நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 15, 2016

ஆழித் தேரோட்டம்

திருஆரூர் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயிலின் ஆழித் தேரோட்டம் நாளை காலை 7.30 மணியளவில் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது..

தமிழகத்தின் மிகப் பெரும் திருத்தேர் இதுவே!..

தேவாரத் திருப்பதிகம் பெற்ற சோழ நாட்டுத் திருத்தலங்கள் -
காவிரிக்கு வடகரைத் திருத்தலங்கள் என்றும்

காவிரிக்குத் தென்கரைத் திருத்தலங்கள் என்றும் பகுக்கப்பட்டுள்ளன..

அவற்றுள் - காவிரிக்கு வடகரைத் தலமாகத் திகழ்வது - திருஇன்னம்பர்..

அப்பர் பெருமான் - திரு இன்னம்பர் தலத்தைத் தரிசித்து திருப்பதிகம் அருளும்போது -

ஆரூர் அமர்ந்த அரசு
ஆழித்தேர் வித்தகரும் தாமே போலும்
அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும்..

- என்று - திரு ஆரூர் ஆழித்தேரினை நினைவு கூர்கின்றார் - எனில் அதன் பெருமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்!.. 

மேலும் - எம்பெருமான் திருவீதி எழுந்தருளும் போது,

முரசு அதிர்ந்து ஆனை முன்னோட
முன்பணிந்து அன்பர் ஏத்த..
அரவரைச் சாத்தி நின்றானும்
ஆரூர் அமர்ந்த அம்மானே!..

என்றும் - திருவிழாவினைக் கண் முன்னே நிறுத்துகின்றார்..

மேலும்,

திருஆரூரில் திருஆதிரைத் திருவிழாவை நேரில் தரிசித்திருக்கின்றார் - அப்பர் பெருமான்...

திருப்புகலூரில் - திருஞானசம்பந்தப் பெருமான் - அப்பர் ஸ்வாமிகளைச் சந்தித்தபோது -

திருவிழாவின் கோலாகலத்தைத் திருப்பதிகமாகப் பாடியருள்கின்றார்..

அந்தத் திருப்பதிகத்தில் -

செந்துவர் வாயார் செல்வனசேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு மங்கையர்கூடி மயங்குவார்
இந்திரனாதி வானவர்சித்தர் எடுத்தேத்தும்
அந்திரனாரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.. (4/21)

சிறப்புடைய இந்திரன் முதலான வானவரும் சித்தர்களும்
மைந்தர்களும் மங்கையரும் மனம் மயங்கியவர்களாக
ஈசன் எம்பெருமானின் சேவடிகளைச் சிந்தித்துப் போற்றி மகிழ்ச்சியில்
திளைத்திருக்க ஆரூர் ஆதிரைத் திருநாளின் வண்ணம் திகழ்கின்றது..

- என்று குறித்தருள்கின்றார்..


ஆதிரைத் திருநாள் மட்டுமல்லாமல் திருஆரூரில் நிகழும் அனைத்து திருவிழாக்களிலும் இந்திரன் முதலான வானவரும் சித்தர்களும்
மக்களுடன் மக்களாகக் கலந்து கொள்கின்றார்கள் என்பது ஐதீகம்...

அது மட்டுமல்லாமல் - ஒவ்வொரு நாளும் மாலையில் ஸ்ரீ தியாக ராஜரின் சந்நிதியில் நிகழும் அந்தி வழிபாட்டின் போது இந்திரன் முதலான வானவரும் சித்தர்களும் கலந்து கொண்டு தரிசிக்கின்றனர்..

அவர்களை ஒழுங்கு செய்யும் வண்ணமாகவே -
சந்நிதியில் நந்தியம்பெருமான் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார்..

எல்லாவற்றுக்கும் மேலாக -

கீழைத் திருக்கோபுரத் திருவாயிலில் தேவேந்திரன் தவமாய்த் தவமிருந்து காத்திருக்கின்றான்!..

ஏன்!?...

அதனை அடுத்தொரு பதிவில் காணலாம்...

இப்போது ஆழித்தேரினைப் பற்றி சிந்திப்போம்...


ஆயத்த நிலையில் ஆழித்தேர்
தமிழகத்தின் பெருந்தேர்களுள் முதலாவதானது ஆரூர் ஆழித்தேர்..

அடுத்தது - ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ர சாயி திருக்கோயிலின் திருத்தேர்..
மூன்றாவதாக திருக்குடந்தை ஸ்ரீ சார்ங்கபாணி திருக்கோயிலின் திருத்தேர்..

ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஆழித்தேரோட்டம் நடைபெறுகின்றது..

இந்தத் தேர் 96 அடி உயரமும், 31 அடி அகலமும், 350 டன் எடையும் கொண்டதாகக் குறிக்கப்படுகின்றது..

திருக்கோயில் திருப்பணி நடைபெற்றதால் கடந்த 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெறவில்லை..

திருப்பணி என்ற பெயரில், ஆழித்தேரினை - 2015 அக்டோபர் வரை பிரித்துப் போட்டிருந்தார்கள்..

அக்கு அக்காக பிரிக்கப்பட்டு வெயிலிலும் மழையிலும் கிடந்த கோலத்தைக் கண்டு மனம் வெதும்பாதவர்கள் எவரும் இல்லை..

திருமிகு GMB  ஐயா அவர்கள் கூட,
நமது தளத்தில் பதிவு ஒன்றுக்குக் கருத்துரை இடும்போது கேட்டிருந்தார்கள்...

நானும் மனவருத்தத்துடன் பதில் கூறியிருந்தேன்..


எல்லாவற்றையும் கடந்து -
இரண்டு கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட ஆழித்தேர் -
கடந்த வருடம் அக்டோபர் 26 அன்று வெள்ளோட்டம் கண்டது..

அதன்பின் நவம்பர் 8 அன்று திருக்கோயிலின் திருக்குட முழுக்கு -
கொட்டும் மழையில் கோலாகலமாக நடைபெற்றது..

அப்போது கூட தக்க பாதுகாப்பு இன்றி கடும் மழையில் நனைந்து கொண்டிருந்தது ஆழித்தேர்..

எப்படியோ - அனைத்தும் நல்லவிதமாக நடந்து முடிந்தன..

இதோ - நாளை காலையில் ஆழித்தேரோட்டம்!..

ஒருவாரத்திற்கு முன்பு ஆழித்தேரை வடிவமைக்கும் பணி தொடங்கப்பட்டது..

தொம்பைகளாலும் தோரணங்களாலும் வண்ணமிகு திரைச் சேலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது ஆழித்தேர்..

முருகனுக்கான திருத்தேர் புதிதாக செய்யப்பட்டுள்ளது..

விநாயகர் தேரும் முருகன் தேரும் இன்று காலையில் இழுக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்டு விட்டன..

யதாஸ்தானத்திலிருந்து ஸ்ரீ தியாகராஜர் எழுந்தருளல்

அலங்காரத்துடன் ஆழித்தேர்
நாளை அதிகாலையில் ஆழித்தேரில் -
ஸ்ரீ தியாகராஜப் பெருமானும் அல்லியங்கோதை அம்பிகையும்
எழுந்தருளிய நிலையில் மகா தீபாராதனைக்குப் பின் -

காலை 7.30 மணிக்குள் ஆழித் தேரும் அம்பிகையின் திருத்தேரும்
வடம் பிடிக்கப்படுகின்றன...

தொடர்ந்து - சண்டிகேஸ்வரர் திருத்தேர் பவனி வருகின்றது..

சண்டிகேஸ்வரர் திருத்தேர் நன்கொடையாளர்களால் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது..

ஆழித்தேர் நிலைநிறுத்தப்பட்டதும் அன்றிரவே - ஸ்ரீதியாகராஜர் யதாஸ்தானம் எழுந்தருள்வார்..

தொடர்ந்து -

ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில்,
ஸ்ரீ கல்யாண சிந்தரர் அம்பிகையுடன் தெப்பத்தில் எழுந்தருள்வார்..

தெப்போற்சவம் ஜூலை 2,3,4 - என, மூன்று நாட்களுக்கு நிகழும்..

முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருப்பதாக அறியமுடிகின்றது..

நாளை வியாழன்று -
இளங்காலைப் பொழுதில் ஆயிரமாயிரம் அன்பர்கள் ஒன்று கூடி,

ஆரூரா.. தியாகேசா!..

எனும் முழக்கத்துடன் ஆழித் தேரின் வடம் பிடிக்க இருக்கின்றனர்..

ஆழித்தேர் - பழைய படம்
மக்கள் வெள்ளத்தில் மாமலை போல அசைந்து வர இருக்கின்றது ஆழித்தேர்..

எண்ணிறந்த சிறப்புகளை உடையது திருஆரூர்..
அனைத்தையும் விரித்துரைப்பதற்கு காலம் போதாது என்பதே உண்மை..

ஆழித்தேரின் அலங்காரங்களை -
Fb -ல் சிவனடியான் மற்றும் உழவாரம் திருப்பணிக் குழுவினர் வழங்கினர்..

அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

தியாகேசர் ஆழித்தேருக்கு எழுந்தருளும் திருக்காட்சியைக்
கீழுள்ள காணொளியில் கண்டு மகிழ்க..


அண்ணல் ஆரூரன் தன் ஆழித்தேரின்
வண்ணம் எண்ணித் திளைக்கின்றது மனம்!..
***

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!.. 
- என்று உருகுகின்றார் மாணிக்க வாசகர்.. 

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் 
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என்பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்தணி
ஆரூரனை மறக்கலும் ஆமே!.. (7/59)
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-

குருந்த மேறிக் கொடிவிடு மாதவி
விரிந்த லர்ந்த விரைகமழ் தேன்கொன்றை
திருந்து மாடங்கள் சூழ்திருஆரூரான்
வருந்தும் போதெனை வாடலெனுங் கொலோ!.. (3/45)
-: ஞானசம்பந்தப் பெருமான் :-

ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையும் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்னும் விண்ணும் தெரித்த நாளோ
மான்மறிக் கையேந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருஆரூர்க் கோயிலாக் கொண்ட நாளே!.. (6/34)
-: அப்பர் ஸ்வாமிகள் :- 

ஆரூரா.. தியாகேசா!..
ஆரூரா.. தியாகேசா!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
***

14 கருத்துகள்:

 1. ஒரு முறை குடும்பத்துடன் சென்று ஆழித்தேரோட்டம் பார்த்தோம். மிகவும் எதிர்ப்ர்ப்புடன் போனதாலோ என்னவோ நாங்கள் எதிர்பார்த்தவாறு பிரம்மாண்டமாகத் தோன்றவில்லை. அல்லது கும்பகோணத்தில் அதிகமான அளவில் தேர்களைப் பார்த்ததால் நாங்கள் எதிர்பார்த்ததை ஆழித்தேரில் காண முடியவில்லையோ என எண்ணத் தோன்றியது. பெரிதாக இருந்தாலும்கூட மற்ற தேர்களைப் போல மனதில் முழுமையாகப் பதியவில்லை. என்ன இருந்தாலும் தேரின் அழகு அழகுதான். ரசித்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   மேலதிக செய்திகளுடன் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 2. பல ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேருக்கு ஹைட்ராலிக் ப்ரேக் கொண்ட சக்கரத்தை பி எச் இ எல் நிறுவனம் சீரமைத்துக் கொடுத்து அந்தத் தேர் ஓடியது அந்தத் தேரைப் பார்க்கும் ஆவலுடன் நாங்கள் திருவாரூர் சென்றபோது அது அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கப் பட்டு பராமரிப்பில்லாமல் இருந்தது அந்த ஆதங்கத்தில்தான் அது குறித்து நான் என் ஒரு பின்னூட்டத்தில் கேட்டிருந்தேன் ஆல் இஸ் வெல் தட் எண்ட்ஸ் வெல். வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   திருத்தேர் பிரிக்கப்பட்டு வெயிலிலும் மழையிலும் கிடந்ததை நினைவு கூர்ந்து வழங்கிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 3. அன்பின் ஜி திருஆரூர் ஆழித்தேரோட்டம் அரிய விடயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. ஆழித்தேர் பற்றி வண்ணப் படங்கள் மற்றும் வீடியோவுடன் நிறைய தகவல்கள் தந்தமைக்கு நன்றி.இன்றைய மாலைமலர் தந்த செய்தி இது.

  // முக்கிய விழாவான ஆழித்தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் ராஜ வீதி வழியாக சென்று நிலையை அடைகிறது. ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் தேர், சண்டீகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. // (நன்றி: மாலைமலர் 16.06.16)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அண்ணா..

   ஆழித்தேரோட்ட திருவிழா பற்றிய செய்திகளை நானும் வாசித்தேன்..

   தங்களின் வருகையும் மேலதிக செய்திகளும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. ஆழித்தேர் தகவல்கள் மற்றும் படங்கள் அனைத்தும் அருமை. தேரோட்டம் பார்க்க ஆசை - இதுவரை திருவாரூர் சென்றதில்லை. செல்ல வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..

   நிச்சயம் நல்வாய்ப்பு கிட்டும்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. அருமையான பதிவு

  இதோ மின்நூல் களஞ்சியம்
  http://ypvn.myartsonline.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. திருவாரூர் சென்றதுண்டு அதுவும் சென்ற வருடம் புதுக்கோட்டை பதிவர் விழாவுக்குச் சென்ற போது. திருவாரூர் தேர் பற்றி அறிந்ததுண்டு. ஆனால் ஆழித்தேரோட்டம் தகவல் புதியது . அறிந்து கொண்டோம் ஐயா. பகிர்வுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   திருஆரூர் சென்று தரிசனம் செய்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..