நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 01, 2023

இள மேதி

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 18 
 சனிக்கிழமை


இள மேதி..
எருமைக்கன்று.. 

அதுவும் இளங்கன்று.. 

பறையின் ஓசை பாடலின் ஓசை திருவிழாவின் ஓசை - என்று மட்டுமே இருந்த அந்த கால கட்டத்தில் -

அன்றைக்குத் தான் அது மேய்ச்சலுக்கு வந்திருக்கின்றது.. மேய்ந்து கொண்டும் இருக்கின்றது..

இந்தப் பக்கம் தென்னந் தோப்பு.. இதன் ஓரமாகத் தான்  இளமேதியின் ஆனந்தம்.. தாயும் மற்ற உற்றார்களும் உடனிருக்க மேய்ந்து கொண்டிருக்கின்றது..   
வானில் பறக்கின்ற பறவைகளின் கூச்சலைத் தவிர வேறொன்றுமில்லை..

திடீரென்று பெருஞ்சத்தம்.. இளமேதி பயந்து விட்டது..

என்ன ஏது.. என்று யோசிக்க வில்லை..  நேரமில்லை.. 

எடு ஓட்டம்!..

எடுத்து விட்டது..

நிற்காதே.. ஓடு!.. 

கதி கலங்கி குலை நடுக்கத்துடன் -
திடுதிடு.. என்று ஓடியது எருமைக் கன்று..

அங்கே - அந்த வயலில் செந்நெற்கதிர்கள் தழைத்திருக்கின்றன.. அவற்றின் ஊடாக தாமரைப் பூக்களும் மலர்ந்து கிடக்கின்றன.

அதற்குள் - அந்த வயலுக்குள் பாய்ந்து விட்டது இளங்கன்று..

வயலில் மண்டி இருந்த செந்நெற் கதிர்களிலும் தாமரைப் பூக்களிலும் இப்படியும் அப்படியுமாக ஓடித் திரிந்து குழப்பியடித்து களேபரம் செய்து விட்டு அதுவே பாதுகாப்பு என்று நினைத்து அங்கேயே படுத்துக் கொண்டது - பெருஞ்சத்தத்துக்குக் காரணம் -
எழிலான இளந்தென்னையின் அழகான குலையில் இருந்து காய் ஒன்று முதிர்ந்து உதிர்ந்தது தான் என்பதை அறியாமல்!..

மனதுக்குள் நினைத்துப் பாருங்கள்..

இளங்கன்று ஒன்று 
மிரண்டு ஓடுவது ரசனை அல்ல.. அது பயந்தோடிப் படிந்த  தட வயலின் செழுமை தான் அழகின் ரசனை..
 
இந்த வைபவம் நடந்தது ஐயாறு எனப்பட்ட திருவையாறில்!...

இங்கே தான் -

மேகம் வந்து உரசிச் செல்லும் தோள்களை உடைய அரக்கன்  எவ்வித அச்சமும் இல்லாமல்  கயிலாய மலையைப்  பெயர்த்து எடுத்த போது அவனுடைய பத்து தலைகளும் இருபது தோள்களும் முறிந்து போகும்படிக்கு நசுக்கி பின்னர் அவனைக் காப்பாற்றி அவனுக்கு நல்லருள் புரிந்த இறைவனாகிய சிவபெருமான் திருக்கோயில் கொண்டுள்ளான்..

இதே சாயலில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் பாடல் ஒன்றை அருளிச் செய்துள்ளார்.. 

அந்தத் திருப்பாடலும்  இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ளது..
***

தேங்காய்..

பூர்ணகும்பத்தின் சிகரம்..

பூர்ண கும்பத்துடன் வேதியரோ மங்கையரோ எதிர் நின்று வரவேற்றால் மிக உயர்ந்த மரியாதை..

தேங்காயின் மேலுள்ள் மட்டையைப் பக்குவமாக உரித்து எடுத்தாலே சிகரம் போல் இருக்கும்.. உள்ளிருக்கும் நார்களை நீக்கி எடுத்தால் மனித முகம் போலவே...

ஏதும் காரியம் தங்கு தடையின்றி நடைபெற வேண்டும் எனில் விநாயருக்கு முன்பாக தேங்காயை சூறையிட்டால் -
சிதற அடித்து உடைத்து விட்டால் போதும்..

இன்றைய தேங்காய்
தேவார காலத்தில் தெங்கு என்று வழங்கப்பட்டுள்ளது..

தெங்கம் பழம் எனப்பட்ட
தேங்காயைப் பற்றி நிறைய இருந்தாலும் -


நாம் நமது வழக்கப்படி மூவர் முதலிகள் தமது திரு வாக்கினால் சொல்லியிருக்கின்ற சில பாடல்களை மட்டும் இன்று காண்போம்..

திருஐயாறு
அஞ்சாதே கயிலாய மலையெடுத்த 
அரக்கர் கோன் தலைகள் பத்தும்
மஞ்சாடு தோள் நெரிய அடர்த்து அவனுக்கு 
அருள் புரிந்த மைந்தர் கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் 
பழம்வீழ இளமேதி இரிந்தங்கு ஓடிச்
செஞ்சாலிக் கதிர் உழக்கிச் செழுங்கமல 
வயல்படியும் திரு ஐயாறே.. 1/130/8
(ஞானசம்பந்தர்)

திரு ஆரூர்
சங்குலாவு திங்கள்சூடி தன்னை உன்னுவார் மனத்து
அங்குலாவி நின்ற எங்க ளாதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம்
அங்குலாவி அண்டநாறும் அந்தண் ஆரூர் என்பதே.. 2/101/5
(ஞானசம்பந்தர்)


திருஆமாத்தூர்
வானஞ் சாடு மதியர வத்தொடு
தானஞ் சாதுடன் வைத்த சடையிடைத்
தேனஞ் சாடிய தெங்கிள நீரொடும்
ஆனஞ் சாடிய ஆமாத்தூர் ஐயனே..
 5/44/10
(திருநாவுக்கரசர்)

திருக்கொட்டையூர்
கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்
கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்
அலைக்கங்கை செஞ்சடைமேல் ஏற்றான் கண்டாய்
அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய்
மலைப்பண்டங் கொண்டுவருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டையூரிற்
கோடீச்ச ரத்துறையுங் கோமான் தானே.. 6/73/2
(திருநாவுக்கரசர்)


திருவாழ்கொளிபுத்தூர்
காளையாகி வரையெடுத் தான்றன்
கைகள் இற்றவன் மொய்தலை யெல்லாம்
மூளை போத ஒருவிரல் வைத்த
மூர்த்தி யைமுதல் காண்பரி யானைப்
பாளை தெங்கின் பழம்விழ மண்டிச்
செங்கண் மேதிகள் சேடெறிந்து எங்கும்
வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந்து என்நினைக் கேனே.. 7/57/9
(சுந்தரர்)

திருக்கேதீச்சரம்
அங்கத்துறு நோய்கள் அடியார்மேல் ஒழித் தருளி
வங்கம்மலி கின்றகடல் மாதோட்ட நன் னகரில்
பங்கஞ்செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல்
தெங்கம்பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சரத்தானே.. 7/80/5
(சுந்தரர்)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

 1. ரசனை. அழகான தமிழ் அமுதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. மனதுக்குள் நினைத்துப்பார்த்தாலே அருமையாக இருக்கிறது.
  கண்முன் பார்ப்பது போல உங்கள் எழுத்து அருமை.
  பகிர்ந்த பாடல்கள் அருமை.
  திருக்கேதீச்சரம் அழகான ஊர்.
  தெங்கபழம் என்று சொல்வார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞானசம்பந்தர் திருப்பாடல்கள் பெரும்பாலும் இயற்கை அழகைப் பேசுவதாக இருக்கும்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி .. நன்றி..

   நீக்கு
 3. பக்தி ரசம் அருமை

  ஓம் நம சிவாய... வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓம் சிவாய நம..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஜி..

   நீக்கு
 4. தெங்கம்பழம் பற்றி அற்புதமான பாடல்கள்.

  இறுதியில் எமது நாட்டு செங்கம் பொழிசூழ்ந்த திருக்கேதீச்சரத்தானை வணங்கும் பாடல். மகிழ்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெங்கம் பொழில்சூழ்ந்த திருக்கேதீச்சரத்தான் - அங்குள்ள வளங்களை சுந்தரர் வரிசைப்படுத்தி பாடியிருப்பார்.. அழகான பாடல்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நீக்கு
 5. அழகான அருமையான விளக்கம்...

  ஓம் நம சிவாய...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி தனபாலன்..

   ஓம் சிவாய நம..

   நீக்கு
 6. பாட்ல்களும் விளக்கமும், அதுவும் கதை போல் தொடங்கிச் சொன்ன விதத்தையும் ரசித்து வாசித்தேன், துரை அண்ணா.

  மலையாளத்தில் தெங்கு (தமிழ்ச்சொல்) என்று சொல்வதுண்டு...மலையாளத்தில் நிறைய தமிழ்ச் சொற்களைக் காணலாம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. தமிழும் மலையாளமும் சகோதர மொழிகள் தானே..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி சகோ..

   ஓம் சிவாய நம..

   நீக்கு
 7. திருக்கேதீச்சுரம் பற்றிய தகவல்களும் பாடலும் அருமை. தேங்காய்க்கு ஈடு, இணை ஏது? பசி நேரத்தில் ஒரு இளநீரும் கொஞ்சம் வழுக்கையும் இருந்தால் போதுமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // பசி நேரத்தில் ஒரு இளநீரும் கொஞ்சம் வழுக்கையும் இருந்தால் போதுமே!.. //

   அருமையாகச் சொன்னீர்கள்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றியக்கா..

   ஓம் சிவாய நம..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..