நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 17, 2023

தில்லை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 3
வெள்ளிக்கிழமை


தில்லை எனும் மரங்கள் அடர்ந்து இருந்ததால் தில்லை வனம்.

தில்லை திருச்சிற்றம்பலம் என்று வழங்குதல் மரபு..

சிற்றம்பலம் - சித் - அம்பரம் சித் - அறிவு, அம்பரம் - வெட்ட வெளி.

சித் - அம்பரம் .. இதுவே சிதம்பரம் என ஆயிற்று..


சோழ மன்னர்கள் பொற்கூரை வேய்ந்து அழகு பார்த்த திருக்கோயில்.. 

பஞ்ச பூதங்களுள் ஆகாயத் தலம்.. 
சைவத்தில் கோயில் எனக் குறிக்கப்படும் திருத்தலம்..

இத்தலத்தை ஞானாசிரியர்களாகிய நால்வருடன்  அருளாளர் பலரும் பாடிப் பரவியுள்ளனர்..

" தில்லை வாழ் அந்தணர் " - என்று திரு ஆரூரில் தியாகேசன் சுந்தரருக்கு அடியெடுத்துக் கொடுத்து அருள்புரிய - திருத்தொண்டத் தொகை புராணம் உருவானது.. 

அதனை முதல் நூலாகக் கொண்டு சேக்கிழார் பெருமான் பாடுதற்கு உலகெலாம் " -  என, அம்பலத்தரசன் அடியெடுத்துக் கொடுக்க திருத் தொண்டர் புராணம் எனும் பெரிய புராணம் உருவானது..

தில்லைப் பெருந்தேரை நகர்வதற்கு விடாமல் திருவிளையாடல் செய்து " தேர் நகர்வதற்கு பல்லாண்டு பாடுக!.. " என்று சேந்தனாருக்கும் அருள் புரிந்தனன்..
(பதிகப்பாடல்கள் : நன்றி பன்னிருதிருமுறை)

திருப்பாற்கடலில் திருமாலைத் தாங்கியுள்ள ஆதிசேடன் சிவபெருமானின் திருநடனத்தைக் காண விரும்பி பெருமாளின் அனுமதியுடன்
இத்திருத்தலத்திற்கு வந்து ஈசனின் திருநடனம் கண்டு வணங்கி வைகுந்தம் திரும்பியதாக வைணவம் பேசுகின்றது..

இத்திருத்தலத்தில் கிழக்கு நோக்கிய சயனத் திருக் கோலமாகப் பெருமாள் குடி கொண்டுள்ளார்..


அருள்மிகு உமையாம்பிகை  
உடனுறை 
ஆதிமூலநாதர் 

அருள்மிகு சிவகாமவல்லி
உடனுறை 
ஆனந்த நடராஜ மூர்த்தி

தல விருட்சம் தில்லை மரம்
தீர்த்தம் சிவகங்கை


கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கண் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே..1/80/1

செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே.. 1/80/5
-: திருஞானசம்பந்தர் :-

பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கேன் ன்னைநீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடு கின்ற
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே.. 4/23/1

கருத்தனாய்ப் பாட மாட்டேன் காம்பன தோளி பங்கா
ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திருவுரு உடைய சோதீ
திருத்தமாந் தில்லை தன்னுள் திகழ்ந்தசிற் றம்ப லத்தே
நிருத்தநான் காண வேண்டி நேர்பட வந்த வாறே.. 4/23/2
-: திருநாவுக்கரசர் :-

மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ
வாழு நாளுந்
தடுத்தாட்டித் தருமனார் தமர் செக்கில் இடும் போது
தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலுங் கரிய பாம்பும்
பிடித்தாடிப் புலியூர்ச் சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே..7/90/1

உய்த்தாடித் திரியாதே உள்ளமே ஒழிகண்டாய்
ஊன்கணோட்டம்
எத்தாலுங் குறைவில்லை என்பர்காண் நெஞ்சமே
நம்மை நாளும்
பைத்தாடும் அரவினன் படர்சடையன் பரஞ்சோதி
பாவந் தீர்க்கும்
பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றா மன்றே.. 7/90/6
-: சுந்தரர் :-


இணையார் திருவடிஎன்
தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள்
அத்தனையுந் துறந்தொழிந்தேன்
அணையார் புனல் தில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப்
பூவல்லி கொய்யாமோ.. 1

வணங்கத் தலைவைத்து
வார்கழல் வாய் வாழ்த்த வைத்து
இணங்கத் தன் சீரடியார்
கூட்டமும் வைத்து எம்பெருமான்
அணங்கொடு அணிதில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
குணங்கூரப் பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ.. 7
-: மாணிக்கவாசகர் :-

காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி
நாளுற அம்பலத் தேஆடும் நாதனே..
(பொற்பதிக்கூத்து)

ஆடிய காலும் அதிற்சிலம் போசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடிஉள்ளே கண்டு தீர்ந்தற்ற வாறே..
(பொற் தில்லைக்கூத்து)
-: திருமூலர் :-


உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்..
-: சேக்கிழார் :-

அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
-: வள்ளலார் :-


கரு முகில் போல்வது ஓர் மேனி கையன ஆழியும் சங்கும்
பெரு விறல் வானவர் சூழ  ஏழ் உலகும் தொழுது ஏத்த
ஒரு மகள் ஆயர் மடந்தை  ஒருத்தி நிலமகள்
மற்றைத் திருமகளோடும் வருவான் சித்திரகூடத்து உள்ளானே.. 1176
-: திருமங்கையாழ்வார் :-
திருச்சிற்றம்பலம்

ஓம் நமோ நாராயணாய 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

13 கருத்துகள்:

 1. நானிலத்தையும் நடராஜன் காக்கட்டும்.  பூமியை புருஷோத்தமன் காக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 2. அருமையான பதிவு. தேவாரம், திருவாசகம், பிரபந்தபாடல் , அருட்பா பாடல்களை பாடி வணங்கி கொண்டேன். தில்லை தரிசனம் செய்து கொண்டேன். படங்கள் எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

   நலம் வாழ்க..

   நீக்கு
 3. தில்லை தரிசனம் வெகு எளிதாகவே கிடைத்து வந்தது. ஆனால் 2018/19 ஆம் ஆண்டுகளுக்குப்பின்னர் கோயில்களுக்குப் போகவே வாய்க்கவில்லை. சென்ற வருஷம் திருவாரூர் போயிட்டுக் கஷ்டப்பட்டதற்குப் பின்னர் எங்கேயும் போகவில்லை! :( சிதம்பரம் பற்றி விரிவான தொடர் எழுதக் கிடைத்தது நான் செய்த கடுகளவு புண்ணியத்தால் தான். இங்கே தில்லை பற்றிப் படித்ததும் எல்லாமும் நினைவில் வந்தன. பகிர்வுக்கு நன்றி. மிக அருமையாகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் எழுதி இருக்கீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் மேலதிக கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நலம் வாழ்க..

   நீக்கு
 4. தில்லை அம்பல நடராஜர் - கோயில் பற்றிய பதிவு சிறப்பு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நலம் வாழ்க..

   நீக்கு
 5. தில்லையின் தரிசனம் நன்று
  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 6. தில்லை சிற்றம்பலம் தரிசிக்கும் பாக்கியம் நேரில் கிடைக்கவில்லை. உங்கள் பகிர்வில் தில்லை நடராஜனை தரிசித்தோம் .

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..