நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 17, 2023

மஞ்சள்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 4
 திங்கட்கிழமை


மஞ்சள்
செந்தமிழ்க் குடும்பங்களில்
இல்லறமோ இறையறமோ மஞ்சள் தான் பிரதானம்..

மஞ்சள் மங்கலத்தின் சின்னம்.. 
மகிழ்ச்சியின் அடையாளம்.. 
மங்கல சுப சகுனம்..

மேல் திசையில் இருந்து கொள்ளை யடிக்க வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்நாட்டில் மஞ்சள் எல்லாவற்றிலும் முதலிடத்தில் இருந்தது.. இப்போதும் இருக்கின்றது..

மஞ்சளாக இருப்பதாலேயே இது மஞ்சள்..


அகத்திலும் புறத்திலும்
மிகச் சிறந்த கிருமி நாசினி..

மனதில் ஆன்மீக உணர்வுகளைத் தூண்டி விடுவது மஞ்சள்..

தோல் நோய்களுக்கு மிகச் சிறந்த தீர்வு மஞ்சள்..


மஞ்சளின் மருத்துவ குணங்களை அறிந்து கொண்ட அமெரிக்கா மஞ்சளைக் கைப்பற்ற முனைந்தது நம்மில் பலருக்கும் தெரியும்..

மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற  நிறமி தான் மஞ்சள் நிறத்துக்குக் காரணம்..  

பெண்கள் முகத்துக்கு மஞ்சள் பூசுவதால் முகத்தில் முடி வளராமல் தடுப்பதுடன் முகத்துக்கு ஒருவித பளபளப்பும் வசீகரமும் ஏற்படுகின்றது. முகத்துக்கு மஞ்சள் பூசுதல் பாரத கலாச்சாரம்..


பூப்பெய்திய பெண்ணை வாழிய.. வாழிய.. என்ற வாழ்த்துரைகளுடன் மஞ்சள் நீராட்டும் தருணங்கள் உன்னதமானவை...

இங்கிருந்து தான் சீர்மிகு மரபுகள் உருவாகின்றன..


மஞ்சள் தூளை பாலில் சேர்த்துக் காய்ச்சி அருந்தினால் தொண்டை எரிச்சல் தீரும்..

சளி, வறட்டு இருமல் தொடர்பான காய்ச்சல்  மற்றும் மூட்டு வலிக்கு  மஞ்சள் பால் சிறந்த நிவாரணி.. 

வறட்டு இருமலினால் உண்டாகும் தொண்டை எரிச்சலுக்கு  கலப்படமற்ற தேனில் (1tbsp) சுத்தமான மஞ்சள் தூளைக் (1 tsp) குழைத்து சுவைப்பது மிகவும் நல்லது..

உடலில் சொறி, சிரங்கு  முதலானவை  ஏற்பட்டால் மஞ்சளை அரைத்துப் பூசுவது ஒன்றே தீர்வு..  

தோல் பராமரிப்பிற்கு மஞ்சளுக்கு நிகராக வேறு ஒன்று இல்லை..

மூட்டு வீக்கத்தைக் குறைக்கின்றது...

காயத்தால் ஏற்படும் வீக்கத்திற்கும்  தசை வலியைப் போக்குவதற்கும் மஞ்சளுடன் சிறிது நீர் விட்டு சுண்ணாம்பு குழைத்துப் பூசுதல் வழக்கம்..

காயம் பட்ட இடத்தில் பூசப்படும் மஞ்சள் சாந்து கிருமி நாசினியாக வேலை  செய்கின்றது.. புதிய திசு உருவாகவும், காயம் ஆறுவதற்கும்  காரணம் ஆகின்றது..

பூப்படைந்த பெண்ணுக்கும் பிரசவித்த பெண்ணுக்கும் மஞ்சளே உற்ற துணை.. பிறந்த குழந்தையை மஞ்சள் நீரில் குளிப்பாட்டுதல் மரபு..

அந்தக் காலத்தில அம்மை நோயில் இருந்து மீண்டவர்களுக்கும் வேப்பிலை மஞ்சள்,  நீர் குளியலே பிரதானம்..

இதெல்லாம் சர்வ சாதாரணமான வீட்டு விஷயங்கள்.. கைக் குறிப்புகள்..

சமையலில் மஞ்சளின் பங்கு மிகவும் அதிகம்..


மஞ்சள் தூளைப் பசும் பாலில் (பாக்கெட் பால் அல்ல) சேர்த்துக் காய்ச்சுவதே மஞ்சள் பால்..

இன்றைக்குப் பசும் பாலுக்கும் பிரச்னை எனில் ஒன்றும் செய்வதற்கில்லை..

மஞ்சள் பால்  நீரிழிவுக்கு நன்மை பயக்கும். இது கல்லீரலில் இன்சுலின்  சுரப்பினை அதிகரித்து  இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகின்றது

மஞ்சள்  ஜீரண மண்டலத்தை ஒழுங்கு செய்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகின்றது. இதனால் உடல் செல்களுக்கு முழு பாதுகாப்பை ஏற்படுகின்றது..

உடலின் நச்சு நீக்கி கல்லீரல் நலத்தை மேம்படுத்துகிறது மஞ்சள்..


மஞ்சளின் குர்குமின்  புற்றுநோய்க் கட்டி ஏற்படாமல் தடுக்கின்றது. ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கின்றது என்று தற்போது கண்டறிந்துள்ளனர்..

மஞ்சளில் வைட்டமின் a, தியாமின் (b1), ரிபோஃப்ளேவின் (Riboflavin), வைட்டமின் c மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம் மற்றும் பொட்டாசியம் முதலானவை அடங்கி உள்ளதாக விக்கி சொல்கின்றது..

மஞ்சளின் மூலக்கூறினை அடிப்படையாகக் கொண்டு பற்பல கிரீம்  லோஷன்கள் அழகு சாதனப் பொருட்கள் தற்போது அதிக அளவில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன..

மஞ்சளின் மகத்துவத்தைப் பற்றி இங்கே பேசுவது கொல்லன் பட்டறையில் குண்டூசி விற்பதற்குச் சமம்...


ஆனால்,
மங்கலமாகிய மஞ்சள் திகழ வேண்டிய பெண்ணின் முகத்தில் நவநாகரிக மேல் பூச்சு தவழ்கின்ற காலம் இது!..

மங்களகரமான திருமணத்தில் கூட  மினுக்கும் ஒப்பனையுடன் மணமகள் வருகின்ற காலம் இது..

எனவே மஞ்சளைப் பற்றி பேச வேண்டியதாயிற்று..

மேலும்
கடைகளில் கிடைக்கும் மஞ்சள் தூள்களில் கலப்படம் என்கின்றனர்..  

உலர்ந்த மஞ்சள் கிழங்கினை வாங்கி மேலும் வெயிலில் உலர்த்தி அரைத்துக் கொள்வதே நல்லது.. 

அது தான் எங்கள் வீட்டிலும்!..

வாழ்க மஞ்சளும் மங்கலமும்

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***

19 கருத்துகள்:

  1. சிறப்பான குறிப்புகள்.  இதோடு இள மஞ்சளில் ஊறுகாயும் செய்து சாப்பிடலாம்.  சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் 

    மஞ்சள் முகமே வருக 

    மஞ்சளின் மகாராணி குங்குமத்திருமேனி 

    மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராதா ராதா 

    இவை எனக்கு உடனே நினைவுக்கு வந்த சில 'மஞ்சள்' திரைப்படல்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சளும் தந்தாள்
      மலர்கள் தந்தாள்..

      பாடல் நினைவுக்கு வரவில்லையா!..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
    2. மிகவும் இனிய பாடல் அது..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. மிக நல்ல செய்திகள். மிளகு மஞ்சள் சேர்த்த பால் ஆரோக்கியமானது. பொங்கல் சமயத்தில் நிறைய கிடைக்கும். அந்த இலைகளை மஞ்சளோடு பொங்கல் பானையைச் சுற்றிக் கட்டுவோம். குக்கர் பொங்கல் என்றானபின் எல்லாம் சம்பிரதாயங்களாகப் போய்விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது எல்லாம் சம்பிரதாயம் தானே...

      அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  4. துரை அண்ணா நல்ல சிறப்பான மஞ்சள் மகிமைப் பதிவு!! என்ன ஒரு ஒற்றுமை! இதோ நம் வீட்டில் நேற்று பச்சை மஞ்சள் வாங்கிவந்து, மா இஞ்சியும் வாங்கிவந்து தண்ணீரில் போட்டு, நேற்றிலிருந்து இன்று வரை இரண்டிற்கும் தோலை மெலிதாகச் சுரண்டி விட்டு இதோ ஊறுகாய் காரம் உப்பு அதிகம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறேன். மகனுக்கும் கொடுப்பதற்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் மேலதிக கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  5. வாங்கி வந்ததில் மஞ்சள் கிழங்கில்மூன்றையும், மா இஞ்சியில் மூன்றையும் தொட்டியில் நட்டு வைத்துவிட்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. மஞ்சள் மகிமைகள் பகிர்வு அருமை.
    படங்களும் நன்றாக இருக்கிறது.
    கீழே விழுந்து அடி பட்டு விட்டால் மஞ்சள் பத்து போடுவோம். மஞ்சளை நல்லெண்ணயில் கலந்து கொதிக்க வைத்து போட்டால் அடிபட்ட வீக்கம் சரியாகும் என்று எங்கள் வீட்டு முதல் உதவி மஞ்சள்தான்.
    வற்டடு இருமல், சளி, மற்றும் இருமலுக்கு மேல் கால்வலி எல்லாவற்றுக்கும் மஞ்சள் மிளகு பால்தான். வறட்டு இருமலுக்கு பனகற்கண்டும் சேர்த்து கொள்வார்கள்.
    பொங்கல் என்று வாங்கும் மஞ்சளை நட்டு வைப்பேன், அடுத்த பொங்கலுக்கு பானையில் கட்ட வாசலில் கட்ட கிடைத்து விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் செலவில்லாத வைத்தியங்கள்..
      நினைவு கூர்ந்ததற்கு மகிழ்ச்சி..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. வருஷா வருஷம் பச்சை மஞ்சள் ஊறுகாய் போடுகிறேன். அதோடு நெல்லிக்காயோடு, பச்சை மஞ்சள் அல்லது சுத்தமான மஞ்சள் பொடி சேர்த்துப் பாகல்காய், சின்ன வெங்காயம், இஞ்சி சேர்த்து அரைத்துச் சாறெடுத்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவோம். அதன் பின்னர் அரைமணிக்குப் பின்னரே காஃபி எல்லாம். மேலும் எனக்கு இந்தக் கோடையில் அடிக்கடி வரும் வெயிற்காலக் கட்டிகள், கொப்புளங்களுக்குக் குப்பைமேனியோடு, வேப்பிலையும், பச்சை மஞ்சளும் சேர்த்து அரைத்துத் தான் தடவிக் கொண்டு குளிக்கிறேன். அதான் இப்போப் பயன்படுத்தி வருகிறேன். சோப்பெல்லாம் கிடையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வேப்பிலையும், பச்சை மஞ்சளும் சேர்த்து அரைத்துத் தான் தடவிக் கொண்டு குளிக்கிறேன்..//

      சிறப்பான மருந்து..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நலம் வாழ்க.

      நீக்கு
  8. மஞ்சள் மகிமை நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..