நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 03, 2014

மார்கழிப் பனியில் - 19

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் 
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை.
திருப்பாசுரம் - 19. 


குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் 
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக் 
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் 
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் 
மைத்தடங் கண்னினாய் நீ உன் மணாளனை 
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண் 
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் 
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்!..


ஓம் ஹரி ஓம்


ஸ்ரீமாணிக்கவாசகப் பெருமான் 
அருளிய திருவெம்பாவை
திருப்பாடல்கள்: 5 - 6

  
மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்!. -5

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்!. - 6
 

ஆலய தரிசனம்

நாககுடி


அன்னை ஸ்ரீவீரமாகாளி அம்மன் திருக்கோயில்.

மழை பெய்த ஒரு மாலைப் பொழுதில் எம்மை ஆட்கொண்டவள்.

அன்று முதல் - அவளுக்குப் பிள்ளைகளாக இருந்த எங்களுக்கு, 
அவள் தானே - மகவாக ஆயினாள்.

திருக்கோயிலினுள் குடி கொண்டிருப்பவள் - உக்ர ஸ்வரூபிணியான  - காளி.

திருவிழிகளில் பொங்கிப் பெருகும் கருணை வெள்ளம். 
அளவு கடந்த அன்பின் ஊற்றாக விளங்குகின்றாள்  - அன்னை.

வலது திருக்கரத்தினில் சூலம். 
இடது திருக்கரத்தினில் கபாலம்.
மேல் திருக்கரங்களில் உடுக்கையும் நாக பாசமும்.
ஜடாமகுடத்தில் அக்னி ஜ்வாலைகள்.
தீராத வினைகளைத் தீர்த்து வைக்கும் அன்னை  - ரத்ன பீடத்தில் வீற்றிருக்கின்றாள்.

மூலஸ்தானத்தின் வலப்புறம் ஸ்ரீவீரனார் ஸ்வாமியும் -
இடப்புறம்  ஸ்ரீ கருப்பஸ்வாமியும் பரிவார மூர்த்திகள்.


திருக்கோயிலின் கிழக்குப் புறம்  - ஸ்ரீ வலம்புரி விநாயகர். 
அருகினில் வேப்ப மர நிழலில் - நாக ப்ரதிஷ்டையும் புற்றும்.

வடக்கு நோக்கிய திருமுக மண்டலம். 
திருக்கோயிலின் பின்புறம் பழவாறு எனப்படும் சிற்றோடை.

முக்கோணச் சக்கரமாக மூன்று புறம் விளங்கும் மயானங்கள். 
நடுவில் அன்னை அகமகிழ்வுடன் அமர்ந்து அருளாட்சி புரிகின்றனள்.

ஆண்டு தோறும் தை மாதத்தின் திருவாதிரை அன்று வருடாந்திர சம்வஸ்த்ராபிஷேகம். 

காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு , அதில் நானாவித - பரிமள கந்த மூலிகைகளையும்  நிரப்பி - கட ஸ்தாபனம் செய்யப் பெற்று, அம்பாள் ஆவாகனத்துடன் பரிவார மூர்த்திகளையும் ஆவாகனம் செய்து பஞ்ச கலச மஹாபூஜை.

ஏக கால வேள்வி. 

நூற்றெட்டு திரவியங்களை அக்னியில் சமர்ப்பித்து பூர்ணாஹுதி வழங்கும் போது  - 

யாக அக்னி வலஞ்சுழித்து எழும்.  

மஹா அபிஷேகம் நிறைவுற்று திவ்ய அலங்கார ஸ்வரூபிணிக்கு சோடஷ உபசாரங்களுடன் மஹாதீபாராதனை.

அதன்பின்  - பிரசாத விநியோகமும் சிறப்பான அன்னதானமும் நிகழ்வுறும்.

சித்திரையில் அக்னி நட்சத்திரம் முடிந்ததும் அடுத்த வெள்ளிக்கிழமையன்று திருக்காப்பு அணிவித்தலுடன் மூன்று நாள் விசேஷம்.

முதல் நாள் - வெள்ளிக்கிழமையன்று, அன்னைக்கு காவிரியின் தீர்த்தத்தில் நீராட்டு.  அன்னைக்கும் பரிவார மூர்த்திகளுக்கும்  கோயில் பிள்ளைகளுக்கும் காப்பு அணிவித்தல் . முன்னிரவு நேரத்தில் - கிராம தேவதா ப்ரீதியுடன் - பூத பலி.
அக்னி கொப்பரையும் கருப்ப ஸ்வாமியின் வேலும் உடன் வர -
சிம்ம வாகனத்தில் ஆரோகணித்தவளாய் - புஷ்ப ரதத்தில் - திருவீதியுலா.

விடியற்காலை நேரத்தில்  உக்ரத்துடன் யதாஸ்தானம் திரும்பும் அன்னைக்கு, தயிர் சோறு நிவேதனம் செய்யப்படும். 

சனிக்கிழமை மதியம் மகாஅபிஷேகமும் மகாதீபாராதனையும் நிகழும். அதன் பின் அன்னதானம்.

மறுநாள் ஞாயிறு காலையில் - கிராம தேவதா ப்ரீதியுடன் - அருள் வாக்கு பெற்று -  வெகு விமரிசையுடன் - பூங்கரகம் புறப்படும். நேர்ந்து கொண்டவர்கள் - மஞ்சளாடையுடன் பாற்குடம் எடுப்பர். 

அன்பில் திகழும் அன்னைக்கு பெண்கள் - சீர்வரிசை எடுத்து வீதி வலம் வந்து , பகல் உச்சிப் பொழுதில்  - 


ஸ்ரீ வீரமாகாளி அம்பிகையின் உளங்குளிர பாலாபிஷேகம் நிகழும். 

பட்டு வஸ்திரம் சாற்றி - மஹாதீபாராதனை. 

சேவார்த்திகளுக்கு பிரசாத விநியோகம் ஆனதும் - கஞ்சி வார்த்தல். 

மாவிளக்கு, நீர் மோர், பானகம், துள்ளு மாவு   - என அன்னை மனம் குளிரும் படிக்கு சிறப்பாக நிகழும். கோயில் திட்டத்துடன் உபயதாரர்களின் கைங்கர்யமும் உண்டு. 


அன்றைய தினம் மாலையில் - அன்னைக்கு சந்தனக்காப்பு. பழவகைகளுடன் சித்ரான்ன நிவேத்யம். மகாதீபாராதனை. அதன்பின் அன்னதானம்.

பின்னிரவில் திருக்காப்பு கழற்றி,  செவ்வாய் அன்று பூங்கரகம் விஜர்ஜனம். 

இப்படி, சம்வஸ்த்ராபிஷேகமும் பாற்குட உத்சவமும் விமரிசையாக நடந்தாலும்  - செவ்வாய் , வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அன்னையின் சந்நிதியில் சிறப்பான வழிபாடுகள் நடைபெறும்.

ஆடி மாதத்தில் திருவிளக்கு பூஜையும் மாதந்திர பெளர்ணமி பூஜைகளும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. 

இந்தத் திருக்கோயில், எனது ஒன்று விட்ட சகோதரர் மற்றும் கிராம  நிர்வாக பாராமரிப்பில் உள்ளது. 

சுவாமி மலையில் திருக்கோயிலில் இருந்து வடக்கே - இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது நாககுடி. 

ஊரின் எல்லையிலேயே ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயில்.

கும்பகோணம் - திருவைகாவூர்  நகரப்பேருந்துகள் இவ்வூர் வழியே செல்கின்றன.

இங்கே - வெளியிடப்பட்டுள்ள படங்கள் - சித்திரை மாதம் நிழந்த பாற்குட திருவிழாவின் போது எடுக்கப்பட்டவை.

ஸ்ரீவீரமாகாளி அம்பிகையை ஒருமுறை தரிசன செய்தவர் - அடையும் நன்மைகளைச் சொல்லிமுடியாது. 

என்னையும் தன் பணிக்கு ஆட்கொண்டவள். நினைத்த போது எதிர் நிற்பவள்.

அவளுடைய ஆலயத் திருப்பணியில் என்னையும் இணைத்து மகிழ்ந்தவள்.

சந்நிதியினுள் - அவளுக்கு அபிஷேக அலங்காரம் செய்யும் மகாபாக்யத்தை அடியேனுக்கு - வழங்கியதுடன்,

அவளுக்குத் தீர்த்தக் கைங்கர்யம் செய்யும் பேற்றினையும் அளித்தவள்.

அன்னைக்கு அபிஷேகம் செய்யும் போது - 
ஏழு வயதுடைய குழந்தையை 
நீராட்டுவது போல இருக்கும்!.. 
அந்த அனுபவம் - விவரிக்க இயலாதது.
அம்பிகையின் அருளால் பெற்று வரும் 
நன்மையெல்லாம் பேசி முடியாது!..

நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கி என்றாய 
கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!..
ஓம் சக்தி ஓம்!..

14 கருத்துகள்:

 1. வீரமா காளி அம்பிகை மகத்துவம் அறிந்தேன் நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களது வருகைக்கும்
   அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 2. நாககுடி சென்றதாக ஞாபகம் இல்லை... தகவல்கள், விளக்கங்கள், சிறப்புகள் என அனைத்திற்கும் நன்றி ஐயா...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களது வருகைக்கும்
   அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 3. அருமையான கோவில், சிறப்பான வழிபாடுகள் என அனைத்தும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்களது வருகைக்கும்
   அன்பின் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 4. ஸ்ரீவீரமாகாளி அம்பிகையை தரிசனம் செய்த அனுபவம் ...சிறப்பான பதிவு !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களது வருகை தந்து
   அம்மனை தரிசித்தமைக்கு
   மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 5. அருமையான தல வரலாறுடன்
  அன்னை ஸ்ரீவீரமாகாளியின் படங்களும்
  கண்கொள்ளாக காட்சிகளாக இருக்கிறதையா!

  மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்களது வருகைக்கும்
   அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 6. பக்தி சிரத்தை பொருந்திய பதிவு. தமிழ்நாட்டில் ஏராளமான கோவில்கள். பார்க்கப் போனால் தரிசித்தவை வெகு சொற்பமே. அவ்வாறு தரிசனம் செய்ய இயலாதவர்களுக்கு உங்கள் பதிவு மிகவும் தேவை. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தாங்கள் வருகை தந்து இனிய கருத்துரையுடன் -
   பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 7. அனைத்துப்படங்களும் விளக்கங்களும் அருமையாய் உள்ள்ன. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் -
   கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..