நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 17, 2014

அருட் பெருஞ்ஜோதி

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.  

ஆறுபடை வீடுகள் அன்றி மற்றுமுள்ள முருகன் திருக்கோயில்களிலும் தைப்பூச நாளில் முருகனை தரிசிப்பதை வாழ்வின் நோக்கமாகக் கொண்டுள்ள பக்தர் அநேகர். 


ஆயிரக்கணக்கான அடியார்கள் விரதம் ஏற்று - பழனிக்கு பாதயாத்திரை சென்று   தைப்பூச நாளில் முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். 

தைப்பூசத்தன்று  -  காவடியுடன்  முருகனைத் தரிசிப்பதே பிறவிப் பயன் எனக் கருதும்  பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் - உலகம் முழுதும்!..

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீதண்டாயுதபாணி திருக்கோயிலிலும் மலேஷியாவில்  - தண்ணீர்மலை, பத்துமலை எனும் திருத்தலங்களில் உள்ள முருகன் திருக்கோயில்களிலும் தைப்பூச விழா வெகுசிறப்பாக நிகழும். சீனர்கள் கூட முருகனை வேண்டி நேர்த்திக் கடன் செலுத்துவதைக் காணலாம். 


பழனியில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, கரும்பு காவடி என பல்வேறு வகையான காவடிகளைச் சுமந்து வந்து முருகப் பெருமானை  தரிசனம் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து பத்து  நாட்கள் நடைபெறும் தைப்பூச  விழாவில் - கடந்த நாட்களில் ஸ்ரீமுத்துக்குமாரசாமி காலையிலும் மாலையிலும் தந்த பல்லக்கு, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க மயில், தங்கக் குதிரை - என பல்வேறு  வாகனங்களில்  திருவீதி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


வியாழன்று முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணமும், இரவு 8.30 மணிக்கு வெள்ளித் தேரோட்டமும் நடைபெற்றது.

தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று (ஜனவரி17) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி அளவில் நடைபெறுகிறது. 

இதில்  கலந்து கொண்டு முருகப்பெருமானைத் தரிசிக்க லட்சக் கணக்கான பக்தர்கள் பழனியம்பதியில் குழுமியுள்ளனர். 


திருத்தேரில் பவனி வருகின்றான் திருமுருகன். - வடிவேல் முருகன்!.. 

கந்தனைக் கண்ணாரக் கண்டு கை தொழும் வேளையில் - 

அவனிடம் ஏதாவது கேட்கலாம்!.. 
அவன் கொடுப்பான்!.. 
அவனிடம் கேட்டுப் பெறலாம்!.. 

வாட்டம் தீர்க என்று  - வாரி வாரி வளங்களைக் கொடுப்பதற்கென்றே,
வள்ளி தேவயானையுடன் வருகின்றான்  - வள்ளல் பெற்ற திருக்குமரன்!..

ஏந்திய கரங்களில் இட்டு மகிழ்பவன் - மலை நின்ற மால் மருகன்!.. 

எனில் - என்ன கேட்பது!.. 

இதோ ஒரு ஞான விண்ணப்பம்!..

1823 அக்டோபர் ஐந்தாம் நாள்  - சிதம்பரம் நகருக்கு அருகிலுள்ள மருதூர் கிராமத்தில் - ராமையா சின்னம்மாள் தம்பதியினருக்கு ஐந்தாவது மகவாகத் தோன்றியவரும் ,

வளரும் பருவத்திலேயே - இறை நாட்டம் விளைந்து, தொடர்ந்த பக்தியினால் வடிவேலவனை - நிலைக் கண்ணாடியில் தரிசனம் கண்டவரும்,


வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்  - என்று ஞானப்பயிர் வளர்த்தவரும்,

''..பிற உயிர்களிடம் அன்பு செலுத்தி, அவற்றின் பசி தீர்ப்பதே - புண்ணியம். பசிப்பிணி தீர்க்கும் புண்ணியத்திற்கு  ஈடானது என்று எந்தப் புண்ணியத்தைச் சொல்லமுடியும்?..  ஜீவ காருண்யமே - மோட்சத்தினை அளிக்க வல்லது!..''  - என்று உபதேசித்தவரும் - ஆன,

அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் - நம் பொருட்டு அருளிய திருப்பாடல்!..

முருகப் பெருமானிடம் கேட்டுப் பெறுவதற்கு - 
இவைகளை விடவும்  வேறு உளவோ!..

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 
உத்தமர் தம் உறவு வேண்டும் 
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் 
உறவு கலவாமை வேண்டும் 

பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும் 
பொய்மை பேசாதிருக்க வேண்டும் 
பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும் 
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் 

மருவு பெண்ணாசை மறக்க வேண்டும் 
உனை மறவாதிருக்க வேண்டும் 
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் 
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும் 

தருமமிகு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர் 
தலமோங்கு கந்தவேளே 
தண்முகத்துய்ய மணி உண்முகச் சைவ மணி 
சண்முகத் தெய்வமணியே!..

வள்ளலார் சுவாமிகள் - தாம் எழுப்பிய - மேட்டுக்குப்பம் சித்தி வளாக மாளிகையில், 1874ல்  ஆம் ஆண்டு தை மாதம் 19 ஆம் நாள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு  சித்தியடைந்து ஒளி வடிவாகினார்.


வள்ளலார் சித்தியடைந்த நாள் - 
புனர்பூசமும் பூசமும் கூடிய - தைப்பூசம்.

அருட்பெரும் ஜோதி!.. அருட்பெரும் ஜோதி!..
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி!.. 

20 கருத்துகள்:

 1. இன்றைய நாளுக்கேற்ப சிறப்பான பகிர்வு ஐயா... இராமலிங்க சுவாமிகள் அவர்களின் பாடல் மேலும் சிறப்பு... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 2. தைப்பூச நாயகனைப் பற்றிய அருமையான பகிர்வு அய்யா... கூடவே வள்ளாலார் சுவானிகளின் பாட்டுடன் கலக்கல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 3. தைப்பூசத் திருநாளில் தமிழ் எடுத்துப் பாடியமைக்கு நன்றி! வள்ளலாரின் வாசகங்களில் எனக்குப் பிடித்தது “ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் “ என்ற வாசகம்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   மேற்குறித்த பாடலை நித்ய பாராயணம் செய்து
   பின்பற்றி நடந்தால் எல்லா நலன்களையும் பெறலாம் என்பது திண்ணம்.
   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 4. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரைப் பற்றிய பகிர்விற்கு நன்றி.
  அருட்பெருஞ்சோதி ! தனிப்பெரும் கருணை !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   வள்ளலார் சுவாமிகள் வாழ்ந்த மண்ணில் -
   வாழ்கின்றோம் என்பது நமக்கெல்லாம் பெருமை.
   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 5. வாட்டம் தீர்க என்று - வாரி வாரி வளங்களைக் கொடுப்பதற்கென்றே,
  வள்ளி தேவயானையுடன் வருகின்றான் - வள்ளல் பெற்ற திருக்குமரன்!..

  ஏந்திய கரங்களில் இட்டு மகிழ்பவன் - மலை நின்ற மால் மருகன்!..

  ஞான வேள்வியாக நிறைவான பகிர்வுகள்... பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் அன்பான கருத்துரையும்
   பாராட்டுகளும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 6. பெயரில்லா19 ஜனவரி, 2014 06:25

  வணக்கம்
  ஐயா.
  காலம் அறிந்து பயிர்செய்யவேண்டும் என்பார்கள் அதைப் போல நாள் அறிந்து பதிவிட்டமை மிக நன்று ஐயா. வள்ளலாரின் பாடல் அடிகள் படிக்கும் போது.. மனதிற்கு மிக அற்புதமாக உள்ளது. ..படங்களும் மிக அழகு மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ரூபன் ..
   வள்ளலார் அருளிய திருப்பாடல்கள் உண்மை ஞானத்தை விளைவிப்பவை.
   தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு
 7. வணக்கம் சகோதரா !

  வள்ளலார் அருளிய பாடலை தினமும் பாடி வணங்குவேன் அவ்வளவு பிடிக்கும் எனக்கு. அத்துடன் தை பூசம் பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. திருகோலமும்தங்களால் கணப் பெற்றேன்.
  நன்றி வாழ்த்துக்கள்....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 8. கடந்த கால நினைவுகளைக் கண் முன் நிறுத்தும் காவடியாட்டம்
  காணக் கண் கோடி வேண்டும் ஐயா .ஈழத்து முற்றம் இன்னும்
  இருளில் கிடக்கும் இந்தக் காலத்தில் வேதனைச் சுவடுகளையே
  வெறுப்பாய் உற்று நோக்குகிறது அகதிகள் எங்களின் வாழ்வியல் .
  மிகவும் சிறப்பான ஆக்கத்திற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   எல்லா இரவுகளுக்கும் ஒரு விடியல் உண்டு..
   காலமெல்லாம் காக்க கந்தனின் கருணை உண்டு..
   தைரியம் கொள்க.. கவலையை வெல்க!..

   நீக்கு
 9. தைப்பூச நாளில் வள்ளலார் பற்றிய சிறப்பு பகிர்வு..... பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்களின் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 10. மிக அழான பகிர்வு.
  அருட்பெரும்ஜோதி அருட்பெரும் ஜோதி!
  தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..