வெள்ளி, டிசம்பர் 12, 2014

ஆலய தரிசனம் - 6

ஆலயம் குரங்காடுதுறையில் சிவதரிசனம் செய்தபின் - அப்படியே காலாற கிழக்கு நோக்கி சற்று தூரம் (அரை கி.மீ) நடைபயணம்!..

வழியில் கிராமிய மணம் கமழும் டீக்கடை.
காற்றில் - கடலைப் பருப்பு வடையின் நறுமணம்!..

இரண்டு ஆட்டுக் குட்டிகள் அங்குமிங்கும் தாவிக் கொண்டிருந்தன. காணாத அதிசயமாக கேரியர் வைத்த சைக்கிள் - பால் வாளியுடன்!..

தஞ்சாவூர் டிகிரி காபி போல - அருமையான டீ!..
வெகுநாட்களுக்குப் பின் சுவையான அனுபவம்!..

சந்தோஷம்  - சர்க்கரை இல்லாமலேயே நாவில் தித்தித்தது.

வெயில் அதிகமாக இல்லை. சேற்றிலாடிக் கொண்டிருந்த நாற்றுகள்.
நாற்றுகளுக்கிடையில் ஆடி வந்த இளங்காற்று குளுமையாக இருந்தது.




இதோ - திருக்கூடலூர் ஸ்ரீ ஜகத்ரட்சகப் பெருமாள் திருக்கோயில்!..

திருமதிலில் பெரிதாக எழுதி வைத்திருக்கின்றனர்.

கிழக்கு நோக்கிய திருக்கோயில். எடுப்பான ஐந்து நிலை ராஜகோபுரம்.

திருக்கோயிலில் ஆள் நடமாட்டமில்லை. மிகவும் அமைதியாக இருந்தது.

கருட மண்டபத்தில் - ஒரு இளைஞர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.

நம்மை நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் கருமமே கண்ணாகினார்.

பட்டாச்சார்யார் வருவதற்கு - இன்னும் சற்று நேரம் ஆகும் என்று தெரிந்தது.

கருட மண்டபத்திலிருந்து நோக்கியபோதே, கருணை வழியும் விழிகளுடன் -

நான் இருக்கின்றேன். வா!. - என்ற பாவனையில்  ஸ்ரீ வையம் காத்த பெருமாள்!

பூவுலகிற்கு பெருங்கேடு விளைவித்துக் கொண்டிருந்த ஹிரண்யாட்சனை வதைப்பதற்காக -  பெருமாள் ஸ்ரீவராஹம் என அவதாரம் செய்தபோது  - இங்கிருந்தே பூமியைப் பிளந்து சென்றதாக ஐதீகம்.

அவதார நோக்கமாக - ஹிரண்யாட்சனை வதைத்து பூவுலகைக் காத்ததனால் - வையம் காத்த பெருமாள் - ஜகத்ரக்ஷன் எனும் திருப்பெயர்.

தேவர்களும் முனிவர்களும் கூடிவந்து, கும்பிட்டு நின்றதனால் திருக்கூடலூர் என்பது க்ஷேத்திரத்தின் திருப்பெயர்.

திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம்.

கிளி ஒன்று நாளும் வலம் செய்து வணங்கி வைகுந்த ப்ராப்தி அடைந்த திருத்தலம்.

நினைவு கொள்ளுங்கள் -
அங்கே குரங்காடுதுறையில் - பரமனின் அருள் பெற்றது சிட்டுக் குருவி!..
இங்கே திருக்கூடலூரில் - பரந்தாமனின் அருள் பெற்றது பச்சைக் கிளி!..

பெருமாள் திருக்கோயிலுக்குத் தென்புறமாகக் காவிரி.

உலக மக்கள் நீராடிக் கழிக்கும் பாவங்கள் தன்னை அணுகாதபடி - எந்நாளும் புனிதமாகத் திகழ வேண்டும்!.. -  என காவிரி - பெருமாளை வேண்டிக் கொண்டு, அவ்வாறே வரம் பெற்றதாக திருக்குறிப்பு.

ஏகாதசி விரதத்தில் இருந்த அம்பரீஷன் - தான் வருவதற்குள் விரதம் முடித்தான் - என்பதற்காக கடுப்பாகிய துர்வாசமுனிவர் அவனுக்கு சாபம் கொடுத்தார்.

அந்த சாபத்தினில் இருந்து தன் பக்தனைக் காப்பதற்காக - மஹாவிஷ்ணு ஸ்ரீசுதர்சனத்தை ஏவினார்.

ஸ்ரீசுதர்சனம் தன்னை விரட்டிக் கொண்டு வருவதைக் கண்ட துர்வாசர் கதி கலங்கிப்போய் காடு மேடெல்லாம் சுற்றி அலைந்து - கடைசியில் ஸ்ரீசக்கரத்தை ஏவி விட்ட பரந்தாமனைச் சரணந்தார்.

பரந்தாமனோ - அதெல்லாம் எனக்குத் தெரியாது. நின் பிழையை என் பக்தன் பொறுத்தானேயாகில் - நான் பொறுத்தது போல!.. போய் வாரும்!.. -  என்று அனுப்பி விட்டான்!..

அதைக் கேட்ட துர்வாசர் - அட.. என் விதியே!?.. - என்று அம்பரீசனைச் சரணடைந்தார்.

பாகவதோத்தமனாகிய அம்பரீசனும் துர்வாசரைப் பொறுத்தருளினான்..

துரத்திக் கொண்டு வந்த ஸ்ரீசுதர்சனம் சாந்தமடைந்து மீண்டும் பெருமாளின் திருக்கரத்தினில் நிலை கொண்டது.

துர்வாச முனிவரும்  - விட்டதடா பிரச்னை!.. - என்று, அதற்குப் பிறகு அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை.

ஆக - துர்வாச முனிவரின் சாபம் பலிக்காமல் போனது அம்பரீசனிடம் தான்!.. 

எடுத்ததெற்கெல்லாம் சாபம் கொடுக்கும் துர்வாச முனிவரைக் கலங்க அடித்து விரட்டிக் கொண்டு வந்த சக்கரமே - பக்தரைக் காத்திட ஆயத்த நிலையில் ஜகத்ரக்ஷகப் பெருமாளின் திருக்கரத்தினில்  இருப்பதாக ஐதீகம்.

ஏகாதசி விரதத்தின் பெருமையை விளக்குவதற்காக இந்தச் சம்பவத்தைக் கூறுவார்கள்.

எனவே - இத்தலத்தில் பெருமாளைத் தரிசித்தவர்க்கு - தீராத சாபங்கள் நிவர்த்தியாகின்றன என்கின்றனர்.


பெருமாளின் அஷ்டாட்சரத்தைப் போல - 
நூற்றெட்டு திவ்ய தேசங்களுள் எட்டாமிடத்தில் திகழ்வது இத்திருக்கோயில்!..

மூலவர் - வையம் காத்த பெருமாள். ஜகத்ரக்ஷகன்.
சுத்தஸத்வ விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

தாயார் - பத்மாசனி, புஷ்பவல்லி.
தீர்த்தம்- சக்கர தீர்த்தம், இந்திர தீர்த்தம், காவேரி.
தல விருட்சம் - பலா

மங்களாசாசனம் - திருமங்கை ஆழ்வார். 

உற்சவ மூர்த்தி - ஜகத்ரக்ஷகப் பெருமாள் திருக்கரத்தினில் செங்கோலுடன்  திகழ்கின்றார்.

ஸ்ரீ சுதர்சனர்
ஸ்ரீ யோக நரசிம்மர்

ஸ்ரீவரதராஜப் பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வாராதிகளின் சந்நிதிகள் விளங்குகின்றன.

வரதராஜப் பெருமாளின் எதிர்புறம் ஸ்ரீ சுதர்சனம் பேரழகுடன் திகழ்கின்றது. பின்புறம் யோக நரசிம்ம ஸ்வாமி!..   

மூலஸ்தானத்தின் தென்புறத்தில் புஷ்பவல்லி எனும் திருப்பெயர் கொண்டு 
ஸ்ரீ மஹாலக்ஷ்மி  தனிக்கோயிலில் விளங்குகின்றாள்.

முன்மண்டபத்தில் கருடன், சிம்மம், யானை, சூரிய - சந்திர பிரபைகள் , ஆஞ்சநேய மற்றும் அன்ன வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


மேலைத் திருச்சுற்றில் தல விருட்சமாகிய பலா மரம் தழைத்து நிற்கின்றது.

பலா மரத்தில், இயற்கையாக - சங்கின் வடிவம் தோன்றியிருக்கின்றது.

பலா மரத்தில் தோன்றியுள்ள சங்கு
ஆனாலும், அருகில் ஏராளமான குறுஞ்செடிகள் அடர்ந்து முளைத்திருக்க பலா இலைகள் உலர்ந்து சருகுகளாகி சரசரத்துக் கிடக்கின்றன. 

உலர்ந்த சருகுகளை ஒதுக்கி அப்புறப்படுத்துவார் யாருமில்லை!..
பகல் வேளைதான்!.. எனினும் அந்த அமானுஷ்யத்திற்குள் செல்ல மனம் அஞ்சியது.

எனவே - திருச்சுற்றில் வலம் செய்யவில்லை. மனம் மிக வருந்தினேன்.


பூமி, நீளா, புஷ்பவல்லி, கோதை - எனும் தேவிமார்கள் சூழ - வைகாசி பிரம்மோத்சவத்தில்  - விசாகத்தன்று திருத்தேரோட்டம் கண்டருள்கின்றார்.

பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன்
உள்ளம் புகுந்த ஒருவர் ஊர் போல்
கள்ள நாரை வயலுள் கயல்மீன்
கொள்ளை கொள்ளும் கூடலூரே!..(1360)
(பெரிய திருமொழி/ ஐந்தாம்பத்து/இரண்டாம் திருமொழி)

- என்று  உள்ளம் உருகுகின்றார் - திருமங்கை ஆழ்வார்.
 
மேலும், தமது திருப்பாசுரத்தில், 

கலைவாழ் பிணையோ டணையும் திருநீர்
மலைவாழ் எந்தை மருவும் ஊர்போல்
இலைதாழ் தெங்கின் மேல்நின்று
இளநீர்க் குலைதாழ் கிடங்கின் கூடலூரே!.. (1365) 

இளநீர்க் குலைகள் தாழும் தென்னை மரங்களை உடைய கூடலூர் - என்று குறிப்பிடுவது சிந்தித்து மகிழத்தக்கது.

காவிரியின் வடகரையில் இருந்த ஆதி திருக்கோயில் - வெள்ளத்தினால் நிலைகுலைந்து போயிற்று. இப்போதுள்ள திருக்கோயில் - பின்னாளில் நாயக்கர்கள் காலத்தில் -  ராணி மங்கம்மாள் திருப்பணி செய்திருக்கின்றார்.

தஞ்சை திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது ஆடுதுறை பெருமாள் கோயில் எனப்படும் - திருக்கூடலூர்.

கும்பகோணத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியிலுள்ள ஆடுதுறை வேறு!

மதுரை தென் திருக்கூடல் -  இது வட திருக்கூடல் என்கின்றனர் திவ்ய தேசத்தினர்.

மீண்டும் கருட மண்டபம். கொடிமரத்தருகில் நின்று ஜகத்ரக்ஷகனை மீண்டும் கண்ணார சேவித்து வணங்கி எழுந்தோம்.

அமைதியும் அழகும் தவழும் - திவ்ய தேசத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் - சாலைக்கு வந்தோம்.. அடுத்த பத்து நிமிடத்தில் - பேருந்து வந்து நின்றது..


மீண்டும் திருஐயாறு!..
இப்போது மணி - 11.30. சாலையில் கொஞ்சம் கூட்டம் குறைந்திருந்தது.

தெற்கு கோபுர வாசலில் எந்நேரமும் கமழ்ந்து கொண்டிருக்கும் குங்கிலியக் குண்டத்தில் - குங்கிலியப் பொடி போட்டு விட்டு ஆட்கொண்டார் ஸ்வாமியை வணங்கினோம்.

காசிக்கு இணையான திருஐயாற்றில் - அம்மையப்பனின் கட்டளையைத் தலை மேல் தாங்கி நடத்தி வைப்பவர் இவரே!..


இறைவன் - ஐயாறப்பர்
அம்பிகை - அறம் வளர்த்தநாயகி
தீர்த்தம் - காவிரி
தல விருட்சம் - வில்வம்

திருத்தலப் பெருமை
காசிக்கு இணையான தலங்களுள் ஒன்று என்பதுடன் 
கணக்கற்ற பெருமைகளையும் உடையது!..

பஞ்சநதீஸ்வரம் எனும் திருக்கோயிலுக்கு கிழக்கு கோபுரவாசல் இருந்தாலும் நாளும் ஆயிரக்கணக்கில் மக்கள் பிரவேசிப்பது  - தெற்கு கோபுர வாசல் வழியாகத் தான்!..

தெற்கு கோபுரவாசலில் ஆட்கொண்டார் சந்நிதிக்கு எதிரில் தான் - குங்கிலியக் குண்டம். 

தெற்குக் கோபுரத்தின் மேற்குப் புறம் சந்நிதியில் - ஆட்கொண்டார்!..

இவர் - திருக்கோபுரத்தின் துவாரபாலகர். தென் திசைக் காவலனான யமதர்ம ராஜனை அடக்கி வைத்திருப்பவர். 

சுசரிதன் எனும் ஏழைச்சிறுவனை யமபாசத்தினின்று  காத்தருளுமாறு துவார பாலகரான ஆட்கொண்டாருக்கு ஈசன் ஆணையிட - அதன்படி,

திருக்கரத்தில் மழுவுடன், தோள் மாலை அணிந்து வைரவக் கோலத்துடன் சிவாம்சம் கொண்டு திகழ்கின்றார்.

இதனால்தான் - ஆட்கொண்டாருக்கு முன்பாக - நந்தி விளங்குகின்றார்.

துவார பாலகர் முன் நந்தி இருப்பது எங்கும் காண இயலாதது.

மேலைத் திருச்சுற்று - வில்வ மரம்
நந்தியம்பெருமான் இங்கு ஏழு கோடி முறை ருத்ர ஜபம் செய்தார். அதனால் இறைவனால் திருமுழுக்கு செய்விக்கப் பெற்றார்.

அம்பிகை 32 நாழி நெல் கொண்டு, அறம் வளர்த்த நாயகி எனப்பொலியும் தலம்.

அப்பர் பெருமான் திருக்கயிலாயக் காட்சி கண்ட திருத்தலம்.

சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு காவிரி விலகி வழி விட்ட திருத்தலம்.

குங்கிலியம் கமழும் கோபுர வாசல்
1400 ஆண்டுகளுக்கு முன் குங்கிலியக் கலய நாயனார் அவர்கள் உருவாக்கிய குங்கிலியக் குண்டம் இன்னும் கனன்று கொண்டிருக்கும் திருத்தலம்.

திருமூலஸ்தானம்
அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்  - என நால்வராலும் புகழப் பெற்ற திருத்தலம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிகழும் சப்த ஸ்தானத் திருவிழாவின் முதலாவதான திருத்தலம். 


கடைமுழுக்கு நாளில் ஐயாறப்பரும் அறம்வளர்த்த நாயகியும் அலங்கார பல்லக்கில் புஷ்ய மண்டபத்திற்கு எழுந்தருளினர்.  

காவிரியில் நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் - அம்மையப்பனைக் கண்டு ஆனந்தித்து மகிழ்ந்தனர்.

திருக்கோயிலில் விளங்கும் நந்தியம்பெருமான் மேனியில்  வேறுபாடு இன்றி பக்தர்கள் அனைவரும் எண்ணெய் ஊற்றி வணங்கினர்.

வெளியூர்களிலிருந்து குடும்பத்துடன் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் திருச் சுற்றுகளில் அமர்ந்து சித்ரான்னங்களை உண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்.


தரிசனம் செய்தபின் வீடுதிரும்பும் பக்தர்கள் -  கடைத்தெருவில் அம்பாரமாக அடுக்கப்பட்டிருந்த கருப்பங்கழிகளை வாங்கிச் சென்றனர்.

அதிகாலையிலேயே  புறப்பட்டு, குரங்காடுதுறை, திருக்கூடலூர், திருஐயாறு - என, மூன்று திருத்தலங்களைத் தரிசனம் செய்த மகிழ்ச்சியுடன்  நாமும் புறப்பட்டோம்.. அப்போது நடுப்பகல் மணி ஒன்றரை!..

அறம் வளர்த்த நாயகி உடனுறை செம்பொற்சோதி
அனைவருடைய நலனுக்கும் அருளவேண்டும் என,
விடைபெற்றுக் கொண்டோம்.

எல்லா உலகமும் ஆனாய் நீயே
ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ!..(6/38)
திருநாவுக்கரசர். 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.
* * *

12 கருத்துகள்:

  1. திருவையாறு சொந்த ஊர்
    குரங்காடு துறை கோயிலுக்கும் ஒரு முறை சென்றிருக்கின்றேன் ஐயா
    இன்று தங்களால் மீண்டும் சென்று வந்த உணர்வு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு - மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  2. அருமையான தொகுப்புரை! குறித்துக் கொண்டோம் ! மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  3. சந்தோஷம் - சர்க்கரை இல்லாமலேயே நாவில் தித்தித்தது.

    அருமையான ஆலய தரிசனம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  4. திருக்கூடலூர் ஸ்ரீ ஜகத்ரட்சகப் பெருமாள் திருக்கோயிலின் சிறப்புகள் அனைத்தையும் அறிந்தேன் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களன்பின் வருகைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  5. திருக்கூடலூர் தவிர பிற இடங்களுக்குச் சென்றுள்ளேன். விரைவில் செல்வேன். தங்கள் பதிவு அங்கு செல்லும் அவாவினைத் தூண்டிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் அவசியம் சென்று ஜகத்ரக்ஷனை தரிசிக்க வேண்டும்..
      தங்களின் அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. திருக்கோயிலுக்கு சென்று வருவோர் கோடானுகோடி
    ஆனால் என்ன பார்த்தீர்கள் என்றால்
    சாமி கும்பிட்டேன் என்றுதான் பதில் வரும்
    மற்ற விவரங்கள் ஒன்று தெரியாது.
    பலமுறை சென்றாலும் இதே நிலைதான்.
    ஆனால் தாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று. கண்ணுக்கினிய படங்களுடன், தல புராண விவரங்களுடன் அளிப்பது ஒரு சிலருக்குமட்டுமே கைவந்த கலை. அருமை.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      தங்களின் கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..