நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 03, 2023

திருக்கடவூர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 19
வெள்ளிக்கிழமை

இன்று 
திருக்கடவூர் தரிசனம்


தலம்
திருக்கடவூர் வீரட்டம்

இறைவன்
ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்

அம்பிகை
ஸ்ரீ அபிராமவல்லி

தலவிருட்சம் 
வில்வம், பிஞ்சிலம் (ஜாதி முல்லை)
தீர்த்தம் அமிர்த தீர்த்தம்


ஆதியில் பிரம்மன் வழிபட்ட தலங்களுள் இதுவும் ஒன்று..

மார்க்கண்டேயர் வழிபட்ட நூற்றெட்டாவது தலம்..

சிவ பூஜையின் போது மார்க்கண்டேயரிடம் எல்லை மீறி நடந்து கொண்டதால் காலன் உதைபட்டு வீழ்ந்தான்.. அதனால் வீரட்டத் தலம்..

நோய் நொடிகள் விலகி ஆயுள் விருத்தியாகவும்
மரண பயம் நீங்கவும் வழிபடப்படுகின்ற திருத்தலம்.. 

இதனை மெய்ப்பிப்பதே அபிராம பட்டருடைய வரலாறு..

கள்ள வாரணப் பெருமான் இத்தலத்தில் சிறப்புடையவர்.  அமிர்த கலசத்தை ஒளித்து வைத்துக் கொண்டு தேவர்களுடன் விளையாடியவர் இவரே..

கிழக்கு நோக்கிய வண்ணம் ஸ்ரீ அபிராமவல்லி..
மகாமண்டபத்தின் தெற்கு நோக்கிய சந்நிதியில் 
ஸ்ரீ கால சம்ஹார மூர்த்தி.. 


கால சம்ஹார மூர்த்தி தெற்கு முகமாக எழுந்தருளியுள்ளார். 
வலப்புற மேல் திருக்கரத்தில் மழுவும் கீழ்த் திருக்கரத்தில் சூலமும்  விளங்குகின்றன.. 
இடப்புற மேல் திருக்கரத்தில் பாசமும் கீழ்த் திருக்கரம் திருவடியைச் சுட்டுவதாகவும்  விளங்குகின்றன.. 

இடது திருவடியால் உதையுண்ட யமன் தலைகீழாக வீழ்ந்து கிடக்கின்றார்.. வீழ்ந்து கிடக்கும் யமனை சிவ பூதம் ஒன்று காலில் கயிற்றைக் கட்டி இழுத்து அப்புறப்படுத்தும் காட்சி 
காணற்கரியது..


கால சம்ஹாரர் சந்நிதிக்கு எதிரில் உயிர் பெற்று எழுந்த யமதர்மன் கூப்பிய கரங்களுடன் ..

காரி நாயனாரும் குங்கிலியக்கலய நாயனாரும்  வாழ்ந்திருந்த திருவூர்.. 

அப்பர் பெருமானும், ஞான சம்பந்த மூர்த்தியும் ஒருசேர இங்கு எழுந்தருளி, இறைவனைத் தொழுது, குங்குலிய கலய நாயனாரின் திருமடத்தில் தங்கியிருந்த பெருமை இவ்வூருக்கு உண்டு..

சுவாமிக்கு நாள்தோறும் அபிஷேகத்திற்குரிய நீர் - திருக்கடவூர் மயானம் கோயிலில் இருந்து அத்தலத்தின் தீர்த்தமான காசி தீர்த்தம் தனிப்பட்ட வண்டியில் கொண்டு வரப்படுகின்றது..

பங்குனி மாதம் அஸ்வினி அன்று இந்த தீர்த்தக் கிணற்றில் தீர்த்தவாரி..

மூவராலும்  பாடப் பெற்ற திருத்தலம்..

சோழ நாட்டின் காவிரித் தென்கரையில் விளங்கும் நாற்பத்தேழாவது திருத்தலமாகும்..

மேற்கு நோக்கிய திருக்கோயில்.. இங்கே நவக்கிரகங்கள்  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

ராஜகோபுரத்தில் ஸ்ரீ அதிகார நந்தி தேவியுடன்.. காவல் நாயகமாக  ஸ்ரீ முனீஸ்வரன் ..

சித்திரை மாதம் மக நட்சத்திரத்தை அனுசரித்து நடத்தப்பெறும் பெருந்திருவிழாவில் ஆறாம் நாளன்று ஸ்ரீ காலசம்ஹார மூர்த்தி  வீதியுலா எழுந்தருள்கின்றார்..

திருக்கடவூருக்கு அருகிலுள்ள சிவாலயங்கள்:
திருக்கடவூர் மயானம் 2 கிமீ 
திருஆக்கூர் 4 கிமீ
திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்) 7 கிமீ 
திருக்கடைமுடி (கீழையூர்) 9 கிமீ
திருசாய்க்காடு (சாயாவனம்) 8 கிமீ
மயிலாடுதுறை - தரங்கம்பாடி  வழித்தடத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கிமீ.

மார்க்கண்டேயரைப் போல " என்றும் பதினாறு " என்று எவராலும் ஆக  முடியாது.. 

ஆனாலும், 
நாம் எதிர்கொள்ளும்  துன்பங்களும் துயரங்களும் நம்மை வாட்டி வதைக்காமல் இருப்பதற்கு ஸ்ரீ அபிராம வல்லியையும் ஸ்ரீ அமிர்த கடேஸ்வரரையும் வணங்கி வழிபட்டு நலம் பெறுவோம்..


தேவாரத்தில் - கால சம்ஹாரம் பல இடங்களில் பேசப்பட்டிருந்தாலும் ,  பெருமக்கள் மூவருமே திருக்கடவூர் திருப்பதிகத்தில் தலபுராணத்தைக் குறித்துத் தமது திருவாக்கினால் சொல்லியிருப்பது சிறப்பு..

அதிலும்,
அப்பர் ஸ்வாமிகள் (4/107) பதிகம் முழுவதிலும் காலசங்காரத்தைப் பாடியருள்கின்றார்..


எரிதரு வார்சடை யானும் வெள்ளை எருதேறியும்
புரிதரு மாமலர்க் கொன்றை மாலை புனைந் தேத்தவே
கரிதரு காலனைச் சாடினா னுங்கட வூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்து அரனல்லனே.. 3/8/2
-: திருஞானசம்பந்தர் :-

மருட்டுயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயர்காய்
இருட்டிய மேனி வளைவாள் எயிற்று எரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப உதைத் துங்ஙனே
உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே.. 4/107/1
-: அப்பர் ஸ்வாமிகள் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

 1. இரண்டு மூன்று முறை சென்று வந்த தலம்.  கோவிலின் வெளிப்புறத்தை மோசமாக வைத்திருப்பார்கள்!  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏதோ ஒரு சூழ்நிலை...

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  அருமையான பதிவு. திருக்கடவூர் கோவில் படங்கள் அனைத்தும் சிறப்பு கோவிலின் தகவல்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.

  இறைவன் காலசம்ஹார மூர்த்தியை பணிந்து உலகில் அனைவரும் நலமாக வாழ பிரார்த்தித்துக் கொள்வோம். ஓம் சிவாய நம ஓம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. // காலசம்ஹார மூர்த்தியை பணிந்து உலகில் அனைவரும் நலமாக வாழ பிரார்த்தித்துக் கொள்வோம்.//

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 3. திருக்கடவூர் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி. தலபுராணபாடல் பாடி இறைவனை தரிசனம் செய்து கொண்டேன். படங்களும் கதை சொல்லிய விதமும் அருமை.
  துன்பங்கள், துயரங்கள் வாட்டி வதைத்தாலும் நாம் அம்மை, அப்பன் காலை பிடித்து கொண்டு இருக்கிறோம்.
  துன்பங்களை மாற்றி இன்பம் அருளும் வரை பொறுமையுடன் , நம்பிக்கையோடு மன வலிமையோடு இருக்க அருள்புரிய வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //துன்பங்களை மாற்றி இன்பம் அருளும் வரை பொறுமையுடன் , நம்பிக்கையோடு மன வலிமையோடு இருக்க அருள்புரிய வேண்டுவோம்..//

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 4. தகவல்கள் அருமை ஐயா...

  ஓம் நம சிவாய...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓம் சிவாய நம..

   மகிழ்ச்சி..
   நன்றி தனபாலன்..

   நலம் வாழ்க..

   நீக்கு
 5. திருக்கடவூர் அபிராமி தாயை வணங்குவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலம் வாழ்க..

   நீக்கு
 6. ஓம் நம சிவாய சிவாய நம ஓம்

  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
 7. மார்க்கண்டேயரைப் போல என்றும் 16 ஆக முடியாது//

  துரை அண்ணா நாம் இப்படியும் கொள்ளலாம் இல்லையா அதாவது என்றும் 16 என்பது வயதானாலும் நல்ல ஆரோக்கியமாக, மன உடல் வளத்துடன் மனதில் என்றும் 16 ஆக வயதாகும் போதும் நல்ல உற்சாகமாக இளமைத் துள்ளலோடான மனதுடன், புதிதாய் அறியும் கற்கும் ஆர்வத்துடன் (இப்படியான வயதுதானே 16...) இருக்க எல்லாம் வல்ல இறைவனை சரணடைவோம்,

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வயதானாலும் நல்ல ஆரோக்கியமாக, மன உடல் வளத்துடன் மனதில் என்றும் 16 ஆக இருப்பதே..

   இது தான் தத்துவம்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நலம் வாழ்க..

   நீக்கு
 8. ஒன்றே எனப் புரிந்து கொண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..