நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 14, 2015

சந்தனக்காப்பு

தஞ்சை ஸ்ரீபிரகதீஸ்வரர் கோவில்.

தென்கயிலாயம், தக்ஷிண மேரு என்றெல்லாம் போற்றப்படும் திருக்கோயில்.

மாமன்னன் இத்திருக்கோயிலை எழுப்பி திருமுழுக்கு செய்த போது இதன் திருப்பெயர் ராஜராஜேஸ்வரம் என்பதாகும். 

ஈசன் - ராஜராஜேஸ்வரர் எனப்பட்டார்.

திருக்கோயிலின் பெருமைகளை - 
தஞ்சை ராசராசேச்சரத்து இவர்க்கே!.. 
- என்று புகழும் கருவூரார் திருவாக்கினால் அறியலாம்.

பிரஹதீஸ்வரர் எனும் திருப்பெயரும் அதன் தமிழ் வடிவாக பெருவுடையார் எனும் திருப்பெயரும் மராட்டியர் காலத்தில் ஏற்பட்டவை என்கின்றனர் ஆய்வாளர்கள்..

ஆய்வாளர்களின் கண்களுக்கு அப்பாற்பட்ட எத்தனையோ அற்புதங்கள் இத்திருக்கோயிலில் விளங்குகின்றன.


எண்ணும் தோறும் மனதுக்கு இன்பமளிக்கும் திருக்கோயில்.

இத்திருக்கோயிலில் எல்லாமே பெருந்திருவுரு ஆனவை..

கால ஓட்டத்தில் - பிற்காலப் பாண்டியர்கள் சோழப்பேரரசினை வீழ்த்திய போது தஞ்சை மாநகரும் சுற்றுப்பகுதிகளும் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. 

அதன் பின்னும் பல தாக்குதல்களில் இருந்து மீண்டிருக்கின்றது - இந்த கலைப் பொக்கிஷம்!..

அவற்றுள் குறிப்பிடத்தக்கது - ஸ்ரீ வராஹியின் திருமேனி.

பெருந் திருவுருவாகத் திகழ்ந்த ஏனைய சப்த கன்னியர் திருமேனிகளை நாம் இழந்து விட்டோம். 

ஒன்பது தீர்த்தக் கிணறுகள் இத்திருக்கோயிலில் விளங்கியதாக உபாசனா மூர்த்தி கூறியருள்கின்றார்.

அவற்றுள் சிறப்பானது - மண்டூக தீர்த்தம்.

இன்று இருப்பவை ஸ்ரீவராஹியின் அருகில் அக்னி தீர்த்தமும் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்திக்கு எதிரில் யம தீர்த்தமும் கருவூரார் சந்நிதிக்கு அருகில் வருண தீர்த்தமும் தான். 

இந்தக் கிணறுகளிலும் நீர் குறைந்து போய் விட்டது. பயன்பாட்டில் இல்லை. 

அம்மன் சந்நிதிக்கு மேல்புறம் இருந்த தீர்த்தக் கிணற்றை சமீபத்தில் மூடி விட்டார்கள்..


பல நூறு பெருமைகளை உடைய பெரிய கோயிலில் விளங்கும் நந்தியம் பெருமானுக்கு முதன்முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை 12/5 அன்று சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.

சந்தனக்காப்பு அலங்காரத்தை -
ஸ்ரீஅகஸ்திய சித்தர் குருபரம்பரை ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமி சீடர்கள்
(ஸ்ரீ லோபமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம், திருஅண்ணாமலை)
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்து நடத்தினர்.

இதற்காக - தமிழக அரசின் வனத்துறையின் அனுமதியுடன் 250 கிலோ சந்தனக்கட்டைகள் வாங்கப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை (8/5) முதல் தகுந்த மேற்பார்வையுடன் - சென்னை, திருஅண்ணாமலை, தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், திருச்சி, கோவை - ஆகிய ஊர்களில் சந்தனக் கட்டைகள் அரைக்கப்பட்டன.

தஞ்சையில் பெரியகோயில் வளாகத்தில் - அம்மன் சந்நிதி, கருவூரார் சந்நிதி, வராஹி அம்மன் திருமாளிகைப் பத்தி ஆகிய இடங்களிலும் தஞ்சை - புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலிலும் சந்தனம் அரைக்கப்பட்டது.


சந்தனக்காப்பு அலங்காரத்தை நடத்தும் வெங்கடராமசுவாமி சீடர்கள் மட்டுமின்றி - கோயிலுக்கு வரும் பக்தர்களும்  சந்தனத்தை அரைத்துக் கொடுத்தனர்.

பக்தர்கள் ஆர்வத்துடன் சந்தனக் கல்லில் சந்தனம் அரைத்துக் கொடுத்து புண்ணியம் தேடிக் கொண்டனர்.

வெளியிடங்களில் அரைக்கப்பட்ட சந்தனம் திங்களன்று மதியம் - தஞ்சைக்குக் கொண்டுவரபட்டது.

திங்கள் மாலை சிறப்பு அபிஷேகங்கள் ஆரத்தி நிறைவுற்ற பின் - 250 கிலோ சந்தனத்தைத் சாற்றி அலங்காரம் செய்வதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


செவ்வாய்க்கிழமை (12/5) காலை ஒன்பது மணியளவில் மகாதரிசனம்.
சிறப்பு வழிபாட்டுடன் மகா தீப ஆராதனை நிகழ்ந்தது.

நந்தியம்பெருமான் சந்தனக்காப்பில் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழ்ந்தார்

சந்தனக்காப்பு அலங்காரத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

சிறப்புப் படங்களுக்கு நன்றி - திரு. செந்தில்குமார் ஆதித்யன் மற்றும் தஞ்சை Fb ..

மாதாந்திரப் பிரதேஷ வழிபாடுகள் சந்நிதியிலுள்ள நந்திக்கு நடந்து கொண்டிருந்த வேளையில் வருடம் ஒரு நாள் சித்ரா பௌர்ணமி அன்று கொடிமரத்தின் அருகிலுள்ள மகாநந்திக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெறுவது வழக்கம்.

இதெல்லாம் முப்பது வருடங்களுக்கு முன்!..

கோயிலில் தரிசனம் கண்டு மகிழ பக்தர்களும் - சுற்றுலாப் பயணிகளும் வெகுவாக திரண்ட வேளையில் -

மகாநந்தியம்பெருமானுக்கு பிரதோஷ வழிபாடுகள் தொடங்கின.

சனிப் பிரதோஷ நாட்களில் சில மணி நேரங்களுக்கு - பெரிய கோயில் சாலையில் போக்குவரத்து தடைபடுகின்றது எனில் மக்கள் கூட்டத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள்.

சரபோஜி மன்னர் காலத்தில் நடைபெற்ற விசேஷங்கள் - ஆவணங்களில்  குறித்து வைக்கப்பட்டுள்ளன.

இத்திருக்கோயிலில் சரபோஜி மன்னர் காலத்தில் நந்திக்கு மிளகு அபிஷேகம் நடைபெற்றதாக அறிய முடிகின்றது. ஆனாலும் சந்தனக்காப்பு செய்யப் பட்டதாக எவ்வித குறிப்புகளும் கிடையாது.

சில நாளேடுகளிலும் ஆன்மீக இதழ்களிலும் - நூறு வருஷங்களுக்குப் பிறகு சந்தனக்காப்பு செய்யப்படுகின்றது என்று செய்தி வெளியிட்டு இருக்கின்றனர்.

சந்தனக்காப்பு என்பது இதுதான் முதல் முறை - என்ற செய்திதான் முதலில் வெளியானது.

அதற்குள் இடையில் யாரோ புகுந்து - நூறு வருஷங்களுக்குப் பின் என்று வரிப்பிளவு செய்து விட்டார்கள்..

பருவ மழை தவறும் போது மேற்குப் பிரகாரத்திலுள்ள வருணபகவான் சந்நிதியில் நீர்த் தொட்டி கட்டி விட்டு நந்தியம்பெருமானுக்கு நெய் மிளகு காப்பு செய்தால் மழை பொழியும் என்பது ஒரு திருக்குறிப்பு.

அவ்விதம் சரபோஜி மன்னர் காலத்தில் செய்யப்பட்டிருக்கின்றது./

அதன்படி 1983 அல்லது 1984ல் நெய் மிளகு காப்பு செய்யப்பட்டது. அன்றைய இரவில் கடும் மழை பெய்தது வரலாற்றில் இன்றும் சாட்சியாக உள்ளது.

இந்நிலையில் உலகம் அமைதி பெற வேண்டும் என்றும் பருவமழை தவறாது பெய்ய வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டு நந்தியம் பெருமானுக்கு சந்தனக் காப்பு செய்வித்திருக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் - 
மண் வளம் பெறுவதற்கு  
மனிதனின் மனம் வளம் பெறவேண்டும்.

அது நிகழ வேண்டும்.

அனைவருடைய வேண்டுதலும் இதுவே!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
* * *  

10 கருத்துகள்:

 1. கோயிலுக்குச் சென்று காணமுடியவில்லை. தங்கள் பதிவில் பார்த்தோம். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி நன்றி..

   நீக்கு
 2. மனிதனின் மனம் வளம் பெற வேண்டுகிறேன்...

  படங்கள் அனைத்தும் அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   மண்ணும் மனமும் வளம் பெற வேண்டும்!..
   தங்கள் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 3. விளக்கவுரை அருமை புகைப்படங்கள் அனைத்தும் அழகு வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

   நீக்கு
 4. விளக்கங்களுடன் படங்கள் அழகு. அதுவும் நந்திபெருமானார் மிக அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   மிகச்சிறப்பாக அலங்காரம் செய்திருக்கின்றனர்.
   தெய்வீகமாக இருக்கின்றது
   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 5. அய்யா இங்கு மழையின் காரணமாக நேரில் செல்ல முடியவில்லை. தாங்கள் அங்கிருந்தும்,,,,,,,,,,,,,,,,, அருமை. இருந்தால் என்ன தங்கள் பதிவில் கண்டோம் அழகு அத்துனையும். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..