நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 16, 2014

மார்கழிக் கோலம் 01

மங்கலகரமான மார்கழியின் முதல் நாள் இன்று.

மாதங்களில் நான் மார்கழி!.. -  என்பது ஸ்ரீஹரிபரந்தாமனின் திருவாக்கு!..

வானவர்களுக்கான விடியல்.. பிரம்ம முகூர்த்த வேளை!..

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு..

அகரம் எனும் எழுத்தை முதலாகக் கொண்டிருக்கும் மொழி - உலகின் முதற் பொருளான பரமனைப் பாடுதற்கே அடிப்படையானது.


சைவமும் வைணவமும் தழைக்கும் புண்ய மாதம் - மார்கழி!..

இங்கே திருப்பாவை எனில் அங்கே திருவெம்பாவை!..

யாதொரு பேதமும் இல்லை.. அன்பின் வழியில் அனைத்தும் ஒன்றே!..

தெருவெங்கும் எங்கெங்கும் எழில் மிகும் கோலங்கள்!.. 
வண்ண வண்ணப் பூக்கள்!. . சுடர் விடும் அகல் விளக்குகள்!..

ஆலயங்கள் தோறும் திருப்பள்ளி எழுச்சி!.. தனுர் மாத வழிபாடுகள்!..

தேனாகத் திசையெங்கிலும் - திருப்பதிகங்களும் திருப்பாசுரங்களும்!.. 

தேவாரமும் திருவாசகமும் திருப்பாவையும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரது நாவிலும் தித்திக்கின்றன.

திருக்கோயில்கள் தோறும் உஷத் காலத்தில் பூஜைகளும் கோலாகலங்களும் எந்தவித பாகுபாடும் இன்றி நிகழ்கின்றன...

ஏழைப் பிள்ளையார் கோயில் என்றாலும் அங்கேயும் - மலர்ந்த முகத்துடன்  பிரசாதங்களைக் கொடுப்பதும் கொள்வதும் - எவ்வளவு சந்தோஷம்!..

கையளவு பொங்கல் தான்!.. சுண்டல் தான்!..

ஆயினும் - அங்கே தருவதும் பெறுவதும் பொங்கலோ சுண்டலோ அல்ல!..

அன்பும் நேசமும்!..


மங்கலம் சிறக்க வேண்டும்!.. மனையறம் செழிக்க வேண்டும்!..
மதிநலம் விளைய வேண்டும்!... மண் பயனுற வேண்டும்!.. 

இவை யாவும் எங்கிருந்து விளையும் ?.. 

நல்ல மனங்களின் உள்ளிருந்து தோன்றும் ஒளியால்!.. 

அப்படி ஒரு ஒளி - அதுவும் பேரொளி - 

ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் - 

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருத்துழாய் வனத்தில் உதித்த ஸ்ரீகோதை நாச்சியார் தம் திருஉள்ளத்தில் தோன்றியது!..  

அதன் பெயர் தான் -  திருப்பாவை!..

திருப்பாவை என்பது ஒரு நூல் அல்ல!.. 

நம்மை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் வாழ்வியல் நெறி.

மங்கலகரமான மார்கழி முழுதும் நம்மை வழிப்படுத்துகின்றாள்  - 
சூடிக் கொடுத்த சுடர்க் கொடி!..

நம்மை அவள் அழைக்கின்றாள் - மார்கழி நீராடலுக்கு!.. 
வாருங்கள் - அவள் துணையுடனே செல்வோம்!..

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் 
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் 
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் 
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் 
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் 
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்குப் பறை தருவான் 
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்!..

ஆலய தரிசனம்
ஸ்ரீ வில்லிபுத்தூர். 


பெருமாள் - ஸ்ரீ வடபத்ரசாயி எனவும் ரங்கமன்னார் எனவும் புகழப்படுகின்றார். 

ஸ்ரீ ரங்கமன்னார் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியுடன் கருடனும் திருக்கோலம் கொண்டு விளங்குகின்றனர். தீர்த்தம் - திருமுக்குளம். விமலாக்ருதி விமானம். 

மூலஸ்தானத்தில் வடவிருட்க்ஷத்தின் கீழ், பாம்பணையில் ஸ்ரீதேவி நாச்சியார் பூதேவி நாச்சியாருடன் - சயனத் திருக் கோலத்தில் வடபத்ர சாயி  திருக்காட்சி அருள்கின்றார். 

பெருமாளைச் சுற்றி மூன்று புறமும் - 

கருடன், சேனை முதலி, சூரியன், சந்திரன், தும்புரு, நாரதர்,  வில், வாள், கதை, சக்கரம், சங்கு,  நான்முகன்,  பிரம்மா,  சனகர், சனத்குமாரர், கந்தர்வர்,  பிருகு , மார்க்கண்டேய மகரிஷி, மதுகைடபர் - என விளங்குகின்றனர். 

இத்திருக்கோயிலில் விளங்கும் ஸ்ரீசக்ரத்தாழ்வார் வரப்ரசாதி. 

ஸ்ரீ ஆண்டாள் தோன்றியருளிய திருத்துழாய் வனம் இன்றும் விளங்குகின்றது. 

திருக்கோயிலில் - சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் - தான் அழகு பார்த்த கண்ணாடிக் கிணறு உள்ளது. 

அந்தக் கிணற்றைத் திருமணமாகாத பெண்கள்  சுற்றிவந்து வேண்டிக் கொள்ள - மங்கல மாலை நிச்சயம்.

அவள் அன்பினில் தோய்ந்த நமது தளத்தில் - 
மூன்றாவது ஆண்டாக இன்று முதல் திருப்பாவைப் பதிவுகள்..

மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன் - என்னையும் அவள் ஆண்டு கொண்டாள்..
என்னை மட்டுமல்ல - என் மனைவி மக்களையும்!..

அவள் எங்கள் மீது கொண்ட வாஞ்சைக்கு என்ன காரணமாக இருக்கும்?..

என் முன்னோர்கள் செய்த தவம்!.. - அதுவன்றி வேறல்ல!..


சைவத்தில் கோயில் என்றால் - தில்லைத் திருச்சிற்றம்பலம்!..
ஐயன் அம்பிகையுடன் ஆனந்தத் திருநடனம் நிகழ்த்தும் திருத்தலம்..

ஐயன் நடமிடும் அம்பலங்கள் ஐந்தனுள் - பொன் அம்பலம்.

மார்கழித் திருஆதிரையை முன்னிட்டு இன்னும் சில தினங்களில் தில்லை திருச்சிற்றம்பலத்தில் திருவிழாவிற்கான கொடியேற்றம் நிகழ இருக்கின்றது.

தேவாரமும் திருவாசகமும் சிவனடியார்களுக்கு இரு கண்கள். 

சிவகாமசுந்தரி உடனாகிய ஸ்ரீ நடராஜப் பெருமானை வணங்குகின்றேன்.

இன்று முதல் - திருப்பாவையுடன் திருவாசகமும் தேவாரமும் தொடரும்.

பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரமன்
மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 
திருப்பள்ளி எழுச்சி

போற்றி என் வாழ்முதலாகிய பொருளே
   புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு 
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும் 
   எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் 
   திருப்பெருந்துறை உறை சிவபெருமானே 
ஏற்றுயர் கொடியுடையாய் எனையுடையாய் 
   எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே!..1 

அருணண் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் 
   அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின் 
கருணையின் சூரியன் எழஎழ நயனக் 
   கடிமலர் மலர மற்றண்ணலங் கண்ணாம் 
திரள்நிரை அறுபதம் முரல்வன இவை ஓர் 
   திருப்பெருந்துறையுறை சிவபெருமானே 
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே 
   அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே!..2 

கூவின பூங்குயில் கூவின கோழி 
   குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் 
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து 
   ஓருப்படுகின்றது விருப்பொடு நமக்குத் 
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் 
   திருப்பெருந்துறையுறை சிவபெருமானே 
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய் 
   எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே!..3 

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் 
   இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் 
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் 
   தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் 
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் 
   திருப்பெருந்துறையுறை சிவபெருமானே 
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் 
   எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே!..4 

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் 
   போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர் 
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் 
   கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச் 
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா 
   சிந்தனைக்கும் அரியாய் எங்கண் முன்வந்து 
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் 
   எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே!..5 

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார் 
   பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும் 
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின் 
   வணங்குகின்றார் அணங்கின் மணவாளா 
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ் 
   திருப்பெருந் துறையுறை சிவபெருமானே 
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் 
   எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே!..6 

அது பழச்சுவையென அமுதென அறிதற்கு 
   அரிதென எளிதென அமரும் அறியார் 
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
   எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும் 
மதுவளர் பொழில் திருஉத்தர கோச 
   மங்கையுள்ளாய் திருப்பெருந்துறை மன்னா 
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம் 
   எம்பெருமான் பள்ளி யெழுந்தருளாயே!..7 

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் 
   மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார் 
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் 
   பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே 
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித் 
   திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி 
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய் 
   ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே!..8 

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா 
   விழுப்பொருளே உனதொழுப் படியோங்கள் 
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே 
   வண் திருப்பெருந்துறையாய் வழியடியோம் 
கண்ணகத்தே நின்று களிதரு தேனே 
   கடலமுதே கரும்பே விரும்படியார் 
எண்ணகத்தாய் உலகுக்கு உயிரானாய் 
   எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே!..9 

புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம் 
   போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி 
சிவன் உய்யக் கொள்கின்றவாறு என்று நோக்கித் 
   திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம் 
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் 
   படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் 
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் 
   ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே!..10

திருச்சிற்றம்பலம்.
* * *

16 கருத்துகள்:

 1. எங்கும் மங்கலம் வேண்டி, இறைவனிடம் வேண்டும் தங்களுக்கு எல்லா நலனும் அவன் தரவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரர் அவர்களுக்கு..
   தங்கள் அன்பில் தோய்ந்த நலம் மிகும் எண்ணம் கண்டு மகிழ்ச்சி..

   தங்கள் இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 2. வணக்கம் ஐயா!

  மார்கழியின் மாண்பு மனத்திற் பதிந்திட
  பேரெழிற் பாவையீந்த பேறு!

  அனைவருக்கும் நலன் பெருக நானும் வேண்டுகிறேன்!
  அருமையான பதிவு! பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 3. அருமையான பதிவு ஐயா! அழகிய படங்களுடன், மார்கழி மாதத்தின் அருமையை பாடல்களுடன் தொகுத்து அளித்தமைக்கு..மிக்க நன்றி. பக்திமணம்! மார்கழிக் கோலங்கள் காணவில்லையே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   மார்கழிப் பதிவுகளுக்கு வருக.. வருக..

   மா கோலம் வேண்டுமா!.. பா கோலம் வேண்டுமா!..
   அம்மையப்பனின் திருக்கோலம் தான் - அருட்கோலம்!..

   தங்கள் கருத்துரைக்கு நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 4. மங்கலகரமான அருமையான பகிர்வுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் இனிய வரவு கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 5. அருமையான மார்கழி கோலங்கள் பதிவு. படங்கள் எல்லாம் அருமை.பாடலகள பாடி மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   இனிய கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. அருமையான மார்கழிக் கோலங்கள் பதிவு
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. அன்பின் குமார்..
   வருக.. வருக..
   தங்கள் இனிய வருகைக்கு நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..