நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

அக்னிச் சிறகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அக்னிச் சிறகு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூலை 27, 2016

என்றும் நினைவில்..

ஜூலை 2002 ல்
டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்கள்
பாரதத் திருநாட்டின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றபோது -

குடியரசுத் தலைவரின் மாளிகைக்கு எடுத்து வந்த பொருட்களை விட - 

ஜூலை 2007 ல்
பதவிக் காலம் முடிந்தது -
குடியரசுத் தலைவரின் மாளிகையிலிருந்து
திரும்பியபோது எடுத்துச் சென்ற பொருட்கள் குறைவு.. 

15 அக்டோபர் 1931.,  27 ஜூலை 2015..









அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த சமயத்தில் ராமேஸ்வரத்திலிருந்து உற்றார் உறவினர்கள் புறப்பட்டு வந்தனர் - டெல்லிக்கு..

அவர்கள் டெல்லியைச் சுற்றிப் பார்ப்பதற்கு 
அரசு வாகனங்கள் எதையும் பயன்படுத்தாமல்
தனது சொந்த செலவில் பேருந்து ஒன்றினை ஏற்பாடு செய்தார்..

ஜனாதிபதி மாளிகையில் -
அவர்களுக்கான சாப்பாடுச் செலவையும் 
தனது கைப் பணத்திலிருந்து -  அரசுக்கு செலுத்தியவர் - 

அப்துல் கலாம்!..

இது பாரதத் திருநாட்டின் வரலாற்றில் இல்லாத புதுமை!..


நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.. (234)

நிலவுலகில் நெடுங்காலம் நிற்கவல்லதாக 
புகழ் மிக்க செயலைச் செய்தால் 
அவ்வாறு செய்தவரைத் தான் 
வானுலகம் போற்றிப் புகழும்..
***


இன்று முதலாண்டு அஞ்சலி..

வையம் உள்ளளவும் பேர் வாழ்க..
***

புதன், ஜூலை 29, 2015

இனியொரு முறை...

நெஞ்சம் இன்னும் அமைதி பெறவில்லை..

நேற்று முதல் நிம்மதியான உறக்கமும் இல்லை..

அரிது.. அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!.. - என்றார் ஔவையார்..

அப்படிப் பிறந்தாலும் ,

அப்துல் கலாம் அவர்களைப் போல் வாழ்வது அரிது..


சென்று வருக.. ஐயா.. சென்று வருக!..
அப்துல் கலாம் அவர்களின் ஆலோசகர் ஸ்ரீ ஜன்பால்சிங் -  தனது Facebook - பக்கத்தில் - கலாம் அவர்களின் கடைசி நிமிடங்களைப் பதிவிட்டுள்ளார்..

அதிலிருந்து ஒரு பகுதி..

ஜூன் 27.

குவாஹாத்திக்கு ஒன்றாக விமானத்தில் புறப்பட்டபோது பகல் மணி 12.


டாக்டர் கலாம் அவர்கள் 1-ஏ , எண் கொண்ட இருக்கையில் அமர்ந்திருந்தார்.. அவர் அடர் நிறத்தில் ஆடை அணிந்திருந்தார்.

நல்ல நிறம்!.. என, அவரிடம் - அவரது ஆடையைச் சுட்டிக் காட்டி சொன்னேன்.

அப்போது என் மனம் அறிந்திருக்கவில்லை - அதுவே அவரை நான் பார்க்கும் கடைசி நேரம் என்று!..


அப்துல் கலாம் அவர்களுடன் - ஸ்ரீஜன்பால் சிங்
விமானத்தில் இரண்டரை மணி நேரப் பயணம்..
அதன் பின் அங்கிருந்து ஷில்லாங் - ஐ. ஐ. எம். நோக்கி - காரில் மீண்டும் இரண்டரை மணி நேரப் பயணம்..


விமானம், கார் - என பயணமே ஐந்து மணி நேரத்தை விழுங்கி விட்டது. ஆனாலும் - பயணத்தின் போது நிறைய பேசினோம்..

பஞ்சாபில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் அவரை வெகுவாகவே பாதித்திருந்தது.. 

அப்பாவி உயிர்களின் பலி அவரைத் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது. 

அன்றைய தினம் அவர் ஷில்லாங் ஐ. ஐ. எம். அரங்கில் பேசவிருந்த தலைப்பு -

வாழ்வதற்கு உகந்த பூமி..

பஞ்சாப் சம்பவத்தையும் அவர்  பேசவிருந்த தலைப்பினையும் ஒப்பிட்ட கலாம் அவர்கள் - 

மனிதர்களால் ஆன சக்திகள் பல இந்தப் பூமியை வாழ்வதற்குத் தகுதி அற்றதாக மாற்றி வருகின்றன.

வன்முறையும் சுற்றுச்சூழல் மாசும் சற்றும் பொறுப்பற்ற மனித நடவடிக்கைகளும் தொடர்ந்தால் இன்னும் முப்பதாண்டு காலத்தில் நாம் இந்த பூமியை விட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்..

இதைத் தடுக்க உங்களைப் போன்றவர்கள் ஏதாவது ஆக்கபூர்வமாக செய்யவேண்டும் எதிர்காலம் உங்கள் கைகளிலே இருக்கின்றது - என்றார்.

அதற்கு அடுத்த நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியானது.


அவரது பண்பாட்டிற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு..

எங்கள் வாகனத்திற்குப் பாதுகாப்பாக ஆறு வாகனங்கள் வந்தன. 
நாங்கள் இரண்டாவது வாகனத்தில் இருந்தோம்.

எங்களுக்கும் முன்னதாகச் சென்ற ஜிப்ஸி வாகனத்தில் மூவர் இருந்தனர். இருவர் அமர்ந்திருக்க ஒருவர் நின்றபடியே பயணித்தார். 

ஒருமணி நேரப் பயணம்.. 

அவர் ஏன் நின்று கொண்டே வருகிறார்?.. அவர் சோர்ந்து விடுவார். அவருக்குத் தண்டனை போல் இருக்கின்றதே.. ஏதாவது செய்யுங்கள்.. ஒயர்லெஸ்ஸில் தகவல் அனுப்பி அவரை உட்காரச் சொல்லுங்கள்... 

- என, கலாம் அவர்கள் என்னிடம் கூறினார்.

நான் எவ்வளவோ எடுத்துக் கூறினேன்.. ஆனால் கலாம் அவர்கள் சமாதானம் அடையவில்லை. 

ரேடியோ கருவி மூலமாக தகவல் அனுப்ப முயன்றோம். 
அது சரிப்பட்டு வரவில்லை.. 

அடுத்த ஒன்றரை மணி நேரப் பயணத்தின் போது ஷில்லாங் சென்றதும் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்!... - என மூன்று முறையாவது கூறியிருப்பார்..

ஷில்லாங் சென்றதும் அந்த வீரரைத் தேடிக் கண்டு பிடித்து அழைத்துச் சென்றேன்..

பாதுகாப்பு படை வீரருக்கு நன்றி
அந்த வீரரிடம் கைகுலுக்கிய கலாம் அவர்கள் - சோர்வாக இருக்கின்றாயா?.. ஏதாவது சாப்பிடுகின்றாயா?.. எனக்கேட்டார்.

எனக்காக நீ நீண்ட நேரம் நிற்க வேண்டியதாகி விட்டது. அதற்காக நான் வருந்துகின்றேன்!.. - என்றார்..

அதைக்கேட்டு வியந்த - அந்த வீரர் ,
சார்.. உங்களுக்காக நான் ஆறு மணி நேரம் கூட நிற்பேன் !.. என்றார்..

அதன்பிறகு கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்குச் சென்றோம். 

அவர் எப்போதுமே குறித்த நேரத்திற்குச் செல்ல வேண்டும் என்ற கொள்கை உடையவர்.  மாணவர்களைக் காக்க வைக்கக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்..

அவருக்காக ஒலிபெருக்கியைச் சரி செய்து -கருத்தரங்கு குறித்து சுருக்கமாகக் குறிப்பு வழங்கினேன்.. 

மேடையில் ஏறி இரண்டு நிமிடங்களே பேசியிருப்பார்.. நீண்ட இடைவெளி.. 

நான் அவரைப் பார்க்க - அவர் கீழே சரிந்தார். நாங்கள் அவரைத் தூக்கினோம். 

மருத்துவர்கள் விரைந்து வந்தனர். 
என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தனர். 

ஒரு கையால் அவரது தலையைத் தாங்கியிருந்தேன்.. 

பாதி மூடிய கண்களில் அவர் என்னைப் பார்த்த அந்த கடைசி பார்வையை என்றென்றைக்கும் மறக்க இயலாது. 

எனது கையை இறுகப் பற்றி - என் விரல்களைத் தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டார்.. 

அவரது முகத்தில் அமைதி தவழ்ந்தது.. அவர் எதுவும் பேசவில்லை.. 
வலியை சிறிதும் காட்டவில்லை.. அவரது கண்களில் ஞானஒளி வீசியது.

ஐந்து நிமிடங்களுக்குள் நாங்கள் மருத்துமனையை அடைந்திருந்தோம்.

ஆனால் - அப்போதே ஏவுகணை நாயகன் விண்ணில் பறந்திருந்தார்.

அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினேன்.

எனது மூத்த நண்பருக்கு எனது குருவுக்கு பிரியாவிடை செலுத்தினேன்..

உங்கள் நினைவுகள் என்னை விட்டு நீங்காது. அடுத்த பிறவியில் சந்திப்போம்.

Facebook-ல் வந்ததை ஓரளவு சுருக்கமாக பகிர்ந்துள்ளேன்..
* * *
சகோதரருடன் கலாம் அவர்கள்
அப்துல் கலாம் அவர்களின் இறுதிச் சடங்கினை சொந்த ஊரில் நடத்தப்பட வேண்டுமென - அவரது சகோதரர் குடும்பத்தினரும் உறவினர்களும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அவர்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

அந்த அளவில் - அப்துல் கலாம் அவர்களின் பூத உடலைச் சுமந்து கொண்டு தலைநகரிலிருந்து இன்று காலை 8.15 மணியளவில் புறப்பட்ட தனி விமானம் - பகல் 12.30 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியது..

தமிழக அரசின் சார்பில் மாநில ஆளுநர் ரோசய்யா, தலைமைச் செயலர் ஞானதேசிகன் ஆகியோர் பெற்றுக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்..

அஞ்சலிக்குப் பின் - அப்துல் கலாம் அவர்களின் பூதவுடலைச் சுமந்து கொண்ட ராணுவ ஹெலிகாப்டர் ராமேஸ்வரம் நோக்கிப் பறந்தது.

புன்னகை ததும்ப இன்முகம் காட்டிச் சென்ற தங்கமகன் பூமாலைகளுடன் சடலமாக வந்து இறங்கிய கொடுமையை எண்ணிக் கண்ணீர் வடித்து நிற்கும் மக்களின் அஞ்சலிக்காக - அப்துல் கலாம் அவர்களின் பொன்னுடல் - 

ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள மைதானத்தில் இரவு எட்டு மணி வரைக்கும் வைக்கப்பட்டிருக்கும்..

அதன் பின் - கலாம் அவர்களின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றது..

நாளை (27) காலை எட்டு மணியளவில் - அப்துல் கலாம் அவர்களின் ஜனாஸா - பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது..

பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகைக்குப் பின்,
ராமேஸ்வரம் - தங்கச்சி மடம் சாலையில் உள்ள அரசு நிலத்தில் நல்லடக்கம் நடைபெறுகின்றது..

பொக்ரான் குண்டு வெடிப்பு
குடியரசுத் தலைவராக பவனி








சாலையோர உணவகத்தில் எளிய உணவு

கோடிக்கணக்கான மக்களின் கண்ணிலும் கருத்திலும் கலந்திருந்த அப்துல் கலாம் அவர்கள் -

தாய் மண்ணில் - தாயின் மடியில் அடைக்கலம் ஆகின்றார்..


பொன்னுடல் நீங்கி புகழுடல் ஆனது..

மண்ணிலிருந்து மாமனிதர் மறைந்தாலும் 
கண்ணிலிருந்தும் கருத்திலிருந்தும் 
எண்ணங்களிலிருந்தும் மறைவதேயில்லை..
எழுச்சிமிகும் பாரதத்தின் இளையோர் மத்தியில் 
அவர் என்றென்றும் திகழ்ந்திருப்பார் - 
அக்னிச் சிறகுகள் கொண்ட அன்பின் பறவையாக!..

என்றும் தங்கள் நல்லாசிகளுடன்!..
இனியொரு முறை.. இனியொரு முறை..
இப்படியொரு பண்பாளரைக் காண இயலுமா!?..
கண்ணுக்கெட்டிய தொலைவிற்கும் தெரியவில்லை!..

வையம் உள்ளளவும் புகழ் கொண்டு வாழ்வார்!..
* * *

செவ்வாய், ஜூலை 28, 2015

அமைதியைத் தேடி

அக்னிச் சிறகுகளை விரித்தபடி 
அந்தப் பறவை - அமைதியைத் தேடி - பறந்து விட்டது..


நம்ப முடியவில்லை..

கண்ணால் செய்திகளைப் பார்த்தும் கூட மனம் நம்ப மறுக்கின்றது..

இவர் தமக்கும் மரணம் உண்டா!.. - என்று மறுகுகின்றது..



நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி.. 
பெருமைக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர்.. 

அதையெல்லாம் விட - தாய் நாட்டின் பெருமையை - 
மாற்றாரும் வியந்து நோக்கும்படிச் செய்த வித்தகர்..

மேதகு APJ அப்துல் கலாம் அவர்கள் மாரடைப்பால் காலமானார். 

பாரதத் தாய் - தனது தவப்புதல்வனை இழந்து பேச மொழியின்றி தவிக்கின்றாள்..

இனி - இப்படியொரு புதல்வனை என்று காண்பளோ!..



அப்துல் கலாம் அவர்கள் நேற்று மாலை மேகலாயாவில் அமைந்துள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். 

அதனையடுத்து ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் - பலனின்றி உயிர் பிரிந்தது.. 

ஏழு நாட்களுக்கு நாடு முழுதும் துக்கம் அனுசரிக்கப்படுகின்றது.

வாழும் காலத்தில் புகழுடன் வாழ்ந்தவர்..



எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில்!.. - என்றார்!..

தன்னுடைய இயல்பான எளிமையினால் - அன்பான மொழியினால்,
காலங்களைக் கடந்து - வானமும் வையமும் உள்ள அளவிற்கு நிலைத்திருக்கும் வாழ்க்கை அவருடையது..


கனவு காணுங்கள்.. 
அந்தக் கனவை நினைவாக்க பாடுபடுங்கள்!..

இளைஞர்களின் இதயங்களில் பதிந்த பொன்னெழுத்துக்கள் அவருடையவை..

நாட்டின் உயரிய விருதுகளான பத்ம பூஷன் (1981) பத்ம விபூஷன் (1990) பாரத ரத்னா (1997) - ஆகியன இவரால் பெருமை கொண்டன..

இன்னும் பற்பல விருதுகளும் இவரைத் தேடிவந்து - சிறப்பு பெற்றன

எளிய - மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர்..
தன் விடாமுயற்சியால் - சிகரங்களைத் தொட்டவர்.




முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!..
- என்பதற்குக் கண்கண்ட அடையாளம் - மேதகு APJ அப்துல் கலாம் அவர்கள்..

நாட்டின் முதற்குடிமகன் என்ற பெருமை அவரைத் தேடி வந்தது..

பதவிக் காலம் முடிந்த பிறகு - நான்கைந்து பெட்டிகளுடன் - ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறியவர்..

அப்படிப்பட்ட ஒருவரை - அப்போதுதான் பாரதம் கண்டு வியந்தது..


அரசியலில் ஈடுபட்டதில்லை - அவர்..

ஆனாலும், அவர் தமக்கு ஆகவில்லை என்பதற்காக - பொங்கிப் புழுங்கினர் அரசியல்வாதிகள்!..

வாழ்ந்து முடித்த பிறகும் நினைவில் நிற்கும் வாழ்க்கை அவருடையது..

வானமும் வையமும் உள்ள அளவிற்கு பாரத மக்களின் மனங்களில் நிலைத்திருப்பார்..



மொழி கடந்து இனம் கடந்து - 
பெரியவர் - சிறியவர், படித்தோர் - பாமரர் என்றில்லாமல் -
பாரத மக்கள் அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இறுதி மூச்சு வரை அயராது மக்கள் பணியாற்றியவர்.

இந்த நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சிந்தித்தவர்.

வளரும் பிள்ளைகளிடமும் மாணவச் செல்வங்களிடமும் அளப்பரிய அன்பு காட்டியவர்.

அவ்வண்ணமாக - 
மாணவர்களிடம் பேசிக்கிட்டு இருக்கும்போதே புகழுடம்பு எய்தினார்..

இத்தகைய மரணம் இறையருள் பெற்றவர்க்கே வாய்க்கும்.

அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம் என்பதே பெருமை..



பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் திருப்பெயர் 
மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்து நிற்கும். 

அவரது ஆன்மா - இறைநிழலில் 
அமைதியடைய வேண்டுகின்றேன்.. 
* * *