் சென்ற இரு அருவிகளும் தண்ணீர் இல்லாமல் இருந்தன...உங்கள் படம் அழகாக இருக்கு..அடுத்த முறை செல்ல நேர்ந்தால் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இறங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டுவிட்டேன். இடங்கள் பசுமையாக இருப்பது பார்த்து மகிழ்ச்சியாக இருக்கு.

  பாபவிநாசம் அழகுதான்....

  படங்கள் எல்லாம் செமையா இருக்கு அண்ணா ஹைடெக் கேமராவில் எடுத்தது போன்று ரொம்பவே அழகாக இருக்கிறது...அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
 21. துரை அண்ணா அடுத்த முறை செல்ல நேர்ந்தால் கபில தீர்த்தம் சென்று வாருங்கள் அண்ணா செமையான இடம். ஆனால் அருவியில் தண்ணீர் இருக்கும் போது செல்லுங்கள். கோயிலும் அருவியும் குளமும் அழகோ அழகு. என் மாமனாரின் சதாபிஷேகம் ஒட்டி விசேஷம் நடக்கும் முன் குடும்பம் முழுவதும் கூடியிருந்ததால் (குடும்பம் பெரியது. குழந்தைகளும் பெரியவர்களும் என்று.) கோயில் பயணங்கள் சில மேற்கொள்ளப்பட்டன. அப்போது சென்றது, அப்போது அஹோபிலமும் சென்றோம். உக்ரஸ்தம்பம் எங்கள் மாமனாரும் ஏறினாக் குழந்தைகள்(!!!!!!) எங்களோடு

  கீதா

  பதிலளிநீக்கு
 22. இங்கும் தங்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு தாங்களும் தங்கள் குடும்பமும் என்றென்றும் மகிழ்வுடன் நலல் உடல் நலத்துடன் இருந்திட பிரார்த்தனைகளும்.

  உங்கள் உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டு வலைப்பக்கம் மெதுவாக வரவும்.

  திருப்பதி மலை படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கின்றன. நீங்கள் சொல்லியிருக்கும் இடங்கள் சென்றதில்லை. திருப்பதி ஒரே ஒரு முறைதான் சென்றிருக்கிறோம்.
  பார்க்காத இந்த இடங்களைக் குறித்து வைத்துக் கொண்டேன். நல்ல விவரணங்களுடன் அழகுடன் கூடிய படங்கள் மிக்க நன்றி ஐயா

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 23. திருப்பதி தரிசனமும் மற்ற முக்கியமான இடங்களின் படங்களும் அருமை. (வெங்கட் என்று அன்பால் விளித்திருந்தாலும் நெருடுகிறது)

  தங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்னும் நிறைய தலங்களின் தரிசனம் கிட்டட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :)))))) நீங்க இப்படிச் சொல்லலாமா? வெங்கட், வெங்கினு எல்லாம் சொல்வோமே! ஆஞ்சி, ஜக்கு, ரங்குனு சொல்லிட்டு இருக்கேனே! அதெல்லாம் கவனிக்கலையா? :)))))) தும்பிக்கைக்காரரோடு சண்டையே போடுவோமுல்ல!

   நீக்கு
  2. அன்பின் நெ.த., அவர்களுக்கு...

   வேங்கடேசப் பெருமானின் மீதுள்ள அன்பினால் தான்
   அலமேலு என்றும் வெங்கட் என்றும் எழுதினேன்...

   இருப்பினும் அவற்றை
   என் மனதுடன் வைத்துக் கொள்வதே சாலச் சிறந்தது...

   பொதுவெளியில் இட்டதற்கு
   ஸ்ரீ வேங்கடேச மூர்த்தி பொறுத்தருள்வாராக!..

   குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
   உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத
   பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
   சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே!...

   கோதையாள் திருவடிகள் சரணம்..

   நீக்கு
  3. இன்றுதான் பார்த்தேன். 'அறியாத பிள்ளைகளோம்' எப்படி அருமையாக அந்தத் திருப்பாவைப் பாடலை இங்கு கொண்டுவந்து சேர்த்தீர்கள். ரொம்பப் பாராட்டறேன். நல்ல இடுகைகள் எழுதி, அதற்காக பாடல்களைக் கோர்த்து, அவை உங்கள் மனதில் பதிந்துவிட்டன. வாழ்த்துகள்.

   நீக்கு
  4. கீசா மேடம்... நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். இருந்தாலும், ஒரு பெயர் சொல்லும்போது நமக்கு அந்தக் கடவுள் நினைவுதான் வரணும். அதுதான் நமக்கு உபயோகம். அதனால்தான் எல்லோரும் அனேகமா கடவுள் பெயரை வைத்துக்கொண்டுள்ளோம்.

   வெங்கட்-என்று படித்ததும் எனக்கு unfortunately தில்லி பதிவர்தான் நினைவுக்கு வந்தது. அதனால்தான் திடுக்கிட்டேன்.

   தவறாக எண்ணல் வேண்டாம்.

   நீக்கு
 24. மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.....

  அழகான படங்கள் - செல்ஃபி எடுப்பவர்களைத் தவிர்த்து படம் எடுப்பது இப்போதெல்லாம் ரொம்பவே கஷ்டமாகத் தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 25. @ நெத: வெங்கட் என்று அன்பால் விளித்திருந்தாலும் நெருடுகிறது..//

  எனக்கும் இப்படித்தான் தோன்றியது. ஏனென்று கேட்டேன் மனதை. சொன்னது: திருப்பதி பெருமாள்னா பெரிய மனுஷர்னு..ஐ மீன், பெரிய தெய்வம்னுதான் எனக்குள்ள வாங்கிட்டிருக்கேன். தெய்வம் என்றால் அது தெய்வம்.. அதைப்போய் வெங்கட், சங்கட் என்று அழைத்தால் எப்படி?

  @ கீதாசாம்பசிவம்: வெங்கட், வெங்கின்னு எல்லாம் சொல்வோமே..//

  அதே சமயத்தில், சொல்லலாமே என்று தோன்றினால் சொல்லலாம்தான்!

  பதிலளிநீக்கு
 26. அன்பின் நண்பர்களுக்கு வணக்கம்...

  நேற்றைய தினம் எளியேனுக்கு
  பிறந்தாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி...

  தலைக்கு மேல் வேலையாகிப் போனது..

  குருவி தண்ணீர் குடிப்பதைப் போல
  அவ்வப்போது வலைத்தள விஜயம் -
  கைத் தொலைபேசியில்...

  மீண்டும் நன்றியும் மகிழ்ச்சியும்..
  என்றென்றும் அன்புடன் -
  துரை செல்வராஜூ..

  பதிலளிநீக்கு