நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 18, 2014

கங்கா காவிரி

அத்தனை பெருமையும் மயிலாடுதுறைக்கே!..

அன்னை தவம் செய்து ஐயனை அணைந்த திருத்தலங்கள் பற்பல!..

அவற்றுள்ளும் சிறப்பானவை - அம்பிகை மயிலாக உருக்கொண்டு வழிபட்ட திருமயிலையும், திருமயிலாடுதுறையும்!..

அதிலும் திருமயிலாடுதுறையில் தான் - ஐயன் தானும் மயில் வடிவாகி அம்பிகையுடன் நடமாடிக் களித்தனன்.

ஐயன் - அம்பிகையுடன் மயூர தாண்டவம் நிகழ்த்தியதனாலேயே -  திருத்தலம் மயிலாடுதுறை என்றாகியது.

மேலும் சிறப்புறும் வண்ணம் - கங்கை தன் மனதில் கொண்ட மாசுகள் நீங்கப் பெற்ற திருத்தலம்.

இன்று துலா மாதம் எனும் ஐப்பசி மாதத்தின் முதல் நாள்..

இன்று தொட்டு கார்த்திகை முதல் நாள் வரைக்கும், கங்கை - தான் புனிதம் ஆவதற்காகத் தென்னகத்தின் பொற்பாவை காவிரியுடன் கலந்திருக்கின்றாள்..

அந்த - வைபவம் தான் என்ன!..


திருக்கயிலை!.. 

முப்பத்துமுக்கோடி தேவர்களும் மகரிஷிகளும் வித்யாதரர்களும் யட்சர்களும் மற்றும் சகல ஜீவராசிகளும் கூடி நின்று - ஐயனையும் அம்பிகையையும் போற்றி வணங்கி அவர்தம் பெருமைகளைப்  புகழ்ந்து பாடிக் கொண்டிருந்த புண்ணிய வேளை!..

சிவபெருமானின் ஜடாபாரத்தினுள் சிக்கிக் கிடக்கும் கங்கைக்கு மகிழ்ச்சி!..

தன்னை முன்னிட்டல்லவோ - ஈசனுக்கு கங்காதரன் எனும் திருப்பெயர்!..

பூவுலக மக்களின் பாவச்சுமைகளை நான் நீக்காவிடில் - யாரால் அதனைச் சுமக்க இயலும்!?.. என் பெருமையை அறிந்த அதனால் தானே பெருமானும் என்னைத் தன் தலையின் மீது தாங்குகின்றார்!..

கங்கையின் எண்ணத்தை உணர்ந்த அம்பிகை அதிர்ந்தாள்..

ஐயன் எம்பெருமான் புன்னகைத்தார்..

அந்த அளவில் கங்கையின் மங்கலங்கள் மாசடைந்தன. 
பொன் மஞ்சள் எனத் திகழ்ந்த திருமேனி - ஒளி குன்றியது. 
கங்கையின் தேஜஸ் அவளை விட்டு அகன்றது.

கூடியிருந்த பெருங்கூட்டம் திகைத்து நிற்கையில் - 

அங்கே - அவலமான வடிவத்துடன் கங்கை தோன்றினாள்..

கங்கையின் கண்களில் பிரவாகமாக கண்ணீர்..

ஐயனே!. என்னைக் காத்தருளுங்கள்!.. என் பிழைதனைப் பொறுத்தருளுங்கள்!..

சற்று முன் - ஐயனின் சிரசில் இருப்பதாக அகந்தை கொண்டு ஆர்ப்பரித்தவள் - சில விநாடிப் பொழுதில் அநாதரவாக ஐயனின் திருவடிகளில் கிடந்தாள்..

அம்பிகை ஆதரவு கொண்டு கங்கையைத் தேற்றினாள்..

ஸ்ரீ அபயாம்பிகை
தேவி.. என்னை மன்னித்தருளுங்கள்.. தமது கருணையின்றி இந்தப் பூவுலகில் நிலைத்த செல்வம் என்பதேது.. அகந்தையினால் அவலம் எய்தினேன்.. அதனால் ஐயனின் ஜடாமகுடத்திலிருந்து வீழ்ந்தேன்.. பிராயச்சித்தம் அருள்க.. தேவி!.. 

- என கண்ணீர் உகுத்தாள்.

அகத்திய மகரிஷி ஆறுதலாகப் பேசினார்..

கங்கா தேவி!.. பரந்தாமனால் புகழப் பெற்றவள் நீ..  மக்களுக்கு சேவை செய்பவர்களுள் முதன்மையானவள் நீ.. மக்கள் பணி செய்வோர்க்கு ஆணவமும் இறுமாப்பும் கூடாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு பாடம்!.. உன் பிழையினை நீ உணர்ந்தாய். இதுவே உனக்குப் பொன்னான வேளை. கலங்க வேண்டாம்!.. 

எல்லாம் வல்ல சிவம் இனிதே புன்னகைத்தது.

காவிரியை அறிவாயா நீ!.. அகத்தியனின் உருவங்கண்டு எள்ளி நகையாடிய பிழையால் -  அவள் காலகாலத்துக்கும் கமண்டலத்துக்குள் சிறைபட்டுக் கிடந்தாள். கணேசன் காகத்தின் வடிவங்கொண்டு அவளை மீட்க வேண்டியதாயிற்று. அந்தக் காவிரி உனக்கு நலம் அளிப்பாள்..

அது எவ்விதம் என்பதை தேவரீர் விளக்கம் செய்தருள வேண்டும்!..

அனைவரும் பணிவுடன் விண்ணப்பம் செய்து கொண்டனர்.

ஈசன் எம்பெருமான் அதிகார நந்திதேவனை திருநோக்கம் செய்தருளினார்.

நந்தியம்பெருமான் விளக்கம் தரலானார்.

ஒரு சமயம் - ஐயன் வேதத்திற்குப் பொருள் கூறியபோது சற்றே கவனக் குறைவிற்கு ஆளான அம்பிகை சிவபெருமானைப் பிரிந்து மயிலாக மாறி காவிரியின் தென் கரையில் சிவபூஜை புரிந்தார்.


காலம் கனிந்த வேளையில் ஐயனும் மயில் வடிவங்கொண்டு அம்பிகையுடன் மயூர தாண்டவம் நிகழ்த்தி அருளினார். அதனாலேயே மயிலாடுதுறை என - திருப்பெயர் கொண்டது திருத்தலம்.

ஐயனும் அம்பிகையும் திருநடனம் நிகழ்த்திய அவ்வேளையில் - காவிரியாள் செய்து கொண்ட பிரார்த்தனை ஒன்றுண்டு!..

நந்தியம்பெருமான் சற்றே நிறுத்தினார்.

அதற்கு மேல் ஐயன் அருளுரைத்தார்.

காலக் கணக்கில் ஏழாவது - துலா மாதம். அனைத்தும் சமன் செய்யப்படும் மாதம். துலா மாதம் நெருங்கும் இவ்வேளையில் தென் திசைக் காவிரியுடன் கலந்திருப்பாயாக!.. அங்கே நீ நலம் பெறுவாய்!..

அவ்வண்ணமே - ஈசனின் திருவாக்கினைத் தலைமேற்கொண்டு, கங்கை தென் திசைக்கு விரைந்தாள்..


அந்த விடியற்காலைப் பொழுதில் தன்னை நோக்கி  வந்த கங்கையைக் கண்டு பரவசமானாள் - காவிரி!.. 

வருக.. வருக.. சகோதரி!.. - என வாஞ்சையுடன் வரவேற்று ஆரத் தழுவிக் கொண்டாள். 

ஒருவர் முகம் மற்றவர் கண்ணீரால் நனைந்தது.

கங்கையின் மனம் அன்னத்தின் தூவி (மெல்லிறகு) போலானது..

தங்காய்!.. திசை தொழும் திருமகள் நீ!.. உன்னால் நான் நலம் பெற்றேன்!.. வாழிய நீ!.. - என்றாள் கங்கை.

சகோதரி!.. தேடி வந்த திருமகள் நீ!.. உன்னால் நான் புகழ் பெற்றேன்!.. வாழிய நீ!.. - என்றாள் காவிரி.

நீரொடு நீர் கலக்க - நிர்மலமான அன்பு எங்கும் பெருக்கெடுத்துப் பாய்ந்தது.

இனிமேல் என்னை விட்டு தாங்கள் பிரியக்கூடாது!.. - என்றாள் காவிரி.

அன்புத் தங்கையே!.. வற்றாத நதியாகிய நான், வாழும் கலையினை உன்னிடம் பயில வந்துள்ளேன்.. ஐயன் சிவபெருமான் எனக்கு விதித்தபடி துலா மாதம் முழுதும் உன்னுடன் இருப்பேன். உன்னுடைய பிரவாகத்தில் கலந்து நானும் பெரும் பேறடைவேன்!.. - என மகிழ்ந்தாள் கங்கை.

நான் என்ன அறிவேன் சகோதரி!.. வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி என்று பெரியோர் என்னைப் பாராட்டினர். ஆயினும், சிறுமதியோர் சிறையில் நானும் சிக்கிக் கொள்கின்றேன். மணற்கொள்ளையினால் என் வழி படுகுழியாகின்றது. அதனால் வயல் வெளிகள் பாழாகின்றன. நீரலைக் கரங்களை நீட்டி விளையாடிய நாட்கள் எல்லாம் தொலைந்து போயின. 

நான் கட்டிக் காத்த களஞ்சியங்கள் கண் முன்னே கட்டிடங்களாகி விட்டன. செல்லும் வ்ழியெல்லாம் எனக்கு நிழல் கொடுத்த விருட்சங்களும் வீழ்த்தப் பட்டன.. வெறிச்சோடிக் கிடக்கின்றன நெடுங்கரைகள்.. எனினும் மட மதியினராகிய மக்கள் மீது கோபம் கொள்வதில்லை. அவர்கள் திருந்தும் காலம் விரைவில் வரும். 

ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந்நாளிலும் ஊற்றுப் பெருக்கால் ஊர் காத்து வந்தேன். கெடுமதியோர் ஊற்று நீரையும் உருக்குலைத்து விட்டனர். ஊர் கொண்ட ஈசன் தான் இதற்கொரு வழி கூற வேண்டும்!..

- காவிரி தன் குறைகளைக் கங்கையிடம் கூறினாள்..

என்ன செய்வது தங்காய்!.. என்குறையும் இவ்விதமே!.. பவித்ரமான என்னைப் பாழ்படுத்தியே பரவசம் அடைகின்றனர். பாவிகளின் செய்கையால் நானும் உன்னைப் போலவே பரிதவித்து நிற்கின்றேன்.. பரமன் ஒருவனே நமக்குப் பாதுகாப்பு!..

கங்கையும் காவிரியும் கூடிக்களித்து ஒருவர் அன்பினில் ஒருவர் மகிழ்ந்தனர்.

கங்கையின் பழி தீரும் நாளும் வந்தது.

கோபுர தரிசனம்
அந்த இளங்காலைப் பொழுதினில் முப்பத்து முக்கோடித் தேவரும் கூடி இருந்த வேளையில் - ஐயனும் அம்பிகையும் ப்ரத்யட்சமாகினர்!..

அதுவும் - மயில் வடிவங்கொண்டு ஆனந்த நடனம் புரிந்தனர்.

அதற்காகக் காத்துக் கிடந்த காவிரி ஆனந்தக்கண்ணீருடன் கைகூப்பி நின்றாள்.

கங்கையின் கண்களிலும் ஆனந்த வெள்ளம் கரை புரண்டது.

கன்னியர் இருவருக்கும் மஞ்சளும் தந்தாள்.. மலர்கள் தந்தாள் - மங்கல மங்கை அபயாம்பிகை!..

அம்மையப்பனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர் அனைவரும்.

துலா தீர்த்தவாரி
காவிரியும் அவளுடன் கலந்து நிற்கும் கங்கையும் - துலா மாதம் எனும் புண்ணிய ஐப்பசியின் அனைத்து நாட்களிலும் இந்தத் தீர்த்தத் துறையில் நீராடும் மக்களின் பாவங்களைத் தீர்த்து - நல்லோர் தம் வாழ்வுக்குத் துணையிருப்பீர்களாக!.. 

- என்று வரமளித்த மயூரநாதர் -

கங்கையை நோக்கி திருக்கயிலைக்கு ஏகும்படி பணித்தார்.

காவிரியைப் பிரிய மனம் இல்லாத கங்கை கலங்கினாள்..

ஸ்வாமி.. பொன்னியையும் அவளால் வளமுற்ற இந்த மண்ணையும் பிரிவதற்கு மனம் இல்லை. ஆயினும் தங்கள் ஆணையை சிரமேற்கொள்ளும் வேளையில் ஆண்டு தோறும் துலா மாதத்தில் - காவிரியுடன் கூடிக் களிக்கும் படியான வரம் நல்க வேண்டும்!.. 

வரங்கேட்டு நின்றாள் - கங்கை.

அஞ்சொலாள் அம்பிகையும் மயூரநாதரும் புன்னகைத்தனர்.

கங்கை கேட்ட வண்ணமே வரம் அருளினர்.

கலங்கிய கண்களுடன் காவிரியிடம் விடை பெற்றுக் கொண்டாள் கங்கை.

கண்களைத் துடைத்துக் கொண்டு - தானும் தன் பயணத்தைத் தொடர்ந்தாள் கங்கையினும் புனிதமாய காவிரி!..

அம்மையும் அப்பனும் அன்று அருளியபடியே - ஆண்டு தோறும் துலா மாதமாகிய ஐப்பசியில் -

கங்கை தென்னகத்திற்கு ஓடி வந்து காவிரியுடன் கலந்து இன்புறுகின்றனள்.

இந்த வைபவம் நம் முன்னோர்கள் நமக்கு அருளிய வரபிரசாதம்!..

ஆயினும்,

கண் கண்ட காட்சியாக காவிரியும் கங்கையும் கலந்திட வேண்டும்!..
மண் கொண்ட மாட்சியாய் மங்கலம் எங்கும் நிறைந்திட வேண்டும்!..

வாழிய காவிரி!.. வாழிய கங்கை!.. 
வளர் நலம் சிறக்க பாரதம் செழிக்க
வாழிய காவிரி!.. வாழிய கங்கை!.. 
* * *

15 கருத்துகள்:

 1. கண் கண்ட காட்சியாக காவிரியும் கங்கையும் கலந்திட வேண்டும்!..
  மண் கொண்ட மாட்சியாய் மங்கலம் நிறைந்திட வேண்டும்!..

  அந்நாள் பொன்னாளாக விரைவில் மலரட்டும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அருமையான பதிவு. கங்கையும் காவிரியும் இணைந்தால் எவ்வளவு நல்லது..... இணைவது எப்போது எனும் கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   காலம் நிச்சயம் பதில் சொல்லும்!..
   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. உங்கள் கதை சொல்லும் திறன் பாராட்டத்தக்கது. கங்கையும் காவிரியும் இணைய ...... கதையில் அல்லாமல் நிஜத்தில் இணைய வேண்டி நிற்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   கங்கையும் காவிரியும் நிஜத்தில் இணைய வேண்டி நிற்போம்..
   தங்கள் அன்பின் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. மிக மிக அருமையான பதிவு! நாட்டு நலத் திட்டம் அதை அழகான கதையாக உருவெடுத்துவிட்டது...ஆனால் அது இணையும் காலம் யார் கையில்? மோடிஜிக்கு இதை அனுப்பினால் என்ன?!

  மட்டுமல்ல காவிரியும் மாந்தர்களின் இழிவுச் செயல்களால் பாழ்படுவதை வருந்துவது போன்று அமைத்தது மிக அருமை!

  நீர்நிலைகளை பாழ் படுத்துவதைத் தவிர்த்து அதைப் போற்றுவோம்! இந்தத் துலாதீர்த்தவாரி நாளில்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்..
   கங்கையும் காவிரியும் இணைவது நம் கையில்..
   நீர்நிலைகளைக் காக்க இந்நாளில் உறுதியேற்போம்..
   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. கங்கையும் காவிரியும் இணையும் துலா மாதம் பற்றிய செய்தியைக் கதையாய் ஆசாகாய் சொல்லி விட்டீர்கள். நன்றி துரை சார் பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. கங்கையும் காவிரியும் இணையும் நாள் விரைவில் வரும் நல்லோர் பிராத்தனையால்.

  இந்த மாதம் முழுவதும் நீராடி மகிழ்வார்கள்.
  ஐப்பசி முழுக்கு கடை என்று கடை போட்டுவிடுவார்கள். கார்த்திகை வரை அந்த கடை இருக்கும்.

  அருமையான படங்களுடன் பதிவு அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   கங்கையும் காவிரியும் இணையும் நாள் விரைவில் வரும்..
   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. அன்பின் ஜி..
   தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..