நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூலை 27, 2023

இயற்கை..

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 11
   வியாழக்கிழமை


எங்கு திரும்பினாலும்
இயற்கை.. இயற்கை என்ற கூக்குரல்..

ஏதோ இயற்கையை இவர்கள் தான் வாழ வைப்பது போல!

இயற்கையாய் விளைந்த காய்களில் பழங்களில் - என்று மருத்துவர் யாராவது பேச ஆரம்பித்தால் போதும்!..

அங்காடிகளில் உள்ளவற்றின் விலைகளை எல்லாம் ஏற்றி வைத்து விடுகின்றனர்..

அதன்பிறகு
விலை ஏற்றத்துக்கு ஏதேதோ காரணங்கள் சொல்லிக் கொண்டு அந்த நிலையிலேயே நிறுத்தி விடுகின்றனர்


இருந்தாலும்
இயற்கையாய் விளைந்த காய்களில் பழங்களில் -
உடல் நலன் காக்கும் நுண்ணூட்டச் சத்து எனும் மகத்துவம் நிறைந்தே உள்ளது..

இன்னும் நீரிழிவு புற்றுநோய் முதலானவற்றை  எதிர்க்கும் ஆற்றலும் அதிகமாகவே உள்ளது..


நமது நாட்டின் பழங்கள்
நோய் எதிர்ப்பாற்றலை உடையவை..

அவற்றில் நிறைந்துள்ள சத்துகளால்  கூடுதல் பலன்கள் கிடைக்கின்றன..

அதிகமான நார் சத்துக்களை உடைய கீரை, மாவுச் சத்துள்ள கிழங்குகளை சமைத்து பக்குவம் செய்து சாப்பிடுவதே சிறந்தது.. 

அவிக்காமல் அப்படியே சாப்பிடுவது தான் நல்லது என்று தற்போது சிலர் கிளம்பி இருக்கின்றனர்..

கீரை கிழங்கு முதலானவை சரியாக வேகாதிருப்பின் அவற்றால் ஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம்..

வெந்து கெட்டது முருங்கை.
வேகாமல் கெட்டது அகத்தி..
 - என்றொரு பழமொழி உண்டு..

முருங்கை கீரை நல்லது என்றாலும் அதில் பித்தவாயு என்ற ஒன்று இருக்கின்றதாம். அதனால் சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் அதிகமாக வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.. - என்கின்றார் சித்த மருத்துவர் ஒருவர்..

அகத்திக் கீரை நல்லது என்றாலும் சித்த மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது அகத்திக்கீரை எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது..

எனினும்
இயற்கைக்கு இயற்கையே பகை - என்பதையும் தெரிந்து தெளிவு பெற வேண்டும்.. 

வெண்டை,  வெள்ளரி, வெங்காயம், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, தக்காளி இவை அப்படியே சாப்பிடுவதில் முதலிடம் பிடிக்கும் காய்கள்..

தக்காளி இப்போதைக்கு இல்லை எனினும் என்றாவது ஒருநாள் ஏழைக்குக் கிட்டும்..

சுரைக்காய், வெண் பூசணி இவற்றின் சாற்றினை  அருந்தும் பழக்கமும் இப்போது
மக்களிடம் அதிகரித்து வருகின்றது..

காய்களை சற்றே ஆவியில் வேக வைத்துப் பிறகு சாப்பிடுவது தான் நல்லது. 

பச்சைப்பயறு, கொண்டைக் கடலை போன்ற  தானியங்களை முளைகட்டி  உண்ணலாம்..

முளை கட்டிய தானியங்களில் அதிகப்படியான புரதங்களும் ஊட்டச் சத்துகளும் இருப்பதாக  சொல்லப்படுகின்றது. முளைகட்டிய தானியங்களுடன் சின்ன வெங்காயம் நறுக்கிப் போட்டு மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவது சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு நல்லது.. 

வெள்ளரிப் பிஞ்சு, காரட்,  முட்டைக்கோஸ் இவற்றின் துருவலை சாப்பாட்டிற்கு முன்னும் 
உள்ளூர் வாழைப்பழம்  -  ஒன்றை உணவுக்குப் பின்னும் சாப்பிடுவது  நல்லது...


வயல் வெளிகளில் தச்சுக் கூடங்களில் இரும்புப் பட்டறைகளில் கட்டுமானப் பணிகளில் - இதர தனியார் நிறுவனங்களில் நித்ய ஜீவனம் - உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு பொதுவாக ஜீரணப் பிரச்னைகள்  இருப்பதே இல்லை..

அவர்களுக்கு சாப்பிடப் பசிக்கும்.. சாப்பிட்டாலும் செரிக்கும்..

இப்படியானவர்களைத தகர்ப்பதற்காக வந்தவையே - மது, புகையிலை, குட்கா, மைதா, பரோட்டா - போன்றவை..

அரசுப்பணி என்று அமர்ந்தவர்களுக்கு கடைசி வரைக்கும் நிரந்தர வருமானம் என்றாலும் உள்ளுக்குள் ஆயிரம் குத்து வெட்டு.. 

எப்படியோ அறுபது சதவீதம் நேர்மையாகப் பணியாற்றி முடித்து விட்டு ஓய்வு பெறும்போது - பணப் பயன்களுடன் அலுவலகப் பணி அளித்த பலவகை நோய்களும் கூடவே வெகுமதியாக வருகின்றன.. 

உயிர் வாழ்வதற்காக வேறு விதங்களில்  
உணவு முறை மாற்றங்களைக் கடைப்பிடித்தாலும்,

 நன்றி
நவீன பொருளாதார முன்னேற்றத் திட்டங்களால் நாளுக்கு நாள் வேளாண்மை நிலப்பரப்பு குறைக்கப் படுகின்றது.. 

வேளாண் பணிகளைச் செய்வதற்கு மனம் உவந்து ஆட்கள் வருவதும் இல்லை..


இன்னபிற காரணங்களாலும்
உணவுப் பொருட்களின் விலைகள் எகிறிக் கொண்டே இருக்கின்றன..


தேடுவார் அற்றுக் கிடந்த சிறு தானியங்களின் விலையை இன்று கேட்டாலே அயர்ச்சி ஏற்படுகின்றது..

ஆறடி என்று நிர்ணயமானது வாழ்க்கை.. 

இதை உணர்ந்து கொள்ளாத பலர் தமது வாழ்வில் தலைக்கு மேல் ஏகப்பட்ட உயரத்துக்கு காசு பணம் தங்கம் வைரம் என்று சேர்த்து வைத்திருக்கின்றனர்.. 

இப்படி சேர்த்து
வைத்திருப்பவர்களுக்கு  -  காலம் முழுவதும் சிந்தாமல் சிதறாமல் இவற்றைக் காப்பாற்ற வேண்டுமே என்பதைத் தவிர, வேறு எவ்விதக் கவலையும் கிடையாது.



ஆனால், என்னைப் போல - அதோ அவரைப் போல - வயதான காலத்தில் எவ்வித வருவாயும் அற்ற ஏழையர் ஏது செய்ய இயலும்?..

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?.. என்றொரு பழமொழி உண்டு..


அதைப் போல நீரிழிவுடன் வேறு பொருளாதாரப் பிரச்சினையும் ஏற்பட்ட பிறகு சிறு தானியங்களுக்கு ஆசைப்படலாமா?.. என்றிருக்கின்றது.. 

இங்கே - பொது வழங்கல் முறையில் கோதுமை கூட கொடுக்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

இம்மண்ணில், 
கிளைக்குக் கிளை தாவித் திரிகின்ற அணில் முதற் கொண்டு கோயில் வாசல் கிழட்டு ஆனை வரைக்கும் நல்ல படியாக நீடூழி வாழ வேண்டும் என்பதுவே ஆசையாக இருக்கின்றது.. 

அதற்கு முதல்படி - 
நோய் நொடி உடற் கோளாறுகள் இல்லாமல் இருப்பது..

இப்படியான வரத்தை
அனைவருக்கும் அருள வேண்டும் என
இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்வோம்..

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

13 கருத்துகள்:

  1. நல்லதொரு பதிவு.  பீட்ரூட்டை அபப்டியே சாப்பிட்டதில்லை.  மற்றவற்றை சாலட் போல அப்படியே சாப்பிட்டிருக்கிறேன்.  முட்டைகோஸும் கூட அபப்டியே சாப்பிடலாம்.  ஆனால் கோஸையும், முள்ளங்கியையும் குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.  முள்ளங்கி நாக்கின் சுவை நரம்புகளை மரத்துப்போகச் செய்து விடும்.  கோஸில் சல்பர் கன்டென்ட் அதிகம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வேளாண் நிலங்கள் குறைந்து வருவது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயம்.  ஜனத்தொகை பெருகப்பெருக்க மனிதனின் வாழ்விடத்தேவைகள் அதிகரிக்கின்றன...  இதில் அடுத்து இடம்பெறப்போவது தண்ணீர்ப் பிரச்னை!

    பதிலளிநீக்கு
  3. அரசு டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு பதில் காய்கறிக்கடைகள் திறக்கலாம்.  அதேபோல தங்கள் அரசு அமைந்தால் அளிப்பதாகச் சொல்லும் இலவசங்களை காய்கறிகளாகவும், மாளிகைப் பொருட்களாகவும் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹைஃபைவ்!!! ஸ்ரீராம். குடிக்கடை எப்ப ஒழியுமோ. இப்ப அதிகரித்துக் கொண்டே இருக்கு ஸ்ரீராம்.

      இலவசங்கள் காய்கறிகளாகவும் மளிகைப் பொருட்களாகவும் - எல்லாம் சரிதான் அது ஓரளவேனும் தரமாகக் கொடுக்கணுமே ஸ்ரீராம். ஏற்கனவே ரேஷனே சரியா இல்லை. அப்புறம் இலவசம் எங்க?

      கீதா

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அழகான வார்த்தைகளைக் கொண்டு இன்றைய உணவு நிலவரங்களை நிலை நிறுத்தியிருக்கிறீர்கள். படங்களும், விபரங்களும் அருமை.

    காய்கறி, பழங்களின் விலைகள் உச்சாணி மரத்தில் ஏறி விட்டன. அதன் தரங்களும் முன்பு போல் இல்லை. கேட்டால், இயற்கையிடத்துதான் குற்றமென சுட்டிக் காண்பிப்பதை காண்கிறோம். மழை, இல்லை. வெய்யில் இல்லை என்பது போன்ற காரணங்கள். எதையும் சாப்பிடவும் பிடிப்பதில்லை. சாப்பிடாமலும் இருக்க இயலவில்லை. முக்கியமாக மீறி நல்லதென்று தேர்வு செய்து எதையாவது சாப்பிட்டாலும் உடம்புக்கு பிரச்சனை என்பது முந்திக் கொண்டு வருகிறது.

    /அதற்கு முதல்படி -
    நோய் நொடி உடற் கோளாறுகள் இல்லாமல் இருப்பது../

    இப்படியான வரத்தை
    அனைவருக்கும் அருள வேண்டும் என
    இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்வோம்./.

    உண்மை. அதுதான் மாற்றி, மாற்றி நான், நீயென போட்டி போட்டு வருகிறது. அவ்விதந்தான் இறைவனிடம நானும் பிரார்த்தித்த வண்ணம் இருக்கிறேன். இறைவனே அனைவருக்கும் துணை. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. பதிவு சூப்பர். பிறகு வருகிறேன், கருத்து எழுத

    பதிலளிநீக்கு
  6. இவை ஒருபுறம் இருக்க டீசல் விலை இன்னமும் உயர்ந்தால்...?

    பதிலளிநீக்கு
  7. பதிவை ரசித்து வாசித்தேன்! சூப்பர், துரை அண்ணா.

    முளைகட்டிய பயறு வகைகள் கூடவே வெங்காயம், சில பச்சைக்காய்கறிகள் என்று சாப்பிடுவதுண்டு. நிலக்கடலை வேக வைத்தும். சில சமயங்களில் பச்சைக்காய்களைக் கூட இரு நிமிடங்கள் ஆவியில் வைத்துவிட்டுச் சாப்பிடுவதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நான் பல வருடங்களாகச் சிறுதானியங்கள் பயன்படுத்திவருகிறேன் அண்ணா. ஆனால் பாருங்க, முதலில் அத்தனை மலிவாக இருந்தவை, பொதுவெளியில் அரிசிக்குப் பதில் நம் பண்டைய சிறுதானியங்கள் என்று ஒரு பிரபல மருத்துவர் சொல்லப் போக.....அம்புட்டுத்தான் விலை எகிறிச்சு பாருங்க. அதுலயும் இப்ப ஆர்கானிக் என்று இன்னும் விலை கூடுதலா இருக்கு...என்ன சொல்ல? காய்கறிகளின் விலையும் ஏறிக் கிடக்கு. சமாளிப்பது கஷ்டப்பட்டுத்தான் சமாளிக்க வேண்டியிருக்கு. அப்ப பாவப்பட்டவங்க என்ன செய்வாங்கன்னு யோசனை எழுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. வேளாண்மை நிலங்கள் குறைவதற்கு மக்களும் ஒரு காரணம் தான் அண்ணா. வாழ்விடம்...தேவைகள்!! எல்லோரும் தனி தனி வீடு. அடுத்து தண்ணிப் பிரச்சனை...கண்டிப்பாக எதிர்காலத்தில் இது பிரச்சனையாகும் என்றே தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி தடை. கடைகளுக்கு வரும் அரிசி உடனே விற்று விடுகிறது.
    விலைவாசி உயர்வு சில கால கட்டங்களில் வரும் தான்.
    வீட்டு தோட்டத்தில் கீரைபாத்தி, காய்கறி வளர்ப்பு செய்வார்கள் முன்பு. கஷ்ட காலத்தில் வீட்டுத்தோட்டம் கை கொடுக்கும். வெண்டை, கத்திரி, சுண்டைக்காய், முருங்கை கீரை, வாழைக்காய், பூசணி, பரங்கிகாய், பீர்க்கை, அவரை என்று சமாளித்துவிடுவார்கள் .
    "ஆடி பட்டம் தேடி விதை" என்று தோட்டத்தில் பயிர் செய்ய விதை போட்டு விடுவார்கள்.

    உடற்கோளாறுகள் இல்லாமல் எல்லோரும் ஆரோக்கியமுடன் வாழ அன்னை அருள்செய்வாள்.

    ஆடி மாதம் மக்கள் குறை தீர அன்னை கூழ் வார்த்து மகிழ்கிறாள்.

    பதிலளிநீக்கு
  11. தைராய்ட் இருந்தால் முட்டைக்கோஸ், காரட், பீட்ரூட் சாப்பிடக் கூடாது என்கின்றார்கள். நாங்க கிட்டத்தட்ட 3 வருஷம் கழிச்சு இப்போத் தான் கோஸ் சாப்பிடுகிறோம். விலைவாசி எல்லாம் கன்னாபின்னாவென எகிறித்க் தான் இருக்கு. ஒரு தக்காளி ஐந்து ரூபாய் என இரண்டு வாங்கி வந்தார். அவர் வாழ்நாளிலேயே குறைவாகத் தக்காளி வாங்கிய நேரம் இதுவாகத் தான் இருக்கும். இல்லாட்டி பெண்களூர்த் தக்காளி, நாட்டுத் தக்காளி, சிவப்புத் தக்காளி என விதம் விதமாக வந்து மிரட்டும்.

    பதிலளிநீக்கு
  12. நல்ல பகிர்வு.

    வேளான் நிலங்கள் குறைந்து போவது கவலையே.
    இப்போதே அதிகரித்த விலை. வரும் காலங்களில் மரக்கறி தானியங்களின் உற்பத்திகள் குறைய வாய்ப்பும் உணவு க்கான அதீத போட்டியும் ஏற்படும் என்பது உண்மையே.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..