நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சமூக நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூக நலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 19, 2018

நீதியே துயிலெழாய்...

கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்...

இப்படியும் கூட இருக்கின்றனவா?..
இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று!...

எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாது போயிற்று?...


அந்தப் பெண் குழந்தையைச் சிதைத்த பதினேழு பேர்களுள்
ஒருவன் கூடவா நல்ல சோறு தின்னவில்லை?...

அந்தப் பாவிகளுள் ஒருவன் சொல்லியிருக்கின்றான் -
ஹாசினியைப் போல இந்தப் பெண்ணையும் தீர்த்துக் கட்ட முயன்றோம்!.. - என்று...

ஹாசினியைக் கொன்றவன் இந்நேரம் சாம்பலாகி இருந்தால்
இந்தப் பாவிகளுக்கு கொஞ்சமாவது மனம் நடுங்கியிருக்கும்...


தலைநகரில் நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமையை மறந்திருக்க மாட்டோம்...

நிர்பயாவுக்கு அதிகபட்ச கொடுமையைச் செய்தவன் - 18 வயது ஆகாதவன்... 

இந்தப் பாவிதான் உள்ளுறுப்புகளைச் சிதைத்து வெளியே இழுத்துப் போட்டவன் என்று ஊடகங்கள் பேசின...

ஆயினும்,

அவனுக்குக் கடுந்தண்டனை கொடுக்க இயலாது என்று விடுவித்தது சட்டம்... 

இப்போது அவன் எங்கோ சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான்...

நிர்பயாவைச் சீரழித்து சிதைத்த மாபாவிகள்
மண்ணோடு மண்ணாக மக்கிப் போயிருந்தாலாவது

இந்தப் பாவிகளின் நெஞ்சம் வெகுவாக நடுங்கியிருக்கும்...

ஆனால்,
நிர்பயா வழக்கில் அந்த இளங்குற்றவாளியை
சீதனத்துடன் வழியனுப்பி வைத்த நாடாயிற்றே - நம்முடையது!..

இன்னும் ஒரு சாரார் சொல்லுகின்றனர் -
அரபு நாட்டின் சட்ட திட்டங்கள் மேலானவை - என்று...

1450 ஆண்டுகளாகத்தான் அவையெல்லாம்....
சில மாதங்களுக்கு முன் கூட -
அங்கே குற்றவாளியின் தலைவெட்டப்பட்டது...

அப்படியானால் இன்னும் மனிதன்
திருந்தவில்லை என்பதே பொருள்...

முதல் தலைவெட்டினைக் கண்டு நடுங்கிய மனிதன்
எப்போது அந்த அச்சத்திலிருந்து நீங்கினானோ
அப்போதே நீதியும் நேர்மையும் தளர்ந்து விட்டன...

இதெல்லாம் இப்படியிருக்க
நம்முடைய பாரதத்தின் நீதிநெறி முறை எப்படிப்பட்டது!?...

இதோ சில சான்றுகள்...


காசி மன்னனின் மகனைக் கொன்றதாகக்
குற்றம் சாட்டப்பட்டு இப்போது கொலைக்களத்தில் நிற்கிறாளே...
இவள் எனது மனைவி...

ஆனாலும்.. நான் நீதி தவறேன்...

மன்னனின் ஆணையை நிறைவேற்ற வேண்டியது
மயானக் காவலாளியாகிய எனது கடமை!..
நீதிநெறியிலிருந்து ஒருநாளும் தவற மாட்டேன்!..

- என்று தன் மனைவியின் மீதே வாளை ஓச்சியவர் 
ஸ்ரீ ஹரிச்சந்த்ர மஹாராஜா!..
***

மகாபாரதத்தில் ஒரு சம்பவம்...

உயர்நிலை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்...
வழக்கில் நால்வர் சிறை பிடிக்கப்பட்டனர்...

தீர விசாரிக்கப்பட்டது...

பாண்டவர்களுள் மூத்தவராகிய தர்மபுத்திரர் தீர்ப்பை வழங்கினார்..
அதன்படி -

பொருளுக்காகக் கொலையைச் செய்தவன் - சூத்திரன்...
மன்னிப்புடன் விடுவிக்கப்பட்டான்..

கொலைக்குப் பொருளுதவி செய்தவன் - வைசியன்..
தலை மழிக்கப்பட்டு கரும்புள்ளி செம்புள்ளியுடன் நாடு கடத்தப்பட்டான்...

கொலையாளிக்குப் பாதுகாப்பு தருவதாகச் சொன்னவன் - க்ஷத்திரியன்..
கொலைக் களத்தில் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டான்...

கொலைக்கான உத்தியை வகுத்துத் தந்தவன் - வேதியன்..
கொலைக் களத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டான்...
***
அவ்வளவு ஏன்!..

பாண்டிமாதேவியின் சிலம்பைத் திருடிய கள்வன் இவனே!.. 
- என்ற குற்றச்சாட்டின் பேரில்
விசாரணை நடத்தப்படா விட்டாலும் 
பூம்புகாரின் கோவலனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு - மரணம்!...
***

உஜ்ஜையினி மாநகரிலும் இதே போல ஒன்று..

அரசே!.. அரண்மனையில் களவு போன நகைகள் இந்த ஆளின் கழுத்தில் கிடந்தன..

அப்படியா... கழுவில் ஏற்று!...

தீர்ப்பு சொன்னவர் - பர்த்துருஹரி மகாராஜா....

குற்றவாளியாய் நின்றவர் பட்டினத்தடிகள்...

அன்றைக்கு பூம்புகாரில் வைரத்தூண் நாட்டி வணிகம் செய்தாரே - அவர்!..

பட்டினத்தடிகளைக் கழுவேற்றும் போது 
கழுமரம் பற்றி எரிந்து சாம்பலாகப் போனதும்

பர்த்துருஹரி மகாராஜா திருவோடு ஏந்தி 
தெருவோடு போனதும் தனிக்கதை...
***
மாநகர் மதுரையில் -
அர்த்த ராத்திரியில் ஒரு வீட்டின் கதவை
சந்தேகத்தின் பேரில் தட்டி விட்டான் - அவன்!..

அவன் - இரவில் ஊர்க்காவல் வந்த பாண்டிய மன்னன்..

அப்படித் தட்டிய பிழைக்காக -
தனது முன்கையைத் தானே வெட்டிக் கொண்டான்...

அவனைப் பொற்கைப் பாண்டியன் என்கின்றது வரலாறு...
*** 

கொள்ளையர்களைப் பிடிக்கக் கடமைப்பட்டவன்
அவர்களோடு தொடர்பு வைத்துக் கொண்டான்!..

- என்று பொய்யுரைக்கப்பட்டதால்,
அதே மதுரையில் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டது சோழ நாட்டு வீரனுக்கு!..

அவனே இன்றைக்கு மதுரை வீர ஸ்வாமி!...
***


சாதாரண திருட்டுக் குற்றங்களுக்கே
மரண தண்டனை - எனில்
செங்கோன்மையா.. கொடுங்கோன்மையா!..

எல்லாவற்றுக்கும் மேலாக -
திரு ஆரூர் மாடவீதியில் பசுங்கன்று ஒன்று
தேரில் அடிபட்டு மாண்டு போனது....

அந்தத் தேரை ஓட்டி வந்தவன் அரசிளங்குமரன்...

நடந்ததைக் கண்டவர்கள் பற்பலர்..

அடே... மூடனே!.. 
மாட்டைக் கட்டிப் போட்டு வளர்க்க வேண்டாமா?..
இப்படியா தெருவில் அலைய விடுவது!...

இளவரசே.. நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள் .. இளவரசர் வாழ்க!..

வாழ்க.. வாழ்க!..

மாட்டுக்குரியவனும் வாழ்க.. - என்று சத்தம் போட்டுவிட்டு,
 விதியே!.. - என்று வீட்டுக்குப் போனான்...

ஆனால்,
கன்றை இழந்த பசு போய் நின்ற இடமோ அரசனின் மாளிகை...

நின்றதோடு அல்லாமல்
அங்கே தொங்கிக் கொண்டிருந்த வெங்கல மணியைப் பற்றியிழுத்தது...

ஒருநாளும் இல்லாத திருநாளாக -
ஆராய்ச்சி மணி ஒலிப்பதைக் கேட்டு ஊரே அதிர்ச்சியுடன் திரண்டு வந்தது...

மாட்டுக்குரியவனும் அந்தக் கூட்டத்திலிருந்தான்..

அரண்மனையின் வாயிலருகில் கண்ணீரும் கம்பலையுமாய்ப் பசு!...

மன்னன் நேரிடையாக விசாரித்தான்...

அது ஒன்னுமில்லீங்க மகராசா!...
மாட வீதியில நம்ம சின்னராசா தேர்ல... போனாருங்களா!..
அப்போ ஒரு கன்னுக்குட்டி குறுக்கால ஓடி விழுந்துச்சுங்களா!
உசிரு போய்டுச்சுங்க... அது ஒரு நோஞ்சான் கன்னுக்குட்டிங்க!..

செத்துப் போன கன்னுக்குட்டி இந்த மாட்டோடதுங்க!...
அதுக்கோசரம் இந்த மாடு மணியப் புடிச்சு இழுத்துப் போட்டுடுச்சுங்க!..
அறிவு கெட்ட மாடுங்க இது... மகாராசா மன்னிக்கோணும்!..
இந்தா.. இப்பவே மாட்டை வெரட்டி விட்டுறோம்!... 
டேய்.. சின்னான்!.. உம் மாட்டப் பத்திக்கிட்டுப் போடா!..

நில்லுங்கள்!... - அரசனின் குரலுக்குக் கட்டுப்பட்டது கூட்டம்..

நான் தீர்ப்பு வழங்க வேண்டும்!..

தீர்ப்பா!.. - அதிர்ச்சியுடன் அதிசயித்தனர் மக்கள்...

ஏதோ ஒரு வராகன் ரெண்டு வராகன் கொடுத்தா 
வாங்கிட்டுக்கிட்டுப் போய்டுவான் - சின்னான்!.. இதுக்குப் போயி!..

ஏன்?.. சின்னான் வீட்டு கன்றுக்கு வாழும் உரிமையில்லையா ஆரூரில்!..
அது களிப்புடன் ஓடி விளையாட இடமில்லையா இந்தத் திருஆரூரில்!...

திருஆரூரின் மக்கள் திகைத்தனர்...

அமைச்சரே!.. குற்றவாளியைக் கிடத்தித் தேரை அவன் மீது நடத்துங்கள்!...

வேண்டாம்..வேண்டாம்!.. - கதறித் துடித்தனர் மக்கள்...

இவன் இளவரசன்.. எமக்கு அன்பானவன்.. 
இவனே எமக்கு அரணும் ஆனவன்!..
- என்ற நம்பிக்கை வரவேண்டாமா உங்களுக்கெல்லாம்!...

இவனது இன்றைய செயலைக் கண்டு
நாளைய உலகம் அஞ்சி நடுங்காதா?...
இவனது தேரின் மணிகள் ஆடும் போதெல்லாம்
உங்களது இதயமும் சேர்ந்தாடி நடுங்குமே!..

மக்கள் மீது ஏற்றுவானோ... மாக்கள் மீது ஏற்றுவானோ..
என்றெல்லாம் உங்கள் மனம் பதறித் துடிக்குமே...
அந்தப் பாவத்தை நான் எங்கே சென்று தொலைப்பேன்!...
எம் முன்னோர் தம் செங்கோல் வளைவதற்கு விடுவேன் அல்லேன்!..

வழி விட்டு நில்லுங்கள்.. இது அரச கட்டளை!..

அதற்கு முன்னும் பின்னும் நடக்காத வண்ணமாக
தனது மகனைக் கிடத்தி அவன் மீது தேரை நடத்தி
நீதியை நிலைநாட்டினான் - மனுநீதிச் சோழன்!...

வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்!..

- என்று, இந்நிகழ்வினை
கற்புக்கரசியின் திருமொழியாக இயம்புகின்றார் இளங்கோவடிகள்...

இப்படியெல்லாம் -
நீதி நிலைநாட்டப்பட்டிருக்கின்ற திருநாடு நம்முடையது...

இத்தகைய நாட்டைப் பிடிக்க வந்தோர் -
நாடு காக்க முனைந்த நல்லோரை நடுத்தெருவில் தூக்கிலிட்டுக் கொன்றனர்..

செங்கிஸ்கான், அலாவுதீன் கில்ஜி முதற்கொண்டு
பின்வந்த டல்ஹவுஸி, பானர்மென் - எனப் பலரை அடையாளம் காட்டலாம்....

அந்த ஈனர்களைக் கடந்து
தர்மத்தின் வழி நடப்பது நம்முடைய நாடு...

இந்த நாட்டிற்கும் வீட்டிற்கும் அவலங்களாகிய இந்த அற்பர்கள் அனைவரையும் நீதியின் வழி நின்று கொன்றொழிப்பதே சாலச் சிறந்தது...

நம்முடைய கலையையும் கலாச்சாரத்தையும் 
சிதைப்பதற்கு மாற்றார் தலைப்பட்டனர்...

அதைக் கண்டு -
நம்மவர்களில் ஒரு சிலர் கை கொட்டிக் களித்தனர்.. 
அந்தக் கயவர்களுக்கு உறுதுணையாகவும் இருந்தனர்...

தாய்வழிக் கல்வியையும் தமிழ்வழிக் கல்வியையும் - 
நாம் விலக்கி வைத்ததன் விளைவுகளே இவை...

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைக் கட்டதனோடு நேர்...

- எனும் அமுத மொழியைப் பின்பற்றி
தாமதிக்காமல் அதிகபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும்..

பொறுத்துக் கொள்ள முடியாத கொடுஞ்செயல்களைச் செய்யும்
கொடூரர்களை மிருகங்கள் என்று சொல்வதே மிகப் பெரிய பாவம்...

மிருகங்கள் எவ்வளவோ மேலானவை!..

இந்தப் பாவிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனையால்
மற்ற கயவர்கள் தாமாகவே தமது மரணத்தைத் தழுவிக் கொள்ளவேண்டும்!..

ஆனால், அப்படியெல்லாம் பேராசைப்படமுடியுமா - நம்நாட்டில்!...

பாதிக்கப்பட்ட இந்தக் குழந்தை மனம் தெளியவேண்டும்...
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பவேண்டும்...
அதற்கு நாமெல்லாரும் வேண்டிக் கொள்வோம்..

ஓம் 
சக்தி சக்தி 
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ

வியாழன், ஜூலை 09, 2015

ஈர நிலம்

கலங்குகின்றது மனம்..

பச்சிளம் பாலகனை - பீர் குடிக்க வைத்த செய்தியின் வலி ஆறுவதற்குள் - அடுத்த அதிர்ச்சி..


நேற்று முன் தினம் -

கோவை - தனியார் பள்ளி ஒன்றில் மேல் நிலை வகுப்பு பயிலும் மாணவி - தனது தோழியருடன் வகுப்பிலிருந்து வெளியேறி - மது அருந்தி விட்டு சாலையில் ரகளை செய்திருக்கின்றார்.

பதினாறு வயதுடைய மாணவியின் - இந்தச் செயலால் - தமிழகம் அதிர்ந்திருக்கின்றது.

நேற்று காலையில் இணையத்தில் இந்த செய்தியை படித்ததும் ஒன்றுமே புரியவில்லை..

எங்கே சென்று கொண்டிருக்கின்றது நாடு!..

மனசாட்சியின்றி பணப்பெட்டியை நிரப்புவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது!..

சக நண்பர்கள் மது வாங்கி வந்திருக்கின்றனர்.. அதை அருந்திய பின்னரே - சாலையில் ரகளை..

மாணவ மாணவியர்க்கு எப்படி இத்தனை தைரியம் வந்தது?..

உடன் வந்த எவரும் -  தமது தோழி மது அருந்துவதைத் தடுக்கவில்லையே ஏன்?..

மது அருந்திய தோழியின் பெற்றோருக்கு -
எந்த வகையிலாவது - உடனிருந்தவர்கள் தகவல் தெரிவித்திருக்கலாமே!..

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் 
மேற்சென்று இடித்தற் பொருட்டு..

- எனும் திருக்குறள் நினைவுக்கு வரவில்லை போலும்!..


இன்றைய சூழ்நிலையில் -
இளம் பருவத்தினர் எதை நோக்கி நகர்த்தப்படுகின்றனர்?..

இந்த மாணவி - இப்படி சாலையில் ரகளை செய்ததற்கு என்ன காரணம்?..

ஒருவழியாக பெண் போலீசார் விரைந்து வந்து வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டு வந்து - துடியலூர் காவல் நிலையத்தில் சேர்த்திருக்கின்றனர்..

மகளின் நிலை கேட்டு பதறியடித்துக் கொண்டு வந்த பெற்றோர் - கதறியழ,

எதிர்கால நலன் கருதி - வீட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றாள்.

இத்துடன் அங்கே - விஷயம் முடிந்துள்ளது.

மேலும் - கோவை அருகே -

தனியார் பள்ளி ஒன்றில் இடைவேளையின் போது செல்போனில் ஆபாசப் படம் பார்த்த மாணவியர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்..

வகுப்பறையில் ஆபாசப் படம் பார்க்கும் அளவுக்கு - மாணவியரின் தேவை என்ன?..

எத்தனை நெஞ்சழுத்தம் இருந்தால் - இந்த மாதிரி செய்திருப்பார்கள்?..

இவர்களுடைய அடுத்த இலக்கு எதுவாக இருக்கும்?...

அடுத்தது - சிவகங்கை அருகில் - கீழப்பூங்குடி.,

இங்கே - பள்ளி மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் - ஆபாச படங்களை செல்போனில் பதிவு செய்து கொடுத்த குற்றத்திற்காக ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கின்றான்..

இவன் -

கீழப்பூங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவன்..

மாணவர்களைத் தன்னுடன் பிறந்தவர்களாக நினைத்திருந்தால் -
இந்த மாதிரி பதிவு செய்து கொடுத்திருப்பானா!?..

இள நெஞ்சங்களில் நஞ்சினை விதைத்த - இந்தப் பாவியை என்ன செய்தால் தகும்!..

அடுத்தது - விழுப்புரம் மாவட்டத்தில்..

துர்கா.. நான்கு வயது குழந்தை..

இந்தக் குழந்தையுடன் விளையாட வருபவள் - வீட்டிற்கு அருகிலுள்ள சிறுமி. பத்தாம் வகுப்பு படிப்பவள்..

ஒருவாரத்திற்கு முன்பு - துர்காவின் வீட்டுக்கு விளையாட வந்தபோது - அங்கிருந்து பத்து ரூபாய் திருடியிருக்கின்றாள்..

இதைக் கண்ட குழந்தை - தன் தாயிடம் சொல்லி விட்டது.

பணத்தைத் திருடிய பெண் கண்டிக்கப்பட்டிருக்கின்றாள்..

இதனால் கோபமுற்ற அந்த மாணவி - கடந்த திங்கட்கிழமையன்று - தன்னைக் காட்டிக் கொடுத்த குழந்தையைத் தூக்கிச் சென்று கிணற்றில் போட்டு விட்டாள்..

கிணற்று நீரில் மூழ்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது..

பத்தாம் வகுப்பு மாணவிக்குத் திருடுவது தவறென்று புரியவில்லை..

அதையும் மீறி - பச்சிளங்குழந்தையைக் கொல்வது குற்றம் என்பதும் தெரியவில்லை..

வளரும் பருவத்தில் அப்படியென்ன கொலைவெறி!..


தனி மனித ஒழுக்கம் மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருக்கின்றது..

நல்லொழுக்கம் என்பது கேலிப் பொருளாகிக் கொண்டிருக்கின்றது!..

இதற்கெல்லாம் இதுவே - முக்கிய காரணம்..

உடையவன் பார்க்காத பயிர் ஒருமுழம் கட்டை!.. - என்பார்கள்..

பிள்ளைகளைப் பெற்றோர் கவனித்து வழி நடத்த வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியமாகின்றது..

நாடு மோசமான சூழ்நிலையில் இருக்கின்றது..

மதுக்கடைகளில் ஆண்கள் தங்கள் வாழ்வினைத் தொலைக்கின்றார்கள் என்றால் -

வஞ்சனையும் சூதும் - ஓலமும் ஒப்பாரியும் - நிரம்பித் ததும்பும் தொலைக் காட்சித் தொடர்களில் பெண்களின் நேரம் கழிந்து கொண்டிருக்கின்றது..

பெண்கள் மது அருந்துவது போன்ற காட்சிகள் - இன்றைய தொலைக்காட்சித் தொடர்களிலும் இடம் பெறுகின்றனவாம்..

மதுவுக்கு எதிராக மக்கள் ஒருங்கிணைய வேண்டியது அவசியமாகின்றது..

ஒவ்வொரு பெற்றோரும் - தம் பிள்ளைகளைக் கண்காணித்து - நல்வழியில் நடத்த வேண்டியது தலையாய கடமையாகின்றது..


நல்லறிவும் நல்லொழுக்கமும் பேணிக் காக்கப்படவேண்டும்..

இளையோரும் தம் நெஞ்சில் நல்லவைகளுக்கு அன்றி வேறெதற்கும் இடங்கொடாது - தம்மைத் தற்காத்துக் கொள்ளுதல் வேண்டும்..


தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும்.. (202)  

- எனும் திருக்குறளைத் தம் சிந்தையில் கொள்ளவேண்டும்..

பரந்து விரிந்த இந்தப் பூமியில் - நல்ல விஷயங்கள் மட்டுமே நம்மை முன்னேற்றுபவை என்பதை உணரவேண்டும்.

வளரிளம் பருவத்தினரை - பச்சை மண் - என்பார்கள்..

எதைச் சொன்னாலும், பசுமரத்தாணி போல் - மனதில் பதியக்கூடிய பருவம்.

விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?.. - என்பது சொல்வழக்கு..

மண்ணில் மறைவாக என்ன விதை போட்டாலும் -
போட்ட விதை என்ன என்று மரம் வளர்ந்து காட்டாதோ!..
- என்றுரைப்பார் கவியரசர் கண்ணதாசன்..

எதை விதைத்தாலும் முளைத்துக் கொள்ளும்.. ஆனாலும்,
விதைக்கப்பட வேண்டியவை - நல்ல விதைகளே!..

இளையோர் நெஞ்சம் - ஈர நிலம்!..

அதில் நல்லனவற்றை விதைப்பதற்குத் 
தகுதியுடையோருள் தலைசிறந்தவர்கள்

பெற்றோர் எனும் உழவர்களே!..

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்..(131)

மண் பயனுற வேண்டும்..
* * *