நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 11, 2024

உயிரே.. உணவே.. 5

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 28
ஞாயிற்றுக்கிழமை

பகுதி 5
அன்புடன் பரிமாறுதல்
 

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்..

முகமலர்ந்து உபசரிப்பவர் தம் இல்லத்தில் திருமகள் மகிழ்ச்சியுடன் உறைவாள்.. 

விருந்தோம்பலை பத்துப் பாக்களால் 
சிறப்பிக்கின்றார் ஐயன் திருவள்ளுவர்..

உண்ணீர் உண்ணீர் என்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடியுறும்..

என்றார் ஔவையார்..

ஏசி இடலின் இடாமை நன்று என்பதும் ஔவையார் அருளியதே..

உணவை வழங்கியோர் - என்ன பெரிதாக செய்து விட்டோம்.. என்றிருக்க வேண்டும்..

உணவை உண்டோர் இதற்கு என்ன கைம்மாறு செய்வது -  என்று - உண்ண வேண்டும் என்பது வாரியார் ஸ்வாமிகளின் அருள்வாக்கு..

முன்னதாக காக்கைக்கு அன்னம் வைப்பது அவசியம்..

யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி - என்பது திருமூலரின் திருமந்திரம்..

உணவை வாழையிலையில் பரிமாறுதல் சிறப்பு..

தண்ணீர் வைத்த பின்  முதலில் இனிப்பைப் பரிமாற  வேண்டும்..

உணவு பரிமாறும் போது கவலை வருத்தம் கோபம் இன்றி பொறுமையுடன் பரிமாற வேண்டும்..

உணவை முக மலர்ச்சியுடன் தேவை உணர்ந்து பரிமாற வேண்டும்..

சாப்பிடுவதற்கு அமர்ந்த பின்னரே பரிமாற வேண்டும்..

உண்ணும் போது அடுத்தடுத்து பரிமாறுதல் வேண்டும்..

விருந்தினர்க்கு நுனி வாழை இலையில் உணவு பரிமாறுவது தான் தலை வாழை விருந்து..

விருந்து மட்டுமல்ல.. பொதுவாக நாளும் உணவை இலையில் சாப்பிடுவது நல்லது..

வாழை இலையின் இடது மேல் மூலையில்
(அமர்ந்திருப்பவரின் இடக்கைப் பக்கம்)
 உப்பு வைக்க வேண்டும். வலது கீழ்ப் பக்கம் இனிப்பு  வைக்க வேண்டும்.

இலையின் மேல் புறம் வலப் பக்கத்தில் இருந்து இடப் பக்கமாக - அவியல், கூட்டு, வறுவல், (மற்ற பதார்த்த வகைகள்) பச்சடி, ஊறுகாய் ஆகியன..

இலையின் கீழ்ப் பக்கம்
இடப் புறத்தில்  அப்பளம், வடை, ஆகியன..  

இலையின் நடுவே முதலில் சித்ரான்னம்.. அடுத்து சோறும் பருப்பும் நெய்யும்..


இப்படி 
அன்புடன் பரிமாறப்பட்ட உணவை உண்ணும் போது  சிவார்ப்பணம் என்றோ  க்ருஷ்ணார்ப்பணம் என்றோ சொல்வது மரபு.. 

சொல்ல வேண்டியது நமது கடமை..

அடுத்து சோறும் குழம்பும்.. அடுத்து சோறும் ரசமும் பரிமாறி, பாயசம் பரிமாறுதல் வேண்டும். 

நிறைவாக  சோறும் தயிரும் பரிமாறுதல் வேண்டும்...

இதன் பின்னர் சாப்பிடுபவர் இலையின் மேல் புறத்தை தம் பக்கமாக மடித்து விட்டு எழ வேண்டும்..

இது பொதுவான முறை.. குடும்ப வழக்கப்படி சில சமுதாயங்களில் மாறுபடலாம்..

விருந்தினர்க்கு பாகற்காய், அகத்திக் கீரை, புளிக்குழம்பு
பரிமாறுவது இல்லை.. 

விருந்தினர்க்கு பரிமாறும் போது மற்ற பாத்திரங்களில் லொட் லொட் என்று தட்டுவதோ மற்ற பாத்திரங்களிலிருந்து
லொட லொட  என்று சத்தம் வருவதோ கூடாது..

பரிமாறும் போது கேட்பது அவசியம் தான்.. அதற்காக சளச்சள என்று பேசி கவனத்தை சிதறடிக்கக் கூடாது..

உண்ணும் போது அதிகம் நீர் அருந்தக் கூடாது.. சாப்பிட்டு முடித்து - இருபது நிமிடங்களுக்குப் பின்னரே தேவையான நீர் அருந்த வேண்டும்.. 

வயிறு முட்ட நீர் குடிப்பதும் அவசியமற்றது..

விருப்பமில்லாத உணவு வகைகளைப் பிடிவாதமாக பரிமாறக் கூடாது..


நிறைவாகத் தாம்பூலம் தருவது சிறப்பு.. 

தாம்பூலம் (வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு) நல்ல மருந்து என்பதை ஏன் மறந்தோம் என்பது தெரியவில்லை..

இள வயதினர் ஒவ்வொரு நாளும் ஒரு தரமாவது - குறிப்பாக இரவில் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நியதி..

கதிர் என்ற காலம் மாறி பதர் அதிகமிருக்கின்ற  நவீன கருத்தரிப்பு காலம் இது..

நீங்களும் நானும்  கவலைப்பட்டு என்ன ஆகப் போகின்றது?..

மேலும் குறிப்புகள்
அவ்வப்போது
வெளிவர இருக்கின்றன..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..

நாளும் வாழ்க
நன்றென வளர்க
**

3 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. படங்கள் அழகோவியங்கள். முறையான விருந்தோம்பலை பற்றி அழகாக சொல்லியுள்ளீர்கள். விருந்தோம்பலை குறித்த பாக்களும், பரிமாறும் முறைகளும் சிறப்பு. தொடர்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. விருந்து பரிமாறும் முறை பற்றி நன்றாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

  முகம் மலர்ந்துஅன்புடன் பரிமாறுவது மிகவும் முக்கியம் என கூறியுள்ளீர்கள்.
  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 3. அருமையான பல கருத்துக்களை கொண்ட பதிவு.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..