நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 12, 2023

ஓம் சக்தி ஓம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மாசி 28
 ஞாயிற்றுக்கிழமை


சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு 
மாசி கடை ஞாயிறு ஆகிய இன்று பூச்சொரிதல் விழா
தொடங்குகின்றது.. 

இன்று முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக பச்சைப் பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். 

விரத நாட்களில் அம்மனுக்கு - இளநீர், பானகம், துள்ளுமாவு, பழங்கள் மட்டுமே நிவேதனம் செய்யப்படும்..

அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பண பூஜைகள் முடிந்து காலை 6.30 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா தொடங்குகிறது..


வீரசிம்ம ஆசனத்தில்
வீற்றிருந்து அருள்பவளே
எட்டுத்திருக் கரங்களுடன்
எங்கள் பிணி தீர்ப்பவளே..
கண் மலர்ந்து மண் மலர்ந்து
மாரியென்று வருபவளே
படிநிறைய மடிநிறைய
குதிர் நிறையக் கொடுப்பவளே..

படிவாசல் வந்தார் முகம்
பரிவோடு பார்ப்பவளே
பார்வையிலே பகை தீர்த்து
தீவினைகள் தீர்ப்பவளே..
மாரி என்று சூலி என்று
மஞ்சளிலே இருப்பவளே
குங்குமத்தில் கொலு இருந்து
எந்தன் குலம் காப்பவளே..


ஆண்டபடி ஆண்ட ளக்கும்
ஐயனவன் அன்புத் தங்கையே
தாங்கிநலம் தருவதிலே
தங்கமுகத் தாமரையே..
அப்பனுடன் நின்று ஆடும்
அன்னையே மா காளி
அன்பு கொண்டு அடியேனை
என்றென்றும் நீ ஆதரி..

அக்கினியின் பிழம்பு என்று
ஆங்கார ரூபமம்மா 
ஆனாலும் அதற்கு உள்ளே
அருள் மேகம் சுரக்குமம்மா
செங்கமலப் பேரழகில்
செம்மாந்து இருப்பவளே
கதி என்று அடைந்து விட்டோம்
காத்தருள வேணுமம்மா..


எலுமிச்சை மாலையிலே
எந்தன் குறை தீர்த்திடுவாய்
எந்நாளும் இன்னல் இன்றி
வாழும் வகை சேர்த்திடுவாய்
பிச்சிப்பூ முல்லையுடன்
தாழம்பூ சூடிடுவாய்
தாயே என்பிணி மாற்றி
தங்க முகம் காட்டிடுவாய்..

வேம்பு ரதம் ஏறிவரும்
வித்தகியே வாருமம்மா
கண்களுக்குள் வீற்றிருந்து
நல்ல வழி காட்டுமம்மா..
ஆதரிக்க யாருமில்லா
மானிடர்க்கும் அருளும் அம்மா
நாரணனின் சோதரியே 
நம்பி வந்தேன் சரணமம்மா..


துன்பமேதும் இல்லாத
பொழுதுகள் வழங்கிடுவாய்
துறை காட்டும் சுடராக
என்றென்றும் விளங்கிடுவாய்
செம்பட்டும் பொன்பட்டும்
விளங்கிடவே துலங்கிடுவாய்
தாள் மலரைத் தினம் பாடும்
பாக்கியத்தை வழங்கிடுவாய்..

உண்ணாமல் நோன்பிருந்து
ஊர் வாழ நினைப்பவளே..
உள்நாடித் துதிப்பவர்க்கு
சீர்கோடி கொடுப்பவளே
காரோடி நீரோடி 
கதிராகத் தழைப்பவளே
என்றும் எந்தன் நெஞ்சுக்குள்ளே
தமிழாகத் திளைப்பவளே..
**

ஓம் சக்தி ஓம்
சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
***

14 கருத்துகள்:

 1. கவிதை மனதில் பதிகிறது. ஓம் சக்தி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   ஓம் சக்தி ஓம்..

   நீக்கு
 2. உங்கள் தளத்தில் சமயபுரமாரியம்மா, என் தளத்தில் புன்னைநல்லூர் மாரியம்மா.
  சமயபுர மாரியம்மனுக்கு நீங்கள் பாடிய பாமாலை படித்து தரிசனம் செய்து கொண்டேன்.
  நல்ல வழி காட்டவேண்டும் தாய் அனைவருக்கும்.
  ஓம் சக்தி ஓம்
  சக்தி ஓம் சக்தி
  ஓம் சக்தி ஓம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நல்ல வழி காட்டவேண்டும் தாய் அனைவருக்கும்.//

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   ஓம் சக்தி ஓம்.

   நீக்கு
 3. தரிசனம் நன்று
  ஓம் சக்தி

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. சமயபுரம் அன்னையை பற்றிய பதிவும், படங்களும், விபரங்களும் நன்றாக உள்ளது. அன்னை பெற்ற குழந்தைகளாகிய நமக்காக, நம் நலத்திற்காக ஏற்கும் விரதம் பற்றி அறிந்தேன். மெய்சிலிர்த்துப் போய் விட்டது. அன்னையை பணிவுடன் நமஸ்கரித்து உலக நன்மைகளுக்காக பிராத்ததித்து வேண்டிக் கொண்டேன்.

  அன்னைக்கான நீங்கள் எழுதிய பாமாலை மிகவும் நன்றாக உள்ளது. இன்றைய நன்நாளுக்கான சிறப்பான பாமாலை.

  /உண்ணாமல் நோன்பிருந்து
  ஊர் வாழ நினைப்பவளே..
  உள்நாடித் துதிப்பவர்க்கு
  சீர்கோடி கொடுப்பவளே
  காரோடி நீரோடி
  கதிராகத் தழைப்பவளே
  என்றும் எந்தன் நெஞ்சுக்குள்ளே
  தமிழாகத் திளைப்பவளே./

  அருமையான வரிகள். மிகவும் ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///குழந்தைகளாகிய நமக்காக, நம் நலத்திற்காக ஏற்கும் விரதம் பற்றி அறிந்தேன். மெய் சிலிர்த்து விட்டது.///

   தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   ஓம் சக்தி ஓம்.

   நீக்கு
 5. அட இன்று கோமதிக்கா தளத்தில் புன்னைநல்லூர் மாரியம்மா என்றால் உங்கள் தளத்தில் சமயபுர மாரியம்மா!!!!

  பாமாலை - கவிதை அருமை!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்... நானும் பார்த்தேன்..

   எங்கெங்கும் ஓம் சக்தி.

   தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   ஓம் சக்தி ஓம்.

   நீக்கு
 6. பாடல் அருமை.. கவிதை மழை பொழிகிறது. மானசிகமாக அம்பிகையைத் தரிசித்துக்கொள்ள வேண்டியது தான். கூட்டம் தாங்காது. இங்கிருந்து செல்லும் பால்குடங்களோடு செல்லும் கூட்டமே அதிகமாய் இருக்கு. நமக்காக அம்பிகை விரதம் இருந்து அனைவரையும் ரக்ஷிக்கிறாள். அவள் பாதாரவிந்தங்களே சரணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. // மானசிகமாக அம்பிகையைத் தரிசித்துக்கொள்ள வேண்டியது தான். கூட்டம் தாங்காது..//

   தங்கள் அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றியக்கா..

   ஓம் சக்தி ஓம்.

   நீக்கு
 7. சமயபுரத் தாயே அகிலாண்ட நாயகியே சரணம் உன் பாதகங்கள்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..