நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூலை 24, 2014

கங்கை கொண்ட சோழன்

பூர்வ தேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரி வர்மன் -  என்று இந்த மாமன்னனின்  கல்வெட்டுகள் புகழ்கின்றன. 

மும்முடிச்சோழன் என்றும் சிவபாத சேகரன் எனவும் சிறப்பிக்கப்பட்ட தந்தையின் திருக்கரங்களினால் - யுவராஜா பட்டம் பெற்று அருகிருந்து ஆட்சியின் நுணுக்கங்களைப் பயின்றவன்.

ஆட்சி காலம் முழுமைக்கும் வல்லமை பொருந்திய - பேரரசின் மகத்தான மாமன்னனாகத் திகழ்ந்தவன். 

அகண்ட பாரதத்தில் - மிகச்சிறந்த கப்பல் படையினை உடையவன். 
கடல் வழியே படை நடத்தி - வெற்றி கண்ட பேரரசன்.

கடல் கடந்தும் களங்கண்டு வெற்றி கொண்ட வேங்கை!..

ராஜேந்திர சோழன்!..


ராஜராஜ சோழன் சிவனடி சேர்ந்த பின், சோழ பேரரசின் மன்னராக முடிசூட்டிக் கொண்ட ஆண்டு - கி.பி.1014. 

மாமன்னன் ராஜேந்திரனின் ஆட்சிக் காலத்தின் ஆயிரமாவது ஆண்டாக இந்த ஆண்டு அமைகின்றது.

தந்தையின் கையால் - இளவரசனாக முடிசூட்டப்பட்ட பின், 1012-ல் சத்யாஸ்ரயனை எதிர்த்து துங்கபத்ரை நதியை முதன் முறையாகக் கடந்து படை நடத்தினான் - ராஜேந்திர சோழன்!.. 

தன் மகன் பதினாறடி பாய்வதற்குத் தயாராகி விட்டதை அறிந்த மாமன்னன் ராஜராஜன் மகனை வாரி அணைத்து மகிழ்ந்தான்.

இளவரசனாக இருந்த பொழுதே மகா தண்ட நாயகனாக அமர்த்தப்பட்டான். 

படைகளுக்குத் தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை நடத்தி - வேங்கி,கலிங்கம்,கொங்கணம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றினான். சேரனை நாட்டை விட்டு ஓடும்படிச் செய்தான். தெலுங்கரையும் இராஷ்டிரகூடரையும் வென்றான்.


இலங்கையையும் மாலத்தீவுகளையும் வென்றான்.  முழுமையாகக் கைப்பற்றி - தன் ஆட்சி காலத்தில் தன் அரசாட்சியின் எல்லையை  வடக்கே கங்கைக் கரை வரை விரிவாக்கினான்.  

பின்னர் கடாரத்தை வென்று அன்றைய மலாயா முழுமையையும் கைப்பற்றி அதனையும் கடந்து ஸ்ரீவிஜய அரசைத் தோற்கடித்தான்.

கி.பி. 1018ல் ஈழ மண்டலத்தின் மீது படையெடுப்பு நடத்தப்பட்டது.

அந்தப் போரில் தான் - பெரும் பாட்டனார் ஆன பராந்தக சோழரின் காலம் தொட்டு - கனவாக இருந்த பாண்டியரின் இரத்ன வாளும் முத்து மாலையும் கைப்பற்றப்பட்டன.

ராஜராஜ சோழன் - ஈழ மண்டலத்தில் ஏற்றிய புலிக்கொடி பூரிப்புடன் பறந்தது.

இதை சிங்களரின் மஹாவம்சம் எனும் வரலாறும் ஒத்துக் கொள்கின்றது.

அதே ஆண்டில் - தமது ஆட்சிக்கு உட்பட்ட  பாண்டிய, சேர பகுதிகளில் - சோழர்க்கு எதிராக நடத்தப்பட்ட கலகங்கள் அடக்கப்பட்டது.


சோழர்தம் பெரும்படை மன்னனின்  தலைமையில் தெற்கில் இருந்து கோதாவரி நதியைக் கடந்து கலிங்கத்தின் வழியாக கங்கைக் கரை நோக்கி நகர்ந்தது - 1019-ல்.

வங்கத்தின் மன்னன் மகிபாலனை வென்று கங்கையிலிருந்து நீர் எடுத்தது - இந்த போரில் தான்!..

இந்தப் பயணம் இரண்டாண்டுகள் நீடித்தது. அதன் பின் -

மேலைச் சாளுக்கியரை நோக்கிக் கவனத்தைத் திருப்பிய ஆண்டு - 1021.

பங்காளிச் சண்டை தொடங்கியது மேலைச் சாளுக்கியருக்கும் கீழைச் சாளுக்கியருக்கும்!..

மாமன்னர் ராஜராஜ சோழனின் மருமகன் விமலாதித்தன்.

தன் சகோதரியின் (விமலாதித்தன் - குந்தவை) மகனான ராஜராஜ நரேந்திரனுக்குத் தன் மகள் அம்மங்கா தேவியை மணமுடித்துக் கொடுத்தான்.

மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த மேலைசாளுக்கியன் ஜெயசிம்மனையும் விஜயாதித்தனையும்முற்றாகத் தொலைத்தது - 1035ல்.

இரட்டபாடி நாடு எனப்பட்ட மேலைச் சாளுக்கிய நாடு சோழரின் காலடியில் வீழ்ந்தது.

மேலை சாளுக்கியர்களையும் வேங்கியையும் கட்டுக்குள் கொண்டுவந்த பின் மாமன்னன் ராஜேந்திரன் தன்னுடைய சாம்ராஜ்யத்தின் பெருமையையும், பலத்தையும் காட்டும் பொருட்டு மேலும் பல இடங்களுக்குத் தன் படைகளை அனுப்பி வைத்தான்.

விஜயாலய சோழன்  (கி.பி.848) ஏற்றிய புலிக்கொடி  - 

வங்காளம் (பங்களாதேஷ்), பர்மா (மியன்மார்), தாய்லாந்து, கம்போடியா, 
கடாரம் (மலேஷியாவின் கெடா) , மலேஷியா (சிங்கப்பூர்), 
ஸ்ரீவிஜய ராஜ்யங்களான ஜாவா, சுமத்ரா, பாலி (இந்தோனேஷியா) 
அந்தமான் நிக்கோபார்  லட்சத் தீவுகள், மாலத்தீவுகள் - 

எனக் கடல் கடந்தும் பட்டொளி வீசிப் பறந்தது - ராஜேந்திர சோழனின் காலத்தில்!..

(நன்றி - விக்கிபீடியா. வரலாற்றுத் தொகுப்பில் உதவி)

வங்காளத்தை சோழ பேரரசுடன் இணைத்த ராஜேந்திர சோழன் கங்கையில் நீரெடுத்த வெற்றியை சிறப்பிக்க, கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கி தன் ஆட்சியை அங்கிருந்து நடத்தினான்.


தந்தை எழுப்பிய ராஜராஜேஸ்வரத்தின்  வடிவமைப்புடன் கங்கை கொண்ட சோழேஸ்வரம் எனும் கோயில் ஒன்றையும் உருவாக்கினான் ராஜேந்திர சோழன்.

கங்கை கொண்ட சோழேஸ்வரரைப்  போற்றி - கருவூர்த் தேவர் பாடியுள்ளார்.

தலைநகரில் உருவாக்கிய சோழ கங்கம் எனும் ஏரியில் கங்கை நீரை வார்த்தான்.

கருங்கற்களைக் கொண்ட நிலையான பெருங்கோயிலை இறைவனுக்கு என எழுப்பினாலும், தந்தையைப் போலவே -  அரண்மனையை  செங்கற்களால் கட்டிக் கொண்டான்!..

கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தின் தென்பகுதியில் ஐந்து கி.மீ தூரத்தில்- அரண்மனையின் எஞ்சிய பகுதிகள் காணப்படுகின்றன.

அந்த இடம் இன்றைக்கு மாளிகை மேடு எனப்படுகின்றது.

இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைநகர் எனத் திகழ்ந்த கங்கை கொண்ட சோழபுரம் - இன்றைக்கு அரியலூர் மாவட்டத்தில், ஒரு சிறுகிராமம்.

பல தேசங்களை தனக்கு கீழாகக் கொண்டு அதிக ஆண்டுகள் தலைநகராக இருந்த ஊர் அது. 


மாடமாளிகைகளுடனும் கூடகோபுரங்களுடனும் - 

ராஜேந்திர சோழன் மதில், உட்படை வீட்டு மதில், குலோத்துங்க சோழன் திருமதில்.,

சோழ கேரளாந்தகன் திருவாயில், வேம்புக்குடி வாசல்.,

ராஜராஜன் பெருவழி, ராஜேந்திரன் பெருவழி, விளாம்புடையான் பெருவழி, குலோத்துங்க சோழன் பெருவழி.,  

- என எண்ணற்ற திருமதில்கள், வாயில்கள், வீதிகள் நிறைந்த அற்புதமான தலைநகராக விளங்கியது - கங்கை கொண்ட சோழபுரம்!..

ஆனால், இன்றைக்கு அங்கே காணக் கிடைப்பவை- இடிந்த சுவர்களும், மண் மேடுகளும் புதர்களும்!..

மூன்றாம் குலோத்துங்கன் இறந்த பின்பு,  சோழ நாட்டின் மீது படையெடுத்த பாண்டியர் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளலாயினர். முதலாம் சடைய வர்மன் சுந்தர பாண்டியன் சோழநாட்டை வென்று தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டான். அப்போது தான் கங்கைகொண்ட சோழபுரம் பெருத்த அழிவிற்கு ஆளானது. 

ஆனாலும், அங்கே இன்னும் கம்பீரத்துடன் விளங்குவது - ராஜேந்திர சோழன் எழுப்பிய பெரிய கோயில்!.. விவசாயமும் வணிகமும் கணிதமும் மருத்துவமும் சித்திரமும் சிற்பமும் இசையும் நாட்டியமும்  கலையும் கட்டுமானமும் உச்சத்தை தொட்டிருந்தது சோழர்களின் காலத்தில் தான்!..

கடல் கடந்தும் பறந்தது சோழர் தம் புலிக்கொடி!..

சோழர்களுடைய சாதனைகளுக்கும் கடல்கடந்து பெற்ற வெற்றிகளுக்கும்  தஞ்சை - கரந்தைச் செப்பேடுகளும் திருவாலங்காட்டு செப்பேடுகளும் ஆனை மங்கலச் செப்பேடுகளும் ஆதாரமாகத் திகழ்கின்றன. 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் இருந்து  30 கி.மீ தொலைவில் உள்ளது நாட்டேரி எனும்  கிராமம். இதற்கு அருகில் பிரமதேசம் என்னும் ஊர். 

எண்பதாவது வயதில் ராஜேந்திர சோழன் - சுற்றுப்பயணமாக  வந்த போது இங்கே இறந்து விட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள். பிரம தேசத்தில் பள்ளிப்படைக் கோயில் ஒன்று உள்ளது.

ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் - ஆடித் திருவாதிரை எனக் கணக்கிட்டு உள்ளனர். ( முன்பு மார்கழித் திருவாதிரை என கூறப்பட்டது) 

ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய, ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் பிறந்த நாள் விழா - இன்றும் நாளையும் கங்கை கொண்ட சோழபுரத்தில் வெகு சிறப்பாக (ஜூலை24 /25) நடைபெற உள்ளது.


இவ்விழாவை  Indian National Trust for Art & Cultural Heritage  (INTACH) மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் ஆகியன வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர்.

இதில் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் கலந்து கொள்கின்றனர்.

ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு பெருவுடையார் கோயிலைச் சுற்றி ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன.

இங்கிருந்து மஹாதீபம் ஏற்றப்பட்டு - தீபச்சுடர் மாநகர் முழுவதும் தொடர் ஓட்டமாகி கங்கை கொண்டசோழபுரத்திற்கு  எடுத்துச் செல்லப்படுகிறது.

தீபச்சுடரை எழுத்தாளர் திரு. பாலகுமாரன் அவர்கள் ஏற்றி வைக்கின்றார்.

தொடர் ஓட்டத்தை, தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு.N.சுப்பையன்.,IAS., அவர்கள் துவக்கி வைக்கின்றார். தீபச்சுடரைப் பின் தொடர்ந்து, ஆயிரம் மோட்டார் சைக்கிள்களில் அணி வகுத்து செல்கின்றனர்.

விழா ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் கோமகன்
விழா ஏற்பாடுகளை  INTACH மைய அமைப்பாளரும், மூத்த இளவரசருமான பாபாஜி ராஜா போன்ஸ்லே அவர்களும் விழா ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் கோமகன் (கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்), மற்றும் அதன் நிர்வாகிகளும் முழு ஈடுபாட்டுடன் செய்து வருகின்றனர்.

இராஜேந்திரசோழனின்பிறந்த நாளான ஆடி ஆதிரை விழாவை ஜூலை 25 அன்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை நேரடி ஒலி பரப்பு செய்ய தூர்தர்ஷனுக்கு இந்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ராஜேந்திர சோழன் - பட்டமேற்ற தஞ்சை, சிற்றன்னை பஞ்சவன் மாதேவியின் பள்ளிப்படையான பட்டீஸ்வரம், திருஆரூர் மற்றும் சிவகதி அடைந்த பிரம தேசம் ஆகிய தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன.

மாமன்னன் ராஜேந்திர சோழனை ஒரு கணம் சிந்தையில் வைத்துப் போற்றுவோம்.

அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ஙனே பெரியநீ சிறிய
என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை யென்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந் தடந்தோட்
கன்னலே தேனே அமுதமே கங்கை
கொண்டசோழேச்சரத் தானே!..
கருவூர்த் தேவர். 


மாமன்னன் ராஜேந்திர சோழன் புகழ் வாழ்க!.. வளர்க!..
* * *

16 கருத்துகள்:

 1. பத்து வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது
  கங்களை கொண்ட சோழபுர்ம் கோயிலுக்குச் சென்று
  மீண்டும் ஒரு முறை சென்று வரவேண்டும் ஐயா
  மாமன்னன் இராசேந்திரனைப் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்,
   தங்களின் மேலான வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 2. மாமன்னன் இராசேந்திரன் அவர்கள் பிறந்தநாள் விழாபற்றியும் அவரைப்பறறிய விரிவான செய்திகளும் படங்களும் மிக அருமை.
  நாங்கள் ஆண்டுதோறும் கங்கைகொண்டசோழபுரம் சென்று வருவோம்.
  அன்னாபிஷேகபடம் மிக அருமை.
  மாமன்னர் இராசேந்திரன் புகழ் வாழ்க! வளர்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்,
   தங்களின் மேலான வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 3. அழகான படங்கள்... ராஜராஜ சோழன் பற்றிய அனைத்து தகவல்களும் அருமை + சிறப்பு ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்,
   தங்களின் மேலான வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 4. அன்று நாங்கள் கங்கை கொண்ட சோழபுரம் சென்றிருந்தபோது இத்தனைத் தகவல்கள் தெரிந்திருக்கவில்லை.ஒரு சரித்திர பாடமே எழுதி விட்டீர். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா,
   வருகை தந்து கருத்துரையும் வாழ்த்துரையும் வழங்கிய தங்களுக்கு நன்றி..

   நீக்கு
 5. நிறைய தகவல்களை சுவையாகச் சொன்னதற்கு எனது பாராட்டு! இந்த கோயிலுக்கு சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் சென்று இருக்கிறேன். தஞ்சை பெரியகோவிலின் மறு பதிப்பே கங்கை கொண்ட சோழபுரம் கோயில் என்றால் மிகையாகாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்,
   தஞ்சையிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் உள்ள கோயில்கள் கலைப் பொக்கிஷங்கள்..

   தங்களின் மேலான வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 6. வணக்கம் ஐயா!

  எத்துணை சிறப்பு! உங்கள் பதிவுகளே வரலாற்றுப் பொக்கிஷம் ஐயா!

  அறியக் கிட்டாத பல தகவல்கள் அறிந்தேன் இன்றும்.
  மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 7. பல முறை கங்கைகொண்ட சோழபுரம் சென்றுள்ளேன். ஆனால் தாங்கள் அழைத்துச் சென்றவிதம் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   சரித்திரத்தின் சுவடுகளைத் தேடித் தேடி நடக்கும் தங்களின் வருகைக்கு நன்றி..
   தங்களின் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

   நீக்கு
 8. சரித்திரத்தை ஒரு முறை பார்ஹ்த்த மாதிரி இருந்தது பதிவு. அங்கங்கே படங்களுடன். பதிவு அருமை. வாழ்த்துக்கள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..