நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 05, 2014

தீபத் திருநாள்

அனைவருக்கும் தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

நிகழும் கார்த்திகை மாதம் -  தட்சிணாயணத்தின் ஐந்தாவது மாதம்.
கால கதியில் எட்டாவது மாதம்.

மங்கலகரமான தீபத் திருவிழா நிகழும் புண்ணிய மாதம்..


தீபத்திருவிழா நம்முடைய தொன்மையான திருவிழாக்களுள் ஒன்று!..

இந்த கார்த்திகை தீபத் திருநாளே தமிழகத்தின் தீபாவளி!..

தீபாவளி எனில் - நரகாசுரனை வீழ்த்திய நாள் என்ற அர்த்தத்தில் அல்ல!..

தீபாவளி என்பது வடமொழிச் சொல் .

தீபம் + ஆவளி = தீபாவளி. ஆவளி என்றால் வரிசை எனப் பொருள்.

நாமாவளி எனும் போது இறைவனின் திருப்பெயர்களின் வரிசை எனப் பொருள் கொள்கின்றோம் அல்லவா!..


அதைப் போல -
தீபாவளி எனில் தீபங்களை வரிசையாக வைத்து வழிபடுதல் என்பதாகும்.

இந்த தீபாவளி எனும்  தீப வரிசைக்குள் -  காலத்தின் கோலத்தால் பின்னாளில் நரகாசுரன் வந்து புகுந்து கொண்டான்.  

கார்த்திகை விளக்கீடு எனும் இத் திருநாள் - சங்கத் தமிழ்ப்பாடல்களில் காணப்படும் தொன்மையினை உடையது.
 
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
(2/47)

திருமயிலையில் - சிவநேசன் செட்டியாரின் மகள் பூம்பாவையை அஸ்திக் குடத்திலிருந்து எழுப்புதற்கு இசைத்த திருப்பதிகத்தில் கார்த்திகை விளக்கீடு விழாவினைக் குறிக்கின்றார் - ஞானசம்பந்தப் பெருமான்.

கார்த்திகை தீபம் எனும் நாள் கார்த்திகை மாதத்தின் - பெளர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய நன்னாள்.


அணிதிகழ் அகல் விளக்கொளியில் அகமும் புறமும் மகிழ்வுறும் அற்புதத் திருநாள்.

இந்த நன்னாள்,  வெள்ளிக்கிழமையாகிய இன்று (05/12)கூடி வருகின்றது. 


கார்த்திகை நட்சத்திரக்கூட்டம் (Tks. wikipedia)
புண்ணியம் மிகுந்த இந்நாளின் மாலைப் பொழுதில், முழுநிலவு உதித்து எழும் வேளையில், தத்தம் இல்லங்களில் ஒளிமயமான அகல் விளக்குகளை ஏற்றி வைத்து ஆராதிப்பது தமிழர்களின் வழக்கம்.

தம் இல்லத்திலும் திருக்கோயில்களிலும் அகல் விளக்குகளை  அழகுற ஏற்றி வைத்து ஆராதனை செய்வதைப் பெரும் பேறெனக் கொள்வர்.

அண்ணாமலையில் தேரோட்டம்
கார்த்திகைத் திருநாள் - பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலம் எனத் திகழும்  அண்ணாமலைக்கே உரித்தானது.

கார்த்திகை நாளினை பத்தாம் திருவிழாவாகக் கொண்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் 26/11 அன்று கோலாகலமாகக் கொடியேற்றம் நிகழ்ந்தது.

தொடர்ந்து, தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதியுலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற்றன.


தீபத் திருநாளன்று மகாதீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் கொப்பரைக்கு புதன் கிழமை அதிகாலை திருக்கோயிலில் சிறப்புப் பூஜை செய்யப்பட்டு, அண்ணா மலையின் அடிவாரத்துக்கு  எடுத்து வரப்பட்டது.


அங்கிருந்து, பர்வதராஜ குலத்தைச் சேர்ந்தவர்கள்   -  மகா தீபக் கொப்பரையை அண்ணாமலையின் உச்சிக்கு  கொண்டு சென்றனர்.

தீபம் ஏற்றத் தேவையான 3,500 கிலோ நெய், திரி செய்யத் தேவைப்படும்  புத்தம் புதிய துணி ஆகியவற்றை வெள்ளிக்கிழமை அதிகாலை கோயிலில் இருந்து மலைக்குக் கொண்டு செல்வர்.

தீபத் திருவிழாவில் -  பரணி தீபம் வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு மூலவர் சந்நிதியில் ஏற்றப்படுகின்றது.


லட்சோபலட்சம் பக்தர்கள் குழுமியிருக்க - இன்று ஒரு பொழுது மட்டுமே - அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து ஆனந்த நடனத்துடன்  காட்சியளிப்பார்.

அவருக்கு தீப ஆராதனை நிகழும் வேளையில், திருக்கோயில் கொடிமரத்தின் எதிரில் தீபம் ஏற்றுவர். அதைத் தொடர்ந்து,



 2,668 அடி உயரமுடைய அண்ணாமலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.


அண்ணாமலைக்கு அரோஹரா!.. 
- என அன்பர்கள் எழுப்பும் ஆனந்த கோஷம் அண்டவெளி எங்கும் பரவும்.

கண்கொள்ளாக் காட்சியாக கார்த்திகை தீபத்தை கண்டு தரிசித்தவர்கள் - புதிதாய்ப் பிறந்ததாக உணர்ந்து மகிழ்வர்.

அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!..

- என்று திருஞானசம்பந்தர் அறுதியிட்டுக் கூறுவதும் அதனால்தான்!..


இறைவன் ஒளி மயமானவன். ஒளி மயமான இறைவனை ஒளி கொண்டு வணங்குவது எல்லா மங்கலங்களையும் தரவல்லது என்று நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். 

பிரம்மாண்டமான திருக்கோயில்களைக் கட்டி எழுப்பிய மாமன்னர்கள் - அத்திருக்கோயில்களில் தீபங்கள் நின்றெரிய பற்பல கட்டளைகளையும் செவ்வனே செய்திருக்கின்றனர் எனில் தீபத்தின் சிறப்பு தான் என்னே!..


எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத்தில் திருக்கோயில்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தின் தலைவாசலிலும் - வீடு முழுவதும் விளக்கேற்றி அலங்கரிப்பதும் மங்கல மரபாகும். 

கிராமங்களில் - வீட்டின் தலைவாசலில் தீபம் ஏற்றுவதோடு நில்லாமல் மாட்டுத் தொழுவத்திலும் தீபம் ஏற்றுவர்.

வீட்டின் பின்புறம் கிணற்றடியிலும்  குப்பை மேட்டிலும் உரக்குழியிலும் தீபம் ஏற்றி வைப்பார்கள்.

ஒரு மரபாக - வீட்டில் வேலை செய்பவர்களுக்கும்  - அவர்கள் வீட்டில் விளக்கேற்றி வைப்பதற்காக அகல் விளக்குகளுடன் எண்ணெயும் தீப தானம் என்று கொடுப்பார்கள்.

நாகரிகம் முற்றிப் போனதால் - நகரங்களில் கட்டப்படும் நவீன வீடுகளில் - தலைவாசல் நிலையின் இருபுறமும் மாடப் பிறைகள் கூட அமைக்கப்படுவது இல்லை.


திருக்கார்த்திகை தீப ஆராதனையானது - அனைத்து மங்கலங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். பொதுவாக வீட்டில் விளக்கேற்றுவதற்கு சில சிறப்பான நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொண்டு நடந்தாலே - துன்பங்களின் தாக்கம் குறையும் என்பது திருவாக்கு!..


பூஜை அறையில் அல்லது மாடத்தில் -
தெய்வத் திருவுருவங்கள் இருந்தாலும் சரி!..
அழகிய சித்திரங்கள் இருந்தாலும் சரி!..
நடுநாயகமாக ஒரு விளக்கு இருக்க வேண்டியது அவசியம். 

எவர்சில்வர் மற்றும் பீங்கான் - விளக்குகளைத் தவிர்க்கவும்.

விளக்கினைச் சுத்தம் செய்து - சந்தனம், குங்குமம், பூச்சரம் சூட்டி - கிழக்கு முகமாக வைத்து நல்லெண்ணெய் நிரப்பி, வெள்ளைத் திரியை இட்டு சுடர் ஏற்ற வேண்டும். சுடர் ஏற்றிய பின் - அணையாமல் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பூஜை நேரத்தில் இந்த சுடரில் இருந்து வேறு எதையும் ஏற்றக் கூடாது. கற்பூரம் ஏற்றுவதானால் கூட வேறு ஒரு விளக்கில் இருந்து தான் ஏற்றவேண்டும். 

ஏனெனில்  - நடுநாயக விளக்கு மூலஸ்தான மூர்த்திக்கு ஒப்பானது. 

திருவிளக்கின் பிரதான சுடர் கிழக்கு முகமாக ஜொலிக்கும் போது நாம் வடக்கு முகமாக நின்று வணங்க வேண்டும்.


சூரியோதயத்திற்கு முன் பிரம்ம முகூர்த்தத்திலும் (4.30 - 6.00) அந்தி மாலையில் நித்ய பிரதோஷ வேளையிலும் விளக்கு ஏற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும்.  இவ்வேளையில் தீபமேற்றினால் லக்ஷ்மி கடாட்க்ஷம் கிட்டும் என்பது ஐதீகம். 

விடியற்காலையில் விளக்கேற்றி வணங்கினாலும் அந்தி மயங்கும் மாலைப் பொழுதில் அவசியம் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். 

திருவிளக்கை குளிர்விக்கும் போது எக்காரணம் கொண்டும் வாயால் ஊதக் கூடாது. கையை விசிறி போல் வீசி - அணைக்கக் கூடாது.

பூவால் குளிர்விக்க வேண்டும். அல்லது தூண்டும் குச்சி கொண்டு திரியை எண்ணெயில் அழுத்தி குளிர்விக்க வேண்டும். 

வீட்டில் குத்து விளக்கு ஏற்றும் முன்  விளக்கின் எட்டு இடத்தில் திலகம் சூட்ட  வேண்டும் என்பது மரபு. அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை.


திருவிளக்கினை - தீபலக்ஷ்மி என்று போற்றுவதே நமது பாரம்பர்யம். 

எனவே - ஆதிலக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி , வித்யா லக்ஷ்மி , தன லக்ஷ்மி , தான்ய லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி , வீர லக்ஷ்மி , விஜய லக்ஷ்மி  - என தியானித்து திலகம் இடவேண்டும். இதனால், வீட்டில் அல்லல் அகன்று ஐஸ்வர்யம் பெருகும். 

எட்டு திலகங்களும் - நிலம், நீர், நெருப்பு, காற்று,  ஆகாயம், சூரியன், சந்திரன், ஆத்மா என்பனவற்றைக் குறிப்பவை - என்றும் கூறுவர். 

தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெய்க்கு என்ன பலன்?..
எந்த எந்த திசைக்கு - என்ன என்ன பலன்?..
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய எண்ணெய் எது!..

என்றெல்லாம் -  ஊடகங்களில்  ஆன்மீக செய்திகள் வெளியாகின்றன.
அவற்றை எல்லாம் ஓரமாக ஒதுக்கித் தள்ளுங்கள். 

திருவிளக்கு ஏற்றுவதற்கு - பசுநெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் - இம்மூன்று மட்டுமே உகந்தவை.

எக்காரணம் கொண்டும் கலப்பு எண்ணெயில் விளக்கேற்ற வேண்டாம்.


தீபங்களின் ஒளி - மனதில் சஞ்சலத்தை நீக்கும். தீப ஒளியினைக் கூர்ந்து நோக்கி - பின் அதை அப்படியே நெற்றியில் தியானிக்க - அற்புதமான காட்சிகளைத் தரிசிக்கலாம்.

சுபம் கரோதி கல்யாணம் ஆயுர் ஆரோக்யம் தனஸம்பத:
சத்ரு புத்தி விநாசாய தீபஜோதி நமோஸ்துதே..

மங்கலகரமான சுபகாரியங்கள் தடையின்றி நடக்கவும், வாழ்நாளும் உடல் நலனும் சிறக்கவும், பொன் பொருள் சேரவும், புத்தியில் இருக்கும் இருள் விலகவும் ஜோதி வடிவான தீபலட்சுமியே!.. உன்னைத் துதிக்கிறேன்!.. - என்பது பிரசித்தி பெற்ற ஸ்தோத்திரம்.

 

தம்முள் யார் பெரியவர் என, நான்முகனும் திருமாலும் விவாதித்து நின்றனர்.

அந்த விவாதம் காலகாலத்துக்கும் முடிவேயில்லாமல் தொடர - அதனால் உலகம் நிலைகுலைந்தது.

அப்போது அவர்கள் இருவருக்கும் நடுவில் சிவபெருமான் பெரும் ஜோதிப் பிழம்பென - அண்டங்களைக் கடந்ததாக - மூண்டெழுந்து நின்றார்..

ஜோதியின் அடி மற்றும் முடியினைக் கண்டு வருபவரே பெரியவர்!.. - என முடிவாயிற்று.

நான்முகன் அன்ன வடிவாகி - ஜோதியின் முடியினைத் தேடிச் சென்றார்.
திருமால் வராஹ வடிவாகி - ஜோதியின் அடியினைத் தேடிச் சென்றார்.

காலங்கள் பல கடந்தும் - அவர்கள் கண்டார்களில்லை.

அப்போது - நான்முகனின் வழியில் தாழம்பூ ஒன்று குறுக்கிட்டது.

அதனைக் கையில் கொண்ட நான்முகன்,

நான் முடியைக் கண்டு கொண்டேன். அதற்குத் தாழம்பூவே சாட்சி !..  - என்றார்.

தாழம்பூவும், ஆமாம் சாமி!.. - என்று பொய்யுரைத்து.

சிவபெருமான் சினம் கொண்டார். விளைவு!..

பொய்யுரைத்த பிரம்மனுக்குப் பூவுலகில் கோயில் இல்லாமல் போனது. 
தரம் இழந்த தாழம்பூ - சிவபூஜையினின்று விலக்கப்பட்டது. 

சிவபெருமானைக் கண்டு உணராது அவர்கள் தவித்து நின்றனர். அப்போது -
செங்க ணானும் பிரமனுந் தம்முளே
எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலர்
இங்குற் றேனென்று இலிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே!..(5/95)


- என்று, திருநாவுக்கரசர் போற்றுகின்றார்.

இந்த புராணத்தையே  -

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் 
பொய்யா விளக்கே விளக்கு!.. 

- என்று,  திருவள்ளுவர் நமக்கு அறிவுறுத்துகின்றார்!..


அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக 
இன்புருகி சிந்தை இடுதிரியா - என்புருகி 
ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு 
ஞானத்தமிழ் புரிந்த நான்!.. 

- என்பது பூதத்தாழ்வார் அருளிய திருப்பாசுரம்.


''தீப மங்கல ஜோதி நமோ நம!..'' - என்று அருணகிரி நாதர் முருகனைப் புகழ்கின்றார்.

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி!..
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி!..

- என்பது வள்ளலார் ஸ்வாமிகளின் அருளிய தாரக மந்திரம்.


அடியும் முடியும் அறிய இயலாத அகண்ட ஜோதிப் பிழம்பாக - எல்லாம் வல்ல சிவபெருமான் விளங்கிய நாள் கார்த்திகை - என்று சைவ சமயம் போற்றிப் புகழ்கின்றது.  

பொய்யா யின எல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே!..

- என்று மாணிக்கவாசகப் பெருந்தகை சிவபுராணத்தில் போற்றுகின்றார்.

பன்னிரு திருமுறைகளில் எம்பெருமானை ஜோதிவடிவாகக் கண்டு தொழும் திருப்பாடல்கள் ஏராளம்.

அவற்றுள்  ஒன்றாக - திருநாவுக்கரசர் அருளிய இனிய பாடல்!..

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே!..(4/11)

பொய் எனும் இருள் அகல
இல்லத்திலும் உள்ளத்திலும்
விளக்கேற்றுவோம்!..

அனைவருக்கும் 
தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
* * *

20 கருத்துகள்:

  1. பல முக்கியமான அவசிய குறிப்புகள் ஐயா... நன்றி...

    கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் - மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. தீப திரு நாள் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் - மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் ஐயா!

    அற்புதமான மிக அவசியமாக அறிந்திருக்க வேண்டிய பல விடயங்களை
    இன்று உங்களின் இப்பதிவினால் கிடைக்கப் பெற்றோம்!

    மிக்க மகிழ்ச்சி ஐயா! அருமையான பதிவும் பகிர்வும்!

    மிக்க நன்றி ஐயா!

    உங்களுக்கும் தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களுடைய வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  4. கார்த்திகையை முன்னிட்டு வந்துள்ள மிக முக்கியமான செய்திகளைக் கொண்ட பதிவு. புதியன பல தெரிந்துகொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுடைய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு
  5. இந்த கார்த்திகைத் தீபம் மக்களின் மன இருளைப் போக்கட்டும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களுடைய வருகை கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் இனிய வாழ்த்துரைக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  6. வணக்கம் ஐயா
    திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள். புராணங்கள் இயம்புகின்ற ஒளியின் வடிவே இறைவன் எனும் கருத்துகள் பொதிந்த பாடல்களை மேற்கோள் காட்டி நிறைய செய்திகளைச் சொல்லியிருக்கும் இப்பதிவு அவசியம் படிக்க வேண்டியதொன்று. பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் பாண்டியன்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சியும் இனிய கருத்துரைக்கு மனமார்ந்த நன்றியும்!.. வாழ்க நலம்!..

      நீக்கு
  7. இலக்கிய மேற்கோள்களுடன் திருவண்ணாமலை தீபம் மற்றும் தீபத் திருநாள் பற்றிய அதிக தகவல்களைத் தந்தமைக்கு நன்றி.
    கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுடைய வருகை கண்டு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  8. விளக்கேற்றுவத்தின் முக்கியத்துவம், மற்றும் கார்த்திகையின் முக்கியஹ்த்துவம் மிக மிக விரிவாக அருமையாக சொல்லி விட்டர்கள்.
    நன்றி பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுடைய வருகை கண்டு மகிழ்ச்சியும்.. இனிய கருத்துரைக்கு மிக்க நன்றியும்.. வாழ்க நலம்!..

      நீக்கு
  9. அருமையான குறிப்புகள்.....

    தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தீபத்திருநாள் பதிவு..அர்தநாதீஸ்வர கோலம் அருமையான அலங்காரம். இப்போது எல்லாம் 5 வகை எண்ணெய் விற்பனையில் அதிகம் இருக்கிறது. 3 எண்ணெய் குறித்து சொல்லியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி..
      விளக்கு ஏற்றுவதில் மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும் என்பதில் ஆவல் உண்டு.. விரைவில் மேலும் தகவல்களைப் பதிவிடுவேன்.

      தங்கள் கருத்துரைக்கு நன்றி.. வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..