ஞாயிறு, டிசம்பர் 14, 2014

ஸ்ரீ வாஞ்சியம்

திருக்கயிலை மாமலையே அக்னிப் பிழம்பாகக் கொதிக்க - எம்பெருமானின் கோபக்கனலில் இருந்து ஸ்ரீ வீரபத்ரர் தோன்றினார்!..

அவ்வண்ணமே - அம்பிகையின் கோபாக்னி அவளது திருமேனியில் இருந்து ஸ்ரீபத்ரகாளி என வெளிப்பட்டது.

ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமியும் ஸ்ரீ பத்ர காளியும் தோன்றிய அக்கணமே - தட்சனின் யாக சாலையில் இருந்தனர்.

ஈசனை அவமதிப்பதே  - அந்த யாகத்தின் நோக்கம்!..


எல்லாம் வல்ல சிவபெருமானுக்கு அழைப்பு இல்லை என்பது தெரிந்தும் விருப்பத்துடன் கலந்து கொண்ட தேவர்களை ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமியும் ஸ்ரீ பத்ரகாளி அம்மனும் கடுமையாகத் தண்டித்தனர்.

தட்சனின் யாகசாலை முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டது.

வேள்விக்கு அதிபதியாக இருந்து முன் நடத்திய எச்சனின் தலை கொய்யப் பட்டது. சூரியர்களுள் ஒருவனான பகனின் கண் பறிபோனது.  ஒளி குன்றியது. பற்கள் உடைக்கப்பட்டன.

நான்முகனின் சிரமும் கலைமகளின் மூக்கும் அரியப்பட்டது. மன்மதனின் மேனி அழிக்கப்பட்டது. சந்திரன் உதைபட்டதோடு தரையில் தேய்க்கப் பட்டான்.

இந்திரனின் தோள்கள் நெரிக்கப்பட்டது. அக்னியின் கரமும் யமனின் காலும் துண்டிக்கப்பட்டன.

யாரென்று புரியாமல் - மஹாவிஷ்ணு தனது சக்ராயுதத்தினை பிரயோகிக்க - ஸ்ரீவீரபத்ரரின் திருமேனியில் இலங்கிய வெண்தலை மாலையில் இருந்த கபாலங்களில் ஒன்று சக்கரத்தைக் கௌவிக் கொண்டது.

இவற்றையெல்லாம் கண்டு கொதித்தவனாக ஆக்ரோஷத்துடன் எதிர்த்து வந்த தட்சனின் தலை அறுக்கப்பட்டு யாகத்தீயில் போடப்பட்டது.

எச்சன் நிணத் தலை கொண்டார் பகன் கண் கொண்டார்
இரவிகளில் ஒருவன் பல் இறுத்திக் கொண்டார்
மெச்சன் வியத்திரன் தலையும் வேறாக் கொண்டார்
விறல் அங்கி கரங் கொண்டார் வேள்வி காத்த
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார்
உணர்விலாத் தக்கன் தன் வேள்வியெல்லாம்
அச்சமெழ அழித்துக் கொண்டு அருளும் செய்தார்
அடியேனை ஆட்கொண்ட அமலர் தாமே!..6/96
திருநாவுக்கரசர்.

ஸ்ரீவீரபத்ரரின் பெருந்திறலை திருவாசகமும் தேவாரமும் பலவாறாகப்  பெருமையுடன் பேசுகின்றன.

தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்!.. - என்று, திருமங்கை ஆழ்வாரும் திருக்கூடலூர் திருப்பாசுரத்தில் புகழ்ந்து ஏத்துகின்றார்.

பெருமானுக்கு அழைப்பு இல்லாத   வேள்வியில் - தட்சன் வழங்கிய அவியினை உண்ணச் சென்ற தேவர்களை ஒறுத்து தலைமைத்துவத்தை நிலைநிறுத்தினார் - ஸ்ரீ வீரபத்ரர்.

ஒருவாறாக  - மஹாவிஷ்ணுவும் மஹரிஷிகளும்  ஸ்ரீ வீரபத்ர மூர்த்தியை சாந்தப்படுத்தினர்.

அமைதியடைந்த ஸ்ரீ வீரபத்ரர் - தக்கனுக்கு ஆட்டுத் தலையைப் பொருத்தி அவனுக்கும் தண்டிக்கப்பட்ட மற்றோருக்கும் வாழ்வளித்தார்.

அதன் பின் அவரவரும் தமது பாவம் தீர பற்பல தலங்களிலும் பிராயச்சித்தம் செய்து வழிபட்டனர்.

தன் பிழைக்கு வருந்திய சூரியன் -  இங்குள்ள  குப்த கங்கைக் கரையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். 

சூரியனின் தவத்தில் மகிழ்ந்த இறைவன் சூரியனுக்கு இழந்த ஒளியையும் நலன்களையும் மீண்டும் அளித்தார். 

இதனால் -  கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடுதல்  சிறப்பானது. 

அந்த வகையில் சூரியன் வழிபட்டு நலம் பெற்ற தலம் என்று குறிக்கப்படுவது ஸ்ரீவாஞ்சியம்!..

அவ்வண்ணமே நான்முகனும் கலைமகளும் தம் பிழை தீர வேண்டி- 
ஸ்ரீ வாஞ்சிநாதனையும் மருவார்குழலியையும் வணங்கி நலம் பெற்றதாக திருக்குறிப்பு.



இறைவன் - ஸ்ரீவாஞ்சிநாதர், ஸ்ரீ வாஞ்சிலிங்கம்
அம்பிகை - மங்களநாயகி, மருவார்குழலி
தீர்த்தம் - குப்த கங்கை, பிரம்ம தீர்த்தம், ஆனந்த கூபம்.
தலவிருட்சம் - சந்தன மரம்.

தலப்பெருமை
திருமாலும் திருமகளும் வணங்கிய திருத்தலம். 
சூரியனும் யமதர்மனும் பணிந்ததிருத்தலம்.


ஸ்ரீ எனும் மகாலக்ஷ்மியை விரும்பிய திருமால் - சிவபெருமானை தியானித்து தவம் இருந்த தலம். ஆதலால்  ஸ்ரீவாஞ்சியம்.

திருமாலைப் பிரியாதிருக்க விரும்பிய திருமகள் சிவபூஜை செய்த தலம் என்றும் குறிக்கப்படுகின்றது. 

ஸ்ரீமஹாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும் ஒருவரை ஒருவர் பிரியாதிருக்க வேண்டி சிவபூஜை செய்த போது அவர்கள் நீராடுவதற்கென கங்கை இங்கே பொங்கி எழுந்து பொலிந்தாள் என்பது ஐதீகம். 

திருமாலும் திருமகளும் நீராடியதனால் கங்கை மேலும் பவித்ரமாக இங்கு விளங்குகின்றாள்.  

தம்பதியர் இத்தலத்திற்கு வந்து நீராடி மருவார்குழலி உடனாகிய ஸ்ரீ வாஞ்சி லிங்கப் பெருமானை வணங்கி நிற்க - இல்லறம் நல்லறம் ஆகும் என்பது திருக்குறிப்பு!..

மேலும் - குப்த கங்கை திருக்குளத்தில் கார்த்திகை மாத நீராடல் கங்கையில் நீராடிய பலனைத் தரும் என்பது ஐதீகம். 



மிகவும் பழைமை வாய்ந்த திருத்தலம் ஸ்ரீ வாஞ்சியம். 

திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் நன்னிலத்திற்கு அருகில் அமைந்துள்ளது ஸ்ரீவாஞ்சியம்.
சுற்றிலும் நன்னிலம், அம்பர் மாகாளம், திருமீயச்சூர், திருவீழிமிழலை, திருப்பாம்புரம் - என திருத்தலங்கள் பல விளங்குகின்றன.

நற்பேறு இருந்தாலன்றி ஸ்ரீவாஞ்சியத்தின் தரிசனம் அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைப்பதில்லை என்று கூறுகின்றார்கள். 


ஸ்ரீவாஞ்சிநாதரையும் ஸ்ரீ மங்களாம்பிகையையும் அவர்களுக்குப் பணி செய்து மகிழ்ந்திருக்கும் ஸ்ரீயமதர்மராஜனையும் ஒருசேர தரிசனம் செய்தவர்களுக்கு மரண பயம் இல்லை. யம வாதனை கிடையாது.



காரணம் - 


உயிர்களைப் பிரித்தெடுக்கும் தனது பணியால் மனம் நொந்து வருந்தினார் யமன்.

யமனின் தடுமாற்றத்தால் உலக இயக்கம் மாறுபட்டது.
பூமாதேவி நிலைகுலைந்தாள். 

எல்லா உயிர்களையும் ஈவு இரக்கமில்லாமல் எடுப்பதனால், பெரும் பழிச் சொல்லுக்கு ஆளாகின்றேனே!.. 

- என்று வருந்திய யம தர்மன் - தன் துயரம் தீர வேண்டி, தவத்தில் ஆழ்ந்தார். அவருடைய தவத்திற்கு இரங்கிய ஈசன் - 

நீ ஏற்று நடத்தும் பணி ஆன்மாக்களை அறச்செயலில் ஆற்றுப்படுத்துதல் அன்றோ!..மற்ற தேவர்களைக் காட்டிலும் சிறந்தவன் நீ!.. உயர்ந்ததும் உன்னதமானதும்  உனது பணியே!.. 

தர்மங்களைப் பரிபாலிப்பவன் நீ அல்லவோ.. இனி நீ தர்மராஜன் என அழைக்கப்படுவாய்!..

- என திருவருள் பொழிந்ததுடன் திருவாஞ்சியத்தின் க்ஷேத்ரபாலகன் என நியமித்தார்.

தனது பணியின் உன்னதத்தினை உணர்ந்த யம தர்மராஜன் மன வாட்டம் தீர்ந்து அமைதியுற்றார். 


பின்னும் இறைவனை வேண்டி  - ஐயனையும் அம்பிகையையும் சுமந்து சேவை புரியும் வாய்ப்பினை  விரும்பிப்  பெற்றார் யமதர்மன். 

இறைவன் யமதர்மராஜனுக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்த  திருவிழா மாசி மாதம் பரணியில் நிகழ்கின்றது.

இத்தலத்தில் வந்து சேவித்தவர்க்கும் நினைத்தவர்க்கும் மரித்தவர்களுக்கும் மரண அவஸ்தை கிடையாது. 


கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் விளங்குகின்றது.

திருக்கோயிலின் தீர்த்தமாகிய  - குப்த கங்கை எனும் திருக்குளம்  - கோயிலின் நுழைவாயிலின் வடபுறம் பரந்து காணப்படுகின்றது. 

இந்தத் திருக்குளத்தினுள் தான் கங்கை பூரணகலைகளுடன் சூட்சுமமாகக் கலந்திருக்கின்றாள் என்கின்றது தலபுராணம்.


குப்த கங்கை
குப்த கங்கையில் கார்த்திகை - ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடி - ஸ்ரீ வாஞ்சி நாதரை வணங்குதல்  சிறப்பு.

குளக்கரையில் கங்கைக்கரை விநாயகர் எழுந்தருளியுள்ளார்.

கோபுர வாசலின் தென்புறம் அக்னி மூலையில் யமதர்மராஜனின் தனிக் கோயில். 

விநாயகருக்கு அடுத்து யமதர்மனுக்கே முதல் மரியாதை.

யமதர்மனை வணங்கிய பிறகே - திருக்கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

ஸ்ரீ யமதர்ம ராஜன்
தெற்கு நோக்கிய சந்நிதியில் யமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம், கதை, சூலம் ஏந்தி இடக் காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு பாதக் குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தருகிறார். 

யமதர்மனின் அருகில் முனிவர் கோலத்தில் சித்ரகுப்தன். 

சிவானுக்ரகம் பெற்ற ஸ்ரீயமதர்ம ராஜனின் முன்பாக நந்தியம்பெருமான் திகழ்கின்றார்.

யமதர்மனுக்குச் செய்யும் அர்ச்சனைப் பிரசாதங்கள் திருநீறு உட்பட - எந்தப் பொருட்களையும் சந்நிதியைக் கடந்து எடுத்துச் செல்லக்கூடாது என்பது மரபு.   

இரண்டாம் கோபுர வாசலில்  விநாயகர், சுப்ரமணியர் சந்நிதிகள்.   

உள்வாயிலைக் கடந்ததும்  மங்களாம்பிகை சந்நிதி . அன்னை நின்ற திருக் கோலத்தினள்.. அன்னை மருவார்குழலி என்றும் குறிக்கப்படுகின்றாள்.

அடுத்து கொடிமரம் - பலிபீடம், நந்தி உள்ளன. அடுத்து, நர்த்தன விநாயகர் சந்நிதி. 

மூன்றாம் கோபுர வாயிலில் இரட்டை விநாயகர் சந்நிதி. அருகில் அதிகார நந்திகேஸ்வரர். 

மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

கம்பீரமான துவாரபாலகர்களை வணங்கியவாறு அர்த்த மண்டபத்தைக் கடந்தால் - கண் எதிரில் கருணைக் கடலான ஸ்ரீ வாஞ்சிநாத ஸ்வாமி!..



சிவலிங்கத் திருமேனி உயர்ந்த பாணம்.  
தரிசித்து வணங்கும் போதே மனம் அமைதி அடைகின்றது. 

அற்புதமான தரிசனம். பிறவிப்பிணி நீங்கியதைப் போன்ற உணர்வு!.. 

பிறவிகள் தோறும் செய்த தவம் - ஸ்ரீ வாஞ்சிலிங்க தரிசனம்!..

கவலைகள் எல்லாம் காற்றில் பறந்து - எங்கோ ஒரு மூலையில் போய் விழுந்தாற்போல இருக்கின்றது.



பெருமானின் வலப்புறம் ஸ்ரீசோமாஸ்கந்த சந்நிதி.

ஐயனை அகலாதவளாக மருவார்குழலி.
மங்களாம்பிகை சர்வ மங்கலங்களையும் அருள்கின்றனள்.

அம்பிகை சந்நிதி விமானம்
தெற்கு திருச்சுற்றில்  விநாயகர், தக்ஷிணாமூர்த்தி. 
ஆலமர்செல்வனுக்கு எதிரில் இறையடியார்களாகிய நாயன்மார்கள். 

மேலைத் திருச்சுற்றில் விநாயகர், சந்திரமௌலீஸ்வரர், சட்டநாதர், சொக்க நாதர், அஷ்டலிங்கம், மஹாலக்ஷ்மி என தனித்தனி சந்நிதிகள்.


அழகே உருவான ஆறுமுகன் பன்னிரு கரங்களுடன் வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றார்.


வடக்குத் திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர்.
அடுத்து - பஞ்ச லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனைச்சரன், ஸ்ரீதுர்கா சந்நிதிகள்.

கிழக்கு முகமாக ஸ்ரீ மகிஷாசுரமர்த்தனி.

அழகே வடிவாக - அன்னை சிவகாம சுந்தரியுடன் நடராஜப் பெருமான்!..

சகல பிணிகளையும் தீர்ப்பவராக யோகபைரவர் விளங்குகின்றார்.
உடன் சூரியனும் சந்திரனும் திகழ்கின்றனர். ஒரே சிற்பமாக ராகு கேது.

இத்திருக்கோயிலில் நவக்ரஹங்கள் இல்லை. ஏனெனில் -

யம வாதனையே  இல்லை!.. என்றான பிறகு நமக்கு என்ன வேலை என்று நவக்கிரக அதிபதிகள் - இறையன்பர்களை விட்டு விலகிப் போய் விட்டனர்.


அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் - என மூவரும் பாடித் தொழுத திருத்தலம்.

ஈசனை - யமதர்மன் பணிந்து வணங்கிய வரலாற்றை - அப்பர் சுவாமிகள்  தமது திருப்பதிகத்தில் குறித்தருள்கின்றார்.

திருவாஞ்சியத்திற் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 

- என்று, மாணிக்கவாசகப் பெருமான் போற்றுகின்றார். 

இத்தலத்திற்கு வந்து குப்த கங்கையில் நீராடி இறைவனுக்கு அபிஷேகம் செய்து, ஆயுள் விருத்தி ஹோமம் செய்து  அன்னதானம் வழங்கினால் சகல பாவங்களும் தீரும் என்று குறிக்கப்படுகின்றது.



மற்ற ஊர்களில் திருக்கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் மரணம் நிகழ்ந்தால் - திருக்கோயில் அடைக்கப்படும். அந்த வழக்கம் இங்கே இல்லை.

தஞ்சாவூர் - வலங்கைமான் - குடவாசல் - நன்னிலம் பேருந்துகள் இத்தலம் வழியாக செல்கின்றன. 

நன்னிலத்திற்கு அருகில் 10 கி.மீ தொலைவிலுள்ள திருவாஞ்சியத்திற்கு திருஆரூரில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

சென்ற ஆண்டு ஸ்ரீவாஞ்சிநாதரைத் தரிசிக்கும் பேறு பெற்றோம்.

இன்று (14/12) கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிறு.

பெரும் பிழை தீர சூரியன் தொழுது வணங்கி நலம் பெற்ற நன்னாள்.

மனம், வாக்கு, காயம் எனும் திரிகரணங்களால் - ஸ்ரீவாஞ்சிநாதப் பெருமானை வணங்கி உய்வு பெறுவோம். 


அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்

திருத்துஞ் சேவடி யான் திகழுந்நகர்
ஒருத்திபாகம் உகந்தவன் வாஞ்சியம்
அருத்தியால் அடைவார்க்கு இல்லை அல்லலே!.(5/67) 
திருநாவுக்கரசர்.

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
* * *

15 கருத்துகள்:

  1. அருமையான விளக்கங்களும் மிகவும் சிறப்பு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. ஶ்ரீவாஞ்சியம் தலவரலாறும்.. அழகான படங்களும்...அதன் மகத்துவமும் அருமை ஐயா.திருவாரூர் சென்று இருக்கிறேன் இங்கு போனதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. தங்களால் இன்று வாஞ்சியம் கண்டேன்
    வணங்கி மகிழ்ந்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அழகான படங்களுடன் ஸ்ரீவாஞ்சியம் தரிசனம் கிடைத்து விட்டது. மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஸ்ரீ வாஞ்சியம் ஊரின் வழியே பஸ்ஸில் சென்று இருக்கிறேன். ஆனால் ஊரில் இறங்கி கோயிலுக்குள் சென்றதில்லை. உங்கள் பதிவின் வழியே வீரபத்ர சுவாமி, வட பத்ர காளி, யமதர்ம்ராஜன் சிறப்புக்களை தெரிந்து கொள்ள முடிந்தது. (இங்கு திருச்சி – மண்ணச்சநல்லூர் அருகே திருபைஞ்ஞீலி என்ற ஊரில், சிவன் கோயிலில், பாதாள அறையில் எமனுக்கென்று தனி வழிபாடு உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போது வந்து செல்லுங்கள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      திருப்பைஞ்ஞீலியைப் பற்றி அறிவேன். ஆயினும், தரிசனம் செய்ய நேரம் இன்னும் வரவில்லை..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

      நீக்கு
  6. அழகான படங்களுடன் ஸ்ரீவாஞ்சியம் குறித்து நல்லதொரு பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. கோயில் உலாவில் நாங்கள் பார்க்கவுள்ள கோயில் பட்டியலில் இக்கோயிலும் உள்ளது. விரைவில் செல்வேன். தங்கள் பதிவு எனக்குத் துணை செய்யும் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. An excellent input containing all the details. Really happy to go through this. Wish you all the best.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..