நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, பிப்ரவரி 24, 2024

மாசி மகம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி மகம்
மாசி 12
சனிக்கிழமை


பன்னிரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் - சூரியன் கும்ப ராசியிலும் தேவ குருவாகிய பிரகஸ்பதி சிம்ம ராசியிலும் விளங்க மக நட்சத்ரமும்  நிறைநிலவும் கூடிய நந்நாளே மகாமகத் திருநாள்..

தற்போது குருவின் இருப்பு மேஷ ராசி.. மகாமகத்திற்கு இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன..

கும்பகோணம் எனப்படும்
இத்தலத்தில் பல திருக்கோயில்கள் விளங்கினாலும் ஸ்ரீகும்பேஸ்வரர் தான் பிரதான மூர்த்தி!..


அமுதம் சிதறிய மண்ணில்  ஈசனே தன் திருக்கரங்களால் வடித்தெடுத்த மூர்த்தி.. மூல லிங்கம்..

ஐயனின் வடபுறமாக,  வாமபாகத்தில் - கிழக்கு நோக்கிய வண்ணம் அம்பிகையின் சந்நிதி..


மந்திர பீட ஸ்ரீ மங்களேஸ்வரி.. 
பெயருக்கு ஏற்றபடி - (பெரும்பாலான சமயங்களில்) மஞ்சள் பட்டுடன் மங்கலம் பொழிகின்றாள். தயாபரியாகிய தாயின் முகத்தை - நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பசியே தோன்றாது..

அப்படியே பசித்தாலும் -  அவளே வந்து அமுதூட்டுவாள்.. 

பசித்திருந்த வேளையில்
அப்படியொரு அனுபவத்தினை  - எளியேன் பெற்றுள்ளேன்..

வன்னி மரம் தலவிருட்சம்.  மகத் தீர்த்தம் (மகாமகக் குளம்) . இதில் நதி மங்கையர் ஒன்பது பேரும் நீராடி புனிதம் பெற்றதாக - ஐதீகம்..

இங்கே ஆதி விநாயகர்..
திருமுருகப் பெருமான் சூர சம்ஹாரம் செய்யும் முன், இத் திருத்தலத்தில் தாயிடம், மந்த்ரோபதேசம் பெற்றார் - என்பது திருக்குறிப்பு.


கும்பேஸ்வரர் திருக்கோயில்
வடக்குத் திருச்சுற்றில் - ஸ்ரீ கிராத மூர்த்தி ( வேடுவ வடிவம்) சந்நிதி - இத்திருத்தலத்துக்கே உரிய சிறப்பு!..

இவரே அமிர்த கலசத்தை அம்பினால் எய்தவர்.. சிருஷ்டி தொடங்குதற்குக் காரணம் ஆனவர்..

மக நட்சத்திர நாட்களிலும் செவ்வாய்க் கிழமைகளிலும் - ஸ்ரீ கிராத மூர்த்தியை வணங்க - பெரும் பிணி, வல்வினைகள், தாரித்ரயங்கள் -  அனைத்தும் அகலும்..

1 ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர் திருக்கோயில்
2 ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயில்
3 ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோயில்
4 ஸ்ரீ அபிமுகேஸ்வரர் திருக்கோயில்
5 ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
6 ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்
7 ஸ்ரீ பாணபுரீஸ்வரர் திருக்கோயில்
8 ஸ்ரீ கம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயில்
9 ஸ்ரீ கௌதமேஸ்வரர் திருக்கோயில்

என்பன நகருக்குள் விளங்கும் இதர சிவாலயங்கள்..

ஸ்ரீ சார்ங்கபாணி திருக்கோயில்,
ஸ்ரீ சக்ரபாணி திருக்கோயில்,
ஸ்ரீ ராமஸ்வாமி திருக்கோயில்,
ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில்,
ஸ்ரீ வராகப் பெருமாள் திருக்கோயில் -

- என்பன வைணவத் திருக்கோயில்கள்.. 


இன்று நாம் காணும் மகாமகக் குளமும் படித்துறையும் படித்துறைக் கோயில்களும் கோவிந்த தீக்ஷிதர் அவர்களால் உருவாக்கப்பட்டவை.. 

தஞ்சையை ஆட்சி செய்தவர்களாகிய -
சேவப்ப நாயக்கர் (1532 - 1580)
அவருடைய மகன் அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1614)
அவருடைய மகன் ரகுநாத நாயக்கர் (1600 - 1634) எனும் மூன்று மன்னர்களிடமும் முதன்மை அமைச்சராகப் பணியாற்றிய பெருமைக்கு உரியவர் கோவிந்த தீக்ஷிதர்..  

அரசர்கள் தீக்ஷிதருக்கு அளித்த பொன்னையும் பொருளையும் கொண்டு - 

இந்தத் திருப்பணியை அவர் மேற்கொண்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன..

குடந்தையிலுள்ள வேத பாட சாலையை நிறுவியவரும் இவரே..

இவர் பெயரால் - தஞ்சையில் ஐயன் குளம், ஐயன் கடைத்தெரு என்று விளங்கி வருகின்றன..

தஞ்சையை அடுத்துள்ள ஐயம்பேட்டையும்,
குடந்தையை அடுத்துள்ள கோவிந்தபுரமும் இவர் பெயரால் அமைந்தவையே..

மகாமகக் குளம் - 190

பொற்றாமரைக் குளம் - 1900

தேவாரத்தில் குடந்தைக் காரோணம் குடமூக்கு என்றும் திவ்யப்ரபந்தத்தில் திருக்குடந்தை எனவும் புகழப்பட்ட திருத்தலம்  - அருணகிரிநாதர் காலத்தில் - கும்பகோணம் என்றாகி விட்டது..

கோலமுடன் அன்று சூர்ப்படையின் முன்பு 
கோபமுடன் நின்ற  குமரேசா
கோதைஇரு பங்கின்மேவ வளர் கும்ப
கோண நகர் வந்த  பெருமாளே!..

- என்று அருணகிரிநாதர் போற்றிய திருத்தலம்..

நன்று நோற்கில் என் பட்டினியாகில் என்
குன்றம் ஏறி இருந் தவஞ் செய்யில் என்
சென்று நீரிற் குளித்துத் திரியில் என்
என்றும் ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே.. 5/99/8
-: திருநாவுக்கரசர் :-

புறந்தூய்மை நீரால் அமைவதைப் போல
அகந்தூய்மை 
மாசி மக  நீராடலால் அமையட்டும்!..
**

ஏவியிடர்க் கடலிடைப்பட்டு இளைக்கின்றேனை
இப்பிறவி அறுத்தேற வாங்கி ஆங்கே
கூவிஅமர் உலகனைத்தும் உருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும்
தாவிமுதற் காவிரி நல் யமுனை கங்கை
சரசுவதி பொற் றாமரைபுட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரி வரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக் கீழ்க் கோட்டத்து எங்கூத்தனாரே.. 6/75/10
-: திருநாவுக்கரசர் :-

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

 1. சுவாரஸ்யமான விவரங்கள்.  இந்தஹக் கோவில் சென்று வந்துள்ளேன்.  மறுபடி பார்க்கும் வாய்ப்பு சீக்கிரமே கிடைக்கும்!

  பதிலளிநீக்கு
 2. இந்தப் பாடலை இணைத்திருக்கலாம்!

  https://www.youtube.com/watch?v=JF38gngNY7E

  பதிலளிநீக்கு
 3. மகாமகக் குளத்தின் புராணம் அறிந்து கொண்டேன் நன்றி ஜி

  பதிலளிநீக்கு
 4. மாசிமக நன்னாளில் கும்பேஸ்வரர் ஸ்ரீ மங்களேஸ்வரி தல தரிசனம் பெற்றோம்.
  'அகத்தூய்மை மாசிமக நீராடலால் அமையட்டும்"
  அகம் தூய்மை பெற அவனருளை வேண்டுவோம்.

  பதிலளிநீக்கு
 5. மாசி மகத்திற்கு மிக சிறப்பான பதிவு. விவரங்கள் அருமை.
  பாடல்களை பாடி இறைவனை வேண்டி கொண்டேன். படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 6. மகாமகக் குளம் குறித்த தகவல்கள் அனைத்தும் சிறப்பு. ஒரு முறை இங்கே சென்று தரிசனம் செய்திருக்கிறேன் - இன்னும் குளத்தில் குளியல் வாய்ப்பு அமையவில்லை.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..