நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 09, 2014

ஆலய தரிசனம் - 5

விடியற்காலையில் எழுந்தாகி விட்டது.

இன்றைய பயணத் திட்டத்தின் இலக்கு அருகிலுள்ள - திருஐயாறு!..

காரணம் -  (16/11) கடைமுழுக்கு!..

அந்த நேரத்தில் - தஞ்சையிலிருந்து திருஐயாறு செல்லும் பேருந்துகளில் பெரிய பெரிய காய்கறி மூட்டைகளும் குறைந்த பயணிகளும் தான்!..


ஆனால் - அன்று கடைமுழுக்கு விசேஷம்.

அதனால் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தே அனைத்துப் பேருந்துகளும் நிறைந்த பயணிகளுடன் வந்து கொண்டிருந்தன.

கோடியம்மன் கோயில் வாசலில் வந்து நின்ற அந்த பேருந்தில் நெருக்கி அடித்துக் கொண்டு ஏறியாகிவிட்டது.

பதினைந்து நிமிடப் பயணம் தான்!..

பள்ளியக்ரஹாரம், அம்மன் பேட்டை, நடுக்கடை, கண்டியூர் -

இதோ, காசிக்கு இணையாக விளங்கும் - திருஐயாறு!..
கங்கையினும் புனிதமான காவிரி ஆற்றின் கரை..

திருவையாற்றின் தென் திசையிலிருந்து நுழையும் போதே காவிரியின் வடகரையில் - புஷ்ய மண்டபப் படித்துறை தெரிகின்றது.

பழைமையான பாலம் குறுகலாக இருக்கின்றது என்று - அதை இடித்து அங்கேயே தள்ளி விட்டு புதிதாக ஒன்றைக் கட்டி வைக்க -

வெகு சீக்கிரத்திலேயே லொடுக் என்று ஆகி விட்ட அந்தப் பாலத்தின் மீது பேருந்து செல்லும் போதே உற்சாகமும் பரவசமும் பற்றிக் கொள்ளும்!..

உற்சாகம் - காவிரியில் குளிப்பதில்!..

பரவசம் - ஐயாறப்பனையும் அறம் வளர்த்த நாயகியையும் தரிசிப்பதில்!..

புஷ்ய மண்டபம் (கூட்டம் இல்லாத நாளில்)
காவிரியின் வடகரையில் உள்ள மிகப் பெரிய மண்டபம் - புஷ்ய மண்டபம்.

புஷ்ப மண்டபம் என்றும் பூசப் படித்துறை என்றும் சொல்லுவார்கள்.

பூச நட்சத்திரன்றும் திருவிழா நாட்களிலும் ஐயாறப்பரும் அறம்வளர்த்த நாயகியும் எழுந்தருளும் மண்டபம் இது.

எந்த நாளும் இடையறாது நீத்தார் கடன்கள் செய்யப்படுவது புஷ்ய மண்டப படித்துறையில் தான்!..

ஆடி , மஹாளயம், தை மாத அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி  - பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்தப் படித்துறையில் தான்!..

பேருந்து நிலையத்திலிருந்தே - மக்கள் வெள்ளம். ஐயாறப்பர் திருக்கோயிலை நோக்கி!..

குறுகலான சாலையில் மக்கள் வெள்ளத்தினூடாக பேருந்துகளும் சிமெண்ட் ஏற்றிய லாரிகளும் சிக்கித் திணறின..

ஆஹா!.. இது சரிப்பட்டு வராது!..

விறுவிறு - என திரும்பி நடந்து, காவிரிப் பாலத்தின் கீழாக இறங்கினோம்.

கடைமுழுக்கில் புண்ணியம் சேர்க்கும் முன்னரே -
மக்கள் பாவ மூட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தனர்..

சிலுசிலு - என, இப்படியும் அப்படியுமாக ஓடிக் கொண்டிருந்தது - காவிரி.

முறை வைத்து விடப்பட்டதால் - ஆற்றில்  முழங்கால் அளவு தான் தண்ணீர். அந்தப் பக்கம் மடுவில் இடுப்பளவு நீர் தெரிந்தது. ஆயினும் காவிரி மடுவை நம்பக் கூடாது.

இங்கேயே ஆனந்தமாகக் குளித்து விட்டு  - மாற்று உடைகளை அணிந்து கொண்டு வெண்மணலில் கால்பதித்துக் கரையேறி - படித்துறைப் பிள்ளையாரை வணங்கினோம்.

துலா மாதத்தில் காவிரியில் நீராடினால் ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகுகின்றதாம்!..

பாவம் விலகுகின்றதோ இல்லையோ -
உடல் அழுக்கு நீங்கி மனம் சந்தோஷமாகின்றது. மனம் சந்தோஷமாக இருந்தால் உள்ளமும் சுத்தமாகின்றது. அதற்கு இந்த பிள்ளையாரே சாட்சி!..

மாடத்திலிருந்த விபூதியைத் தரித்துக் கொண்டு நேராக பேருந்து நிலையம் வந்தபோது கும்பகோணம் செல்லும் பேருந்து தயாராக நின்றிருந்தது.

ஏறி அமர்ந்தோம்.

நாம் திருவையாறு கோயிலுக்கு அல்லவா வந்தோம்!?.. கும்பகோணம் பஸ்ஸில் எதுக்கு ஏறணும்!?.. - என்றது அருகிருந்த மனசாட்சி.

மனமே.. சற்றுப் பொறு!..

பேருந்தில் ஏறியதும் - ஐயா.. எங்கே போகணும்!.. - பேருந்தின் நடத்துனர்.

ஆடுதுறை பெருமாள் கோயில்!..

ஆடுதுறையா!.. - மீண்டும் மனசாட்சி.

சற்றுப் பொறு!.. மனமே.. சற்றுப் பொறு!.. இங்கே நெருக்கியடித்துக் கொண்டு திருவிழாக் கூட்டம். படித்துறைக்குப் போவதற்கே ஒருமணி நேரத்துக்கும் மேலாகும். கடை முழுக்குக்காக சாமியும் அம்பாளும் புறப்பாடு. தீர்த்தவாரி ஆகின்றதாம். அதனால - இதோ பக்கத்தில இருக்கின்றது ஆடுதுறை குலை வணங்கு நாதர் கோயில். தரிசனம் செய்து விட்டு இங்கே வரலாம்..

பேச்சு பேச்சாக இருக்கையில் பேருந்து விரைந்து கொண்டிருந்தது.

திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் - இந்த வழியில் தான் - திருப்பழனம், திங்களூர், கணபதி அக்ரஹாரம் - எனும் தலங்கள் உள்ளன.

கணபதி அக்ரஹாரத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவு தான் - ஆடுதுறை.

உண்மையில் இந்த ஊரின் பெயர் வடகுரங்காடுதுறை என்பதாகும்.

இன்றைக்கு ஆடுதுறை என வழங்கப்படுகின்றது.
தவிரவும் இந்த சிறிய கிராமத்தில் பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது.

குலைவணங்கு நாதர் திருக்கோயில் இருக்கும் இடம்  - ஆடுதுறை.
பெருமாள் கோயில் இருக்கும் இடம் - ஆடுதுறை பெருமாள் கோயில்.
இரண்டு கோயில்களுக்கும் இடையே ஒரு கி.மீ.தொலைவு தான்.

பேருந்தில் வரும் போதே ஆடுதுறை சிவன் கோயில் அருகில் என்று சொன்னால் - இறக்கி விடுகின்றார்கள்.

திருக்கோயிலின் அருகிலேயே பேருந்து நிறுத்தம்.

சாலையின் தென்புறமாக இருக்கின்றது திருக்கோயில்.  கோயிலின் அந்தப் பக்கமாக காவிரி ஆறு!..

சாலையிலிருந்து பார்த்தாலே - திருக்கோயிலின் உயர்ந்த மதில் தெரிகின்றது.

சரி... வாருங்கள்..  திருக்கோயிலுக்குள் செல்வோம்.

ராஜ கோபுரம் - உள்புற தரிசனம்
ஞானசம்பந்தப்பெருமான் போற்றிப் பரவிய திருக்கோயில்.

கிழக்கு நோக்கிய திருக்கோயில். நெடிதுயர்ந்த ஐந்து நிலை ராஜகோபுரம்.

ராஜகோபுரத்தின் இரு புறங்களிலும் மாடத்தில்  விநாயகரும் வேலவனும் குடி கொண்டுள்ளனர்.

திருமூலஸ்தானம்
இறைவன் - தயாநிதீஸ்வரர், குலைவணங்கு நாதர்.
அம்பிகை - ஜடாமகுடேஸ்வரி.
தலவிருட்சம் - தென்னை.
தீர்த்தம் - காவிரி.

திருத்தலப் பெருமை
வாலி சிவபூஜை புரிந்த பெருமையினையும் சிட்டுக்குருவி நாளும் வலம் வந்து இறைவனை வணங்கி நற்பேறடைந்த பெருமையையும் உடையது.

கர்ப்பிணிப் பெண்ணின் தாகம் தீர்ப்பதற்கு தென்னை வளைந்த திருத்தலம்.

ராஜகோபுர மூர்த்திகளை வணங்கியபடி, நேரே நடந்தால் - பெரிய வெளி..
நந்தி மண்டபம்.  அதன் வடக்காக அம்மன் சந்நிதி.

பலிபீடம், நந்திகேஸ்வரர் - தரிசனம். 

இரண்டாவது திருவாசலைக் கடந்து - தொடர்ந்தால் அர்த்த மண்டபம்.

வெளியே மைனாக்களின் மெலிதாக சத்தம். ஊடாக அங்குமிங்கும் ஓடித் திரிகின்றன - அணில்கள்..


ஈசனின் திருமுகத்தை நோக்கியபடி - தர்மநந்தி!..

திருமூலஸ்தானத்தில் கருணையே வடிவாக - குலை வணங்கு நாதர்.

பெருமானுக்கு தயாநிதீஸ்வரர், சிட்டி லிங்கேஸ்வரர் எனும் திருப்பெயர்களும் வழங்குகின்றன.

குரங்காடுதுறை எனும் இத்தலம் - வாலி வணங்கிய தலம்.

நாள் தோறும் எட்டுத் திக்கும் சென்று லிங்க வழிபாடு செய்பவன் வாலி என்று ஒரு பழங்கதை சொல்வார்கள்..

இலங்கை வேந்தன் இராவணனைத் தன் வாலினால் கட்டித் தூக்கி வந்து - தனது மகன் அங்கதன் கிடந்த தொட்டிலில் பதுமையாகத் தொங்க விட்டவன்.

அது மட்டுமல்லாமல்- இராவணனை பத்து தலைப் பூச்சி என்று சொன்னவன்!.

அப்படிப்பட்டவனுக்கும் ஒரு சமயம் மூளை குழம்பிப் போய் விட்டது.

தான் வழக்கமாக வணங்கும் - இடத்தில் முனிவர் ஒருவர் சிவபூஜை செய்வதைக் கண்டு பொறாமை கொண்ட வாலி பெரிதாக சப்தமிட்டான். வயதான முனிவர் - வாலியைக் கண்டு பயந்து ஓடி விட்டார்.

அந்த இடத்தில் - தனக்காக சிவலிங்கப் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென நினைத்த வாலி  - முனிவர் பிரதிஷ்டை செய்திருந்த லிங்கத்தைப் பெயர்க்க எண்ணி பலப் பிரயோகம் செய்தான். கைகள் இற்றுப் போயினதே அன்றி காரியம் ஆகவில்லை.

மூர்க்கத்தால் மூடனாகிப் போனவன் - தனது பலம் முழுவதையும் திரட்டி வாலில் நிறுத்தி - சிவலிங்கத்தைக் கட்டி இழுத்தான்.

இழுத்த வேகத்தில் வால் அறுபட்டு, எட்டு யோசனை தூரத்திற்கு அப்பால் எகிறி விழுந்து மூக்கு உடைபட்டு நின்றான்.

வால் அறுபட்டதோடு  - மூக்கும் உடைபட்டதால் அவமானப்பட்டு நின்றவன் தனது அவலத்தை எண்ணிக் கதறினான். அவனது ஆணவம் அடங்கியது.

தனது தகாத செயலை எண்ணி வருந்தினான். அமைதியான நெஞ்சினனாகி - ஈசனை எண்ணித் துதித்தான்.

சிவபூஜை செய்யும் வாலி
அவனைக் கண்டு இரங்கிய முனிவர்கள் - இத்திருத்தலத்தில் சிவபூஜை செய்யுமாறு பணித்தனர்.

அவர்கள் சொல்படி, சிவபூஜை செய்த வாலி - மீண்டும் வால் வளரப்பெற்றான்.

வாலி வணங்கி நிற்கும் சிற்பம் - மூலஸ்தான விமானத்தில் விளங்குகின்றது.

வடக்கு கோஷ்டம்
மேலும்  - சிட்டுக் குருவி ஒன்றும் ஐயனைப் பணிந்து வணங்கி பெரும்பேறு பெற்றிருக்கின்றது.

இதனாலேயே - தயாநிதீஸ்வரர், சிட்டி லிங்கேஸ்வரர் எனும் திருப்பெயர்கள்.

எனினும், ஐயன் -  கர்ப்பிணிப் பெண்ணின் தாகம் தீர்த்த கருணையே பெரிதும் பேசப்படுகின்றது.

இத்திருக்கோயிலுக்கு முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களே வருகின்றார்கள்.

காரணம் -

நடுப்பகல் வேளை. மேகங்கள் அற்ற வானத்தின் உச்சியில் கதிரவன்.

அவனது கதிர்களால் பூமி தகித்துக் கொண்டிருந்தது. 

வெப்பம் தாங்க இயலாத கரிக் குருவிகளும் சிட்டுக் குருவிகளும் மரப் பொந்துகளுக்குள் முகம் புதைத்துக் கொண்டன.

பாடித் திரிந்த குயில்களும் பைங்கிளிகளும் தொண்டை வறண்டு துவண்டன.

அந்த வேனற்பொழுதில் தாயும் மகளுமாக மூன்று ஜீவன்கள் காவிரியின் வடகரையில் கரையில் பயணித்துக் கொண்டிருந்தன. 

தாயும் மகளுமாக மூன்று ஜீவன்கள்!..

என்ன ஐயா... கதை சொல்கிறீர்கள்!?..

உண்மைதான்!.. 

பயணித்தவர்கள் மூவர்!..ஆனால் தாயும் மகளும் தான்!..

தாய்.. மற்றும் அவளுடைய மகள்!.. மகளோ கர்ப்பிணி!..

இப்போது விளங்கியதா!..

திருவையாற்றில் இருந்து பயணிக்கின்றார்கள்..

செல்ல வேண்டிய தொலைவினை மாட்டு வண்டியில் பயணித்து கடக்கலாம்.

ஆனால்,

தொடரும் தொல்வினையோ வாட்டும் வறுமையாய் முன் நிற்கின்றது..

இன்னும் சற்று தூரம் தான்.. ஆனாலும் களைப்பு மேலிடுகின்றது.

காவிரியின் கரையோரத்தில் பசுமையாக ஒரு தென்னந்தோப்பு...

கடும் வெயிலில் மயங்கிய கண்கள் - அந்த தோப்பினைக் கண்டு மலர்கின்றன.

யாரோ புண்ணியவான் அமைத்திருந்த சுமை தாங்கிக் கல்லும் நடை தாங்கிக் கல்லும்!.. அருகே ஒரு ஆவுரிஞ்சு கல்லும் நடப்பட்டிருந்தது!...

அலுப்பு தீரட்டும் என, நடை தாங்கிக் கல்லில் அமர்ந்தனர் தாயும் மகளும்..

நா வறண்டது. நாவினைப் போலவே நடை மலிந்த காவிரி ஆறும் வறண்டு கிடந்தது.

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாளிலும் ஊற்றுப் பெருக்கினால் உலகிற்கு ஊட்டுபவள் காவிரி!..

அவ்வண்ணமே - காவிரிக்குள் ஆங்காங்கே நீர் ஊற்றுகளும் தென்பட்டன.

ஆயினும், அந்த ஊற்றினைச் சென்றடைந்து - நீர் சேந்திக் குடிக்கவும் இயல வில்லை - அந்த தாய்க்கும் மகளுக்கும்!..

தாய் - தன்னுயிர் தாங்கிக் களைத்தவள்!..

மகளோ - தன்னுள் ஒரு உயிர் தாங்கி நடப்பவள்!..

அவர்தம் - மனமும் உடலும் களைத்து ஒரு துளி நீருக்கு ஏங்கின..

யார் உதவக்கூடும் அவர்களுக்கு?..
கரைவழியில் அங்குமிங்கும் செல்வோர்கூட யாருமில்லை அவ்வேளையில்!.

திக்கற்றவர்க்குத் தெய்வம் தானே துணை!..
அதன்படி - தெய்வம் மானுடம் தாங்கி - காவிரியின் கரை மீது வந்தது.

வார் கச்சையில் அரிவாள் இலங்க - கையில் நீண்ட பிரம்புடன் காவல் நாயகனாகத் தோன்றினான் - தயாபரன்.

தளர்வுற்றுக் களைத்திருந்த  - தாய் மகளைக் கனிவுடன் நோக்கினான்.

ஒரு துளிநீருக்கு ஏங்கிய விழிகளைக் கண்டு புன்னகைத்த பரமனின் திருவிழிகள் -

திரண்ட குலைகளுடன் தழைத்திருந்த தென்னந்தோப்பினை நோக்கின.

தென்னங்குலை வளைந்த லீலை
வேலி ஓரத்தில் - விண்ணுயர்ந்து நின்று காற்றில் ஆடிக் கொண்டிருந்த  அந்தத் தென்னை மரம் - பரமனின் உள்ளக் கிடக்கையை உணர்ந்து -

குலையுடன் தரை நோக்கித் தாழ்ந்து வளைந்து நின்றது.

பரமனின் திருப்பாதங்களில் இளங்காய்களை மலர்களாக உதிர்த்து வணங்கி நின்றது.

இறைவனின் திருவடிகளில் வேதங்கள் மலர்களாகக் கிடக்கின்றன என்பது ஆன்றோர் வாக்கு!..

அத்தகைய திருவடிகளில்  இளநீர் எனும் தென்னை இளங்காய்கள் - திரண்டு கிடந்தன.

கண்முன்னே நிகழும் அற்புதங்கண்டு அதிசயித்தனர் - தாயும் மகளும்!..

திரண்ட காய்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து கை அரிவாள் கொண்டு சீவி - குடிக்கும் படியாகக் கொடுத்தான் - பரமன்.

இளநீரை வாங்கி ஆவலுடன்  குடித்தார்கள் தாயும் மகளும்..

தாகம் தீர்ந்தது. தவிப்பும் அடங்கியது.

நல்லது செய்தவர்க்கு நன்றி கூற வேண்டுமே!...உலர்ந்த உதடுகள் உயிர்த்தன.

ஆனால் கண்ணெதிரே நின்று கடுந்தாகம் தீர்த்த காவலனைக் காணவில்லை!..

அப்போது தான் - அறிவுக்கு எட்டியது.

திரண்ட தோள்களுடன் காவல் நாயகனாக வந்ததும்  - கனத்த குலைகளுடன் தென்னை வளைந்து வணங்கி இளங்காய்களை உதிர்த்ததும்!..

நிகழ்ந்த அற்புதம் புரிந்தது..

ஏழைக்கு இரங்கிய தயாநிதி!.. குலைவணங்கு நாதனே!.. - குரல் தழுதழுத்தது.

பஞ்ச வாத்தியங்கள் முழங்கின.

கணபதி கந்தன் இருவரும் மடி மீது திகழ, விடை வாகனத்தில் ஐயனும் அம்பிகையும் தரிசனம் அளித்தனர்.

தாயும் மகளும் ஆனந்தக் கண்ணீருடன் வணங்கி பெரும்பேறு பெற்றனர்.

கர்ப்பிணிப் பெண்ணின் தாகத்தினை தீர்த்து வைத்து அருள் புரிந்த திருத்தலம் - குரங்காடுதுறை.திருஞானசம்பந்தப் பெருமான் திருப்பதிகம் பாடி வணங்கும்போது -

நீலமாமணி நிறத்தரக்கனை இருபது கரத்தொடொல்க
வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்
ஏலமோடு இலைஇல வங்கமே இஞ்சியே மஞ்சளுந்தி
ஆலியா வருபுனல் வடகரையடைகுரங் காடுதுறையே!..{3/91/8}

இராவணனைத் தன் வாலினால் கட்டிய வாலி - வணங்கிய தலம் என்பதைப் புகழ்ந்துரைக்கின்றார்.

இத்தலம் - காவிரியின் வடகரைத் தலங்களுள் நாற்பத்தொன்பதாவது தலம்.

திருவிடைமருதூருக்கு அருகிலும் குரங்காடுதுறை எனும் தலம் திருப்பதிகம் பெற்றுள்ளது. அது காவிரிக்குத் தென்கரைத் தலம்.
திருச்சுற்றில் - அற்புதமான தக்ஷிணாமூர்த்தியின் சந்நிதி விளங்குகின்றது.

மேற்குத் திருச்சுற்றில் - ஸ்ரீ வள்ளி தேவயானையுடன் சுப்ரமணியர் சந்நிதி.
அருணகிரிநாதர் வந்து வணங்கி திருப்புகழ் பாடிய சந்நிதி.

அஷ்ட புஜங்களுடன் சங்கு சக்ரம் தாங்கியவளாக ஸ்ரீதுர்கா பரமேஸ்வரி!.. கம்பீரமும் கனிவும் பொலியும் திருமுகம்!.. கவலைகள் தீர்கின்றன.

இரட்டை பைரவர் - சூரியன்
லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, காசி விஸ்வநாதர், மகாலக்ஷ்மி,
சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், நாகர், நவகிரக நாயகர்கள், சனீஸ்வரர் -

- என தெய்வத் திருமேனிகள் திகழ்கின்றன.

சிவகாமசுந்தரியுடன் அருள்பாலிக்கும் நடராஜரின் கல் சிற்பம் பேரெழிலுடன் திகழ்கின்றது.

இறைவனின்  கருணைக்கு ஆளான கர்ப்பிணியின் சிலை வடிவமும் இங்கே விளங்குகின்றது.

நந்தி மண்டபத்தின் அருகில் அம்பிகையின் திருச்சந்நிதி.


அம்பாள் மூலஸ்தானம்
கருணையே வடிவாக அன்னை ஜடாமகுடேஸ்வரி விளங்குகின்றனள்..

இறைவனின் அருள் வேண்டி - கர்ப்பிணிகள்  இத்திருத்தலத்தில் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

ஐயனும் அம்பிகையும் கர்ப்பிணிகளுக்கு அருள் புரிந்த திருக்கருகாவூர், திருச்சிராப்பள்ளி - ஆகிய திருத்தலங்களைப் போலவே சிறந்து விளங்குவது.

ஈசனே - கர்ப்பிணிகளுக்கு இரங்கி அருள்கின்றான் எனில் -

தன்னுள் ஒரு இன்னுயிர் தாங்கி நிற்கும் கர்ப்பிணிப் பெண்களின் பெருமையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!..

கர்ப்பமான பெண்களை பொதுவாக கோயிலுக்குச் செல்ல வேண்டாம் என சொல்வார்கள்.. ஆனால்,

சிவபெருமான்  - கர்ப்பிணிப் பெண்ணுக்கு அருள் செய்த தலம். ஆதலால்,

இத்தலத்திற்கு வந்தால் சுகமான பிரசவம் நடக்கும் என்பதை நம்பிக்கையாகக் கொண்டு கர்ப்பிணிப் பெண்கள் அம்மையப்பனை தரிசிக்க வருகின்றனர்.

சமீபத்தில் திருக்குடமுழுக்கு நடந்திருக்கின்றது.
திருக்கோயில் மிகவும் அழகாக - சுத்தமாக இருக்கின்றது.
திருச்சுற்று முழுவதும் - தும்பை, பொன்அரளி, செவ்வரளி, கீழாநெல்லி - என மூலிகைச் செடிகள் வளர்ந்துள்ளன.

திருச்சுற்றின் வடபுறம் தலவிருட்சமாகிய தென்னை தழைத்திருக்கின்றது. 

பங்குனியில் உத்திரத் திருவிழா, நவராத்திரி  பத்து நாள் விழா, சிவராத்திரி வைபவம் ஆகியன சிறப்பான விசேஷங்கள். பிரதோஷ வழிபாடுகளும் சிறப்புற நடக்கின்றன.

கார்த்திகையில்  பெண்கள் ஆயிரத்தெட்டு முறை சுற்றி வந்து அம்பிகையை வணங்கி வளம் பெறுகின்றார்கள்.

சென்ற மாதம் என் மகளின் வளைகாப்பினை ஒட்டி - எழுதிய வளைகாப்பு எனும் பதிவில் இந்த சம்பவத்தைப் பதிவு செய்திருந்தேன்.

அதுவரையிலும் இந்த திருக்கோயிலுக்கு வந்ததில்லை..

வாலிக்கு அருள் செய்த நாதன் - எம்மையும் வா!.. - என்று அழைத்தான்!..
குருவிக்கு இரங்கிய குழகன் - எம் குறை தீர்த்து திருவருள் புரிந்தான்!..
குலை வணங்கும் நாதன் - எம் குலம் காத்து நலம் தனைப் பொழிந்தான்!..

அந்த அளவில்  - பலிபீடத்தின் அருகில் 
பரமனையும் பரமேஸ்வரியையும் 
மனதார வணங்கி எழுந்தோம்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.
* * *

20 கருத்துகள்:

 1. ஆலய தரினம் அழகாய் செய்து அதை எங்களுக்கும் அளித்தமைக்கு நன்றி.
  படங்கள் எல்லாம் அழகு.
  முன்பு பார்த்து இருக்கிறேன் ஆடுதுறை கோவில் , இப்போது புது பொலிவுடன் இருப்பதை பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   சுற்றிலும் பசுமையான வயல் வெளிகளுடன் எழிலாக விளங்குகின்றது ஆடுதுறை கோயில்.

   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. ஒரே இறைவன். அவனுக்குத்தான் எத்தனை கோவில்கள் அதற்கான கதைகள் எத்தனை. ரசிக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா.
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி

   நீக்கு
 3. திருஐயாறு எனது ஊர்
  மகிழ்ந்தேன் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் மகிழ்ச்சியே - எனக்கும்..
   அன்பின் வருகைக்கு நன்றி..

   நீக்கு
 4. உங்களின் தயவால் நான் முன்னர் பார்த்த கோயில்களை மறுபடியும் காணும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா.
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அருமையான ஆலயதரிசன பகிர்வுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. இதுவரை சென்றதில்லை... திருஐயாறு பற்றிய விளக்கமான சிறப்புகளுக்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. பயணக்குறிப்பு புகைப்படங்களுடன் அழகான விளக்கவுரை அருமை நண்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. ஆலயதரிசனமும் ....படங்களும் சிறப்பு அய்யா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. வணக்கம் ஐயா!
  ஆலய தரிசனம் செய்வதே பெரும் பாக்கியம்!
  அதைப் பதிவாக்கித் தரும்போது படிக்காமல் தவறவும் தருணங்கள்
  மனதை வருத்துகிறது எனக்கு!..

  இருப்பினும் அவ்வப்போது வந்து பார்த்து அறிகின்றேன்!.. மகிழ்கின்றேன்!
  தாமதமான வருகைக்குப் பொறுத்திட வேண்டுகிறேன்!!

  இங்கும் அத்தனையும் அருமை ஐயா! படங்களும் அற்புதம்!
  நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்களின் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. காவிரிக்கரையில் தான் எத்தனை எத்தனை கோவில்கள். இக்கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை. செல்ல வேண்டும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   நாள் ஒன்றுக்கு ஒரு கோயில் என்று வருடம் முழுதும் தரிசிக்கலாம்..
   தங்கள் அன்பின் இனிய வருகை கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..