நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 19, 2014

மார்கழிக் கோலம் 04

குறளமுதம் 

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் 
வானின்று அமையாது ஒழுக்கு. (020)

வானின்று பொழியும் மழையும் அதனால் விளையும் நீரும் இல்லை எனில் எங்கும் எதிலும் எவரிடத்தும் உள்ளதான ஒழுங்கு கெட்டுப் போகும்.
நீர் இல்லையேல் உயிர்களும் உலகும் இல்லாது போகும்.  

* * *

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி 
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை - 04


ஆழிமழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல் 
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி 
ஊழி முதல்வன் உருவம் போல் கறுத்துப் 
பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில் 
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து 
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல் 
வாழ உலகினின் பெய்திடாய் நாங்களும் 
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் 

ஓம் ஹரி ஓம்

ஆலய தரிசனம்
ஆழ்வார்திருநகரி


மூலவர் - ஆதிப்பிரான்
உற்சவர் - பொலிந்து நின்ற பிரான்
தாயார் - திருக்குருகூர் நாயகி
தலவிருட்சம் - புளியமரம்
தீர்த்தம் - தாமிரபரணி

மங்களாசாசனம் - நம்மாழ்வார்

ஓடியோடிப் பல்பிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்
பாடியாடிப் பணிந்து பல்படிக்கால் வழியேறிக் கண்டீர்
கூடி வானவரேத்த நின்ற திருக்குரு கூரதனுள்
ஆடுபுட்கொடி ஆதிமூர்த்திக்கு அடிமை புகுவதே!.. (3336)
நம்மாழ்வார் திருவாய்மொழி (4/10)

தலப்பெருமை

பெருமாள் நின்ற திருக்கோலம். தலப்பெயர் - திருக்குருகூர். 
நம்மாழ்வார் அவதரித்த திருத்தலம். அதனால் ஆழ்வார் திருநகரி.

தென்பாண்டிச் சீமையில் நவதிருப்பதிகளாகக் கருதப்படும் திருத்தலங்களுள் - ஆழ்வார்திருநகரி குரு பிரகஸ்பதிக்கு உரிய திருத்தலமாக குறிக்கப் படுகின்றது. 

ஐயாயிரம் ஆண்டுகளைக் கடந்து திகழ்வது தல விருட்சமான புளியமரம். 
இது இரவில் உறங்குவதில்லை.

காரியார் - உடைய நங்கை தம்பதியர்க்கு திருமகவாகத் தோன்றியவர் சடகோபர். பிறந்ததிலிருந்து அழாமலும் பாலுண்ணாமலும் இருந்த குழந்தையை -ஆதிநாதனின் திருக்கோயிலுக்குத் தூக்கி வந்தனர் பெற்றோர்.

சடகோபர் தவழ்ந்து சென்று உறங்காப்புளியின் பொந்தினுள் யோகத்தில் ஆழ்ந்தார். 

ஸ்ரீநம்மாழ்வார்
பதினாறு ஆண்டுகள் கழிந்த நிலையில் வடக்கே தீர்த்தயாத்திரையிலிருந்த மதுர கவியாழ்வாரை - இந்தப் புளிய மரத்தினுள்ளிருந்து எழுந்த ஒளி - தன்னருகே இழுந்து வந்தது. 

பொந்தினுள் சடகோபரைக் கண்டதும் அவரையே குருவாகக் கொண்டார் - மதுரகவியாழ்வார். 

அவரை நம்மாழ்வார் என அழைத்து அவருக்கு மங்களாசாசனம் செய்வித்தார்.   

ஆச்சாரியன் - பெருமாளின் திருவடிகள் என்பது தாத்பர்யம். 

அறியாத ஜீவன் அல்லலுற்றுத் தவிக்கும் போது - ஆச்சார்யனே தன் விருப்பத்தில் எழுந்தருளி - இறைவனின் திருவடிகளை அவ்விடத்தில் சேர்ப்பித்து ஜீவனை உய்விக்கின்றார் என்பது நம்பிக்கை. 

இதுவே பெருமாள் சந்நிதிகளில் - நம் சிரசில் சூட்டும் சடாரியின் தத்துவம்.

சடாரிக்கு ஸ்ரீசடகோபம் எனும் பெயரும் உண்டு.

பெருமாளின் பாதங்கள் எனும் ஸ்ரீ சடாரியை ஆச்சாரியராகப் பாவிக்கும் போது - அது நம்மாழ்வாரையே குறிக்கின்றது.

* * *

சிவதரிசனம்

மாணிக்கவாசகப்பெருமான் அருளிய 
திருவெம்பாவை
திருப்பாடல் 03

திருநெல்வேலி
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்னை தீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லாம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்!..

திருக்கோயில்
திருநெல்வேலி


இறைவன் - வேணுவனநாதர், நெல்லையப்பர்
அம்பிகை - காந்திமதி, வடிவுடையநாயகி
தலவிருட்சம் - மூங்கில்
தீர்த்தம் - பொற்றாமரைக்குளம், சிந்துபூந்துறை

தலப்பெருமை

தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த பக்தர் ஒருவர் இறைவனின் நிவேதனத்திற்கென்றும் - அன்னதானத்திற்கென்றும் நெல்லை உலரப் போட்டிருந்தார். காலமல்லாத காலத்தில் மழை பெய்தது. பக்தரின் பொருட்டு மழையிலிருந்து - நெல்லைக் காத்தருளினன் இறைவன். 

வேணு எனப்பட்ட மூங்கில் வனத்தில் மூங்கில் முளைகளின் ஊடாக சுயம்புவாக வெளிப்பட்டமையினால் - வேணுவனநாதர்.

நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததனால் ஸ்வாமிக்கு நெல்லையப்பர் எனவும் தலத்திற்கு திருநெல்வேலி எனவும் திருப்பெயர்கள் வழங்கலாயின. 


அம்பிகை - காந்திமதி. கருணையே வடிவானவள்.  

சிவ சந்நிதியில் உச்சிகால பூஜையை அம்பிகையே நிகழ்த்துவதாக ஐதீகம்.

ஆடி மாதத்தில் வெகு சிறப்பாக ஆடிப்பூரத் திருவிழா கண்டருள்கின்றாள்.

அம்பிகையை தங்கள் வீட்டுப் பெண்ணாகப் பாவித்து வளையல் அணிவித்துக் கொண்டாடுகின்றனர்.

திருக்கோயிலில் - கருவறையின் அருகிலேயே - பள்ளி கொண்ட பெருமாள்.

பெருமாளின் மார்பில் சிவலிங்கப் பதக்கம் திகழ்கின்றது.

ஐயன் நடமிடும் அம்பலங்கள் ஐந்தனுள் - தாமிர சபை.

திருஞானசம்பந்தர் வழிபட்டு திருப்பதிகம் பாடியருளிய திருத்தலம்.

510 ஆண்டுகளாகத் தேரோட்டம் நிகழும் திருத்தலம்.

மருந்தவை மந்திரம் மறுமை நன்னெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தை செய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன் சொரிதர துன்று பைம்பூஞ்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வேலியுறை செல்வர் தாமே!.. (3/92)
ஞானசம்பந்தப்பெருமான்.

திருச்சிற்றம்பலம்.
* * *

10 கருத்துகள்:

 1. நாள்தோறும் மார்கழிப் பதிவு
  தங்களின் உழைப்பு விய்க்க வைக்கின்றது ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   எல்லாவற்றுக்கும் தாங்கள் அளிக்கும் உற்சாகமே காரணம்..
   தங்கள் இனிய வரவு கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 2. அறியாத திருத்தலத்தின் சிறப்புகள் அறிந்தேன்... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் இனிய வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 3. மாா்களி மாதம் மனம் கவர் கண்ணனின் படம் மயக்குகிறது
  தினம் கோவில் தரிசனம் கிடைக்கிறது. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 4. அருமையான மார்கழிக் கோலம் ஐயா! படங்கள் அருமை! தலத்தைப்பற்றி அறிந்து கொண்டோம் ஐயா! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 5. நம்மாழ்வார் பற்றி சொன்னது அருமை.

  நவ திருப்பதியும் ஒரே நாளில் தரிசனம் செய்து வந்தோம். ஆழவார் திருநகரி, நெல்லை காந்திமதி அம்மன் கோவில் படங்கள் விளக்கங்கள் எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..