நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 22, 2023

நவகோள் மாலை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 8
 புதன்கிழமை

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 
எழுதிய நவக்கிரக மாலை எங்கு சென்றதோ என்று - கடந்த ஞாயிறன்று வெளியான ஏழாங்கிழமை  பதிவில் சொல்லியிருந்தேன்..

அன்பின் சகோதரி கீதாரங்கன் அவர்களும் 
அன்பின் கோமதிஅரசு அவர்களும் புதிதாக எழுதுதற்கு ஊக்கமளித்தனர்.. அவர்கள் இருவருக்கும் 
நெஞ்சார்ந்த நன்றி..

அதன்படி
திங்களன்று முழுவதையும் எழுதி விட்டேன்.. அன்று நள்ளிரவில் மேலும் சில வரிகள் கிடைத்தன.. 

நேற்று அனைத்தையும் ஒழுங்கு செய்து இறைவனின் நல்லாசியுடன் இதோ இன்றைய பதிவில்  - 
நவகோள் மாலை..


கோள்வினை தீர்க்கும் குணமிகு வேழம்
தாள்மலர் வாழ்த்த நலந்தரும் காலம்..
நவகோள் பணிந்து புகழ்வதும் உனையே
நானும் வந்தேன் காத்திடு எனையே..
நவகோள் துதிக்கும் திருவடி போற்றி
நலந்தரும் நாயகன் மலரடி போற்றி
கலங்கா மனந்தரு கணபதி போற்றி
ஆபத்துதவிடும் ஐங்கர போற்றி..


சோதிப் பிழம்பே சுந்தர வடிவே
நீதிக்கரசே நின் தாள் போற்றி
ஆதவன் என்றே அகிலம் போற்றும் 
ஆனந்த மூர்த்தி மலரடி போற்றி
சுற்றும் வையகம் நின் திருக்கோயில் 
சூழ்வளம் எல்லாம் நின்றன் வரங்கள்
வணங்கிடும் எம்மை வாழ்த்திடுவாயே
உஷையின் நாயக பதமலர் போற்றி..

திங்கள் ஊரில் திருமிகு கலையாய் 
திகழும் செல்வத் திருவடி போற்றி..
எங்கும் மங்கலம் தங்கிட வருவாய் 
மங்கல நாயக சந்திர போற்றி..
நிறை நிலவாகி பங்குனி நாளில் 
பரமனைத் தொழுதிடும் சுந்தர போற்றி
சூழ்புவி எங்கும்  மகிழ்வாய் நிறைவாய் 
நிறைவாய் திகழ்வாய்  போற்றி போற்றி..

வைத்தீஸ் வரனின் கோயிலிலே 
வளர் தையல் நாயகி ஆட்சியிலே
செவ்வேளுடனே சேர்ந்தருள் புரியும் 
செவ்வாய் அழகன் போற்றி போற்றி..
மனையுறு மங்கலம் மாண்புடன் திகழ 
மகிழ்ந்தருள் புரிவாய் மலரடி போற்றி..
செம்மலர் ஏந்தி செவ்வழி காட்டும் 
அங்காரகனே அடிமலர் போற்றி..

முக்குளம் உடைய வெண்கா டதனில்
பிரம்ம வித்யா நாயகி வாழ்த்த
நல்லருள் புரியும் புதனே போற்றி
நன்றாம் அறிவை நல்குவை போற்றி
வரும் பிணி எல்லாம் தீர்ப்பாய் போற்றி..
வரந்தர வருகின்ற வானவன் போற்றி
கல்வியும் செல்வமும் சீர்பட அருளும்
நாயகன் போற்றி போற்றி போற்றி..

மாமுனி வசிட்டர் வணங்கிய வாசல்
வளர்குழல் நாயகி வாழ்ந்திடும் வாசல்
வகையறியாத வருத்தம் தீர்த்து
வாழ்வினை அருளும் வள்ளலின் வாசல்
வயிரவர் தென்திசை நோக்கிடும் வாசல்
வளந்தரு வியாழ குருவின் வாசல்
வாழ்க வாழ்க தென்குடித் திட்டை 
வாழ்க வாழ்கவே குருவின் வாசல்..

கஞ்சனூர் உடைய கற்பகக் கோனை 
கை தொழும் சுக்கிரன் மலரடி போற்றி
வந்தார் வாழ்ந்திட வரந்தரு வெள்ளி
வருக வருக என வாழ்த்திடும் அள்ளி 
அயரா அன்புடன் தொழுதிடும் தூயோர் 
துயரம் தீர்க்கும் திருவே போற்றி 
பொன் பொருள் போகம் புகழுடன் பொருந்த
நன்மலர் கொண்டு நவின்றோம் போற்றி..

தவமிகு தர்ப்பை வனத்தினில் வந்து 
வரந்தர நின்ற வாழ்வே போற்றி
சிவமிகு செம்மை நல்கிடும் நாயக 
சனைச்சர நின்றன் பதமே போற்றி
நல்லார் ஆயினும் இல்லார் ஆயினும்   
நடுவாய் நிற்கும் நாயக போற்றி
எள்முனை அளவாய் நன்மையைக் கொண்டு
நானும் வந்தேன்  திருவடி போற்றி..

வண்டார் குழலி பதமலர் போற்றி 
திருப்பாம் புரத்தில் சந்நிதி கொண்டாய்
சாயா கிரகம் என்றே சுழன்று 
சூரியன் வழியில் நின்றாய் போற்றி
நாடிடும் அன்பர் நலங் கொள 
அருளும் ராகு வாழி வாழியவே 
சிவனருள் தேடும் அடியார் வாழ்வில் 
சீர்மிக அருளும் அரவே வாழி வாழியவே..

வேணுவனத்தில் நாகநாதரை
போற்றி வணங்கிடும் கேது போற்றி
சஞ்சலம் தீர்க்கும் நிழல் நாயகனே 
சந்திரனுக் கொரு எதிர் வீரியனே
சங்கடம் தீர்ந்திட கை தொழுதேன்
கரதலம் கண்டு வரம் பல தருக 
வேண்டிய நலங்கள் நல்கிடும் 
ஞான காரகன் வாழிய வாழியவே!..
(வேணுவனம் என்பது மேலப்பெரும்பள்ளம்)


சிறியேன் கடையேன் செய்வது அறியேன்
செய்யத் தக்கன செய்தவன் அல்லேன்
ஆகாதனவும் தொலைத்தேன் அல்லேன்
ஏதினி தென்று என்மனம் திகைத்தேன்
இதமுறு நிழலாய் ஆலயம் அடைந்தேன்
அருந்தமிழ்ச் சொல்லை அழகுற எடுத்தேன்
 அன்புடன் அடியேன் அதனைத் தொடுத்தேன்..
வினைகள் தொலைந்திட வீழ்ந்து துதித்தேன்..

நவகோள் மகிழ்ந்து நலமுறக் காக்க
ஞாயிறும் திங்களும் திடமுடன்  காக்க
செவ்வாய் புதனும் சீருடன் காக்க
வியாழன் வெள்ளி பொலிவுடன் காக்க
சனைச்சரன் என்னை சந்ததம் காக்க
இருகோள் அரவும் இருந்தெனைக் காக்க
இன்முகம் பூத்து என்னுயிர் காக்க 
என்றும் இனிதே இருந்திடக் காக்க..

அகமும் புறமும் பொலிந்திடக் காக்க
மனையும் மகவும் மகிழ்ந்திடக் காக்க
சந்ததி நன்றாய் வாழ்ந்திடக் காக்க
ஊரும் உறவும் உயர்வுறக் காக்க
உற்றார் மற்றார் உவந்திடக் காக்க
உலகின் உயர்வு உயர்ந்திடக் காக்க
நாடும் காக்க நற்றமிழ் காக்க
நற்குல மாந்தர் பொற்பினை காக்க..

குறையென நானும் குறுகா வண்ணம் 
குறையா நலனைக் குளிர்ந்தே  அருள்க..
கல்லா மனதைக் கனியாய் கொண்டு 
காலம் முழுதும் கனிவாய் அருள்க..
பிழையேன் புரிந்த பிழைகளைப் பொறுத்து 
நயந்தே நல்லருள் நாளும் பொழிக..
நல்லறம் வாழ்க நல்லோர் வாழ்க 
நவகோள் நல்கும் நலங்கள் வாழ்க!..

வாழ்கவே வாழ்க வாழ்க..
வாழ்கவே வாழ்க வாழ்க!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

17 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம்...... நவகோள் மாலை சிறப்பாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
   நன்றி வெங்கட்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 2. உங்கள் கரங்களில் சரஸ்வதி குடி கொண்டிருக்கிறார்.  நினைத்த நேரத்தில் நினைத்த கவிதையை படைத்திட முடிகிறது உங்களால்.  போற்றி அகவல் பிரமாதம்.  தயவு செய்து இதை நமக்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல் பொதுவில் கொடுங்கள்.   மக்கள் பயன் பெறட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் ஆலோசனைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
  2. அதே அதே....ஸ்ரீராம்.

   கீதா

   நீக்கு
  3. தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி..
   நன்றி சகோ..

   நீக்கு
 3. இறைவன் மிக அருமையாக நவகோள்கள் மேல் பாமாலை எழுத வைத்து விட்டார். முன்பு காணாமல் போனதை விட இந்த பாமாலை மிக சிறப்பாக அமைந்து இருப்பதால் இதை ஏற்று கொண்டார் .நவகோள் மாலை மிக அருமை.
  படங்களும் அருமை.


  குருவிற்கு திட்டை அமைந்தது சிறப்பு. ராகுவிற்கு திருப்பாம்புரம் அமைந்தது சிறப்பு, கேதுவும் இங்கு இருக்கிறார். இருந்தாலும் மேலப்பெரும்பள்ளம் தனியான கோவில் கேதுவுக்கு.

  நவகோள்களும் உங்களுக்கு நல்லருள் புரிவார்கள்.
  எங்களுக்கும் நல் அருள்புரிய நவகோள்கள் பாமாலையை பாடி வணங்கி கொண்டேன்.
  வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் அளித்த உற்சாகம் தான் என்னை நவகோள் மாலையை எழுத வைத்தது..

   எழுதும் போது அவ்வளவாகத் தெரியவில்லை.. இன்று காலையில் பதிவில் படிக்கும் போது பிரமிப்பு - நானா எழுதினேன் என்று...

   தங்களது வருகைக்கு
   மகிழ்ச்சி..

   கருத்துரைக்கும்
   வாழ்த்துரைக்கும்
   நெஞ்சார்ந்த நன்றி...

   வாழ்க நலமுடன்..

   நீக்கு
  2. இறைவன் எழுத வைக்கிறார் . உள் இருக்கும் இறைவன் கேட்டு வாங்கி கொள்கிறார். எல்லோரும் பயன் அடைய கோவில் அன்பர்களுக்கு கொடுங்கள்.

   நீக்கு
 4. ஓம் நமசிவாய
  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி.

   நலம் வாழ்க..

   நீக்கு
 5. தங்களின் திறமைக்கு வாழ்த்துகள் ஐயா...

  ஓம் நம சிவாய...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
   நன்றி தனபாலன்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 6. நவகோள் மாலை சிறப்பான பகிர்வு. நன்றாக எழுதியுள்ளீர்கள்.

  கோள்கள் அனைவரையும் காக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. /// கோள்கள் அனைவரையும் காக்கட்டும்.///

   அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 7. துரை அண்ணா!! கலக்கிட்டீங்க நவகோள் மாலை கோர்த்து! அருமையா எழுதியிருக்கீங்க.

  எப்படி அண்ணா இப்படி டக்கென்று எழுத வருகிறது! நினைத்ததும்...இது உங்களிடம் சரஸ்வதியும் தமிழன்னையும் குடி கொண்டிருக்கிறார்கள்! வாசித்து வியந்தேன். பல கோயில்களில் திருச்சுற்று சுவற்றில் இப்படியான போற்றி பாடல்கள் இருக்கும். நீங்களும் அப்படிக் கொடுக்கலாம்.

  வாழ்த்துகள் அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் தாங்கள் அளித்த உற்சாகம் தான்..

   அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
   நன்றி சகோ..

   நலம் வாழ்க..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..