நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 09, 2014

மார்கழிப் பனியில் - 25

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 25. 


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் 
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் 
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த 
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் 
நெருப்பென்ன நின்ற நெடுமாலே  உன்னை 
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் 
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி 
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!.. - 25

ஓம் ஹரி ஓம்

ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள்: 17 - 18செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.- 17

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். - 18

திருச்சிற்றம்பலம்

ஆலயதரிசனம்

திருக்கருகாவூர்


இறைவன் - ஸ்ரீமுல்லைவனநாதர், கற்பக நாதர்.
அம்பிகை - ஸ்ரீ கர்ப்பரட்க்ஷாம்பிகை, கரு காத்த நாயகி.
தல விருட்சம் - முல்லைக் கொடி
தீர்த்தம் - க்ஷீர தீர்த்தம், வெட்டாறு

கங்கையினும் புனிதமாய காவிரியின் கிளை நதிகளுள் ஒன்றான வெட்டாற்றின் தென்கரையில் - முல்லை வனத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்திருந்த சிவலிங்கத்தைப் பூஜித்துக் கொண்டிருந்த முனிவர்களுள் நித்துவர் என்பவரும் ஒருவர். 

அவருடைய மனையாள் - வேதிகை எனும் நல்லாள். அறநெறி பிறழாத  நல்லறமாகிய இல்லறத்தில் வேதிகை கருவுற்றிருந்தாள்.

தவவலிமை மிக்க நித்துவரை தேவேந்திரன் அழைத்தான் - தேவ லோகத்திற்கு வந்து மகத்தான ஒரு யாகத்தை நடத்தித் தர வேண்டும் என்று!..  

தேவேந்திரனின் அழைப்பினை ஏற்று -  தேவலோகத்திற்குப் புறப்பட்டபோது -  கர்ப்பிணியாக இருந்த வேதிகையை முல்லைவன நாதரின் பொறுப்பினில் விட்டுச் சென்றார். 


கணவர் சென்ற பின் ஒருநாள் தனித்திருந்த வேதிகை களைப்பினால் ஓய்வாகப் படுத்திருந்தாள் - கர்ப்பத்திலிருந்த தன் மகவிடம் ஆசையாகப் பேசிக் கொண்டு!..

அதுசமயம்  ஊர்த்தவர் எனும் முனிவர் - பவதி பிக்ஷாம் தேஹி!.. என வந்து நிற்க - வேதிகையினால் உடனடியாக எழுந்து வரமுடியவில்லை. சற்று தாமதம் ஆனது.  

ஊர்த்தவ முனிவர்க்கு அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பசி மயக்கத்தால் கடுங்கோபம் ஏற்பட்டது. 

என்னை அலட்சியப்படுத்திய உன் சிந்தை எதிலே நிலைத்திருந்ததோ - அது உன்னை விட்டு நழுவிப் போகட்டும்!.. என சாபம் கொடுத்து விட்டுப் போய்விட்டார்.  

அந்த சாபத்தின் விளைவாக வேதிகையின் கரு நழுவிய போது சர்வ ஜன ரட்க்ஷகியான அம்பிகை  - தாயெனப் பரிந்து வந்து வேதிகையின் கருவினைத் தாங்கிக் கொண்டாள். 


மூலிகைச் சாறு நிறைந்த கலசத்தினுள் அந்தக்கருவினை இட்டு பாதுகாத்து தக்க காலத்தில் மகவாக அருளினாள். அத்துடன் அந்தக் குழந்தைக்கு பால் கொடுக்க   - காமதேனுவுக்குக் கட்டளையிட்டாள். 

அபலைப் பெண்ணுக்கு, கருச்சிதைவு ஏற்படாமல், மருத்துவம் பார்த்து -  கருவைக் காத்தருளியதால் - கருகாவூர் - 

திருக்கருகாவூர் - என்று பெயர் பெற்றது.  

தேவலோகத்திலிருந்து திரும்பி வந்த நித்துவர் நடந்ததை அறிந்து பெரு மகிழ்வு எய்தினார். 

''..என் மனைவியின் கருவினைக் காத்து அருளிய கர்ப்பரட்க்ஷாம்பிகையே!.. உன் தயவு  உலகில் உள்ள எல்லாப் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும்!..'' - என வேண்டிக் கொண்டார். 


அவருடைய பரந்த எண்ணத்தினை ஏற்றருளிய அம்பிகை - அன்று முதல், 

இத்திருத்தலத்தில் கருணை பொழியும் கற்பகமாக - கருவைத் தருபவளாக , கனிவுடன் அதனைக்  காப்பவளாக -

கர்ப்பரட்க்ஷாம்பிகையாக விளங்குகின்றனள்.

இங்கே நின்று வழிபடுவோர்க்குக் கரு நழுவிப் போவதில்லை. குறைப் பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை.

தாயாகிய தயாபரி -  தாயையும் சேயையும் காத்தருள்கின்றனள்.

கிழக்கு நோக்கிய திருக்கோயில் . கோயிலின் முன் காமதேனு பொழிந்த பாற்குளம் - க்ஷீர தீர்த்தம். 

இத்திருத்தலத்தில் - பிள்ளையாருக்கு - கற்பக விநாயகர் என்று பெயர். பிள்ளையாரும் நந்தியும் சிவலிங்கமும் சுயம்பு திருமேனிகள்.

முல்லைவன நாதர் சுயம்பு மூர்த்தி.  பிருதிவி அம்சம். புற்று மண்ணாலாகிய திருமேனி. ஆதியில் சிவலிங்கம் முல்லைவனத்தில் தோன்றியதால் -  சுவாமி திருமேனியில் முல்லைக் கொடி  சுற்றியதனால் ஏற்பட்ட வடு உள்ளது. 

கிழக்கு நோக்கியவளாக - அம்பிகை  தனிக்கோயில் கொண்டு திகழ்கின்றனள்.. 

சோமாஸ்கந்த திருக்கோலமாக -  சுவாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் நடுவினில் வடிவேல் முருகனின் சந்நிதி விளங்குகின்றது.

மூன்று சந்நிதிகளையும் ஒருசேர வலம் வந்து வணங்கி வளமும் நலமும் பெறலாம் என்பது நாம் பெற்ற பேறு.


அம்பாளுக்கு நெய் விளக்கேற்றி , பசு நெய்யால் சந்நிதி வாசற்படி மெழுகி அபிஷேகம் செய்து அந்த நெய்யை - இரவு உறங்கும் முன் தம்பதியர் அருந்தினால் மகப்பேறு சர்வ நிச்சயம். 

அதே போல - 

கருவுற்ற பெண்களுக்குச் சுகப்பிரசவம் ஆகும் பொருட்டு, அம்பிகையின் திருவடியில் விளக்கெண்ணெய் வைத்து, பூஜித்து  தரப்படுகிறது. பிரசவ வலி ஏற்படும் காலத்தில் இதை வயிற்றில் தடவிவர, சுகப் பிரசவமாகும் என்பது ஆச்சர்யமான உண்மை. 

சர்வ ஜன ரட்க்ஷகி எனும் பெயருக்கு ஏற்றாற்போல - 
சமயங்களைக் கடந்து,  சங்கடங்களைக் களைந்து -
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கின்றாள் - ஸ்ரீகர்ப்பரட்க்ஷாம்பிகை.

திருஞான சம்பந்தப் பெருமானும், அப்பர் சுவாமிகளும் பாடிப் பரவிய திருத்தலம்.

தஞ்சை மாவட்டத்தில் - பாபநாசத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும், திருக்கருகாவூருக்கு - நகரப் பேருந்துகள் உள்ளன.

விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க்கு
அமுத நீழல் அகலாததோர் செல்வமாங்
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம் அழலும்அழல் வண்ணமே.(3/46)
திருஞான சம்பந்தர்.

குருகாம் வயிரமாம் கூறு நாளாம்
கொள்ளுங் கிழமையாம் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகா லுமையாளோர் பாக னுமாம்
உள்நின்ற நாவிற்கு உரையா டியாம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாங் கருகாவூர் எந்தை தானே.(6/15)
அப்பர் பெருமான்.

சிவாய திருச்சிற்றம்பலம்.

10 கருத்துகள்:

 1. திருக்கருகாவூர் கோயிலின் சிறப்புகள் அனைத்தும் அருமை ஐயா... நன்றி... ஒருமுறை சென்றுள்ளோம்...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 2. வழக்கம்போல் அனைத்துப்படங்களும் தகவல்களும் மிக அருமை. நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

   நீக்கு
 3. கர்ப்ப ரட்சாம்பிகை பற்றிய தகவல்கள் விரிவாக விளக்கியிருக்கிறீர்கள். நன்றி பதிவுக்கும், படங்களுக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 4. சர்வ ஜன ரட்க்ஷகி எனும் பெயருக்கு ஏற்றாற்போல -
  சமயங்களைக் கடந்து, சங்கடங்களைக் களைந்து -
  கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கின்றாள் - ஸ்ரீகர்ப்பரட்க்ஷாம்பிகை.


  அற்புதமான திருத்தலப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

   நீக்கு
 5. சிறப்பான கோவில் பற்றிய அருமையான பகிர்வு. இத்தலத்திற்கு நானும் ஒரு முறை சென்று வந்துள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   அருள்மிகு அன்னை கர்ப்பரட்க்ஷாம்பிகையின்
   பெருமைகளை ஒரு பதிவில் சொல்லி முடியாது.
   தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..