நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 20, 2014

மார்கழிக் கோலம் 05

குறளமுதம்

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் 
மனக்கவலை மாற்றல் அரிது. (007)

தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப் பெருந்தலைவனின்
தாள் மலர்களைச் சரண் என்று அடைந்தவர்க்கு அல்லாமல்
மற்றவர்க்கு தொல்வினை தீர்வது எளிதல்லவே!..
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி 
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை - 05 


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம் 
 * * *

ஆலய தரிசனம்
ஸ்ரீவைகுண்டம்


மூலவர் - ஸ்ரீவைகுந்தநாதன்
தாயார் - ஸ்ரீவைகுந்தவல்லி
உற்சவர் - ஸ்ரீகள்ளர்பிரான்
ஸ்ரீதேவி, பூதேவி
மூலஸ்தானம் - சந்திர விமானம்
தீர்த்தம் - தாமிரபரணி, கலச தீர்த்தம்
தலவிருட்சம் - பவளமல்லி

மங்களாசாசனம் - நம்மாழ்வார்.

புளிங்குடிக் கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள்நின்று
தெளிந்தஎன் சிந்தையகங் கழியாதே என்னைஆள்வாய் எனக்கருளி
நளிர்ந்தசீருலக மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்குநீர் முகிலின்பவளம் போல்கனிவாய் சிவப்ப நீகாணவாராயே!..
(3795)
நம்மாழ்வார் திருவாய்மொழி(9/2/4)

ஒன்பது நிலைகளைக் கொண்ட நெடிதுயர்ந்த ராஜகோபுரம். 


திருமூலஸ்தானமாகிய சந்திர விமானத்தின் கீழ் ஆதிசேஷன் குடை பிடிக்க மார்பில் ஸ்ரீமஹாலக்ஷ்மி திகழ - நான்கு திருக்கரங்களுடன் கிழக்கு முகமாக நின்ற திருக்கோலம். 

வாழ்வதற்கு வேறு வழியின்றி களவு செய்தவன் காலதூஷகன்.  இவன் தன் பிழைக்கு வருந்தியவனாக - அற்றார்க்கும் அலந்தார்க்கும் - தான் திருடிய பொருள்களைப் பகிர்ந்து அளித்ததோடு இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் பெருமானுக்கும் ஒரு பங்கு அளித்தான். 

களவு கை கொடுத்தது. யாரிடமும் பிடிபடாத தைரியத்தில் ஒருநாள் தன் கூட்டத்தாருடன் அரண்மனைக்குள் நுழைந்தான். 

அங்கே விரிக்கப்பட்டிருந்த வலையில் உடன் சென்றோர் சிக்கிக் கொள்ள இவன் மட்டும் தப்பிப் பிழைத்தான். சிக்கிக் கொண்ட கள்வர்களை நல்லபடியாகக் கவனித்தனர் - காவலர்கள். அதன் விளைவு!.. 

காலதூஷகனின் இருப்பிடம் தேடி விரைந்தனர் - வீரர்கள். பீதியடைந்த காலதூஷகன் பெருமாளை வணங்கி விட்டு சரணடைய முனைந்தான். 

அவனிடமிருந்து தானும் ஒரு பங்கினைப் பெற்றதால் - ஸ்ரீவைகுந்தநாதன் - தானே காலதூஷகன் போல உருமாறி அரண்மனைக்குச் சென்றான். அரசன் குடிமக்களைப் பரிபாலிக்கத் தவறிய பிழைதனை எடுத்துரைத்தான். 

அரசவையில் தைரியமாக வாதாடிய கள்வனின் பேரெழிலில் மனம் தடுமாறினான் அரசன்.   

அரசனின் மயக்கத்தைப் போக்கி தன்னுரு காட்டியருளினான் - தயாபரன்.

அரசனும் கள்வனும் மற்றோரும் பெருமாளைப் பணிந்தனர். 

பெருமாள் தனக்காக - வாதாடிய வாஞ்சையைக் கண்டு மனம் திருந்திய கள்வன் - அரச தண்டனையை ஏற்க முனைந்தான்.

அரசன் அவனை மன்னித்து விடுவித்தான். 

இருவரும் மீண்டும் நேரிய வழியில் நடந்து நற்கதியடைந்தனர்.

கள்வனுக்காக வந்ததனால் பெருமாளுக்கு - கள்ளர்பிரான் எனத் திருப்பெயர்.


கலையழகு மிக்க எழிலார் சிற்பங்கள் நிறைந்து விளங்கும் திருக்கோயில்.

தென்பாண்டிச்சீமையின் நவதிருப்பதிகளுள் - முதலாவதான திருத்தலம்.

சூரிய ஸ்தலமாக போற்றப்படுகின்றது. ஐப்பசி மாத பௌர்ணமியன்று காலையில் சூரியனின் கதிர்கள் ஸ்வாமியின் பாதங்களில் படிகின்றன.
* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 04

திருக்குற்றாலநாதர் திருக்கோயில்
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்னக்கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்னிக் கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கொரு மருந்தைவேத விழுப்பொருளை
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்!..

திருக்கோயில்
திருக்குற்றாலம்


இறைவன் - குற்றாலநாதர், குறும்பலா ஈசன்
அம்பிகை - சிவகாமசுந்தரி, குழல்வாய்மொழியம்மை
தீர்த்தம் - பேரருவி - உடன் இணைந்த மற்ற அருவிகள்
தலவிருட்சம் - குற்றாலமரம், குறும்பலா

தலப்பெருமை


அம்பிகையின் சக்தி பீடங்களுள் ஒன்று. 
பராசக்தி பீடம் - தரணி பீடம் என போற்றப்படுகின்றது.

தலவிருட்சமாகிய குற்றாலின் பெயரால் விளங்கும் திருத்தலம்.

தொன்மையான மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஊடாகத் திகழும் புண்ணியத் தலம்.   

ஐயன் நடமிடும் அம்பலங்கள் ஐந்தனுள் - சித்ர சபை.

சித்ர சபையினுள் - மூலிகைகளைக் குழைத்த இயற்கை வண்ணங்கள் பொருந்திய -  தஞ்சாவூர் பாணியிலான தங்க மயமான ஓவியங்கள்.. 

சித்ர சபை முழுதும் புராண நிகழ்வுகளைக் கூறும் அழகிய சித்திரங்கள்..

மார்கழித் திருவாதிரை நாளில் - சித்ர சபையில் தான் நடராஜருக்கு அபிஷேகம் நிகழ்கின்றது.

இங்கே, ஈசன் - ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்துவதாக ஐதீகம். 

அகத்திய முனிவருக்குத் திருமணக் காட்சி நல்கிய திருத்தலம்.

ஞானசம்பந்தப் பெருமான் திருப்பதிகம் பாடியருளிய திருத்தலம்.
அப்பர் சுவாமிகளும் திருஅங்கமாலையில் குற்றால நாதனைக் கூறுகின்றார்.

குற்றாலத்து எம் கூத்தா போற்றி!.. - என்றும்

குற்றாலத்து அமர்ந்துறையும் கூத்தா உன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போல கசிந்துருக வேண்டுவனே!.. 

- என்றும் துதிக்கின்றார் மாணிக்கவாசகர்.

திருக்கோயிலினுள் குறும் பலா மரம் திகழ்கின்றது.

இந்தப் பலாவின் விதைகள் - மற்றவை போலல்லாமல் சிவலிங்கம் போல விளங்குவதால் -  

ஞானசம்பந்தப் பெருமான் - குறும்பலா மரத்தினை சிவபெருமானாக பாவித்துத் திருப்பதிகம் அருளியுள்ளார்.


ஐம்புலன்களுக்கும் அமுத விருந்தாக கோலமிகு திருக்காட்சிகளுடன் கூடிய திருத்தலம்.

திருக்குற்றால மலையில் இயற்கைக் காட்சிகளுக்குப் பஞ்சமேயில்லை..

குற்றாலக் குறவஞ்சி காட்டும் அழகு - இதோ!..

வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும் 
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
கமன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்
தேனருவி திரையெழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்காலும் வழுகும்
கூனல் இளம் பிறைமுடித்த வேணிஅலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே!..

என்று கண் நிறைந்த அழகைப் பாடி வைத்தார் திரிகூட ராசப்ப கவிராயர்.

அரிய வகை மூலிகைகளுடன் திகழ்வது குற்றாலமலை. 

எத்தனை ஆயிரம் மூலிகைச் செடிகள் இங்கே உள்ளன என்பது அந்த ஈசனுக்கே வெளிச்சம். 


குற்றால அருவியே பிரதான அருவி. குற்றால மலையின் மேலிருந்து அருவி வழியும் போது - பாறைகளில் செதுக்கப்பட்ட சிவலிங்கத் திருமேனிகளை அபிஷேகித்தபடி விழுகின்றது. 

ஆகவே அருவி நீராடல் என்பது சிவ லிங்கத்தை அபிஷேகித்த நீரில் நீராடுவது என்பதாகவே அமைகின்றது.
   
குற்றாலஅருவி பொங்குமா கடல் எனும் பெருஞ்சுனையில் இருந்து பிரவாகம் ஆகின்றது. 

குற்றால மலை சித்தர் பெருமக்கள் பலர் வதியும் திருமலை. மிக ரகசியமான நீர்வழிகளை உள்ளடக்கியதாகத் திகழ்கின்றது குற்றால அருவி.

திருக்குற்றால மலையின் பெருமைகள் - கூறி முடியாதவை.

சபரிமலைக்குச் செல்லும் போது - அருவியில் குளித்து - குற்றால நாதரைத் தரிசனம் செய்து விட்டு - செங்கோட்டை வழியாக மலையாள தேசத்திற்குள் எங்கள் பயணம் தொடரும்!..

தற்போது, சில வருடங்களாக குமுளி வழியாக - சபரிமலைக்குச் செல்ல வேண்டியதாகின்றது. 


மூர்த்தி தலம் தீர்த்தம் என - பெருமையுடையது திருக்குற்றாலம்.

குற்றாலத்தைப் புகழ்ந்து ஞானசம்பந்தப் பெருமான் அருளிய பதிகங்களில்  இயற்கை அழகு ததும்பி வழிவதைக் காணலாம்.

நீலநெய்தல் தண்சுனை சூழ்ந்த நீள்சோலைக்
கோலமஞ்ஞை பேடையொடாடுங் குற்றாலங்
காலன்தன்னைக் காலால் காய்ந்த கடவுள்எம்
சூலபாணி நன்னகர் போலும் தொழுவீர்காள்!.. (1/99)

திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவிபாகம்
பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்த செல்வர்
இருந்த இடம் வினவில் ஏலங்கமழ் சோலையின் வண்டு யாழ்செய்
குருந்த மணம்நாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலாவே!.. (2/71)
திருஞானசம்பந்தர்.

திருச்சிற்றம்பலம் 
 * * *

14 கருத்துகள்:

 1. கள்ளர்பிரான் பொருளும்
  வரலாறும் அறிந்தேன்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. பெயர் விளக்கம் உட்பட அனைத்தும் அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. கள்ளர்பிரான் பற்றி அறியத் தந்தீர்கள் ஐயா...
  படங்கள் எப்பவும் போல் அழகு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. அருமையான படங்கள்..

  கள்ளர் பிரான் பற்றி அறிந்து கொண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. கள்ளர் பிரான் செய்திகள் தெரிய வைத்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அழகிய படங்கள் நல்ல விளக்கவுரை நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   கடுமையான பணிகளுக்கு இடையேயும் - தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

   நீக்கு
 8. குற்றாலம் கோவில் , அருவி, கவிராயர் பாடல், கள்ளபிரான் பற்றிய செய்திகள் அனைத்தும் அருமை.
  படங்கள் எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..