நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 01, 2015

தில்லையில் குடமுழுக்கு

தில்லைத் திருச்சிற்றம்பலம் என்று புகழப்படுவது - சிதம்பரத்திலுள்ள
ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனாகிய ஸ்ரீ நடராஜப்பெருமான் திருக்கோயில்.

இத்திருக்கோயிலுக்கு இன்று காலை 7.00 மணிக்கு மேல் 8. 30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் நிகழ இருக்கின்றது.


நான்கு ராஜ கோபுரங்களுடன் ஒன்பது திருவாயில்களையும் 15 பிரதான சந்நிதிகளையும் உடையது - இத்திருக்கோயில்.

1987-ல் நான்கு ராஜகோபுரங்களுக்கும் அனைத்து சந்நிதிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

அதன்பின் - தற்போது நிகழ இருக்கும் திருக் குடமுழுக்கிற்கான நிகழ்ச்சிகள்
கடந்த 22/4 திங்கள் அன்று காலை கூஷ்மாண்ட ஹோமத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து மஹாகணபதி ஹோமம் நவக்ரக ஹோமங்கள் நடந்தன.


23/4 அன்று அனுக்ஞை பூஜையுடன் தனபூஜை மற்றும் வாஸ்து சாந்தி ஹோமங்கள் நடந்தன.

24/4 அன்று ம்ருத்சங்க்ரஹணம், அங்குர பூஜை தொடர்ந்து ரக்ஷாபந்தனம் எனும் காப்பு கட்டுதல் நடந்தது.

25/4 அன்று காலையில் மந்த்ர ஜபத்துடன் கலாகர்ஷணம்.  கும்பஸ்தானம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

25/4 அன்று மாலையில் முதல் கால யாக பூஜை நடை பெற்றது.

26/4 அன்று இரண்டாம் மூன்றாம் கால யாக பூஜைகளும்
27/4 அன்று நான்காம் ஐந்தாம் கால யாக பூஜைகளும்

28/4 அன்று ஆறாம் ஏழாம் கால யாக பூஜைகளும்
29/4 அன்று எட்டாம் ஒன்பதாம் கால யாக பூஜைகளும்

30/4 அன்று பத்து, பதினொன்று மற்றும் பனிரண்டாம் கால யாக பூஜைகளும் நடை பெற்றன.இணையத்தில் படங்களை வழங்கியோர்க்கு நன்றி
இன்று (1/5) வெள்ளிக் கிழமை காலையில் -
தம்பதி பூஜை, வடுக பூஜை, கன்யா பூஜை ஸூவாஸினி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை இவற்றுடன் கும்பங்களின் யாத்ரா தானம் நடைபெறும்.

தொடர்ந்து - காலை 7.00 மணிக்கு மேல் 8. 30 மணிக்குள் ரிஷப லக்னத்தில்

ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமான் சித்சபை மஹா கும்பாபிஷேகமும்

அதே வேளையில் - ராஜசபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திற்கும் நான்கு ராஜகோபுரங்களுக்கும் மஹாகும்பாபிஷேகம் சிறப்பாக நிகழ இருக்கின்றது.

இன்றைய தினம் மாலையில் ஸகோபுரத் திருக்காட்சி.

தெருவடைச்சான் எனும் மஹா ரிஷப வாகனத்தில் ஸ்வாமி எழுந்தருள பஞ்ச மூர்த்தி வீதியுலா.

2/5 அன்று காலை சித்சபையிலிருந்து தேருக்கு எழுந்தருளும் யாத்ரா தானம்.

கும்பாபிஷேகத்தை அனுசரித்த சிறப்பு தேர்த்திருவிழா நடைபெறும்.

இரவு - ஆயிரங்கால் மண்டபத்தில் - ஏக தின லட்சார்ச்சனை.

3/5 அன்று அதிகாலை திருமஞ்சனம். ஸ்வர்ண மஹா அபிஷேகம்.
மதியத்தில் - ஞானாகாச சித்சபா பிரவேசம் எனும் மஹா தரிசனத் திருக்காட்சி.

4/5 அன்று இரவு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். முத்துப் பல்லக்கில் வீதியுலா.


மஹாகும்பாபிஷேக நிகழ்வினை அனுசரித்து யாகசாலை காலங்களின் போது வேதபாராயணங்கள், நாகஸ்வர இன்னிசை, ஓதுவாமூர்த்திகளின் பண்ணிசை, திருமுறை பாராயணங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள், உபந்நியாஸங்கள், நாம சங்கீர்த்தனங்கள் மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

உபயதாரர்களின் அன்னதான வைபவமும் உண்டு.

மஹாகும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம்.

சிறப்பு யாக பூஜைகளுடனும் அபிஷேக ஆராதனைகளுடனும் அன்னதான நிகழ்வுகளுடனும் நடைபெறும்..

அளவிடற்கரிய பெருமைகளை உடையது - தில்லையம்பதி.


சைவ சமயாச்சார்யர்களாகிய திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் - எனும் பெருமக்களால் போற்றித் துதிக்கப்பட்ட பெருங் கோயில்.

இன்னும் -  வள்ளலார் போன்ற அருளாளர்களால் துதிக்கப்பட்ட திருத்தலம்..

நாளும் கோளும் கூடியிருக்கும் நல்லவேளையில் 
நல்லதொரு திருக்குடமுழுக்கு நிகழ்வுகளை சிந்தித்திருப்போமாக!..

அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்
பொருட்சாரும் மறைகளெல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளும் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சித்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்!..
-: அருட்பிரகாச வள்ளலார் :-

அரியானை அந்தணர்தம் சிந்தையானை 
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும் 
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் 
திகழ்ஒளியைத் தேவர்கள் தங்கோனை மற்றைக் 
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் 
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற 
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!.. 
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
திருச்சிற்றம்பலம் 
* * *

15 கருத்துகள்:

 1. தஞ்சையில் தேரோட்டம் கண்ட பின்பு, தற்போது உங்களால் நாங்கள் தில்லை சென்றோம். நன்றி. நாவுக்கரசருக்குப் பின்னரே வள்ளலார் என்ற நிலையில், நாவுக்கரசர் பாடலுக்குப் பின்னால் வள்ளலார் பாடலைத் தந்திருந்தால் கால நிலையில் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   கால நிலையைக் குறித்ததல்ல.. - திருப்பாடல்கள்..

   வள்ளலார் சுவாமிகளின் திரு அருட்பா - இளையது.
   அப்பர் சுவாமிகளின் தேவாரம் - மூத்தது.

   இளையோரை முன்நிறுத்தி - மூத்தோரை வணங்குதல் - ஐயப்ப வழிபாட்டின் ஒருபகுதி..

   தளத்தின் பல பதிவுகளிலும் - சைவ சமயாச்சார்யார்களின் பதிகத் திருப்பாடல்களைப் பதிவிடும் தருணங்களில்,

   திருநாவுக்கரசர் - அருளிய திருப்பாடல்களை முத்தாய்ப்பாகவே பதிவு செய்திருப்பேன்..

   அப்பர் பெருமானுக்கு நான் செலுத்தும் வணக்கம் அது!..

   தங்கள் இனிய கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. இளையோரை முன்னிறுத்தி மூத்தோரை வணங்கல் என்பது குறித்த தங்களது கருத்தை அறிந்தேன். நன்றி.

   நீக்கு
 2. சிறப்பான தகவல்களின் தொகுப்பிற்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. தகவல்கள், புகைப்படங்கள் அனைத்தும் அருமை.
  இனிய மே தின வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 4. விரிவான தகவல்களும்,படங்களும் தந்தமைக்கு நன்றி ஐயா.
  ஓம் நமசிவாய...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. நேரலையில் ஒளிபரப்புகண்டு மகிழ்ந்தோம், பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி..கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 6. சிறப்பான தகவல்கள், மற்றும் படங்கள் கண்டு மகிழ்ச்சி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. உங்கள் பதிவின் மூலம் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகைக்கு மகிழ்ச்சி..கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு