நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 06, 2024

அன்பும் வீரமும்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 23
செவ்வாய்க்கிழமை

புள்ளிருக்கு வேளூர்
சம்பாதி ஜடாயு


நடுப்பகலுக்கு முந்தைய பொழுது.. சூரியன் தகித்துக் கொண்டிருந்தான்..

பசுமையாக விரிந்திருந்த கொன்றை மரத்தின் உச்சியில் அமர்ந்து சுற்றிலும் கவனித்துக் கொண்டிருந்தார் ஜடாயு..

கருடனின் தம்பியான அருணனின் மகன் தான் ஜடாயு.. இவரது சகோதரன் சம்பாதி.. ஸ்ரீராம பிரானின் தந்தையான தசரத மன்னருக்கு நெருங்கிய நண்பர்..

இங்கே வெண்மணலைத் திரட்டி சிவலிங்கமாக ஆக்கினர் சம்பாதியும் ஜடாயுவும்..

இங்கிருந்து ஒரு யோஜனை தூரத்தில் நந்தவனம் அமைத்து அங்கிருந்து ஒவ்வொரு நாளும் சிவபூஜைக்கென பூக்களைக் கொணர்கின்றார் சம்பாதி..

உயர்ந்த மலர்களைக் கொண்டு இருவரும் சிவவழிபாடு செய்து வந்த போது ஒருநாள் - விளையாட்டுத் தனமாக சூரியனை நெருங்கிப் பறக்க -  ஆதவனின் அளவு கடந்த வெப்பத்தினால் ஜடாயுவின் சிறகுகள் கருகின..

தம்பியைக் காப்பதற்காக சம்பாதி ஜடாயுவிற்கு மேலாக சிறகு விரித்துப் பறக்க சம்பாதியின் இறகுகள் கருகின..

சூரியன் இதைக் கண்டு இரக்கம் கொள்ள உயிர் பிழைத்த சம்பாதி மகேந்திர மலையில் விழுந்தார்.. 

அதற்குப் பின் அண்ணனை ஜடாயு பார்க்கவேயில்லை..

அண்ணனின் நலம் வேண்டி ஈசனை வணங்குவதே வேலையாயிற்று ஜடாயுவுக்கு..

சரி.. சம்பாதி என்ன ஆனார்?..

சூரியனை நெருங்கியபோது
கருகிய இறகுகள் ராம நாமத்தைக் கேட்கும் போது திரும்பவும் வளரும் என்ற வரம் கிடைத்தது..

மகேந்திர மலையின் குகைக்குள் இருந்தார் அவர்..

அதன் பின் 
சீதையைத் தேடிக் கொண்டு அனுமன் ஜாம்பவானுடன் வானர சேனை தென் திசைக்கு வந்தபோது அவர்களது ராம நாம பாராயணத்தால் சம்பாதியின் இறகுகள் மீண்டும் வளர்ந்தன.. 

குகையில் இருந்து வெளியே வந்த சம்பாதி - மேல் விவரங்களை அறிந்து இலங்கையைக் காட்டி விட்டு பரம்பொருளுடன் கலந்தார்..

இந்நிலையில்
அங்கே அயோத்தியில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்தவைகளைக் குறித்து ஜடாயுவின் மனதில் உளைச்சல்..

ஏன் இப்படி ஆயிற்று?..
- தன்னைத்தானே கேட்டுக் கொண்டார் ஜடாயு..

அப்போது -
வட திசையில் மேகங்களின் ஊடாக புள்ளியாக ஏதோ ஒன்று.. 

மனம் ஏனோ பரபரப்படைந்தது.. விழிகள் கூர்மையாகின... 

தொலைவில் தெரிந்த அது ஏதோ ஒரு புள்ளியல்ல எனபது புரிந்தது..

ஆகாயத்தேர்.. 

அதில் வருகின்றவன் தென்னிலங்கைக்கு அதிபதியான தசமுக இராவணன் என்பதும் புரிந்தது..

இராவணன் தனது சகோதரனாகிய குபேரனை வஞ்சித்து அவனிடமிருந்து  ஆகாயத்தேரைக் 
கைப்பற்றிக் கொண்டவன்..

இந்த அரக்கன் ஆகாயத் தேரில் பயணிக்கும் போதுதான் - கயிலாய மாமலையை இடையூறாகக் கருதி அதைப் பெயர்த்து எடுக்க முயன்றவன்.. 

அப்போது 
அவனைத் தடுத்து அறிவுரை கூறிய நந்தியம்பெருமானை குரங்கு முகத்தவன் என்று இழித்ததால் - "குரங்கு ஒன்றினால் நீயும் உன் நாடும் அழியக் கடவது..- என நந்தியம்பெருமானிடம் சாபம் பெற்றவன்.. 

அதையும் மீறி மாமலையைப் பெயர்க்க முயன்ற போது ஈசன் தனது விரலை அழுத்தியதால் மலைக்குக் கீழ் நசுங்கிக் கூழ் ஆனவன்.. 

அப்போது வாகீச முனிவரின் யோசனையினால் சாம கானம் பாடி  உயிர் தப்பித்தவன்.. 

ஆனாலும், 
இந்த அரக்கன் சாம கானம் பாடிக் கதறியதால் அவனுக்கு முக்கோடி  ஆண்டுகள் வாழும் நாளையும் , எவராலும் வெல்ல முடியாத சந்திர ஹாசம் எனும் வீர வாளையும் ஈசன் தந்து மகிழ்ந்தான்.. 

அப்படியான அரக்கன் இதோ கண் எதிரில்!..

ஆகாய ரதத்தில் அவனோடு யார்?..

திடுக்கிட்டார் ஜடாயு..

அவள் ஜனகனின் புத்ரியும் தசரதரின் மருமகளும் ஸ்ரீராம சந்திரனின் தேவியுமான ஜானகி அல்லவா?..

' இதென்ன கொடுமை?..
அடே ராவணா.. மூளை கெட்டு விட்டதா உனக்கு... விட்டில் பூச்சியாக விளக்கில் விழுந்தவனே!.. கோடி மாதவங்கள் செய்தும் மதி குன்றியவனே.. குணம் கெட்டவனாக கொடூரத்தைச் செய்து விட்டவனே.. '

கோபம் கொந்தளித்தது அவருக்குள்.. 

" அடே.. அரக்கனே.. நில்லடா.. என் கண் மணியையா கடத்திச் செல்கின்றாய்?.. "

ஜடாயுவைக் கண்டதும் மைதிலியின் முகத்தில் மகிழ்ச்சி..

" அட.. அற்பக் கழுகே.. அடங்கிக் கிட!.. "

ராவணன் கொக்கரித்தான்..

மின்னலென தேர்ச்சாரதியைத் தாக்கிய ஜடாயு இராவணனின் மீது பாய்ந்து மணிமுடியைத் தள்ளி விட்டதோடு மார்பிலும் முகத்திலும் கூரிய நகங்களால் கீறிக் கிழித்தார்..

தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லையென்று தருக்கியிருந்த இராவணன் பறவை ஒன்றின் தாக்குதலால் நிலை குலைந்தான்..

மறங்கொண்டங்கு ராவணன் தன் வலி கருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயு.. 
- என்றும்

மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடழித்து..
- என்றும் 
புகழ்கின்றார் திருஞானசம்பந்தர்..

பர்ண்சாலையில் தனித்திருந்த ஜானகியிடம் மாயம் காட்டி வஞ்சித்ததால்
 மெய்சொல்லா இராவணன் - என்கின்றார் சம்பந்தப் பெருமான்..

எண்ணின்றி முக்கோடி வாணாளது உடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான்.. 

- என்பதுவும்

விடைத்து வரும் இலங்கைக் கோன் 
மலங்கச் சென்று ராமற்கா
புடைத்தவனைப் பொருதழித்தான்.. 

-- என்பதுவும்

திருஞானசம்பந்தரின் புகழ் மொழிகள்..

வெறி பிடித்து வந்த ராவணன் -  தனக்கு இப்படியும் ஒரு எதிரியா!.. என்று - திகைக்கும்படியாக, ஸ்ரீராமபிரானுக்காக ராவணனுடன் போரிட்டுப் புடைத்து அவனது செருக்கினை அழித்தார் ஜடாயு.. என்பது தேவாரம் சூட்டுகின்ற புகழாரம்..

இதற்கு மேல் பொறுமை இழந்த ராவணன் ஈசன் அளித்த வாளை ஏந்தினான்.. 


அதனை ஒருமுறை தான் பிரயோகம் செய்யமுடியும் என்பது தெரிந்திருந்தும் ஜடாயுவை சந்திரஹாச வாளால் தாக்கினான்.. ஜடாயுவின் சிறகுகளுள் ஒன்று வீழ்ந்தது..

சந்திரஹாச வாளும் அதற்குமேல் அங்கிருக்காமல் திருக்கயிலையைச் சென்றடைந்தது..

நிலை குலைந்தார் ஜடாயு.. வைதேகி கண்ணீர் வழியக் கதறினாள்..

மேகத் திரளின் ஊடாக நின்று போரிட்ட ஜடாயு வலுவிழந்து மண்ணில் விழுந்தார்..

எக்காளமிட்டபடி ராவணன் தென் திசையை நோக்கிச் சென்றான்..

" கண்மணி ராமன் நிச்சயம் வருவான்.. அவனிடம் நடந்ததைச் சொல்வேன் .. " - என்ற உறுதியுடன்  ஜடாயு காத்திருக்க - ராமனும் வந்தான்  தம்பியுடன்..


கண்ணீருடன் அவர்களிடம் நடந்ததை விவரித்து விட்டு ஸ்ரீராமனின் மடியிலேயே முக்தியடைந்தார் ஜடாயு..

இதனை ஞானசம்பந்தப் பெருமான் புகழ்ந்துரைக்க - திருப்பதிகத்தைப் படிக்கும் போது கண்ணீர் பெருகுகின்றது..
 
மெய்சொல்லா இராவணனை மேலோடி ஈடழித்துப்
பொய் சொல்லாதுயிர் போனான் புள்ளிருக்கு வேளூரே.. 

(திருப்பதிகம் வேறொரு பதிவில் வெளியாகும்)

ஸ்ரீ சம்பாதி போற்றி
ஸ்ரீ ஜடாயு போற்றி போற்றி..

ஜெய் ஸ்ரீராம்
ஜெய் ஸ்ரீராம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்

சிவாய திருச்சிற்றம்பலம்
***

5 கருத்துகள்:

  1. அறிந்த கதை. மனம் நெகிழ்ந்த கதை. மறுபடியும் உங்கள் கைவண்ணத்தில் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. ஜடாயு கதை - படிக்கும்போதே நெகிழ்ச்சி. பகிர்வுகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  3. ஜடாயு வரலாறு மிக அருமையாக சொன்னீர்கள்.
    புள்ளிருக்கு வேளூர் கதை இந்த செவ்வாய் கிழமை படித்தது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. ஜடாயு பற்றிய பகிர்வு மனதுக்கு நெகிழ்வு. 'ஸ்ரீராமரின் மடியிலேயே முக்தி அடைந்தார் ஜடாயு'. ஜெய்ராம் ஜெஜெய ராம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..