நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 09, 2021

அழைப்பவர் குரலுக்கு

         

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

அன்பின் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த வணக்கம்...

இக்கட்டானதொரு சூழ்நிலையை இறையருளால் கடந்த நிலையில் அதனை  இங்கே பதிவு செய்திருக்கின்றேன்..

நேற்று காலை ஏழு மணியளவில் திடீரென தலை சுற்றலும் வாந்தி மயக்கமும் ஏற்பட்டு நிலை குலைந்து விட்டேன்..

தற்போது ஒரு மாதமாக காலை ஐந்து மணிக்கு வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் விடியல் 3:30 அளவில் எழுந்திருப்பது வழக்கம்..

நேற்றும் இப்படித்தான்... என்ன ஒரு வித்தியாசம் என்றால் வழக்கத்தில் இல்லாதபடிக்கு  பாட்டிலில் அடைக்கப்பட்ட சோயா பீன்ஸ் பால்  அருந்தியது தான்.. வாரம் ஒரு முறை சோயா பால் குடிப்பது என்றாலும் விடியற்காலையில் வெறும் வயிற்றில் என்பது இதுவே முதல் முறை..

தலை சுற்றல் ஏற்பட்டாலும் நினைவு தடுமாறவில்லை.. கந்தர் அலஙகாரப் பாடலுடன், முருகா.. முருகா!.. - என்றிருந்தது மனம்..

மயக்கம் ஏற்பட்டு ஒரு மணி நேரம் கழித்தே அருகிலுள்ள மருத்துவ மனைக்குச் செல்ல முடிந்தது.. ஆனாலும் அங்கே அனுமதிக்கப்பட வில்லை.. காரணம் எனது Civil Id  முன்பிருந்த முகவரியிலேயே உள்ளது.. அதன்படி அந்த மாவட்ட மருத்துவ மனைக்குத் தான் செல்ல வேண்டும்... இது தான் இங்கு நடைமுறை.. நம்ம ஊர் மாதிரி வேறு கூச்சல்களுக்கு இடமில்லை..

அதன்படி செல்ல வேண்டிய மருத்துவமனை ஏறத்தாழ 40 கிமீ.. அதிகப்படியான வெயிலில் அவ்வளவு தூரத்துக்கு தனியொருவனாக செல்வதற்கு என் மனம் ஒப்பவில்லை..

இக்கட்டான சூழ்நிலையில் - நீயே கதி ஈஸ்வரி!.. என்று வாடகைக் கார் மூலம் அறைக்குத் திரும்பி படுத்து விட்டேன்...

மூன்று மணி நேரம் கழித்து விழித்தேன்.. தளர்ச்சியாக இருந்தது.. தலை சுற்றல் இல்லை.. அசுத்தமாகி விட்ட உடைகளைத் துவைத்துப் போட்டு விட்டு கொஞ்சமாக கஞ்சி வைத்தேன் - கிருத்திகை சேர்ந்திருக்கும் செவ்வாய் ஆயிற்றே!..

இதற்கிடையில் இவ்விஷயத்தை வீட்டுக்கும் இங்கே நண்பர் கணேச மூர்த்திக்கும் தெரிவித்தேன்...

அதெல்லாம் ஒன்றுமில்லை.. பயப்பட வேண்டாம்.. இன்று சந்திராஷ்டமம்.. இங்கே இவனுக்கும் ராத்திரியெல்லாம் பிரச்னை.. எல்லாம் சரியாகி விடும்!.. - என்றார்கள் வீட்டிலிருந்து..

கணேச மூர்த்தி -  உடனே புறப்பட்டு வருகின்றேன்!.. - என்றார்...

அவர் வேலை செய்யும் இடத்துக்கும் நான் இருக்கும் இடத்துக்கும் ஐம்பது கி.மீ தூரம்...

அந்த அன்பு உள்ளத்துக்கு பதில் சொல்லி விட்டு மாலை ஆறு மணியளவில் சற்று தொலைவிலுள்ள தனியார் மருத்துவ மனைக்குச் சென்றேன்..

அங்கே விவரம் சொல்லி பணம் செலுத்திய பிறகு இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தார்கள்..

சில விநாடிகள் கழித்து அவர்களுக்குள்ளேயே பேசிக் கொண்டார்கள்..

என்னை அழைத்து - உங்களுக்கு மிகவும் அதிக அளவில் இரத்த அழுத்தம் உள்ளது.. அரசு மருத்துவ மனைக்குச் செல்லுங்கள்.. இங்கே அனுமதிக்க முடியாது!.. - என்று சொல்லி வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்து வெளியே அனுப்பி விட்டார்கள்..

அங்கிருந்து கணேச மூர்த்தி அறைக்குச் சென்றேன்.. வழக்கமான உபசரிப்பு...

நண்பர் கணேச மூர்த்தி புன்னகையுடன் சொன்னார் - இது வெறும் பித்த மயக்கம்.. வேறொன்றுமில்லை!.. - என்று..

புள்ளிருக்குவேளூர் ஸ்ரீ வைத்திய நாதரின் திருச்சாந்து உருண்டையும் திரு நீறும் கொடுத்தார்...

இது நீங்கள் எனக்குக் கொடுத்தது தான்!.. - என்று சொல்லிக் கொண்டே..

என்னிடம் இருந்தவை சென்ற ஆண்டு கொரானா தாக்கிய போது நடத்திய எதிர் தாக்குதலில் தீர்ந்து போயிருந்தது..

இரவு அப்பளம், கொத்தமல்லிச் சட்னியுடன் சாப்பாடு.. நல்ல தூக்கம்..

காலைப் பொழுது கலகலப்பாக விடிந்துள்ளது.. வீட்டிற்கு நலம் குறித்துச் சொன்னேன்... நேற்று இரவே நல்ல சகுனங்கள் தென்பட்டதாக சொன்னார்கள்.. இருந்தாலும் உள்ளுக்குள் தவிப்பு தான்...

இப்போது உடம்பு நன்றாக இருக்கிறது.. கழுத்து தோள்களில் லேசான அழுத்தம் தெரிகிறதேயன்றி வேறு எவ்வித சங்கடமும் இல்லை..

நேற்று எபியில் எனது ஆக்கம் வெளியாகி இருந்த நிலையில் கருத்துரைகளுக்கு நன்றி சொல்ல இயலவில்லை.. ஆனாலும் அவ்வப்போது எபிக்குச் சென்று கதைக்கான வரவேற்பினைக் கண்டு என்னை நானே உற்சாகப்படுத்திக் கொண்டேன்...

சற்று முன் உணவகத்திற்குச் சென்று இட்லி சாப்பிட்டு வந்தேன்..

எனக்காக மதியத்துக்கு சோறு ஆக்கி குழம்பும் வைத்து விட்டு வேலைக்குச் சென்றிருக்கிறார் கணேச மூர்த்தி.. மாலை திரும்பியதும் வேறொரு மருத்துவ மனைக்குச் சென்று மேலதிக ஆலோசனை பெறலாம் என்று திட்டம்...

எல்லாம் வல்ல இறைவனின் அருட்கதிர்கள் அன்பு கொண்ட நெஞ்சங்களின் கரங்களாகி உதவி செய்கின்றன...
கால்களாகி நம்முடன் நடக்கின்றன...


அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்..
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான்
பாரதத்தில் கண்ணன்..

ஹரி ஓம் நமோ நாராயணாய..
***

கொரோனா எனும்தீ நுண்மியால் விளைந்திருக்கும் கொடுமையான இக்காலகட்டம் விரைவில் தொலைந்து எங்கெங்கும் நலம் திரும்புவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்..

 ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

ஃஃஃ

30 கருத்துகள்:

 1. விரைவில் நலம் பெறப் பிரார்த்திக்கிறேன். மன அழுத்தம் கூட உடலுக்குப் பிரச்னை கொடுத்திருக்கும். முக்கியமாய் வயிற்றையும் ஜீரண உறுப்புகளையும் பாதித்திருக்கும். உணவில் கவனமாகவே இருங்கள். இயன்றால் விடுமுறை எடுத்துக் கொண்டு அறையிலேயே ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது இந்தியாவுக்கும் வர முடியாது. விரைவில் அனைத்தும் நலமாகப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   மன அழுத்தம் அதிகம் என்பது உண்மையே.. தற்போது நலமாக இருக்கிறேன்..

   தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 2. சாதாரணமாக சொல்லி சாதாரணமாகக் கடந்து விட்டீர்கள்.  எவ்வளவு பெரிய விஷயம்...  ஆளில்லாத ஊரில் தனியாளாய்..   நினைக்கவே மனம் பதறுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இறைவன் துணை இருக்கின்றான்..
   வேலுண்டு வினையில்லை..
   மயிலுண்டு பயமில்லை..

   தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 3. அங்கே வழக்கங்கள் நல்ல வழக்கங்கள்தான்.  சீரான வழக்கங்கள்தான்.  ஆனாலும் நம்மூராய் இருந்திருந்தால் ஏதாவது ஓரிடத்தில் முழு சிகிச்சை கிடைத்திருக்குமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சட்டென சிகிச்சை கிடைக்க வில்லை என்பதே உண்மை... ஆனாலும் அதுவும் நன்மைக்கே..

   தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி. நன்றி...

   நீக்கு
 4. உயர் ரத்த அழுத்தம் என்று அங்கு ஒரு மருத்துவர் சொன்னதாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்?  அதற்கு உடனே என்னென்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.  கவனிக்கப்படாமல் நீண்ட நாட்கள் உயர் ரத்த அழுத்தம் இருந்திருந்தால் அது வேறு சில விளைவுகளையும் கொண்டு வந்திருக்கிறதா என்று சோதித்துப் பார்த்து விட வேண்டும்.  விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நோய் நாடி நோய் முதல் நாடி என்பதெல்லாம் இந்த அவசர உலகத்தில் இல்லை..

   ஒரு துயர்.. ஒரு பொழுது அனுபவிக்க வேண்டும் என விதி.. அனுபவித்தாயிற்று..

   தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. இடையில் நம் குணம் நம்மை விட்டுப் போகுமா என்பது போல உங்கள் வரிகளில் வந்த ஒரு வரி எனக்கு பழைய பாடலை நினைவுபடுத்திவிட, அந்தப் பாடலையும் சென்று கேட்டு விட்டேன்!

  https://www.youtube.com/watch?v=7XKgfD9yvMs

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கிருந்து இணைப்பை எடுக்க முடிய வில்லை.. என்ன பாடல் என்று சொன்னால் நானும் ரசித்துக் கொள்வேன்..

   நீக்கு
 6. துரை அண்ணா உயர் இரத்த அழுத்தம் என்றால் உடனே கவனியுங்கள் தயவாய். இல்லை என்றால் பின் விளைவுகள் ஏற்படுமே. அண்ணா உங்கள் மனம் மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கு என்று தோன்றுகிறது நீங்கள் சொல்லும் சிலதை வைத்துச் சொல்கிறேன்.

  நீங்கள் தனியாக வெளிநாட்டில் இருக்கிறீங்க. இந்த அறிகுறி வேறு எதற்கும் அடிப்படையாக இருக்கக் கூடாது என்று வேண்டுகிறேன் துரை அண்ணா. தயவாய் முழு உடல் பரிசோதனை செய்துக்கோங்க. சர்க்கரை இருந்ததாக முன்னர் சொல்லி நீங்க ஆவாரம் பூ பொடி சாப்பிட்டு சமநிலையில் இருப்பதாகச் சொல்லியிருந்தீங்க எனவேதான்சொல்கிறேன்.

  முழு செக்கப் போங்க. எதுவும் இருக்காது என்ற பிரார்த்தனையும். இருந்தாலும் கவனம் தேவை அண்ணா.

  தினமும் மூச்சுப்பயிற்சி செய்ங்க அண்ணா. கான்ஷியஸ் ப்ரீதிங்க், (மூச்சை உணர்ந்து, கவனித்தல், எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும்..) டயஃப்ரமாட்டிக் ப்ரீதிங்க் (ஆழமான மூச்சுப்பயிற்சி), நாடிசுத்தி..உங்களுக்குத் தெரிந்திருக்கும் கண்டிப்பாக. இவை நல்ல பயன் தருது துரை அண்ணா..என் அனுபவம்.

  உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்க அண்ணா. எங்கள் எல்லோரது பிரார்த்தனைகளும் உண்டு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நான் தற்போது நலமாக இருக்கிறேன். எவ்வித சங்கடங்களும் இல்லை...

   ஏதோ கெட்ட நேரம்... ஒரு நாள் படாதபாடு பட்டு விட்டேன்... மன அழுத்தம் என்பது உண்மைதான்... இவ்வேளையில் யாருடனும் அதிகம் பேசாது இருப்பேன்.. ஆனாலும் தியானம் , மூச்சுப் பயிற்சி கூடி வருவதற்கான சூழல் தற்சமயம் இல்லை..

   அன்பின் பிரார்த்தனைக்கும் ஆதரவுக்கும் நன்றி...

   நீக்கு
 7. கழுத்து தோள்களில் அழுத்தம் இருக்கிறது என்றும் சொல்லியிருக்கீங்க துரை அண்ணா. உங்களுக்கு கழுத்து வலி (ஸ்பாண்டிலைட்டிஸ் உண்டா? அது இருந்தாலும் தலை சுற்றம் மயக்கம் வாந்தி வரும்...சோயா பாலும் வெறும் வயிற்றில் அதுவும் காரணமாக இருக்கலாம் தான்..) எல்லாவற்றையும் ஆராய்ந்து கவனமாக பரிசோதனை செய்துகொள்ளுங்கள்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெறும் வயிற்றில் சோயா பால்... அதன் மீது தான் சந்தேகம்... மற்றபடிக்கு ஸ்பாண்டிலைட்டிஸ் எல்லாம் இல்லை...

   மலை போல வந்தது பனி போல நீங்கியதே.. அதுவே விசேஷம்...

   தங்களது அன்பினுக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
  2. துரை அண்ணா இப்போது நலமுடன் இருக்கீங்கன்னு பார்த்துக் கொண்டேன். மிக்க சந்தோஷம். மலை போல் வந்தது பனி போல் நீங்கியது மகிழ்வான விஷயம் அண்ணா. உங்கள் இறை பக்தியும் நம்பிக்கையும் என்றென்றும் துணை இருக்கும்.

   கீதா

   நீக்கு
 8. பயப்பட ஒன்றும் இருக்காது. நலமடைவீர்கள். தனியாக நான் இருந்தபோது இதுபோல பல பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறேன். அவனிருக்க பயமில்லை.

  நீங்கள் வெளியிட்டிருப்பது, திறமையான ஓவியர் இளையராஜா வரைந்த படம். அவர் ஒரு சில நாட்கள் முன்பு கொரோனாவிற்குப் பலியானதாக செய்தியில் படித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..

   நான் தற்சமயம் நலமாக இருக்கின்றேன்..
   தங்களது ஆதரவான வார்த்தைகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 9. விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள். மேலதிகப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளுங்கள். எல்லாப் பிரச்சனைகளும் பனிபோல விலகட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   நான் தற்சமயம் நலமாக இருக்கின்றேன்..

   தங்களது வார்த்தைகளின்படி எல்லாப் பிரச்சனைகளும் பனி போல விலகட்டும்..

   தங்களது ஆதரவான வார்த்தைகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 10. வணக்கம் , வாழ்க வளமுடன் . வேலை பளு அதிகமாக இருப்பதால் பின்னூட்டங்களுக்கு பதில் தரவில்லை போலும் என்று நினைத்தேன். உடல் நிலை சரியில்லை என்று படித்து வருத்தம் அடைந்தேன்.
  உடல் நலத்தை கவனித்து கொள்ளுங்கள்.
  நண்பர் கணேஷமூர்த்தி அவர்களுக்கு நன்றிகள்.
  புள்ளிருக்கு வேளூர் வைத்திய நாதனின் சாந்து உருண்டை நலம் தரும். திருநீறு நலம் தரும் . நேற்று கிருத்திகை வேறு எல்லாம் நல்லபடியாக குணம் அடைந்ததில் மகிழ்ச்சி. இருந்தாலும் தனிமையில் இருப்பதால் கவலை அளிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் என்றால் பரிசோதனை செய்து கொண்டு மருந்தும் சாப்பிடுவது நல்லது.

  நலமாக இருக்க பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தக்க சமயத்தில் வைத்தீஸ்வரன் கோயில் துருச்சாந்து உருண்டை கிடைத்தது தான்..

   நான் தற்சமயம் நலமாக இருக்கின்றேன்..
   தங்களது ஆதரவான வார்த்தைகளுக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  நீங்கள் எ.பியில் உங்கள் கதை பகுதிக்கு எப்போதும் உடனடியாக பதில்கள் தந்து விடுவீர்கள். வேலை அதிகமாக இருந்தால், அன்றைய இரவேனும் வந்து பதில்கள் தந்து விடுவீர்கள். இன்று காலையும் தாங்கள் எவ்வித பதில் கருத்தும் தராமல் இருக்கவே, மிக அதிகமான அலுவலக வேலைகள் உங்களை பிடித்துக் கொண்டுள்ளது என நினைத்தேன். ஆனால் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நீங்கள் அவதியுற்றது தெரிந்து கவலையடைந்தேன்.

  இப்போதுதான் இந்த பதிவை படிக்கிறேன். தாங்கள் உடல் நலமில்லாமல், தனியாக இருந்து கவலையுற்றது படித்து மனது கலக்கமுற்றது. முருகன்தான் தங்களுக்கு பக்கபலமாக இருந்து நல்லபடியாக தங்கள் உடல் நலத்தை பாதுகாத்துள்ளார். தற்சமயம் எப்படி உள்ளது? மருத்துவரிடம் காண்பித்ததில் என்ன சொன்னார்கள்?மருந்துகள் முறையாக எடுத்துக் கொள்ளுங்கள். உடல் நிலையை பத்திரமாக பார்த்துக் கொள்ள சில நாட்கள் விடுப்பு எடுத்து ஓய்வு எடுங்கள். உங்கள் உடல் உபாதைகள் நல்லபடியாக குணமாக முருகனை மனமாற வேண்டிக் கொள்கிறேன். முருகன் துணை எப்போதும் நம்முடன் இருக்கும். நன்றி.

  அன்புடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   இங்குள்ள சூழ்நிலையில் Consulting Clinic களில் தங்க வைத்து சிகிச்சை அளிப்பதில்லை...

   50 கி.மீ தொலைவில் அரசு மருத்துவ மனைக்குச் சொல்வதென்றால் அந்த நேரத்தில் தக்க துணையும் இல்லை..

   எப்படியோ மலை போல வந்தது பனி போல நீங்கியது..

   நான் தற்சமயம் நலமாக இருக்கின்றேன்..
   தங்களது ஆதரவான வார்த்தைகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 12. விரைவில் பூரண நலம் பெற பிரார்த்திக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கௌதம்..

   நான் தற்சமயம் நலமாக இருக்கின்றேன்..
   தங்களது ஆதரவான வார்த்தைகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 13. முழுமையான பரிசோதனை செய்து கொள்ளுங்கள்... விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   நான் தற்சமயம் நலமாக இருக்கின்றேன்..
   தங்களது அன்பான வார்த்தைகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 14. தனியாக இருக்கும் பொழுது நோய்வாய்ப்படுதல் அதிக மனச்சோர்வைத்தரும். இங்கிருக்கும் உங்கள் வீட்டு உறவினர்களுக்கும் கவலைதான். எப்படியோ எல்லாம் சரியானதில் மகிழ்ச்சி. உடம்பை கவனிதுக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   நான் தற்சமயம் நலமாக இருக்கின்றேன்..
   தங்களது ஆதரவான வார்த்தைகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 15. உங்கள் உடல் நலன் அறிந்து அது இப்போது தேறியிருப்பதும் குறித்து மகிழ்ச்சி, சார். தாமதமாகிவிட்டது மன்னிக்கவும்.

  தனியாக இருப்பதால் சோர்வு ஏற்படும்தான். எல்லாம் மலை போல் வந்து பனி போல் விலகியது அறிந்து மகிழ்ச்சி. உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள் சார்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..