நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வளைகாப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வளைகாப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 28, 2014

வளைகாப்பு

காவிரியின் வடகரை. 

நடுப் பகல் வேளை. மேகங்கள் அற்ற வானத்தின் உச்சியில் கதிரவன். 

அவனது கதிர்களால் பூமி தகித்துக் கொண்டிருந்தது. 

வெப்பம் தாங்க இயலாத கரிக் குருவிகளும் சிட்டுக் குருவிகளும் மரப் பொந்துகளுக்குள் முகம் புதைத்துக் கொண்டன.

பாடித் திரிந்த குயில்களும் பைங்கிளிகளும் தொண்டை வறண்டு துவண்டன.


அந்த வேனற்பொழுதில் தாயும் மகளுமாக மூன்று ஜீவன்கள் காவிரியின் கரையில் கரையில் பயணித்துக் கொண்டிருந்தன. 

தாயும் மகளுமாக மூன்று ஜீவன்கள்!..

என்ன ஐயா... கதை சொல்கிறீர்கள்!?..

உண்மைதான்!.. 

பயணித்தவர்கள் மூவர்!..ஆனால் தாயும் மகளும் தான்!..

தாய்.. மற்றும் அவளுடைய மகள்!.. மகளோ கர்ப்பிணி!..

இப்போது விளங்கியதா!..

திருவையாற்றில் இருந்து பயணிக்கின்றார்கள்..

செல்ல வேண்டிய தொலைவினை மாட்டு வண்டியில் பயணித்து கடக்கலாம்.

ஆனால்,

தொடரும் தொல்வினையோ வாட்டும் வறுமையாய் முன் நிற்கின்றது..

இன்னும் சற்று தூரம் தான்.. ஆனாலும் களைப்பு மேலிடுகின்றது.

காவிரியின் கரையோரத்தில் பசுமையாக ஒரு தென்னந்தோப்பு...

கடும் வெயிலில் மயங்கிய கண்கள் - அந்த தோப்பினைக் கண்டு மலர்கின்றன.

யாரோ புண்ணியவான் அமைத்திருந்த சுமை தாங்கிக் கல்லும் நடை தாங்கிக் கல்லும்!.. அருகே ஒரு ஆவுரிஞ்சு கல்லும் நடப்பட்டிருந்தது!...

அலுப்பு தீரட்டும் என, நடை தாங்கிக் கல்லில் அமர்ந்தனர் தாயும் மகளும்..

நா வறண்டது. நாவினைப் போலவே நடை மலிந்த காவிரி ஆறும் வறண்டு கிடந்தது.

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாளிலும் ஊற்றுப் பெருக்கினால் உலகிற்கு ஊட்டுபவள் காவிரி!..

அவ்வண்ணமே - காவிரிக்குள் ஆங்காங்கே நீர் ஊற்றுகளும் தென்பட்டன.

ஆயினும் அந்த ஊற்றினைச் சென்றடைந்து - நீர் சேந்திக் குடிக்கவும் இயலவில்லை - அந்த தாய்க்கும் மகளுக்கும்!..

தாய் - தன்னுயிர் தாங்கிக் களைத்தவள்!..

மகளோ - தன்னுள் ஒரு உயிர் தாங்கி நடப்பவள்!..

அவர்தம் - மனமும் உடலும் களைத்து ஒரு துளி நீருக்கு ஏங்கின..

யார் உதவக்கூடும் அவர்களுக்கு?..
கரைவழியில் அங்குமிங்கும் செல்வோர்கூட யாருமில்லை அவ்வேளையில்!.

திக்கற்றவர்க்குத் தெய்வம் தானே துணை!..
அதன்படி - தெய்வம் மானுடம் தாங்கி - காவிரியின் கரை மீது வந்தது.

வார் கச்சையில் அரிவாள் இலங்க - கையில் நீண்ட பிரம்புடன் காவல் நாயகனாகத் தோன்றினான் - தயாபரன்.

தளர்வுற்றுக் களைத்திருந்த  - தாய் மகளைக் கனிவுடன் நோக்கினான்.

ஒரு துளிநீருக்கு ஏங்கிய விழிகளைக் கண்டு புன்னகைத்த பரமனின் திருவிழிகள் -

திரண்ட குலைகளுடன் தழைத்திருந்த தென்னந்தோப்பினை நோக்கின.


வேலி ஓரத்தில் - விண்ணுயர்ந்து நின்று காற்றில் ஆடிக் கொண்டிருந்த  அந்தத் தென்னை மரம் - பரமனின் உள்ளக் கிடக்கையை உணர்ந்து -

குலையுடன் தரை நோக்கித் தாழ்ந்து வளைந்து நின்றது.

பரமனின் திருப்பாதங்களில் இளங்காய்களை மலர்களாக உதிர்த்து வணங்கி நின்றது.

இறைவனின் திருவடிகளில் வேதங்கள் மலர்களாகக் கிடக்கின்றன என்பது ஆன்றோர் வாக்கு!..

அத்தகைய திருவடிகளில்  இளநீர் எனும் தென்னை இளங்காய்கள் - திரண்டு கிடந்தன.

கண்முன்னே நிகழும் அற்புதங்கண்டு அதிசயித்தனர் - தாயும் மகளும்!..

திரண்ட காய்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து கை அரிவாள் கொண்டு சீவி - குடிக்கும் படியாகக் கொடுத்தான் - பரமன்.

இளநீரை வாங்கி ஆவலுடன்  குடித்தார்கள் தாயும் மகளும்..

தாகம் தீர்ந்தது. தவிப்பும் அடங்கியது.

நல்லது செய்தவர்க்கு நன்றி கூற வேண்டுமே!...உலர்ந்த உதடுகள் உயிர்த்தன.

ஆனால் - கண்ணெதிரே நின்று கடுந்தாகம் தீர்த்த காவலனைக் காணவில்லை!..

அப்போது தான் - அறிவுக்கு எட்டியது.

திரண்ட தோள்களுடன் காவல் நாயகனாக வந்ததும்  - கனத்த குலைகளுடன் தென்னை வளைந்து வணங்கி இளங்காய்களை உதிர்த்ததும்!..

நிகழ்ந்த அற்புதம் புரிந்தது..

ஏழைக்கு இரங்கிய தயாநிதி!.. குலைவணங்கு நாதனே!.. - குரல் தழுதழுத்தது.

பஞ்சவாத்தியங்கள் முழங்கின.

கணபதி கந்தன் இருவரும் மடி மீது திகழ, விடை வாகனத்தில் ஐயனும் அம்பிகையும் தரிசனம் அளித்தனர்.

தாயும் மகளும் ஆனந்தக் கண்ணீருடன் வணங்கி பெரும்பேறு பெற்றனர்.

கர்ப்பிணிப் பெண்ணின் தாகத்தினை தீர்த்து வைத்து அருள் புரிந்த திருத்தலம் - குரங்காடுதுறை.


இறைவன் - தயாநிதீஸ்வரர், குலைவணங்கு நாதர்.
அம்பிகை - ஜடாமகுடேஸ்வரி.

தலவிருட்சம் - தென்னை.
தீர்த்தம் - காவிரி.

திருத்தலப் பெருமை:-

இத் திருத்தலம் - வாலி சிவபூஜை புரிந்த பெருமையினை உடையது.

அதுமட்டுமின்றி, சிட்டுக்குருவி ஒன்று - நாளும் வலம் வந்து இறைவனை வணங்கி நற்பேறடைந்த பெருமையையும் உடையது.

திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கபிஸ்தலத்திற்கு முன்னதாக உள்ளது இத்திருத்தலம்.

காவிரியின் வடகரைத் தலங்களுள் ஒன்று.

திருவிடை மருதூருக்கு அருகிலும் குரங்காடுதுறை எனும் தலம் பாடல் பெற்றுள்ளது. அது காவிரிக்குத் தென்கரையில் உள்ளது.

இங்கே குறிக்கப்படும் திருத்தலம் - காவிரிக்கு வடகரையில் உள்ளது.

இன்றைக்கு இத்தலம் ஆடுதுறை பெருமாள் கோயில் எனப்படுகின்றது.

திருஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்.

நீலமா மணிநிறத் தரக்கனை இருபது கரத்தொடொல்க
வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்
ஏலமோடு இலைஇல வங்கமே இஞ்சியே மஞ்சளுந்தி
ஆலியா வருபுனல் வடகரை யடைகுரங் காடுதுறையே!. {3/91/8}

இராவணனைத் தன் வாலினால் கட்டிய வாலி - வணங்கிய தலம் என்பதை ஞானசம்பந்தப்பெருமான் புகழ்ந்துரைக்கின்றார்.

இத்திருக்கோயிலில் - இறைவனின்  கருணைக்கு ஆளான கர்ப்பிணியின் சிலை வடிவம் விளங்குகின்றது.

இறைவனின் அருள் வேண்டி - கர்ப்பிணிகள்  இத்திருத்தலத்தில் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

ஐயனும் அம்பிகையும் கர்ப்பிணிகளுக்கு அருள் புரிந்த திருக்கருகாவூர், திருச்சிராப்பள்ளி - ஆகிய திருத்தலங்களைப் போலவே சிறந்து விளங்குவது.

ஈசனே - கர்ப்பிணிகளுக்கு இரங்கி அருள்கின்றான் எனில் -

தன்னுள் ஒரு இன்னுயிர் தாங்கி நிற்கும் கர்ப்பிணிப் பெண்களின் பெருமையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!..

முந்தித் தவங்கிடந்து முன்னூறு நாள் சுமந்து - என்பார் பட்டினத்தடிகள்.

அதனால் தான் - திருவாசகத்தில் - போற்றித் திருஅகவல் பாடும் போது,

யானை முதலாய எறும்பு ஈறாய
ஊனமில் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்

ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களில் பேரிருள் பிழைத்தும்

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் நூறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்

ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்..

- என்று மாணிக்க வாசகப் பெருமான் வியந்து உரைக்கின்றார்.

இப்படிப்பட்ட கர்ப்ப காலத்தில்  - நடத்தப்படும் வளைகாப்பு வைபவத்தினால் -

இளம் தாயின் மகிழ்வுடன் கருவில் இருக்கும் சிசுவும் மகிழ்கின்றது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை..

இருபது வாரங்களைக் கடந்த இளம் சிசு தாயின் கர்ப்பத்திற்கு வெளியே நிகழ்வனவற்றை கிரகித்துக் கொள்கின்றது என்பதும் ஏழாம் மாதத்திலிருந்து புற உலகில் நடக்கும் விஷயங்களில் தன் மனதைச் செலுத்துகின்றது என்பதையும் இன்றைய அறிவியல் விளக்குகின்றது.

ஆனால்,  பல்லாண்டு பல்லாண்டுகளுக்கு முன்னரே -

நாரதர் உபதேசித்த நாராயண மந்திரத்தை - கருவிலிருந்த ஸ்ரீபிரகலாதன் உற்றுக் கேட்டு உணர்ந்ததையும்,

அர்ச்சுனனுக்கு சக்ர வியூகம் அமைப்பதைப் பற்றி ஸ்ரீகிருஷ்ணன் விவரித்துக் கொண்டிருநத போது சுபத்ரையின் கர்ப்பத்திலிருந்த அபிமன்யு உற்றுக் கேட்டு உணர்ந்ததையும்

- நமது புராணங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

பெரும்பாலும் வளைகாப்பு - கருவுற்றிருக்கும் பெண்ணை சிறப்பித்து ஏழாவது மாதத்தில் அவரவர் குல வழக்கப்படி நிகழ்த்தப்படுவது.

பரத கண்டத்தின் ஈடு இணையில்லா கலாச்சாரத்தில் அர்த்தமுள்ள ஒரு சடங்கு தன் வளைகாப்பு.


அம்பிகையின் மங்கலங்களுள் ஒன்று வளையல்கள்!..

சமயத்தின் வழி நின்று குடும்பத்தில் செய்யப்படும் சடங்குகள் சம்பிரதாயங்களுள் ஒருங்கிணைந்து திகழ்வன வளையல்கள்!..

பல ஆயிரம் வருடங்களாக பாரதப் பெண்களின் கரங்களில் கல கல என ஒலித்துக் கொண்டிருப்பன  - வளையல்கள்..

தங்க வளையல், வெள்ளி வளையல், வைர வளையல், முத்து வளையல், சங்கு வளையல் - என்பன கேட்கவே மகிழ்வூட்டுவன.



இப்படி பற்பல வளையல்கள் இருந்தாலும் கண்ணாடி வளையல்களுக்கு ஈடு இணை ஏதும் இல்லை..

மாமதுரையில் - சோமசுந்தரப் பெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களுள் வளையல் விற்ற லீலையும் ஒன்று!..

திருக்கரங்கள் நிறைய வளையல்களுடன் திகழும் அம்பிகையை -வளையல்கள் அணிந்த இளங்கன்னியர் சூழ்ந்திருப்பதாக ஐதீகம்.

மஹாலக்ஷ்மியை நம் வீட்டுக்கு அழைத்து வருவது - வளையல்களின் ஓசை.

இளங்கன்னியரும் சுமங்கலிகளும் வளையல்களை அணியாமல் இருக்கக் கூடாது என்பர் பெரியோர்.

ஆடிப்பூர நன்னாளில் அம்பிகையை கர்ப்பிணியாகப் பாவித்து வளையல் சூட்டி மகிழ்கின்றோம்.

இந்த கோலாகலத்தில் இணைந்து நம்முடன் மகிழ்பவள் நெல்லை காந்திமதி!..

நிறை மங்கலம் வேண்டும் மங்கையர்  தோரணங்களாகத் தொங்க விடும் வளையல்களைத் தமிழகத்தின் பற்பல திருக்கோயில்களிலும் நாம் காணலாம்.

முன்பெல்லாம் - வளைகாப்பு நிகழ்ச்சிகளில் வளையல் சூட்டுவதற்கென்றே - வளையல் செட்டியார்கள் மதிப்புக்குரியவர்களாக விளங்குவர்.

அவர்களில் கைராசி மிகுந்தவர்களுக்குத் தனி மரியாதை..

திருமணமாகி பிள்ளைப் பேறு தள்ளிப் போகும் மங்கையரை - வளைகாப்பு நிகழ்ந்த மணையில் இருத்தி அனைத்து சடங்குகளும் செய்யப்படுவது வழக்கம்.

இதனால் சீக்கிரம் மணி வயிறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.

இப்படி பற்பல பெருமைகளை உடைய வளையல்களை இருகைகளிலும் சூட்டி அழகு பார்ப்பது மட்டுமல்ல - வளைகாப்பு!..

முதற்குழந்தையைச் சுமந்திருக்கும் இளம்பெண் பேறு காலம் நெருங்க நெருங்க மனம் தளர்கின்றாள்.

அவளை அன்புடன் ஆரவணைத்து ஆறுதலும் தேறுதலும் கூறி சுகப் பிரசவத்திற்கு ஆயத்தப்படுத்துவதே வளைகாப்பு!..

இத்தகைய மங்கலம் கடந்த ஞாயிறு (26/10) அன்று என் அன்பு மகளுக்கு நிகழ்த்தப்பட்டது.

சிவகாசி நகரில் ஏழுகோயில் எனப்படும் அண்ணாமலையார் திருக்கோயில் சங்கத்தின் மன்றத்தில் - உற்றார் உறவினர் சூழ்ந்திருக்க பெரு மகிழ்வுடன் நடந்தது.


நிறை மங்கலமாக அலங்காரத்துடன் விளங்கிய பெண்ணுக்கு -  தாய் மாமன் வாழ்த்தி மாலை அணிவித்த பின் - குங்குமம் சூட்டப்பட்டது. சந்தனக்குழம்பு பூசப்பட்டது.

அம்பிகையின் பிரசாதமாக வேப்பிலையைக் கொண்டு செய்யப்படும் காப்பு முதலாவதாக அணிவிக்கப்பட்டது.

அன்பின் மாமியாரும் தொடர்ந்து பெற்றெடுத்த தாயும் வாழ்த்துரைக்க -

தங்க வளையல்களும் வெள்ளிக் காப்பும் கண்ணாடி வளையல்களும் அணிவிக்கப்பட்டன.








அதனைத் தொடர்ந்து - பழுத்த சுமங்கலிகளும் இளங்கன்னியரும் வளையல்களை அணிவித்தனர்.

வளையல்  அணிவித்த அனைவருக்கும் மஞ்சள் குங்குமத்துடன் மலர்களும் பழங்களும் காப்பரிசியும் - தாம்பூலத்துடன் வழங்கப்பட்டது.

ஐந்து வகை சித்ரான்னங்களும் கூடுதலாக சிறப்பான விருந்தும் - அன்பின் பரிமாற்றங்களாயின.

இவை அத்தனையும் -

எல்லாம் வல்ல அம்பிகை அபிராமவல்லியின் பேரருளைக் கொண்டும்,

உடன் வரும் முன்னோர்களின் நல்லாசிகளைக் கொண்டும்,

அன்பின் வழி நிற்கும் நல்லோர்களின் நல்வாழ்த்துக்களைக் கொண்டும்,

வலைத் தளத்தின் வழியாக மகிழ்ச்சியில் கூடி நின்ற அன்பு நெஞ்சங்களின் நல்வாழ்த்துக்களைக் கொண்டும் - நிகழ்ந்தது என்பதில் ஐயமே இல்லை..

அனைவருக்கும் நன்றி!.. 

- என்று நாங்கள் அனைவரும் கூறுவதில் ஆறுதல் அடையுமோ நெஞ்சம்!..

அனைவருக்கும் அபிராமவல்லி நல்லருள் பொழிய வேண்டும். 
அனைவருடைய இல்லங்களும் மங்கலங்களால் நிறைய வேண்டும்!..
 -
 என அம்பிகையின் திருவடித் தாமரைகளில் 
தலை வைத்து வணங்குகின்றேன்.

மங்கலம் எங்கும் தங்குக!..
என்றும் தங்குக!..

ஓம் சக்தி!..
***

வெள்ளி, ஆகஸ்ட் 09, 2013

ஆடிவெள்ளி - 04

அம்மா!..

அனைத்தினுக்கும்  - அண்ட பகிரண்டத்திற்கும்  - ஆதார சுருதியான அமிர்தம்.


''புவன ப்ரசூத்யை'' - என, அழகான ஒரு சொல் கொண்டு, ஸ்ரீஆதி சங்கரர் - கனகதாரா ஸ்தோத்ரத்தில் அன்னையை விளிக்கின்றார்.

பின்னாளில் - திருக்கடவூரில் சுப்ரமணிய குருக்களும் -  ''என் அம்மே!.. புவி ஏழையும் பூத்தவளே!..'' - என்று நெகிழ்ந்து உருகுகின்றார். 


மறிகடல்கள் ஏழையும் திகிரி இரு நான்கையும் 
மாதிரக்கரி எட்டையும் மாநாகம் ஆனதையும் 
மாமேரு என்பதையும் மா கூர்மம் ஆனதையும் ஓர் 
பொறி அரவு தாங்கிவரு புவனம் ஈரேழையும்
புத்தேளிர் கூட்டத்தையும் பூமகளையும் திகிரி மாயவனையும் 
அரையில் புலியாடை உடையானையும் 
முறை முறைகளாய் ஈன்ற முதியவளாய்ப் 
பழைமை முறைகள் தெரியாத நின்னை 
மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல் 
மொழிகின்றதேது சொல்வாய்!.. 
அறிவு நிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே!
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி அபிராமியே!..

ஆயினும் அவருக்கே - அபிராமியின் மீது சந்தேகம் வந்து விடுகின்றது!..

''..நான் சரியாகத் தானே சொல்லிக் கொண்டிருக்கின்றேன்?..'' - என்று!..

அதனால்தான் - இருந்தாலும் இருக்கட்டும் என்று, 

''வாலை என்றறியாமல் மொழிகின்றதேது சொல்வாய்!.''- என, அன்னையை அழைத்துக் கொண்டு வந்து விடுகின்றார் - அவருடைய சந்தேக வளையத்திற்குள்!...


ஆனால் - திருச்சிராப்பள்ளி மலையில் - ஒரு பாறைத் தளத்தில் இருந்தபடி நிஷ்டையில் இருக்கும் தாயுமான ஸ்வாமிகள் -

''..அதைத் தவிர நானறிவது ஒன்றுமேயில்லை!.. மாமறைகள் எல்லாம் அப்படித்தான் சொல்கின்றன. எப்படிச் சொல்கின்றன?..''

ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ 
அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே!.. 
பின்னையுங் கன்னி என மறை பேசும் 
ஆனந்த ரூப மயிலே!.. 

- தீர்மானமாக சொல்லி விடுகின்றார்!... ''அப்படியா!..'' என்று ஆச்சர்யத்தில் மூழ்கும் போது அங்கே திரு அண்ணாமலையில் , மேலும் கூடுதல் தகவல் தருகின்றார் - ஸ்வாமி அருணகிரிநாதர். 


கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி 
கெளமாரி கமலாசனக்கன்னி நாரணி 
குமரி த்ரிபுரை பயிரவி அமலை கெளரி 
காமாக்ஷி சைவசிங்காரி யாமளை 
பவானி கார்த்திகை கொற்றி த்ரயம்பகி - 

''..இதெல்லாம் யாரோட பெயர்..என்று நினைக்கின்றீர்கள்!..''

தன் திருக்கரத்தினில் செம்பொன்வேலினை ஏந்தி, அசுரர்களின் குலத்துக்கு அந்தகனாக விளங்குகின்றானே - செல்வச் சிறுவன் அறுமுகன், முருகன் - அவனைப் பெற்றவளுடைய திருப்பெயர்கள்! - என்று!..

அருணகிரியார்  -  அஷ்டோத்ரம் மாதிரி  அழகாகச் சொன்னாலும் - 

அவருக்கும் முன்னே - அப்பர் சுவாமிகளின் திருவாக்கு.

நம் கடம்பனைப் பெற்றவள் - என்று!.. 

''..இவளுடைய பங்கில் தானே ஈசன் - இன்பமுற இருக்கின்றான்!..''- என அப்பர் சுவாமிகள் அழகுக்கு அழகூட்டுகின்றார்.

ஆக, அன்னையாய் - கன்னியாய் - விளங்கி, நாமும் நம் சந்ததியும் விளங்க வேண்டும் என வீற்றிருக்கும் அன்னைக்கு மங்கலச் சடங்குகள் நிகழும் நாள் - ஆடி வெள்ளி - அதிலும் ஆடிப்பூர நன்னாள்.

எல்லா சிவாலயங்களிலும் - அம்பிகைக்கு - ஆடிப்பூரத்தை முன்னிட்டு  மங்கல வைபவங்கள் நிகழ்வுறுகின்றன. 


சிகரம் வைத்தாற் போல நெல்லையில் அன்னை காந்திமதிக்கு - கடந்த 3/8 அன்று சீரும் சிறப்புமாக ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு வைபவம் நடந்துள்ளது. அதன்பின், அன்னை - வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி -  கோலாகலமாக ரதவீதிகளில் பவனி வந்து மகிழ்ந்திருக்கின்றாள். இன்று  நெல்லையில் - ஆடிப்பூர முளைக் கொட்டு வைபவம்.


திரு அண்ணாமலையில், ஜுலை 31 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடிப்பூர பெருவிழாவின் நிறைவாக - இன்று மாலை, உண்ணாமுலை நாயகிக்கு வளைகாப்பு மண்டபத்தில் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் வளைகாப்பு வைபவமும், பின் வீதி உலாவும், வேறெங்கும் இல்லாதபடி -  நள்ளிரவு தீமிதி திருவிழாவும் நிகழ்கின்றன.

திருமயிலையில் - கபாலியுடன் கொஞ்சிக் குலவிக் களித்திடும் குலமயில்  கற்பகவல்லிக்கும் ஆடிப்பூர வைபவம் நிகழ்கின்றது.
 
திருச்சி உறையூரில் வீற்றிருக்கும் குங்குமவல்லிக்கு தை - மூன்றாம் வெள்ளியில் இந்த மங்கல வைபவம் அங்குள்ள மரபின்படி நிகழ்ந்திருக்கின்றது. 

மக்களைப் பெற்ற மகராசி அவள். அவள் பெற்ற மக்கள் ஒன்றாகக் கூடி, அவளுக்கே - மங்கலகரமாக வளகாப்பு நிகழ்த்தி மனம் மகிழ்கின்றனர். 


இவற்றையெல்லாம் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆடிப்பூர வைபவத்தினைக் கொண்டாடும் போது - நம் வீட்டில் -

மகளுக்கும் , மருமகளுக்கும்,  மனைவிக்கும், சகோதரிகளுக்கும்  - 

ஏன்! - 

நம்மைப் பெற்ற அன்னைக்கும் வளையல்கள் வாங்கித் தரலாம்.
 
இருப்பினும்-

அம்பிகையின் அருளைப் பெற - எளிதான வழி ஒன்றும் -  இருக்கின்றது.

நம்மைச் சுற்றி வாழும் எளிய குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு, இந்த - மங்கல நாளில் வளையல்கள் வாங்கிக் கொடுத்துத் தான் பாருங்களேன்!..

அந்தப் பிள்ளைகளின் முகத்தில் - ஆனந்தம் தவழக் காணலாம்!..

அந்த ஆனந்தத்தின் ஊடாக - 
அம்பிகையின் அருள் முகத்தையும் காணலாம்!...