நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 25, 2024

கொழுப்பு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 13
 ஞாயிற்றுக்கிழமை


கொழுப்பு

ஆரோக்கியமான சருமத்திற்கும் உடல் செல்களின் வளர்ச்சிக்கும் தேவையான அமிலங்களை கொழுப்பு வழங்குகின்றது..

நமது உடலால் உருவாக்க முடியாதது.. இது  உண்ணுகின்ற உணவின் மூலம் பெறப்படுவதாகும்..


மற்ற உணவுகளில் இருந்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சுவதற்கு கொழுப்பு உதவுகின்றது..
இயற்கையான நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.

இதனால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது.. திசுக்கள் வலுவடைகின்றன..

ஒவ்வொருவரும் தங்கள் உணவை கொழுப்பு / எண்ணெய் உடையதாகக் கொண்டிருப்பது அவசியம்..

உடலுக்குத் தேவைப்படும் கொழுப்புகள் மூன்று வகை.. 

நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated Fats),
நிறைவுறா கொழுப்புகள் (Unsaturated Fats) ,
டிரான்ஸ் கொழுப்பு என்பவை..

நிறைவுற்ற கொழுப்பு Saturated Fats கெட்ட கொழுப்பு என்றும் 

நிறைவுறா கொழுப்பு Unsaturated Fats நல்ல கொழுப்பு என்றும் வழங்கப்படுகின்றன.. 

நிறைவுற்ற கொழுப்பு 
(Saturated Fats கெட்ட கொழுப்பு)
இது தமனிகளை அடைத்து, இரத்த ஓட்டத்திற்கு தடையை ஏற்படுத்தும்..

நிறைவுற்ற கொழுப்பு உடைய Saturated fat 
(கெட்டகொழுப்பு) சைவ உணவுகள் :
பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி சீஸ்,
தாவர எண்ணெய்கள் தேங்காய் எண்ணெய் 
பனை எண்ணெய் - (பாமாயில்)
பொரிக்கப்பட்ட உருளைக் கிழங்கு, குக்கீகள் மற்றும் பேஸ்ட்ரி கேக்குகள்..

பால், வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கெட்ட கொழுப்பு என்று மேலை மருத்துவம் சொன்னாலும் இவை நமக்கு மிகவும் அவசியமானவை..
இவற்றில் கவனம் வேண்டும்..

நிறைவுறா கொழுப்பு Unsaturated Fats (நல்ல கொழுப்பு) உடைய உணவுகள் :
தயிர்,  ஆலிவ் எண்ணெய்

புரோபயாடிக் நுண்ணுயிரிகள் நிறைந்துள்ள தயிரை சேர்த்துக் கொள்வது  இதய நோய் அபாயத்தைக் குறைக்கின்றது..


ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயில் 
மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன. அவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் அதிக அளவு வைட்டமின் E வைட்டமின் K உள்ளன.


முந்திரி, பாதாம், ஆளி விதை இவற்றில் நல்ல கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள்  நிறைந்துள்ளன, இவை இருதய நோய் மற்றும்  நீரிழிவு (2) நோயைத் தடுக்க உதவுகின்றன.

டிரான்ஸ் கொழுப்புகள் எந்த  நன்மையும்
இல்லாதவை. டிரான்ஸ் கொழுப்புகளின் செறிவு இயற்கையாகவே நிகழ்கிறது,  பதப்படுத்தப்பட்ட சில உணவுகளில் அதிக அளவு உள்ளது..பொரிக்கப்பட்ட உருளைக் கிழங்கு, பால் அல்லாத கிரீம் , செயற்கை க்ரீம் கொண்டு தயாரிக்கப்பட்ட பிஸ்கட்கள், துரித உணவு வகைகள் என்று பலவற்றில் இருக்கின்றன..

சைவ உணவுப் பழக்கம் உடையவர்க்கு நெய், இயற்கை எண்ணெய்கள், தேங்காய் இவற்றில் இருந்து கொழுப்பு கிடைத்து விடுவதால் வேறொன்றும் கவலை இல்லை.. 

எனினும் கவனம் தேவை..

வைட்டமின் D, E மற்றும் K ஆகியன கொழுப்பில் கரையக்கூடியவை.. வைட்டமின்கள் உறிஞ்சப்பட்டு
சேமிக்கப்படுவதற்கு கொழுப்பு தான் காரணம்..

கொழுப்பு செல்கள் உடலை உகந்த வெப்பநிலையில் பராமரிக்கின்றன.. நெய் உடலின் செயல்பாடுகளுக்கு உதவுகின்றது..

உணவில் கொழுப்பை அறவே தவிர்ப்பது நல்லதல்ல.

" நெய்யில்லா உண்டி பாழ்.. " என்கின்றார் ஔவையார்..

நெய் இல்லாத உணவு வீண் - என்பது ஔவை மூதாட்டியின் கருத்து..

நெய் நமது உணவில் ஒரு முக்கியமான அங்கம்.. 

இன்றைக்கு 
நெய் என்ற பெயரை உச்சரிக்கவும் அஞ்சுகின்றனர் மக்கள்.. 

காரணம் மக்களிடையே உடல் உழைப்பு குறைந்து போனதே..

இன்று  பால் முதலான உணவுப் பொருட்களுக்கு -
கொழுப்பு குறைக்கப்பட்ட -
என்று ஒரு குறிப்பு மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது 

உண்ணத்தக்கவை : 
( கொழுப்பு/ எண்ணெய் வகைகள் ) 
பாலில் இருந்து பெறப்படும் வெண்ணெய், நெய்.. 


தவிரவும் - எள், நிலக்கடலை, தேங்காய், சோயா, 
சூரியகாந்தி மற்றும் ஆலிவ் எண்ணெய்கள்.. 
மேலும் டால்டா வனஸ்பதி 
ஆகியன..


சிறுதானியங்கள் : காலையில் சிறு தானிய உணவு எடுத்துக் கொண்டால் பசி தாங்கும்.. எனவே உடலில் கெட்ட கொழுப்பு  சேர்வது  குறைக்கப்படுகின்றது..

பீன்ஸ் : நார்ச்சத்தினைக் கொண்டது பீன்ஸ்.. காய்களின் வழி கிடைக்கின்ற நார்ச் சத்து நாம் உண்ணுகின்ற  உணவுகளின் வழியே கிடைக்கின்ற  கொழுப்பின் அளவையும்  கொழுப்பு உறிஞ்சப்படுதலையும் குறைக்கின்றது..

வெந்தயம் : கொழுப்பைக் குறைப்பதில் பெரும் பங்கு இதற்கு உண்டு..

இலவங்கப் பட்டை :
பட்டை தூளுடன் மிளகுத்தூள் சம அளவில் (இரண்டு கிராம்) சேர்த்துக் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில்  வாரத்தில் சில நாட்கள் குடித்து வந்தால் உடலுக்குத் தீங்கு தரும் கெட்ட கொழுப்பு  குறையும்..


இஞ்சி இடுப்பழகி :
அரை டீஸ்பூன்  சுக்குப் பொடியைச் வெந்நீரில் கலந்து ஆறவைத்து தேன் கலந்து பருகினாலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும்.. 

சிலர் இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து கொள்ள  பரிந்துரைக்கின்றனர்..

பூண்டு :
கொழுப்பைக் குறைத்து, ரத்த அழுத்தம் உயர்வதைக் தடுக்கின்றது.. மேலும் மாரடைப்பு மற்றும்  பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைகின்றது..
**

இங்கே நம்ம வீட்ல 
பாலுந் தயிரும் 
வெண்ணெயும் நெய்யும் 
இல்லேன்னா 
நப்பின்னை வீட்டுக்குப் 
போய் எடுத்தாய்?..


புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டு வந்து
அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண்
பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி
பற்பநாபா கொட்டாய் சப்பாணி.. 79
-: பெரியாழ்வார் :-


இந்த காலகட்டம் மிகவும் சிக்கலாக இருக்கின்றபடியால் காய்களை சற்று அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகின்றது..

கொழுப்பு விஷயத்தில் வேறு வேறு கருத்துகள் பரவலாக இருப்பதால் நல்ல மருத்துவரது ஆலோசனைகளைப் பின்பற்றுவது நலம்..

இருப்பினும் உடல் உழைப்பு குறைந்து விட்ட இக்காலத்தில் நெய் எண்ணெய் வகைகளின் பயன்பாட்டில் கவனமாக இருந்து நலம் பெறுவோம்..
*

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.. 947

பசித் தீயின் அளவாலே அல்லாமல், காலமும் அளவும் அறியாதபடி பெருமளவு உண்டானானால், அவனிடத்திலே எல்லையில்லாமல் நோய்களும் வளரும்..

ஒருவன் தனது பசியறிந்து 
உண்ண வேண்டிய நேரத்தில் 
உணவின் அளவு (தன்மை) அறியாமல் 
அதிகம் உண்டானானால், அவனிடத்தில் 
நோய்களும் அளவின்றி  வளரும்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்
நாளும் வாழ்க
நன்றென வாழ்க..

ஓம் சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

 1. படிக்கும்போதே பாதி விவரங்கள் மறந்து விடுகின்றன...    நல்ல விஷயங்கள் எங்கே மனதில் நிற்கின்றன, சொல்லுங்கள்!

  பதிலளிநீக்கு
 2. துரை அண்ணா நல்ல விஷயங்கள். கருத்துகள். கொழுப்புச் சத்தும் அவசியம் ஆனால் அளவாக உட்கொண்டால் நல்லதே. அவரவர் உடல் நிலையைப் பொருத்து உள்ளுக்குள்ளான நிகழ்வுகள் பொருத்து அளவும் மாறலாம். உடலுழைப்பு உள்ளவர்களுக்குப் பொதுவாக கொழுப்பு கரைந்துவிடும் என்பார்கள்.

  நப்பின்னை வீட்டுக்குப் போய்// ஹாஹாஹா சிரித்துவிட்டேன். கிச்சா படங்கள் சூப்பர்.

  கீதா

  பதிலளிநீக்கு
 3. கொழுப்புச் சத்தும் அளவுடன் இருத்தல் வேண்டும் என நன்றாக எடுத்துக் கூறியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. படங்கள் செய்திகள் எல்லாம் அருமை.
  அளவோடு உண்டு வளமோடு வாழ்வோம்.
  நம்முடையை நலம் நம் கையில் என்பது உண்மையே!

  பதிலளிநீக்கு
 5. பயனுள்ள தகவல் களஞ்சியம் ஜி

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. உடலில் சேரக்கூடாத கொழுப்பு வகைகள், அவசியமான கொழுப்பு வகைகள் என அறுந்து கொள்ளும் வகையில் அமைந்த பதிவு அருமை.நல்ல பயனுள்ள விஷயங்களை. தொகுத்து தந்தமைக்கு மிக்க நன்றி.

  படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. யசோதை கிருஷ்ணா படமும், குட்டி கிருஷ்ணர் வண்டியோட்டிச் செல்லும் படமும் மிக நன்றாக உள்ளது.

  நல்ல தரமான உணவை கவனமாக வேண்டிய அளவு உண்டு நம்முடைய நலத்தை பேணி காப்போம் . பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. கொழுப்பு வகைகள் குறித்த தகவல்கள் நன்று. தேவையானவை, தேவையற்றவை என பிரித்துச் சொன்னதும் நன்று. பயனுள்ளவை - பல சமயங்களில் இப்படியான தகவல்கள் படித்திருந்தாலும் மறந்து விடுகின்றன - ஸ்ரீராம் சொன்னது போல!

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..