நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 21, 2015

மலையில் பெய்த மழை

சதுரகிரி!..

சித்தர்களின் ராஜ்ஜியம்.

ஆபத்தான வழிப்பயணம்..

அபாயகரமான விலங்குகளின் உறைவிடம்..

வேறெங்கும் காண இயலாத அபூர்வ மூலிகைகள் மற்றும் வன மரங்களின் பிறப்பிடம்..

இன்னும் அறிந்து கொள்ள இயலாதபடிக்கு விளங்கும் எண்ணற்ற ரகசிய குகைகள் மற்றும் நிலவறைகளின் இருப்பிடம்.

இன்னும் எத்தனை எத்தனையோ மறைவான விஷயங்கள் நிறைந்த மலை!..

எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனையையும் தன்னகத்தே கொண்டு,

இடர்களைக் கடந்து இப்போதுதான் வந்தனையா!..

- என,  அன்புடன் புன்னகைக்கும் - புண்ணியன் விளங்கும் திருத்தலம்.

ஸ்ரீ சுந்தரலிங்கம்.. ஸ்ரீ சந்தனலிங்கம்!.. 

எனும் திருப்பெயர்களில் சித்தர்களுக்குச் சித்தராக சிவபெருமான் திகழும் திருமலைதான் - சதுரகிரி!..பெயரைக் கேட்கும்போதே - நாடி நரம்புகளில் அதிர்ச்சியும் ஆனந்தமும்  பெருக்கெடுத்து ஓடும்.

அதிர்ச்சிக்குக் காரணம் - ஆபத்தான மலைப்பயணம்!..

ஆனந்தத்திற்குக் காரணம் - அருள் பொழியும் சித்தர்களின் தரிசனம்!..

சதுரகிரியின் சுனைகளில் சுரக்கும் தீர்த்தங்களும் சதுரகிரியில் தழைத்துப் படர்ந்திருக்கும் மூலிகைகளும் மக்களின் நோய் தீர்க்க வல்லவை.

ஆயிரக்கணக்கான மூலிகைகளின் ஊடாக தவழ்ந்து வரும் காற்று மருத்துவ குணங்களுடன் இருக்கின்றது என்கின்றார்கள்..

இதனாலேயே - கடும் பயணத்தில் மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறி நோய்கள் தீர்கின்றன என்பது தெளிவு..

சதுரகிரியின் மகத்துவத்தை ஒரு பதிவில் கூறுவது என்பது இயலாத ஒன்று..

கடுமையான மலைப்பயணத்தில் ஒவ்வொருவருக்கும் வேண்டுதல்கள்!..

ஆனாலும் பொதுவான ஒன்று என்னவெனில் -

சித்தர்களில் ஒருவரையாவது தரிசிக்க மாட்டோமா!.. -  என்பது தான்..

நிறைந்த அற்புதங்களை உடையது சதுரகிரி..

ஸ்ரீ சுந்தர லிங்கம்
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் - எங்களுக்குத் தெரிந்த ஒருவர் - துறவு வாழ்க்கை பூண்டவர் - சதுரகிரிக்குச் சென்று வந்தார்.

சதுரகிரியில் சித்தர்களின் தரிசனம் பெற்றதை பரவசத்துடன் விவரித்தவர் அங்கிருக்கும் அபூர்வ மூலிகைகள் சிலவற்றையும் காண்பித்தார்.

சதுரகிரியின் சுனை நீரையும் வலி தீர்க்கும் வேரையும் என் தந்தைக்குக் கொடுத்தார்.

வலி நிவாரணியாகிய அந்த வேர் - என் தந்தையின் நெஞ்சுவலிக்கு உற்ற துணையாக இருந்து வேதனையைத் தீர்த்தது.

ஆயினும் - அந்த வேர் காலவெள்ளத்தில் கற்பூரம் போல கரைந்து போயிற்று.

இது போல எத்தனையோ மகத்துவங்கள் அவ்வப்போது அறியப்படுகின்றன.

ஸ்ரீ சந்தன லிங்கம்
சதுரகிரியின் அடர்ந்த காட்டினுள் - மதிமயக்கி வனம் என்ற பகுதியில் சிக்கிக் கொண்டு வழியறியாமல் தடுமாறித் தத்தளித்து - சில தினங்கள் கழித்து நாய்களால் வழி நடத்தப் பெற்று மலையடிவாரத்திற்கு வந்து சேர்ந்தவர்கள் பற்றிய செய்திகளும் அதிகம்.

மகத்துவம் மிக்க சதுரகிரியில் கடந்த சில தினங்களுக்கு முன் அமாவாசை அன்று ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரமுடையது சதுரகிரி.
64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவினை உடையது சதுரகிரி.


காலகாலமாக அமாவாசை பௌர்ணமி தினங்களில் மலையேறிச் சென்று சிவதரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டோர் - பல்லாயிரவர்.

இதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்னும் இப்படியொரு வெள்ளப்பெருக்கைக் கண்டுள்ளது சதுரகிரி.

சில ஆண்டுகளுக்கு முன் -  கையில் தீப்பந்தத்துடன் இரவில் மலை இறங்கிய ஆட்களால் -  தீவிபத்தும் நிகழ்ந்திருக்கின்றது.

ஆயினும் பக்தர்கள் அந்த சம்பவங்களில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை.

அதன் விளைவுதான் - சமீபத்தில் நேர்ந்த துயரம்.


மலையடிவாரமாகிய தாணிப்பாறையிலிருந்து ஏழு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சுந்தரமகாலிங்கஸ்வாமி திருக்கோயில்.

ஆபத்தான தடத்தில் - வழுக்குப் பாறைகளில் நடந்து செல்கின்றவர்களின் துணிவு அசாத்தியமானது.

மலைப்பகுதியில் எந்தவொரு வசதியும் இல்லை என்கின்றார்கள்..நன்றி - தினமலர்
ஆயினும் - விழாக்காலங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் மலையேறுகின்றது.

எதையும் பொருட்படுத்தாத மனோபாவத்தினால் - ஆயிரக்கணக்கானவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பது சர்வ சாதாரணம் ஆகின்றது.

இந்நிலையில் மழை குறித்து முன்னெச்சரிக்கை செய்திருந்தும் -
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழக்கக் காரணம் அலட்சிய மனோபாவம்.

தாணிப்பாறையில் கூடுதலாக குவிந்திருந்த காவல் துறையினர் மலையேறிய பக்தர்களைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். ஆனால் -

கடும் மழையையும் காட்டாற்று வெள்ளத்தையும் எதிர்பார்த்து - எச்சரிக்கை செய்த காவல் துறையினரிடம் பக்தர்கள் எதிர்வாதம் செய்துள்ளனர்.

வனத்துறை அலுவலர்களின் எச்சரிக்கையும் பயனற்றுப் போனது.

எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேளாமல் ஆயிரக்கணக்கானோர் மலையேறி இருக்கின்றனர்.

பிற்பகலில் பெய்த கடும்மழையினால் காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்தது.

இதையடுத்து - மலைக்கோயிலிலிருந்து யாரும் இறங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

விபரீத நிலைமையைக் கண்டதும் தான் மக்களும் அடங்கியிருக்கின்றனர்.

இடைப்பட்ட நேரத்தில் மலைப்பாதையில் சென்றவர்களே விபத்தில் சிக்கிக் கொண்டவர்கள்..காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பக்தர்கள் சிக்கித் தவிப்பது குறித்து தகவல் கிடைத்ததும் -

விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய ஊர்களில் இருந்து 200 தீயணைப்பு வீரர்களும்,

மதுரையிலிருந்து 40 தீயணைப்பு வீரர்களும் விருதுநகர் மாவட்ட அதிரடிப் படை போலீஸாரும் தாணிப்பாறைக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

சதுரகிரி மலையில் சங்கிலிப் பள்ளம் மற்றும் குதிரை ஊற்று பகுதிகளில் வெள்ளத்திற்குத் தப்பி - மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டிருந்த பலரும் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டனர்.

வெள்ளத்தில் சிக்கித் தவித்த மூவாயிரம் பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சதுரகிரி மலையில் கோயில் அருகே தங்கவைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்களும் அடிவாரத்துக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர் 

மழைக் காலங்களில் சதுரகிரி மலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டாலும், அதை மீறி பக்தர்கள் செல்வதே இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு காரணம் என மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு.எல்.சுப்பிரமணி கூறியிருக்கின்றார்.

மீட்புப் படையினரின் அயராத சேவை பாராட்டுதற்குரியது.

பதிவிலுள்ள படங்கள் இணையத்தில் பெற்றவை.
வலையேற்றிவர்களுக்கு நன்றி..

காட்டாற்று வெள்ளத்தினை கோயிலின் ஒருபகுதியில் இருந்து -
ஸ்ரீவில்லிபுத்தூர் - கூமாபட்டி எனும் ஊரைச் சேர்ந்த திரு. நல்லதம்பி என்பவர் தனது மொபைல் போன் மூலமாகப் படம் பிடித்துள்ளார்.

அடங்காத வேகத்துடன் ஆர்ப்பரித்து வரும் வெள்ளப் பெருக்கினைக் காட்டும் காணொளி - இதோ!..


இப்படியொரு வேதனை இனி வேண்டாம் - என வேண்டிக் கொள்வோம்..

இயற்கையைப் புரிந்து கொண்டால் 
இன்னல்கள் இல்லை.

இயற்கையைக் காணுதல் அழகு..
இயற்கையைப் பேணுதல் அழகு..

இயற்கையோடு இணைந்து வாழ்தல் அழகு..
எல்லாவற்றையும் விட
இயற்கையைப் புரிந்து வாழ்தல் மிக மிக அழகு!..

அல்லலுற்ற அன்பர்கள் அனைவருக்கும்
எம்பெருமான் 
ஆறுதலையும் தேறுதலையும் அருள்வானாக!..

இயற்கையுடன் கலந்த ஆன்மாக்களை 
இறைவன் தன் திருவடி நிழலில் சேர்த்துக் கொள்ளட்டும்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
* * *

23 கருத்துகள்:

 1. இயற்கையோடு இணைந்து வாழ்தல் நமக்கு அவசியம் வேண்டும். நம் காடுகளில் இருக்கும் மருந்துகள் ஏராளம். நானும் கேள்விப்பட்டுள்ளேன் மதிமயக்கி வனம். அதன் உள் செல்பவர்களைக் கொல்லும் மலர்கள் ஏராளம் என்று, உண்மையா இல்லையா என்று தெரியாது. எதையும் புரிந்துகொண்டு நாம் வாழ பழக வேண்டும். தங்கள் பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   மக்களின் ஆர்வக்கோளாறே - இதற்கெல்லாம் காரணம்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 2. சதுரகிரிப் பயணம் குறித்து வலைத்தளத்தில்(?) படித்த நினைவு. இந்த தகவல்கள் உடலில் சக்தி இருந்தபோது தெரிந்திருந்தால் நிச்சயம் பயணித்திருப்பேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   சதுரகிரி மலைக்கு சென்று விட்டு இரவில் தீப்பந்தங்களுடன் இறங்கி வருபவர்களும் இருக்கின்றார்களாம்.. அவர்களை என்னென்று சொல்வது!..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 3. காணொளி அச்சப் படுத்துகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   அசுர வேகம் என்பார்களே.. அது இப்படித்தான் இருக்கும் போலிருக்கின்றது..

   மீண்டும் அங்கே செல்லும் மக்கள் இதைப் பற்றியெல்லாம் யோசிப்பார்களா?..

   தங்கள் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 4. காணொளியைக் கண்டேன். அதிர்ச்சியடைந்தேன். செய்திகளிலும் பார்த்தேன். இம்மலையைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். நான் சென்றதில்லை. இனி வாய்ப்பு கிடைக்குமா என தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   வழுக்குப் பாறைகளை உடைய சதுரகிரி மலையில் பயணிக்கின்றார்கள்.. அத்தனை நெஞ்சுறுதி.. ஆனாலும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் போது எத்தனை வேதனை?..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 5. பெயரில்லா21 மே, 2015 14:42

  மயிர்க் கூச்செறியும் பதிவு...
  காணொளி.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   காவல்துறையும் வனத்துறையும் எச்சரிக்கை செய்ததைக் கேளாத மக்கள்.. ஏதோ இந்த அளவில் தப்பித்திருக்கின்றார்கள்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 6. நிறைய விடயங்களைத் தந்தமைக்கு நன்றி நண்பரே...
  பக்தி வேண்டும்தான் இருப்பினும் காலச்சூழலை மனதில் கொள்ளல் அவசியமாகிறது போலீஸாரின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்தல் என்பது அவசியமே... காணொளி காணவே இவ்வளவு பயமாக இருக்கிறதே நேரில் சிக்கியவர்களின் கதி இறைவன் காப்பானாக...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   ஆர்வமும் பக்தியும் தேவைதான்.. சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாத மக்களை என்னென்று சொல்வது!..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 7. அப்பப்பா...திகிலாய் இருக்கிறது..படிக்கவும் பார்க்கவும். மக்கள் கேட்க மாட்டார்கள்....என்ன செய்வது.நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் கூறுவது நிஜம் தான்.. மக்கள் திருந்த மாட்டார்கள்!..
   தங்கள் வருகைக்கு நன்றி..

   நீக்கு
 8. நடந்து முடிந்த சம்பவம் குறித்து மிகவும் வருத்தப்படுகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   வருத்தப்படுவதைத் தவிர வேறென்ன செய்வது..
   தங்கள் வருகைக்கு நன்றி..

   நீக்கு
 9. குடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன். இனி தொடர்வேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   நானும் நினைத்தேன்.. தாங்கள் வெளியூர் பயணத்தில் இருப்பீர்கள் என!..

   தங்கள் வருகைக்கு நன்றி.. வாழ்க நலம்!..

   நீக்கு
 10. படிக்கும் போது பயமாகவும் பதட்டமாகவும் இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சதுரகிரி மலைப்பயணம் முழுதும் சாய்வான - சரிவான வழித் தடங்கள் என்கின்றார்கள்.. மழைத் தண்ணீர் உச்சியிலிருந்து வேகமாக ஓடி வருவதைக் காணும் போது நெஞ்சம் அதிர்கின்றது..

   தங்கள் வருகைக்கு நன்றி..

   நீக்கு
 11. மலையேறுவது மனத்துயர் போக்குவதற்கேயன்றி, உடல்துயரை வரவழைத்துக் கொள்வதற்கல்லவே! பக்தி பெருகிவிடும்போது மனிதன் மந்தை உணர்வால் உந்தப்படுகிறான். யாருக்கும் அடங்குவதில்லை. இனியாவது மக்கள் பாதுகாப்புணர்வோடு மலையேறட்டும். - இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
 12. மலையேறுவது மனத்துயர் போக்குவதற்கேயன்றி, உடல்துயரை வரவழைத்துக் கொள்வதற்கல்லவே! பக்தி பெருகிவிடும்போது மனிதன் மந்தை உணர்வால் உந்தப்படுகிறான். யாருக்கும் அடங்குவதில்லை. இனியாவது மக்கள் பாதுகாப்புணர்வோடு மலையேறட்டும். - இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கு நன்றி..

   //பக்தி பெருகி விடும்போது மனிதன் மந்தை உணர்வால் உந்தப்படுகின்றான்..//

   மிகத் துல்லியமான கணிப்பு தங்களுடையது..

   தன்னை மேம்படுத்திக் கொள்ள மறுப்பது என்னநியாயம்!?..
   தங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு