நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூலை 26, 2014

கயிலாய தரிசனம்

குவப்பெருந் தடக்கை வேடன் ஆகிய திண்ணன் - 

கொடுஞ் சிலையுடன்  இறைச்சிப் பாரந்தாங்கி வந்து, தூய வாய்க் கலசம் ஆட்டியதுடன் உவப்புடன் குருதி சோர ஒரு கண்ணைப் பெயர்த்து வைத்து  - தவத்தினும் பெரியதாய்த் தவம் இயற்றி - கண்ணப்பன் என்றானது இங்கே அல்லவோ!..

அப்பர் பெருமான் ஆனந்த வாரிதியில் ஆழ்ந்தார். காளத்தியானைக் கைகூப்பித் தொழுதார்.


மறையுடைய வானோர் பெருமான் றான்காண்
மறைக்காட் டுறையும் மணிகண் டன்காண்
கறையுடைய கண்டத்தெங் காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே!..
(6/8)

திருக்காளத்தி மலையில் சிவதரிசனம் கண்ட திருநாவுக்கரசு சுவாமிகள் - தொடர்ந்து நடந்து திருக்கோகரணம் வந்தடைந்தார்.

கூறேறு கொடுமழுவாட் படையி னான்காண்
கொக்கரையன் காண்குழுநற் பூதத் தான்காண்
மாறாய மதில்மூன்றும் மாய்வித் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே!..
(6/49)

திருக்கோகரணத்தில் - ஆத்மலிங்கேஸ்வரனைத் தரிசித்த ஸ்வாமிகள் -


பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
காருடைக் கண்ட ராகிக் கபாலமோர் கையி லேந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளே றேறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணி செய்யப் பருப்பத நோக்கி னாரே!..
(4/58)

ஸ்ரீசைலம் எனும் திருப்பருப்பத மலையில் மல்லிகார்ஜுன பெருமானைக் கண்டு வணங்கினார்.

ஆயினும் அவர் ஆவல் தீரவில்லை. பயணம் தொடர்ந்தது.

பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள் முதன்மையாக விளங்கும் வாரணாசி வந்தடைந்தார்.

ஆயிரமாமுகத்தினோடு விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கி மக்களுக்கு நலஞ்செய்யும் கங்கையைக் கண்டு களிப்பெய்தினார். வழி நடந்த களைப்பு தீர நீராடினார்.


கங்கையின் கரையில் கருணை கடலாகத் திகழும் காசிநாதனைக் கண்குளிரத் தரிசித்தார்.

அங்கிருந்தபடியே - திருக்கயிலாயம் சென்று கயிலாய நாதனைத் தரிசிக்க விழைந்தார். 

உடனிருந்தவர்கள் அதிர்ந்தனர்.

''..ஸ்வாமி.. தங்களுக்குத் துணையாக நாங்களும்  வருகின்றோம்!..'' - என்றனர்.

சுவாமிகள் அதை மறுத்தார்.

நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன் 
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான் 
தன்கடன் அடியேனையுந் தாங்குதல் 
என்கடன் பணி செய்து கிடப்பதே!.. (5/19)

எனும் திருப்பாடலை நினைவு கூர்ந்தார். 

தளரும் நிலையில் தாங்கிக் கொள்வான் தலைவன்!.. அஞ்சவேண்டாம்!.. வள்ளல் வருவான் - வழித்துணையாக!..

அடியார்களுக்கு விடை கொடுத்தனுப்பி விட்டு - பயணத்தைத் தொடர்ந்தார். 

திருக்கேதாரம் (1882)
கெளரி குண்டம், திருக்கேதாரம், இந்திர நீலபருப்பதம் முதலான திருத் தலங்களைத் தரிசித்தார். உள்ளம் பேரானந்தப் பெருவெள்ளத்தில் நீந்திக் களித்தாலும்  - சுவாமிகளின் உடல் நிலையோ தளர்வுற்று இருந்தது. 

ஆயினும் தளராத மனத்தினராய் - 

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்!..

- என்று உறுதி பூண்டார். திருப்பதிகங்கள் அவர் திருநாவினின்று மலர்ந்தன.

எவ்விடத்தும் தங்காது நடந்தார்., நடந்தார்,. நடந்து கொண்டேயிருந்தார்.

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி!..
(6/55)

உண்ணவும் இல்லை. ஓரிடத்தில் இருந்து உறங்கவும் இல்லை!.. விளைவு!.. 

நடந்ததால் பாதங்கள் தேய்ந்தன. அதனால் என்ன என்று கைகளை ஊன்றிச் சென்றார்.  கைகளும் தேய்ந்தன. 

பகல் இரவு என்று கருதாது, கயிலை நோக்கிச் சென்ற சுவாமிகளின் மன உறுதியைக் கண்ட -  வன விலங்குகள் அஞ்சி வழி விட்டு விலகிச் சென்றன. 

கொடிய நஞ்சுடைய நாகங்கள் -  ஒளிரும் மணிகளை உமிழ்ந்து - இரவில் வழிகாட்டி - தம் வினைகளைத் தீர்த்துக் கொண்டன. 

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி!..
(6/55)

கைகளும் பயனற்றுப் போக - நிலத்தில் ஊர்ந்ததால், மார்புத் தசைகள் தேய்ந்து சிதற,  எலும்புகளும் முறிந்தன.  

நாவுக்கரசரின் நெஞ்சுரம் கண்டு கயிலை மாமலையும் உருகியது. 

கயிலை மாமலையே  - உருகிய போது கருணை வடிவான கயிலை நாதனின் நெஞ்சம் உருகாமல் இருக்குமா!.. உருகிற்று!.. 

வேதியர் என உருக் கொண்டு நாவுக்கரசரை அணுகிற்று.

''..உடலெல்லாம் காயப்பட்ட நிலையில் இங்கு என்ன காரணம் கொண்டு வந்தீர்?..''  - என வினவிற்று!..

''..வண்டுலாவும் மலர்க் கூந்தல் உமாதேவியுடன் , எம்பெருமான் கயிலையில்  வீற்றிருக்கும் திருக்காட்சியினைத் தரிசிக்க விருப்புற்று வந்தேன்!..'' - என்றார் அப்பர்.''..தேவர்களுக்கே அரிதானது கயிலை!.. அதனை நாடி வந்து இத்தனை துன்பம் அடைகின்றீரே!.. உம் போன்ற மானுடர்க்கு அது அத்தனை எளிதல்ல!.. எனவே
இங்கிருந்து மீண்டு செல்வீராக!..'' - என்றார் தவயோகி என வந்த பரம்பொருள்.

''ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை காணாமல், மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்!..'' - என மறுத்து உரைத்தார் - சுவாமிகள்!..

தன் அடியாரின் மன உறுதியைக் கண்டு - ஆதியும் அந்தமும் இல்லாது  ஜோதியாய் நின்ற சிவப் பரம்பொருள் பெருமிதம் கொண்டது.

''நாவுக்கரசரே!.. இதோ இந்தப் பொய்கையுள் மூழ்கிக் கயிலைக் காட்சியினைக் காண்பீராக!..'' - என மொழிந்து மறைந்தார். 

நாவுக்கரசரா!?.. அது அதிகை வீரட்டானத்தில் ஐயன் அருளியதாயிற்றே!.. அப்பெயரை யான் மறந்தும் வெகு நாளாயிற்றே!..  இங்கே அதை அறிந்து அழைத்தவர்  யாராயிருக்கக்கூடும்?..  - திகைத்தார் ஸ்வாமிகள்.

அந்த அளவில் வந்தது இறை என்றுணர்ந்து  அகமகிழ்ந்தார். 

கயிலை மலைச் சாரலில் இருந்த பொய்கையில் மூழ்கினார் அப்பர் பெருமான்.


தீர்த்தத்திலிருந்து எழுந்தபோது அவர் கண் முன் தெரிந்தது பஞ்சநதீஸ்வரம். 

அப்போது-  திருக்கயிலைக் காட்சி பேரானந்தப் பெருங்காட்சியாக விரிந்தது!..

கணபதி, கந்தன், திருமால், நான்முகன் -  சூழ்ந்திருக்கக் கண்டார்.

இந்திரன் முதலான தேவர்களுடன் அசுரர்கள், சித்தர்கள், மகரிஷிகள், வித்யாதரர்கள் , கின்னரர்கள், யட்சர்கள்,  நாகர்கள் - என  அனைவரும்  திரண்டு நின்று வணங்கிடக் கண்டார். 

கங்காதேவி மங்கல நீர் வார்க்க - சிவகணங்களும் பூதவேதாள கணங்களும் பலவகையான வாத்தியங்களை இசைத்துப் போற்றிட - 

தேவ மகளிரின் பாடலும் ஆடலும் முழவு ஒலியும் எழுகடலின் ஓசை என எங்கும் எதிரொலிப்பதைக் கேட்டார்.

இறைவனின் ஆணைப்படி, வருபவர்க்கு வழிபாடு செய்விக்கும் பொறுப்பினை உடைய நந்தியம் பெருமான் நடுவில் நின்று விளங்கிட, 


வெள்ளி மலையென விளங்கும் விடை வாகனத்தின் மீது உமா தேவியுடன் - வீற்றிருக்கும் காட்சியைக் கண்டு கை தொழுது வணங்கி இன்புற்றார்.  

அந்த அளவில் -

அம்மையும் அப்பனும் ஆனந்த ஸ்வரூபமாக - ஆடி வருவதைக் கண்டு இன்புற்றார்.

நிற்பனவும் நடப்பனவும் ஆகிய உயிர்கள் அனைத்தும், சக்தியும் சிவமும் ஆகிய தன்மையில், பற்பல உயிர்களின் பிறப்பு விளங்கும் முறைமையைக் கண்டார். 

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந் தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்!..
 

காதல் மடப்பிடியோடுங் களிறு
கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து
வரிக்குயில் பேடையொடு ஆடி
சிறையிளம் பேடையொடு ஆடிச் சேவல்
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து
 வண்ணப் பகன்றிலொடு ஆடி
கருங்கலை பேடையொடு ஆடிக் கலந்து
நற்றுணைப் பேடையொடாடி நாரை
பைங்கிளி பேடையொடு ஆடி
வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததோர் காலங் காண்பான் கடைக்கணிக் கின்றேன்
அளவு படாததோ ரன்போ டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்!..
(4/3)


திருநாவுக்கரசு சுவாமிகள்  பாடினார். ஆடினார். அழுதார். தொழுதார். 

''சுவாமிகளுக்கு அங்கு நிகழ்ந்தனவற்றை யார் சொல்ல வல்லார்?.  எவரும் இலர்!..'' - என்கின்றார் சேக்கிழார் பெருமான் - பெரிய புராணத்தில்!...

அப்பர் பெருமான் கண்ட கயிலாயத் திருக்காட்சி ஆடி அமாவாசை தினத்தில் நிகழ்ந்ததாக ஐதீகம். 

அவ்வண்ணமே - இன்று (ஜூலை/26) திருஐயாற்றில் பெருங்கோலாகலமாக நிகழ்கின்றது.

திருஐயாற்றில் கயிலைக் காட்சி கண்டால் கயிலாயம் தரிசித்த புண்ணியம் என்பர். 

இங்கு வந்து தரிசனம் செய்தவர்கள் எல்லா நலன்களையும் பெறுவர் என்பது திண்ணம். 

நாமும் சென்று தரிசிப்போம்!..

திருநாவுக்கரசர் அருளிய தேவாரத்தைப் பாராயணம் செய்தபடி - நாள்முழுதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலினுள் குழுமியிருக்க, மாலையில்  - திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளும் வைபவம் நிகழ்வுறும்.


ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி ஸ்ரீஐயாறப்பருடன் வலம் வந்து அருளும் - பக்திப் பரவசமான காட்சியினைக் காணக் கண்கோடி வேண்டும். 

அடியார்களாகிய நம் பொருட்டு  - ஐயனும் அம்பிகையும் விடை வாகனத்தில் எழுந்தருளி - வலம் வந்து வரந்தருகின்றனர். 

கயிலாய நாதனைக் கண்டு தரிசிப்போம்!..  
கண் கொண்ட பயனைப் பெறுவோம்!..
 
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்!.
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்!.
''சிவாய திருச்சிற்றம்பலம்!..''
* * *

8 கருத்துகள்:

 1. திருவையாறு
  பெருமை அறிந்தேன்
  உன்னதம் உணர்ந்தேன்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. திருநாவுக்கரசர் சிறப்புகள் அனைத்தும் அருமை ஐயா...

  வரிகளுக்கேற்ப படங்களும் பிரமாதம்...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. ப டங்களும் அவற்றினடியில் கண்ட வரிகளும் கவர்ந்தன. சொல்லிப் போகும் பாங்கு மகிழ்விக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   ஸ்வாமியும் அம்பிகையும் இணை பறவைகளாக - மற்றும் விலங்குகளாகத் தம்முன் தோன்றியருளிய போது திருநாவுக்கரசர் பாடிய திருப்பதிகத்தின் வரிகளைத் தான் படங்களின் கீழ் குறித்துள்ளேன்.

   தங்கள் மகிழ்ச்சியே - எனது மகிழ்ச்சி..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி .. ஐயா..

   நீக்கு
 4. உங்களின் தளத்தைப் பற்றி இன்று வலைச்சரத்தில் பாராட்டியுள்ளேன்..
  இணைப்பு இதோ http://blogintamil.blogspot.in/2014/08/blog-post_5.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் அன்புக்கு மகிழ்ச்சி..
   மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..