நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 03, 2026

மணி மாலை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி நிறைநிலா
செவ்வாய்க்கிழமை

சில ஆண்டுகளுக்கு முன் அன்னையின் 
பேரில் தொடுக்கப்பட்டு
தளத்தில் பதிவாகிய பாமாலை இது..

மீண்டும் 
தங்களுக்காக..
 

காப்பு
தனிமா மணியாய் மலரும்  பொருளே
ஒளிமா மணியாய் திகழும் அருளே
சிவமா மணியின் செல்வத் திருவே
தவமா மணியே கணபதி சரணம்..

மாணிக்கம் 
வருவாய்  வருவாய்
வாழ்வின் ஒளியாய் 
வருவாய் வருவாய்
வளர்தமிழ் வடிவாய்..
கடைக்கண் ஒளியால்
காரிருள் தீர்ப்பாய் 
திருவடி நினைந்தேன்
தினமும் காப்பாய்.. 
பேணிக் கொண்டாடிடும்
அடியார் தமக்கு 
காணிப் பொன்னளந்திடும்
கருணா சாகரி.. 
மாணிக்க மூக்குத்தி 
மதுரையின் மீனாள் 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 1

வைரம்
உயிராவணமாய்
உன்புகழ் பாட 
பயிரார் வயல் தனில்
பாயும் புனலே 
வயிரம் அணிந்திடும்
வாழ்வே போற்றி 
வாழும் வகையில்
தருவாய் போற்றி 
பயில்வார் தனையே
பார்த் தருள்வாயே.. 
அருளும் அங்கயற்
கண்ணி போற்றி 
பாண்டியன் மகளே
பதமலர் போற்றி 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 2

மரகதம் 
மயில் வாகனனை
மார்பினில் ஏந்தும் 
மங்கல கௌரி
மலரடி போற்றி 
மதுரையின் அரசி 
மங்கலம் போற்றி 
மரகதப் பூங்கொடி 
பொன்னடி போற்றி 
போற்றும் அடியார்
அகத்தில் மலரும்
ஆனந்த மலரே
அருள்வாய் போற்றி 
பூத்திடும் சங்கத்
தமிழே போற்றி 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 3

கோமேதகம்
நாமேவிய நற் றமிழால்
போற்றி
தாமேவிய நல் லடியார்
தலையில் 
பாமேவிய நல் அருளே 
எழுதும்
கோமே தகமே சரணம்
சரணம்.. 
தீமேவிய தெள் ளமுதே
சரணம்
காமேவிய நற் கனியே
சரணம் 
பூமேவிய பொன் மயிலே
சரணம்
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 4

நீலம் 
பாலாம்பிகையே
பர்வத வர்த்தனி 
நீலாம்பிகையே
நின்னடி சரணம் 
நீள்விழி மலர்கள்
நீலம் என்றே 
தாள்மலர் போற்றி
தாயே சரணம்.. 
கனலாய் புனலாய்
விளைவாய் சரணம் 
கதிராய் நிலவாய்
ஒளிர்வாய் சரணம் 
வெயிலாய் புயலாய்
புவியாய்த் திகழ்வாய் 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 5

வைடூரியம் 
வானவர்க் கரணாய்
வைடூரிய வாள் 
வளைக்கரம் ஏந்தி
கொடும்பகை  தீர்த்தாய் 
குஞ்சரங குடையுடன்
குலமகள் போற்றி 
கொடிமீன் படையுடன்
கோமகள் போற்றி 
நாமகள் போற்றும்
நங்காய் போற்றி 
நலந்தரு நாரணன்
தங்காய் போற்றி 
வளந்தரு மதுரையில்
என்தாய் போற்றி 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 6

முத்து 
பித்தாய் நானிங்கு
புகல்வதும் இனிதோ 
பேரருளே உன்னைப்
புகழ்வதும் எளிதோ 
பித்தா னவனின்
பெருந்திரு மேனியில் 
பிரியா தென்றும்
படருங் கொடியே 
பொற்றா மரையில்
பூத்திடும் நிலவே 
முத்தெனுந் தமிழாய்
முன்வரும் அமுதே 
பூத்தேன் பொழியும்
பொதிகையின் வாழ்வே 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 7

பவளம் 
பவளம் நகையாய்
நானிலம் காக்க 
நிகழும் பொழுதும்
நிழலாய் காக்க 
சுழலும் உலகில்
சூழ்வினை அகலத் 
திகழும் திருமலர்ப்
பாதங்கள் போற்றி 
புகழும் மதுரையின்
புனிதம் போற்றி 
புண்ணிய வைகைப்
பொலிவே போற்றி 
பூத்திடும் மல்லிகை
மாமலர் இதழாய் 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 8 

புஷ்ப ராகம்
கதம்ப வனத்தில்
களிப்புறு குயிலாய் 
கருதிடும் மனத்தில்
மலர்ந்திடும் மயிலாய் 
வலக்கரம் ஏந்திடும்
கிளியாய் எனையே 
வார்த்திடுவாயே
எந்தன் அன்னையே 
பூமணி புஷ்ப 
ராகம் பொலிந்திடும் 
புகழ்மணி நூபுரத்
திருவடி போற்றி 
தேசம் உடையாய்
திருவடி சரணம் 
காணிக்கை என்கவி
நின் மலரடிக்கே.. 9


மணி மணியாக
நவமணி மாலை 
மங்கல மார்பினில்
மல்லிகை மாலை 
அணிதிகழ் மாலை
ஆயிரம்  இலங்கும் 
அன்பினில் மீனாள்  
மனமெனத் துலங்கும் 
மணியுடை நூபுரம
மணித்தமிழ் பேசும் 
திருவடி யதனில்
அருளொளி வீசும் 
சுந்தரன் பங்கில்
சுந்தரி போற்றி.. 
கைதொழுதேன் கழல்
அடிமலர் போற்றி.. 
**
ஓம் சக்தி ஓம்
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

10 கருத்துகள்:

  1. செல்வாண்ணா வரிபாடி செல்வாம்பிகை அருள் பெறுவோம். அன்னையின் பாதம் பணிவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்வாம்பிகை என்றதும் சரஸ்வதி சபதம் நினைவுக்கு வருகிறது...

      மீனாட்சி சரணம்

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. அன்னைக்கு நீங்கள் எழுதிய நவரத்தின மாலையா ? அருமை.
    நவ மணி மாலை படித்து அன்னையை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடியேன் எழுதினது தான்...

      மீனாட்சி சரணம்

      மகிழ்ச்சி..
      நன்றியம்மா..

      நீக்கு
  3. மணி மணியாக நவமணி மாலையை ஏற்று அன்னை மீனாட்சி மகிழ்ந்து களைவாள் அனைத்து துன்பங்களையும்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. மாசி நிறைநாளில், மதுரை மீனாட்சி தேவிக்கு தாங்கள் மகிழ்ந்தளித்த மணிமாலை பாமாலை மிக அருமையாக உள்ளது. பாடி பரவசமானேன். ஸ்ரீ லலிதா நவரத்தின மாலையை போன்று கருத்துள்ள பாடல். அன்னையின் புஷ்பாங்கி சேவையின் படங்களையும் பார்த்து தரிசித்துக் கொண்டேன். இன்றைய பதிவில் எந்தையும், தாயுக்குமான திருமணக்கோலமும் மனதுக்கு நிறைவை தந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      மீனாட்சி சரணம்

      நீக்கு
  5. நவமணிமாலை அற்புதமாக படைத்துத் தந்துள்ளீர்கள்.அன்னை அருள் உங்களுக்கு என்றும் உண்டு.

    ஓம் சக்தி ஓம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      ஓம் சக்தி ஓம்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..