நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சிவதரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவதரிசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 08, 2026

விஸ்வநாதம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 ஞாயிறு

ஸ்ரீ விஸ்வநாத அஷ்டகம்


கங்கா தரங்க ரமணீய ஜடா கலாபம்
கௌரி நிரந்தர விபூஷித வாம பாகம்
நாராயண ப்ரிய அனங்க மதாபஹாரம்
வாரணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 1

வாசாம கோசர மநேக குண ஸ்வரூபம்
வாகீச விஷ்ணு ஸுரஸேவித பாதபீடம் 
வாமேந விக்ரஹ வரேண களத்ர வந்தம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 2

பூதாதிபம் புஜகபூஷண பூஷிதாங்கம்
வ்யாக்ரா ஜிநாம் பரதரம் ஜடிலம் த்ரிநேத்ரம்
பாசாங் குசாபய வரப்ரத சூலபாணிம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 3

ஸீதாம்சு சோபித கிரீடவிராஜ மாநம்
பாலேக்ஷணா நலவிசோஷித பஞ்சபாணம் |
நாகாதிபா ரசித பாஸுர கர்ணபூரம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 4

பஞ்சாநநம் துரிதமத்த மதங்க ஜாநாம்
நாகாந்தகம் தநுஜ புங்கவ பந்நகாநாம் 
தாவாநலம் மரணசோக ஜராடவீநாம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 5

தேஜோமயம் ஸகுண நிர்குண மத்விதீய
மானந்த கந்தமபராஜித மப்ரமேயம் 
நாகாத்மகம் ஸகல நிஷ்கலமாத்ம ரூபம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 6

ராகாதி தோஷரஹிதம் ஸ்வஜ நாநுராக
வைராக்ய சாந்தி நிலயம் கிரிஜா ஸஹாயம் 
மாதுர்ய தைர்ய ஸுபகம் கரளா பிராமம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 7

ஆசாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தாம்
பாபே மதிம் ச ஸுநிவார்ய மந: ஸமாதௌ
ஆதாய ஹ்ருத்கமல மத்யகதம் பரேசம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 8

வாராணஸீபுரபதே: ஸ்தவநம் சிவஸ்ய
வ்யாக்யாத மஷ்டகமிதம் படதே மனுஷ்ய: |
வித்யாம் ச்ரியம் விபுல ஸௌக்ய மனந்தகீர்த்திம்
ஸம்ப்ராப்யதே ஹவிலயே லபதே ச மோக்ஷம் 9

விச்வநாதாஷ்டகமிதம் ய: படே சிவஸந்நிதௌ
சிவலோகமவாப்நோதி சிவேந ஸஹ மோததே 10

இதி ஸ்ரீவ்யாஸக்ருதம் விச்வநாதாஷ்டகம் ஸம்பூர்ணம்

சிவாய
திருச்சிற்றம்பலம்
***

ஞாயிறு, டிசம்பர் 15, 2024

ஸ்ரீ வாஞ்சியம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 30
ஞாயிற்றுக்கிழமை

எச்சன் நிணத் தலை கொண்டார் பகன் கண் கொண்டார்
இரவிகளில் ஒருவன் பல் இறுத்திக் கொண்டார்
மெச்சன் வியத்திரன் தலையும் வேறாக் கொண்டார்
விறல் அங்கி கரங் கொண்டார் வேள்வி காத்த
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார்
உணர்விலாத் தக்கன் தன் வேள்வியெல்லாம்
அச்சமெழ அழித்துக் கொண்டு அருளும் செய்தார்
அடியேனை ஆட்கொண்ட அமலர் தாமே!..6/96
-: திருநாவுக்கரசர் :-


எம்பெருமானுக்கு அழைப்பு இல்லாத வேள்வியில் - தட்சன் வழங்கிய அவியினை உண்ணச் சென்ற தேவர்களை ஒறுத்து ஈசனின் தலைமைத்துவத்தை நிலை நிறுத்தினர் - ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமியும் ஸ்ரீ பத்ர காளி அம்மனும்..

வீரபத்ர ஸ்வாமியை எதிர்த்து சூரியன் சண்டையிட்டதால் பார்வை பறி போனதோடு பற்களும் உடைபட்டன ..

தனது பிழைக்கு வருந்திய சூரியன் -  இங்குள்ள  குப்த கங்கைக் கரையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். 

சூரியனின் தவத்தில் மகிழ்ந்த இறைவன் சூரியனுக்கு  - இழந்த ஒளியை வழங்கியதுடன் வேறு பல நலன்களையும் மீண்டும் அளித்தார். 

இதனால் -  இத்தலத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடுதல்  சிறப்பானது. 

 ஸ்ரீ வாஞ்சியம்.


இறைவன்
ஸ்ரீ வாஞ்சிநாதர், 
ஸ்ரீ வாஞ்சிலிங்கம்
அம்பிகை
ஸ்ரீ மங்களநாயகி, 
ஸ்ரீ மருவார்குழலி

தீர்த்தம்
குப்த கங்கை, 
பிரம்ம தீர்த்தம், 
தலவிருட்சம்
சந்தன மரம்.


 ஸ்ரீ எனும் மகாலக்ஷ்மியை விரும்பிய திருமால் - சிவபெருமானை தியானித்து தவம் இருந்த தலம். ஆதலால்  ஸ்ரீவாஞ்சியம்.

திருமாலும் திருமகளும் 
வணங்கிய திருத்தலம். 
சூரியனும் யமதர்மனும் பணிந்த திருத்தலம்.

திருமாலைப் பிரியாதிருக்க விரும்பிய திருமகள் சிவபூஜை செய்த தலம் என்றும் குறிக்கப்படுகின்றது..

ஸ்ரீமஹாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும் ஒருவரை ஒருவர் பிரியாதிருக்க வேண்டி சிவபூஜை செய்த போது அவர்கள் நீராடுவதற்கென கங்கை இங்கே பொங்கி எழுந்து பொலிந்தாள் என்பது ஐதீகம். 

திருமாலும் திருமகளும் நீராடியதனால் கங்கை மேலும் பவித்ரமாக இங்கு விளங்குவதாக ஐதீகம்...  


மேலும் - குப்த கங்கை திருக்குளத்தில் கார்த்திகை மாத நீராடல் கங்கையில் நீராடிய பலனைத் தரும் என்பது தலவரலாறு. 

மிகவும் பழைமை வாய்ந்த திருத்தலம் ஸ்ரீ வாஞ்சியம். 

ஸ்ரீவாஞ்சியத்தைச் சுற்றிலும் நன்னிலம், அம்பர் மாகாளம், திருமீயச்சூர், திருவீழிமிழலை, திருப்பாம்புரம் - என திருத்தலங்கள் பல விளங்குகின்றன.

நற்பேறு இருந்தாலன்றி ஸ்ரீவாஞ்சியத்தின் தரிசனம் அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைப்பதில்லை என்று கூறுகின்றார்கள். 

ஸ்ரீ வாஞ்சி நாதரையும் ஸ்ரீ மங்களாம்பிகையையும் அவர்களுக்குப் பணி செய்து மகிழ்ந்திருக்கும் ஸ்ரீ யம தர்மராஜனையும் ஒருசேர தரிசனம் செய்தவர்களுக்கு மரண பயம் இல்லை. யம வாதனை கிடையாது.

உயிர்களைப் பிரித்தெடுக்கும் தனது பணியால் மனம் நொந்து வருந்தினார் யமன்.

யமனின் தடுமாற்றத்தால் உலக இயக்கம் மாறுபட்டது.

பூதேவி நிலை குலைந்தாள். 

" எல்லா உயிர்களையும் ஈவு இரக்கமில்லாமல் எடுப்பதனால், பெரும் பழிச் சொல்லுக்கு ஆளாகின்றேனே!..  "

- என்று வருந்திய யம தர்மன் - தனது துயரம் தீர வேண்டி, தவத்தில் ஆழ்ந்தார். அவருடைய தவத்திற்கு இரங்கிய ஈசன் - 

" நீ ஏற்று நடத்தும் பணி ஆன்மாக்களை அறச் செயலில் ஆற்றுப்படுத்துதல் அன்றோ!..மற்ற தேவர்களைக் காட்டிலும் சிறந்தவன் நீ!.. உயர்ந்ததும் உன்னதமானதும்  உனது பணியே!.. தர்மங்களைப் பரிபாலிப்பவன் நீ அல்லவோ.. இனி நீ தர்மராஜன் என அழைக்கப்படுவாய்!. "

- எனத் திருவருள் பொழிந்ததுடன் யமதர்ம ராஜனை திருவாஞ்சியத்தின் க்ஷேத்ரபாலகன் எனவும் நியமித்தார் ஈச்ன்..

தனது பணியின் உன்னதத்தினை உணர்ந்த யம தர்மராஜனும் மன வாட்டம் தீர்ந்து அமைதியுற்றார்.

பின்னும் இறைவனை வேண்டி  - ஐயனையும் அம்பிகையையும் சுமந்து சேவை புரியும் வாய்ப்பினை  விரும்பிப்  பெற்றார் யமதர்மன். 

இறைவன் யமதர்மராஜனுக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்த  திருவிழா மாசி மாத பரணியில் நிகழ்கின்றது.

இத்தலத்தில் வந்து சேவித்தவர்க்கும் நினைத்தவர்க்கும் மரித்தவர்களுக்கும் மரண பயம் அவஸ்தை கிடையாது. 


திருக்கோயிலின் தீர்த்தமாகிய  - குப்த கங்கை எனும் திருக்குளம்  - கோயிலின் நுழைவாயிலின் வடபுறம் பரந்து காணப்படுகின்றது. 

இந்தத் திருக்குளத்தினுள் தான் கங்கை பூரணகலைகளுடன் சூட்சுமமாகக் கலந்திருக்கின்றாள் என்கின்றது தலபுராணம்.


திருக்குளத்தின் தென் புறமாக தெற்கு நோக்கிய சந்நிதியில் யமன்.
 நான்கு திருக்கரங்களுடன் பாசம், கதை, சூலம் ஏந்தி இடக் காலை மடித்து வலக் காலைத் தொங்க விட்டு பாதக் குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தருகிறார். 

யமதர்மனின் அருகில் முனிவர் கோலத்தில் சித்ரகுப்தன். 

சிவானுக்ரகம் பெற்ற ஸ்ரீயமதர்ம ராஜனின் முன்பாக நந்தியம்பெருமான் திகழ்கின்றார்.

யமதர்மனுக்குச் செய்யும் அர்ச்சனைப் பிரசாதங்கள் திருநீறு உட்பட - எந்தப் பொருளையும் சந்நிதியைக் கடந்து எடுத்துச் செல்லக் கூடாது என்பது மரபு.   

மற்ற ஊர்களில் திருக்கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் மரணம் நிகழ்ந்தால் - திருக்கோயில் அடைக்கப்படும். அந்த வழக்கம் இவ்வூரில் இல்லை.

இத்திருக்கோயிலில் நவக்ரஹங்கள் இல்லை. 
ஏனெனில் -

யம வாதனையே  இல்லை!.. என்றான பிறகு நமக்கு இங்கே என்ன வேலை என்று நவக்கிரக அதிபதிகள் - இறையன்பர்களை விட்டு விலகிப் போய் விட்டனர்..



திரு ஆரூர் மயிலாடுதுறை வழித் தடத்தில்
நன்னிலத்திற்கு அருகில் 10 கி.மீ தொலைவிலுள்ள திருவாஞ்சியத்திற்கு திருஆரூரில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

இன்று கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிறு.

செய்த பிழை தீர சூரியன் தொழுது வணங்கி நலம் பெற்ற நன்னாள்.

நண்பர் கூறினார் - கடை ஞாயிறு அன்று ஸ்ரீ வாஞ்சிய தரிசனதிற்குச் செல்வதாக!..

அப்போது தான் நினைவுக்கு வந்தது பத்தாண்டுகளுக்கு முன் ஸ்ரீ வாஞ்சிய தரிசனம் செய்ததும் பதிவில் வைத்ததும்..

முந்தைய பதிவைக் காண்பதற்கு இங்கே இணைப்பு - 


இடப் பாதத்தினால் யமனை
அமிர்தகடேஸ்வரர்  உதைத்தருளிய புராணம் நமக்குத் தெரியும்.. அபிராமவல்லியின் பெயரைக் கேட்டாலே யமனுக்கு நடுக்கம்..

மாரியம்மன் ஸ்தோத்திரமும் இதையே இயம்புகின்றது..

கொடுங்கூற்று என் செய்யும்?.. என்ற தைரியம் அளிப்பதுடன்
திருப்புகழின் பாடல்களில் ஒன்றைக் கற்றிருந்தாலே போதும் என்கின்றார் அருணகிரிநாதர்..

கணேச மந்திரமும் இவ்வாறே!..

நந்தியம்பெருமான் தனது மூச்சுக் காற்றினால் யமனைக் கட்டிப் போட்டு  விட்டு திசை திரும்பி அமர்ந்திருப்பது திருவைகாவூரில்...

த்வார பாலகரன தண்டி யமனை விரட்டி விட்டு ஆட்கொண்டார் எனத் திகழ்கின்றார் திரு ஐயாற்றில்..

ஆக - 
சிவ குடும்பத்தின் மூர்த்திகளைப்  பணிந்து  வணங்குபவர்களுக்கு சுகவீனம் அப ம்ருத்யு பயம் - இவை ஏற்படாது என்கின்றனர் சான்றோர்.. 

அவ்வண்ணமே அகிலம் அனைத்திற்கும் ஆகட்டும்..

மனம், வாக்கு, காயம் எனும் திரிகரணங்களால் - ஸ்ரீவாஞ்சிநாதப் பெருமானையும் மங்கல நாயகியையும் வணங்கி நலம் பெறுவோம்..


அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
திருத்துஞ் சேவடி யான் திகழுந்நகர்
ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம்
அருத்தியால் அடைவார்க்கு இல்லை அல்லலே.(5/67/7) 
-: திருநாவுக்கரசர் :-
** 
ஓம் ஹரி ஓம் 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், ஆகஸ்ட் 08, 2024

திருக்கோடிகா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 23
வியாழக்கிழமை

திருக்கோடிகா
(திருக்கோடிகாவல்)


இறைவன்
ஸ்ரீ கோடீஸ்வரர்
ஸ்ரீ கோடிகா நாதர்


அம்பிகை
ஸ்ரீ திரிபுரசுந்தரி

தல விருட்சம் பிரம்பு
தீர்த்தம் ஸ்ருங்க தீர்த்தம் காவிரி 


' கா '  எனக் குறிக்கப்பட்ட திருவூர்கள் ஐந்தனுள் ஒன்று.. 

ஏனைய நான்கு தலங்கள் :- 
திரு ஆனைக்கா, திரு நெல்லிக்கா
திரு குரக்குக்கா, திரு கோலக்கா..

திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகியோரால் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்.. 


இத்தலத்தின் புராதனத் திருப்பெயர் வேத்ர வனம் என்பதாகும்.. வேத்ரம் எனில் பிரம்பு..

இத்தலம் -
தேவாரப் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி வடகரையில்   முப்பத்தேழாவது திருத்தலம் ஆகும்..


(கல்லணை பூம்புகார் சாலையில்) கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கதிராமங்கலத்தில் இருந்து இரண்டு கிமீ தொலைவில் உள்ளது இக்கோயில்..


இத்தலம் மூன்று கோடி முனிவர்களால் வழிபடப்பட்டதாகும். இக்கோயில் கண்டராதித்த சோழரின் பட்டத்தரசியாராகிய செம்பியன் மாதேவியாரால் கற்றளியாக எழுப்பப்பட்டது..

இக்கோயிலின் உள் மண்டபத்தில் வலப்புறம் சித்ரகுப்தரும், இடப்புறம் எமதர்மனும் எழுந்தருளி உள்ளனர்...
சநைச்சரனும் யமதர்ம ராஜனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர்.

திருக்கடவூரில் சம்ஹாரம் செய்யப்பட்ட யமன் உயிர் பெற்றெழுவதில்  விநாயகர் பேருதவி செய்ததால்  இத்தலத்தில் ஸ்ரீ கரையேற்று விநாயகர் எனத் திருப்பெயர்.. 

யமன் மாண்டதனால் பூபாரம் தாளமுடியாமல் போகவே தேவர்கள் ஆற்று மணல் கொண்டு பிள்ளையார் பிடித்து வழிபட்டனர் என்பர்..

இத்தலத்திற்கு வந்தவர்களை யமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்பதும் திருக்கோடிக்கா எனும் ஒலியைக் காதால் கேட்டவர்களைக்  கண்டிக்கவோ தண்டிக்கவோ  யமனுக்கு உரிமை இல்லை என்பதும், இவ்வூரின் மண்ணை மிதித்தவர்களைக் கூட யமன் நெருங்கக் கூடாது என்பதும் யம தர்ம ராஜனுக்கு இடப்பட்டிருக்கின்ற
கட்டளைகள்...

இக்கோயிலில் வழிபாடுகளை முடித்து விட்டு வைகுந்தம் செல்ல வேண்டும் என்று முனைந்த துர்வாச முனிவருக்கு  அம்பாள் பெருமாளாகக் காட்சி கொடுத்த வைபவமும் உள்ளது..


இன்றும் புரட்டாசி இரண்டாம் சனிக் கிழமையில் ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாளாகத் திருக்கோலம் கொள்கின்றாள் அன்னை திரிபுர சுந்தரி..

இத்தலத்தில் நவக்கிரக பிரதிஷ்டை  கிடையாது..

மூன்று கோடி முனிவர் தவம் செய்த தலம் ஆதலால் இத்தலத்தில் ஒருதரம் சொல்லப்படுகின்ற பஞ்சாட்சரம் ஒரு கோடியாக உருப் பெறுவதாக ஐதீகம்..

ஜென்ம ஜென்மமாய் திரண்டிருக்கும் பாவங்கள் அனைத்தையும் தீர்க்கும் ஒரே திருத்தலம்  - 
ஸ்ரீ திரிபுரசுந்தரியுடன்  ஸ்ரீ கோடீஸ்வரர் உறைகின்ற திருக்கோடிகா..

இன்றுநன்று நாளைநன்று
  என்றுநின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப்
  போகவிட்டுப் போதுமின்
மின்தயங்கு சோதியான்
  வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான்
  கோடிகாவு சேர்மினே.. 2/99/1
-: திருஞானசம்பந்தர் :-

வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திரு ஆரூர்த் திருமூலத் தானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.. 6/81/2
-: திருநாவுக்கரசர் :-
**
 பதிகப் பாடல்கள் நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஜூலை 14, 2024

திருப்பயற்றூர்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 30 
ஞாயிற்றுக்கிழமை


இறைவன்
திருப்பயற்றூர் நாதர் 
அம்பிகை
காவியங்கண்ணி
 நேத்ராம்பிகை

தல விருட்சம் 
சிலந்தி மரம் 
தீர்த்தம் 
பிரம்மதீர்த்தம்


அன்பனாகிய வணிகனின்  பொருட்டு  இறைவன் இத்தலத்தில் மிளகு மூட்டைகளை பயறு மூட்டைகளாக மாற்றித்
 தந்ததாக ஐதீகம்...

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திற்கு அருகில் திருப்பயற்றூர் அமைந்துள்ளது..


திருநாவுக்கரசர் தேவாரம்
நான்காம் திருமுறை
முப்பத்திரண்டாம் திருப்பதிகம்

உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறொழுகி யோட
விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல்விதிர்த் தலக்க நோக்கித்
தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலர் ஆகித் தாமுஞ்
சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற்றூர னாரே.. 1
(கஜ சம்ஹாரம்)

உவந்திட்டங்கு உமையோர் பாகம் வைத்தவர் ஊழியூழி
பவந்திட்ட பரமனார்தாம் மலைசிலை நாகம் ஏற்றிக்
கவர்ந்திட்ட புரங்கண் மூன்றுங் கனல்எரி யாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலுந் திருப்பயற்றூர னாரே.. 2
(திரிபுர சம்ஹாரம்)

நங்களுக் கருள தென்று நான்மறை ஓதுவார்கள்
தங்களுக் கருளும் எங்கள் தத்துவன் தழலன் தன்னை
எங்களுக் கருள்செய் என்ன நின்றவனாக அஞ்சுந்
திங்களுக்கு அருளிச் செய்தார் திருப்பயற்றூர னாரே.. 3
(சந்திரன் வணங்கிய தன்மை)

பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோள் அரா மதிய நல்ல
தீர்த்தமும் சடையில் வைத்தார் திருப்பயற்றூர னாரே.. 4
(ஐயனார் மகனென்ற புராணம்)
 
மூவகை மூவர் போலும் முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலும் நான்மறை ஞான மெல்லாம்
ஆவகை ஆவர் போலும் ஆதிரை நாளர் போலும்
தேவர்கள் தேவர் போலும் திருப்பயற்றூர னாரே.. 5
(தேவர்கள் வணங்கிய தன்மை)

ஞாயிறாய் நமனும் ஆகி வருணனாய்ச் சோமன் ஆகித்
தீயறா நிருதி வாயுத் திப்பிய சாந்தன் ஆகிப்
பேயறாக் காட்டில் ஆடும் பிஞ்ஞகன்  எந்தை பெம்மான்
தீயறாக் கையர் போலுந் திருப்பயற்றூர னாரே.. 6
(யாதுமாகி நின்ற தன்மை)

ஆவியாய் அவியு மாகி அருக்கமாய்ப் பெருக்கம் ஆகிப்
பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரமன் ஆகிக்
காவியங் கண்ண ளாகிக் கடல்வண்ணம்  ஆகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற்றூர னாரே.. 7
(யாதுமாகி நின்ற தன்மை)

தந்தையாய்த் தாயு மாகித் தரணியாய்த் தரணியுள் ளார்க்கு
எந்தையும் என்ன நின்ற ஏழுல குடனும் ஆகி
எந்தையெம் பிரானே என்றென் றுள்குவார் உள்ளத் தென்றும்
சிந்தையுஞ் சிவமும் ஆவார் திருப்பயற்றூர னாரே.. 8
(எஞ்ஞான்றும் அருளல்)

புலன்களைப் போக நீக்கிப் புந்தியை ஒருங்க வைத்து
இலங்களைப் போக நின்று இரண்டையு நீக்கி ஒன்றாய்
மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுட் போக மாகிச்
சினங்களைக் களைவர் போலுந் திருப்பயற்றூர னாரே.. 9
(பாவங்களைக் களைதல்)

மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்துநல் அரிவை அஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார் திருப்பயற்றூர னாரே.. 10
(ராவணனனுக்கு அருளியமை)
நன்றி: பன்னிரு திருமுறை

சிவாய திருச்சிற்றம்பலம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வெள்ளி, மார்ச் 08, 2024

சிவ சிவ 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 25
 வெள்ளிக்கிழமை

இன்று
மஹா சிவராத்திரி


செங்கணானும் பிரமனும் தம்முளே
எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலர்
இங்குற்றேன் என்று லிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே.. 5/95/11
-: திருநாவுக்கரசர் :-


" மூண்டு முளைத்தெழும் வித்தெல்லாம் சிவலிங்கம்.. " என்றனர் ஆன்றோர்..

இன்று மாலை தொடங்கி விடியும் வரை ஸ்ரீ மஹா சிவராத்திரி..

நான்கு கால (6:00 - 9:00, 9:00 - 12:00, 12:,00 - 03:00, 3:00 - 6:00) அபிஷேகங்களுடன் பூஜைகள்.. 

நமது சிவாலயங்களில் நள்ளிரவு வழிபாடுகள் இன்று ஒரு நாள் மட்டுமே.. 

ஒரு சமயம் திருக்கயிலாயத்தில் எம்பெருமான் அம்பிகையுடன் அத்தாணி மண்டபத்தில் திருக்காட்சி நல்கியபோது நாகராஜன் குடையாக நின்றிருந்தான்.. 

கணபதியும் கந்தனும் வணங்கிய பிறகு
தேவர்களும் முனிவர்களும் அரம்பையர்களும் யட்சர்களும் கின்னரர்களும் அம்மையப்பனின் அடித்தாமரையில் வீழ்ந்து பணிந்து கொண்டிருந்தனர்..

ஈசனுக்குப் பின்னால் நின்றிருந்த நாகராஜனின் நெஞ்சில் இறுமாப்பு விரிந்தது.. தலை கனத்தது..

அதே விநாடியில் - தலை குப்புற அதல பாதாளத்தில் விழுந்தான்.. விழுந்த வேகத்தில் தலை நூறாகத் தெறித்துப் போனது..

பாதாளத்தில் இருந்து எழுந்து வந்தவனிடம் அன்பு கொண்டு விநாயகப் பெருமான் அருளினார்.. 

சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் நான்கு தலங்களில் சிவபூஜை செய்தால் உனது பழியும் பாவமும் தீரும் என்று..

அதன்படி முதற் காலத்தில் திருக் குடந்தைக் கீழ்க்கோட்டம் இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரம் மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரம்  நான்காம் காலத்தில் திருநாகை (சில குறிப்புகளில் திரு நாகூர்) என, வழிபட்டு நின்றான்..

எம்பெருமானும் அவனை மன்னித்து அருள் செய்தாக ஐதீகம்..

குடந்தைக் கீழ்க்கோட்டம் என தேவாரத்தில் சொல்லப்பட்டுள்ள திருக்கோயில் கும்பகோணத்திலுள்ள ஸ்ரீ நாகேஸ்வரன் கோயில்..

திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகேஸ்வரன் கோயில்..

திருப்பாம்புரம் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் கோயில்..

நாகப்பட்டினம்
ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் கோயில்..


நள்ளிரவுக்குப் பின் மூன்றாவது காலத்தில் அம்பிகை ஈசனை வழிபட்டதாக ஐதீகம்..

தஞ்சை ராஜராஜேஸ்வரத்தில் மூன்றாம் கால பூஜைக்குப் பின் ஸ்ரீ பிரஹதீஸ்வரர் அம்பிகையுடன் திருவீதி எழுந்தருள்வார்..

நான்கு காலங்களிலும் இத்திருக்கோயில்களை சிந்தித்து நலம் பெறுவோம்..
 
குடந்தைக்
கீழ்க்கோட்டம்


இறைவன்
ஸ்ரீ நாகேஸ்வரஸ்வாமி
அம்பிகை
ஸ்ரீ பிரஹந்நாயகி
தீர்த்தம்
மகாமக தீர்த்தம்
தலவிருட்சம்
வில்வம்

காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங்
காமன் எழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்
ஆலதனில் அறம்நால்வர்க்கு அளித்தார் போலும்
ஆணொடுபெண் அலியல்லர் ஆனார் போலும்
நீலஉரு வயிரநிரை பச்சை செம்பொன்
நெடும்பளிங்கு என்று அறிவரிய நிறத்தார் போலுங்
கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்
குடந்தைக் கீழ்க் கோட்டத்தெம் கூத்த னாரே..6/75/5
-: திருநாவுக்கரசர் :-
**
திருநாகேஸ்வரம்


இறைவன்
ஸ்ரீ நாகேஸ்வரஸ்வாமி
அம்பிகை
ஸ்ரீ கிரிகுஜாம்பிகை
தீர்த்தம்
சூரிய தீர்த்தம்
தலவிருட்சம்
சண்பகம்

கொம்பனாள் பாகர் போலும் கொடியுடை விடையர் போலும்
செம்பொனார் உருவர் போலும் திகழ் திருநீற்றர் போலும்
எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை
நம்புவார்க்கன்பர் போலும் நாகஈச்சரவனாரே..4/66/4
-: திருநாவுக்கரசர் :-
**
திருப்பாம்புரம்


இறைவன்
ஸ்ரீ சேஷபுரீஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ வண்டார்குழலி
தீர்த்தம்
சேஷ தீர்த்தம்
தலவிருட்சம்
வன்னி

சீரணி திகழ் திருமார்பில் வெண்ணூலர் 
திரிபுரம் எரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர் 
மான்மறி ஏந்திய மைந்தர்
காரணி மணிதிகழ் மிடறுடை அண்ணல் 
கண்ணுதல் விண்ணவர் ஏத்தும்
பாரணி திகழ்தரு நான்மறையாளர் பாம்புர நன்னகராரே..1/41/1
-: திருஞானசம்பந்தர் :-
**
நாகைக்காரோணம்


இறைவன்
ஸ்ரீ காயாரோணேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ நீலாயதாட்சி
தீர்த்தம்
தேவ தீர்த்தம்
தலவிருட்சம்
மா

வேம்பினொடு தீங்கரும்பு விரவி எனைத் தீற்றி
விருத்தி நான் உமை வேண்டத் துருத்திபுக்கு அங்கிருந்தீர்
பாம்பினொடு படர்சடைகள் அவை காட்டி வெருட்டிப்
பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும்
திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே
காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும்
கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே..7/46/2
-: சுந்தரர் :-


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது  இனியே..
-: மாணிக்கவாசகர் :-
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், மார்ச் 07, 2024

சிவ சிவ 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 24
 வியாழக்கிழமை


மகாசிவராத்திரியை முன்னிட்டு இப்பதிவு..


அம்பிகை - தானே தற்பரையாய் - ஈசன் எம்பெருமானை வழிபட்ட திருத்தலங்கள் :
திருக்குமரி, திருஆலவாய், திருக்கச்சி, திரு ஆனைக்கா..


அம்பிகை மயிலாக வழிபட்ட தலங்கள் :
திருமயிலை, மயிலாடுதுறை..

அம்பிகை பசுவாக வழிபட்ட தலங்கள் :
சங்கரன் கோயில்,  திருவாடுதுறை, திருப் பந்தணைநல்லூர், திருக்கொண்டீச்சுரம்..

அம்பிகை பத்ரகாளியாக வழிபட்ட தலம் திருமங்கலக்குடி ..

சப்த கன்னியரில்  பிராம்மி எனும் சக்ரமங்கை வழிபட்ட தலம் சக்ரப்பள்ளி (ஐயம்பேட்டை)  

மகேஸ்வரி எனும் அரிமங்கை வழிபட்ட தலம்
அரியமங்கலம்..

கௌமாரி எனும் சூலமங்கை வழிபட்ட தலம் சூலமங்கலம்..

வைஷ்ணவி எனும் நந்திமங்கை வழிபட்ட தலம்
நல்லிச்சேரி..

வராகி எனும் பசுமங்கை வழிபட்ட தலம்
பசுபதிகோயில்..

இந்திராணி எனும்  தாழ மங்கை வழிபட்ட தலம் தாழமங்கை.

சாமுண்டி எனும் புள்ளமங்கை
வழிபட்ட தலம் திருப்புள்ளமங்கை.

இத்தலங்கள் அனைத்தும் தஞ்சையை அடுத்து  அமைந்துள்ளன.. 


கணபதி வழிபட்ட தலம் :
கணபதீச்சுரம் (திருச்செங்காட்டங்குடி)
கற்பகநாதர் குளம் (வேதாரண்யம்),
திரு இடைமருதூர், காஞ்சி அநேகதங்காவதம்.

கந்தன் வழிபட்ட தலம் :
திருச்சேய்ஞலூர், சிக்கல், புள்ளிருக்கு வேளூர், திருச்செந்தூர், கீழ்வேளூர்.

ஊழியிலும் ஈசனுடன் இருப்பவர் நந்தியம்பெருமான்.. இருப்பினும் அவர் வழிபட்ட தலங்கள் :
காசி, திரு ஐயாறு, திருமழபாடி..

ஐராவதம் வழிபட்ட தலம் திருவெண்காடு..


காமதேனு / பசு வழிபட்ட தலங்கள் பலவாகும் :
கரூர் ஆநிலை, சிக்கல், ஆவூர், ஆமாத்தூர், பட்டீஸ்வரம், பசுபதி கோயில், தென்குடித் திட்டை, புள்ளிருக்கு வேளூர்..

அகத்தியர் வழிபட்ட தலங்கள் :
பாபநாசம் (நெல்லை) திருமறைக்காடு, அகத்தியம்பள்ளி,
திருமங்கலக்குடி, ஈங்கோய்மலை மேலும் பல..

ஸ்ரீ மஹாவிஷ்ணு வழிபட்ட தலங்கள்..

சங்கு வேண்டி வழிபட்ட தலங்கள் :
திருவலம்புரம், திரு தலைச்சங்காடு..


சக்கரம் வேண்டி வழிபட்ட தலங்கள் :
திருவீழிமிழலை, திருமாற்பேறு..

மச்ச அவதாரத்தில் தேவராயன்பேட்டை (சேலூர்) தஞ்சைக்கு அருகில்..

கூர்ம அவதாரத்தில் கச்சபேஸ்வரம் (காஞ்சி), கச்சூர்.

வாமன அவதாரத்தில் திருமாணிக்குழி..

நரசிம்ம அவதாரத்தில் தாமல் (காஞ்சி).

பரசுராம அவதாரத்தில் திருப்பழுவூர் (அரியலூர்), திருநின்றியூர்..

பலராம அவதாரத்தில் காஞ்சிபுரம்  (பலபத்ர ராமேஸ்வரம்), கோடியக்கரை..


ஸ்ரீ ராமபிரான் வழிபட்ட தலங்கள் :
திரு உசாத்தானம், கோயிலூர் (பட்டுக்கோட்டை),
திருமறைக்காடு,  இராமேஸ்வரம், பாபநாசம் (தஞ்சை)..

ஸ்ரீ ராமன், இளைய பெருமாள், ஜாம்பவான், சுக்ரீவன், அநுமன் ஆகியோர் வழிபட்ட தலம் திரு உசாத்தானம் (கோயிலூர் - பட்டுக்கோட்டைக்கு அருகில்)


ஸ்ரீ அனுமன் வழிபட்ட தலம் திருகுரக்குக்கா..

ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் சீர்காழி ..

ஸ்ரீ மஹாலக்ஷ்மி வழிபட்ட தலம் -
திருநின்றியூர்..

பிரம்மன் வழிபட்ட 
தலங்கள்: 
பிரமபுரம் (சீர்காழி) 
கண்டியூர், திருப்பட்டூர் மற்றும் பல தலங்கள்.

பதஞ்சலி, வியாக்ரபாதர் வழிபட்ட 
தலம் : திருப்பட்டூர்

முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட தலம் திரு ஆரூர்.

தசரதர் வழிபட்ட தலம் திருக்கொள்ளிக்காடு.

நள சக்கரவர்த்தி 
வழிபட்ட தலம் - 
திருநள்ளாறு.

வசிஷ்டர் வழிபட்ட தலம் :  தென்குடித் திட்டை, கரந்தை (தஞ்சை).

பிருங்கி முனிவர் வண்டு வடிவில் வழிபட்ட தலங்கள் : திருவண்டுறை, திருச்செங்கோடு..


கொங்கணர் வழிபட்ட தலங்கள் :
திருப்பதி, தஞ்சை.

கருவூரார் வழிபட்ட தலங்கள் :
கரூர் ஆநிலை, தஞ்சை, நெல்லை.

குபேரன் வழிபட்ட தலம்: தஞ்சை..

தேவர்கள் எறும்பு வடிவில் வழிபட்ட தலம்:
திருஎறும்பூர்.

நவக்கிரக நாயகர்கள் வழிபட்ட தலங்கள் :

சூரியன் திருப்பரிதி நியமம்சூரியமூலை, திருமங்கலக்குடி மற்றும் பல.
சந்திரன் - திங்களூர். 
அங்காரகன் -
புள்ளிருக்கு வேளூர்.
புதன் - திருவெண்காடு.

பிரகஸ்பதி - (தென்குடித்திட்டை, திருவலிதாயம்.
சுக்கிரன் - கஞ்சனூர்.

சனைச்சரன் - காசி.
ராகு கேது -
திருக்காளத்தி, மேலப்பெரும்பள்ளம்

பஞ்ச பாண்டவர் வழிபட்ட தலம் பற்பல - குறிப்பாக ஐயாவாடி..

இடும்பன் வழிபட்ட தலம் : இடும்பாவனம்.


யானை, சிலந்தி, நாகம்
வழிபட்ட தலம் :
திருக்காளத்தி..


யானை சிலந்தி 
வழிபட்ட தலம் :
திரு ஆனைக்கா..

ஜடாயு, சம்பாதி 
வழிபட்ட தலம் : 
புள்ளிருக்கு வேளூர்..

கரிக்குருவி/வலியன் வழிபட்ட தலங்கள்:
மதுரை, திருவலிவலம், திருவலிதாயம்..


நண்டு வழிபட்ட தலம்  
திருந்துதேவன்குடி..


நாரை வழிபட்ட தலம் 
திருநாரையூர்.

குயில் வழிபட்ட தலம் 
திருக்கோழம்பம்..

குரங்கு, அணில், காகம் ஆகிய மூன்றும் வழிபட்ட தலம் 
குரங்கணில்முட்டம்..

வாலி வழிபட்ட தலம்
திருகுரங்காடுதுறை..

தேவர்கள் பற்பல வடிவங்கள் கொண்டு வழிபட்ட தலங்கள் நிறைய இருக்கின்றன...

நரசிம்ம, பரசுராமர், பலராமர் - வழிபட்ட தலங்கள் தவிர்த்து மற்றவை நினைவின் அடுக்கில் இருந்து எழுதியுள்ளேன்..

தொகுப்பில் பல தலங்கள் விடுபட்டிருக்கலாம்.. 
பொறுத்துக் கொள்க..


கற்றவர்கள் உண்ணுங் கனியே போற்றி 
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி 
அல்லலறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி 
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரம் எரித்த சிவனே போற்றி 
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 6/32/1
-: திருநாவுக்கரசர் :- 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***