நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், நவம்பர் 20, 2017

கார்த்திகைத் திங்கள் 1

எல்லா மாதங்களிலும் தான் திங்கட்கிழமைகள்!..

ஆனாலும்
இந்த கார்த்திகையின் திங்களுக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு?..

திங்கள் - சந்திரனுக்கு உரிய நாள்...

முப்பத்து முக்கோடி தேவர்களிலும் சந்திரன்
மன்மதனுக்கு அடுத்து குறிப்பிடத்தக்க அழகுடையவன்..

இந்த அழகினால் சில அடாத செயல்களும் நிகழ்ந்திருக்கின்றன...

அவற்றுள் தலையாயது -
தட்சனின் இருபத்தேழு பெண்களுள் ஒருத்தியாகிய
ரோகிணியிடம் மட்டும் அதிகம் அன்பு கொண்டிருந்தது..

அதன் பயனாக சந்திரனுக்கு தட்சனின் சாபம் கிடைத்தது -
அழகெல்லாம் தேய்ந்து அழியக்கடவது!.. - என்று...

சாபத்தினால் பாதிக்கப்பட்ட சந்திரன் -
எங்கெங்கோ ஓடிக் களைத்தான்.. நாளும் நாளும் இளைத்தான்...

கயிலாயம் மட்டுமே அவனுக்குக் கை கொடுத்தது...

எல்லாம் வல்ல எம்பெருமான் -
தேய்பிறையான சந்திர கலையைத் தன் திருமுடியில்
சூடிக் கொண்டு அவனுக்கு வாழ்வளித்தார்...

தட்சனின் சாபம் தகர்ந்திட -
அடுத்தடுத்த நாட்களில் சந்திரன் வளர்பிறையானான்...

வளர்பிறையான சந்திர கலையைத் தனது திருமுடியில்
சூடிக் கொண்டு அம்பிகையும் அவனுக்கு வாழ்வளித்தாள்...

இந்த நன்றியினை மறவாத சந்திரன்
வலம்புரிச் சங்கில் அமுதத்தை நிறைத்து
கார்த்திகை மாதத்தின் திங்களன்று
ஐயனுக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து மகிழ்ந்தான்...

இதனாலேயே -
கார்த்திகையின் திங்கட்கிழமைகள் புனிதமாயின...

திருஆலம்பொழில் திருக்கோயில்
நாமும் நம்மிடம் எத்தனை எத்தனையோ
குறைகளையும் குற்றங்களையும் கொண்டிருக்கின்றோம்..

இப்படியிருந்தும் நல்லபடியாக வாழ்கின்றோம்..

இந்த வாழ்க்கைக்கு நன்றி கூறும் நாளே கார்த்திகை சோம வார வழிபாடு...

கார்த்திகை சோமவார வழிபாடு
எல்லா சிவாலயங்களிலும் சிறப்பாக நிகழ்வுறும்...

வழிபாடுகளில் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்வதனால்
நமது பாவச் சுமைகளின் அழுத்தம் குறையும்...

மீண்டும் பாவங்களைச் செய்யாதிருக்கும்படியான
பக்குவமும் மன உறுதியும் உண்டாகும்..

இந்த நல்ல நாளில்
வழக்கம் போல சிவாலய தரிசனம்..

திருத்தலம்
திருஆலம்பொழில்

ஸ்ரீ ஆத்மநாதேஸ்வரர்
ஸ்ரீ ஞானாம்பிகை
இறைவன்
ஸ்ரீ ஆத்மநாதேஸ்வரர், ஸ்ரீ வடமூலேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ ஞானாம்பிகை

தீர்த்தம் - கமல தீர்த்தம்
தலவிருட்சம் - ஆலமரம்

மேற்கு நோக்கிய திருக்கோயில்..
அஷ்ட வசுக்களும் காஸ்யப முனிவரும் வழிபட்ட திருத்தலம்..

காஸ்யப முனிவருக்கு ஆலமரத்தின் கீழ்
சுயம்பு லிங்கமாக தரிசனம் என்பது ஐதீகம்..

திருநாவுக்கரசு ஸ்வாமிகள் தரிசனம் செய்து திருப்பதிகம் அருளியுள்ளார்..


சிவ சந்நிதிக்கு நேரெதிராக குளக்கரையில் விநாயகர் சந்நிதி..
சிவலிங்கத்தைப் பார்த்தவாறு ஸ்ரீ விநாயக மூர்த்தி..

பந்தநல்லூர், தாமரங்கோட்டை - என,
வெகு சில கோயில்களிலேயே இவ்வாறு அமைந்திருக்கும்...

விநாயகர் கோயிலுக்கு பின்னே இருக்கும் தாமரைக் குளத்தில்
இப்போது நீர் நிறைந்திருக்கலாம்.

ஆகஸ்ட் மாதம் நான் சென்றிருந்தபோது வறண்டிருந்தது..

திருக்கோயிலில் சிவ சந்நிதி சற்றே சரிவாக அமைந்துள்ளது..

காரணம் - இங்கே பங்குனி மாதம் 12,13,14 - தேதிகளில்
மாலை வேளையில் சூரிய வழிபாடு நிகழ்கின்றது..

இந்த மூன்று நாட்களும் சூரியனின் கதிர்கள்
சிவ சந்நிதியினுள் பரவி நிற்கின்றன...


கருவறையின் இருபுறமும்
யானை படுத்திருக்க அதன் மத்தகத்தில்
கதையை ஊன்றியவாறு துவார பாலகர்கள்..

சிவசந்நிதிக்கு முன்பாக -
அர்த்த மண்டபத்தில் நால்வர் திருமேனிகள்..


தெற்கு நோக்கி நின்றருளும்
திருக்கோலத்தினளாக ஸ்ரீஞானாம்பிகை...

ஈசனையும் அம்பிகையையும்
முன்மண்டபத்தில் நின்றபடி ஒருசேர தரிசிக்க இயலும்...

திருப்பெயருக்கு ஏற்றவாறு ஞானம் அருளும்
அம்பிகையின் திருவடிகளைப் பணிகின்றோம்...

அம்பிகையின் எதிர்புறமாக நவகிரகங்கள்..

அம்பிகையை வலம் செய்ததும்
தென்புறமாக ஸ்ரீ மகாகணபதி..
வடபுறமாக ஸ்ரீசிவசுப்ரமண்யன் - வள்ளி தெய்வானையுடன்!..

அடுத்து நடராஜ சபை.. சிவகாமி அம்மையுடன் ஆடல் வல்லான்...
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!.. - என, வணங்குகிறோம்..

வடக்கு திருச்சுற்றில் ஸ்ரீ துர்கா தேவி..
மகிஷனின் தலைமீது நிற்கின்றாள்.. எழிலார்ந்த திருக்கோலம்...

அடுத்து சண்டிகேஸ்வர தரிசனம் .. கீழைத் திருச்சுற்று..
திருச்சுற்றின் ஓரத்தில் பலவிதமான மரங்களும் மூலிகைச் செடிகளும்...


தெற்குத் திருச்சுற்றில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சந்நிதி...

ஆலின் கீழ் எழுந்த சிவமூர்த்தி ஆதலால்,
ஆலமர் செல்வன் மேதா தக்ஷிணாமூர்த்தி எனத் திகழ்கின்றார்..

மேலைத் திருச்சுற்றில் காஸ்யப முனிவர் வழிபட்ட சிவலிங்கங்கள்..

நிருதி மூலை மண்டபத்தில் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் விசாலாக்ஷி அம்பிகை...காவிரியின் தென்கரையில் திகழும் அழகான திருக்கோயில்..
எவ்வித ஆடம்பர ஆரவாரங்களும் இன்றி அமைதியாக விளங்குகின்றது..

முன்னொருகாலத்தில்
ஊரின் பெயர் தென்பரம்பைக்குடி என்றும்
திருக்கோயிலின் பெயர் திருஆலம்பொழில் - என்றும் வழங்கப்பட்டுள்ளது..

இதனை திருநாவுக்கரசரின் திருப்பதிகம் மூலமாக அறியலாம்...

ஆனால் இன்றைக்கு ஊரும் திருஆலம்பொழில் என்றாகி விட்டது..

தஞ்சை திருவையாறு சாலையில் -
கண்டியூரில் இருந்து மேற்காக கல்லணைக்குச் செல்லும் வழியில் திருப்பூந்துருத்தியை அடுத்து (2 கி.மீ) உள்ளது திருவாலம்பொழில்...
சாலையின் கீழ்புறமாக எழிலாக அமைந்துள்ளது திருக்கோயில்...

கோயிலின் அருகிலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையம்..


தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன..

தஞ்சையிலிருந்து கண்டியூர் வழியாக
திருக்காட்டுப்பள்ளி செல்லும் நகரப் பேருந்துகளும்
தஞ்சை - கல்லணை செல்லும் புறநகர் பேருந்துகளும்
திருக்கோயிலின் அருகில் நின்று செல்கின்றன..

இந்த வழித்தடத்தில் தான் -
வரகூர் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயிலும் உள்ளது..

இந்த வருடம் வைகாசியில் (ஜூன்/5) திருக்குடமுழுக்கு நிகழ்ந்துள்ளது..

திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, வரகூர்,
நடுக்காவேரி ஸ்ரீ வாத்தலை நாச்சியாள் மற்றும் திருக்காட்டுப்பள்ளி
- என,திருக்கோயில்கள் அருகருகாக விளங்குகின்றன..

தஞ்சை மாநகரிலும் அதனைச் சுற்றியுள்ள
திருக்கோயில்கள் அனைத்தையும் தரிசிக்க ஒரு மாதம் கூடப் போதாது...

ஆலம்பொழில் ஐயனும் அம்பிகையும்
அனைத்துயிர்க்கும் 
மங்கலங்களை அருள்வார்களாக..

வரையார்ந்த மடமங்கை பங்கன் தன்னை
வானவர்க்கும் வானவனை மணியை முத்தை
அரையார்ந்த புலித்தோல்மேல் அரவம் ஆர்த்த
அம்மானைத் தம்மானை அடியார்க் கென்றும்
புரையார்ந்த கோவணத்துஎம் புனிதன் தன்னைப்
பூந்துருத்தி மேயானைப் புகலூரானைத்
திரையார்ந்த தென்பரம்பைக் குடியின் மேய
திருஆலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே!..(6/86)

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

11 கருத்துகள்:

 1. அன்பின் ஜி
  கார்த்திகை திங்களைக் குறித்த விடயம் அறியத் தந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. ஆத்ம நாத ஈஸ்வரரின் தரிசனம் கிடைத்தது. நன்றி.

  'அடியார்க்கு என்றும் தம்மானை' - நல்லா இருக்கு. ஒரே பாடலில் பூந்துருத்தி, புகலூர் தலங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 3. கார்த்திகை சோமவாரம் விளக்கம் அருமை. நந்தி ரொம்ப கம்பீரமாக நிற்கிறார். படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
 4. அழகிய கோவில். அழகிய விளக்கங்கள். கார்திகைத் திங்கள் சிறப்பறிந்தேன்.

  பதிலளிநீக்கு
 5. கார்த்திகை திங்கள் சிறப்பு மிகவும் அருமை.
  சங்காபிஷேகம் மாயவர்ம், திருகடையூர், திருவிடைமருதூர், திருக்கடையூர், புனுகீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் பார்த்தது நினைவுக்கு வருது.

  இங்கு மகன் ஊரில் பக்கத்தில் கோவில் இல்லை இரண்டு மணி நேரம் பயணம் செய்து போனால் சிவன் கோவில் தரிசனம் கிடைக்கும்.

  உங்கள் தளத்தில் கோவில் தரிசனம் செய்து கொண்டேன்.
  நன்றி.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. அழகிய கோவில். கார்த்திகை சோமவாரம் பற்றிய சிறப்புகள் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. கோயில் உலாவின்போது சென்றுள்ளோம். தஞ்சைப்பகுதியில் பார்க்கவேண்டிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

  பதிலளிநீக்கு
 8. வந்து வாசித்தேன் நன்றி

  பதிலளிநீக்கு
 9. கார்த்திகை திங்கள் விரத காரணமும்....

  ஆலய தரிசனமும் ..மிக சிறப்பு...

  பதிலளிநீக்கு
 10. கார்த்திகை திங்கள் சிறப்பை அறிந்தோம். கோயில் மிக அழகாக இருக்கே....உங்கள் படங்கள் மேலும் அழகு...தெளிவாக இருக்கு..நந்தி எம் பெருமான் அழகு...முதல் படமான இறைவனும் அவ்வளவு அழகு ரசித்தோம், ..ஆத்ம நாதரின் தரிசனமும் பெற்று மனதில் நிலை நிறுத்தினோம்....குறித்தும் கொண்டோம்...

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..