நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 26, 2014

மார்கழிக் கோலம் 11

குறளமுதம்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 
ஆகுல நீர பிற. (034)

ஒருவன் தன் மனதில் மாசற்றவனாக ஆவதுவே அறம்.
அறம் நிறைந்த அவன் அறவோன் ஆகின்றான்!..
அஃதன்றி மற்றவை வெறும் ஆரவாரங்களே!
* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 11கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம்புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம் 
* * *

ஆலய தரிசனம்
திருநறையூர் - நாச்சியார்கோயில்மூலவர் - திருநறையூர் நம்பி
உற்சவர் - இடர்கடுத்த திருவாளன்
தாயார் - வஞ்சுளவல்லி
விமானம் - ஸ்ரீநிவாஸ விமானம்
தலவிருட்சம் - மகிழம் (வகுளாரண்யம்)
தீர்த்தம் - மணிமுத்தா தீர்த்தம்

மங்களாசாசனம் - திருமங்கை ஆழ்வார்.

வழக்கம் போல மாலவனைப் பிரிந்த மஹாலக்ஷ்மி மகரிஷி மேதாவியின் குடிலில் வஞ்சுளவல்லி என வளர்ந்தாள். அவளைத் தேடி ஐந்து ரூபங்களில் பெருமாள் அலைந்தார். 

எங்கும் அவளைக் காணாத நிலையில் - கடைசியாக கருடன் - வஞ்சுள வல்லியை வளர்த்த மகரிஷியை மடக்கிப் பிடித்து - 

நீர் தாயாரை எங்கே ஒளித்து வைத்திருக்கின்றீர்!.. பெருமான் அவளைத் தேடிக் கொண்டிருக்கின்றார்.!.. என வினவினான். 

விளையாடியது போதும் என்று - தாங்கள் என் மகள் வஞ்சுளவல்லியை திருமணம் செய்து கொள்ள விரும்பினால் எப்போதும் நீங்கள் அவள் சொல் கேட்டுத்தான் நடக்க வேண்டும். அவளே அனைத்திலும் பிரதானமானவளாக இருக்க வேண்டும்!..  - நிபந்தனை விதித்தார் மகரிஷி.  

பெருமாளும் - அதற்கென்ன!.. இதோ இப்போதே பொக்கிஷ அறையின் சாவிகளை அவளிடம் ஒப்புவித்தேன்!.. - என்றூ சொல்லி சாவிக் கொத்தினை எடுத்துக் கொடுத்து விட்டார். 

மேதாவி மகரிஷிக்கு மிக மிக சந்தோஷம். இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைப்பானோ!.. - என்று. 

பிறகென்ன.. அடுத்த முகூர்த்தத்திலேயே வஞ்சுளவல்லியின் திருக்கரத்தினை வாஞ்சையுடன் பிடித்தான் - வாசுதேவக் கள்வன்!.. 

இத்திருத்தலத்தில் தாயாரை முன் நிறுத்தியே கருவறையும் விளங்குகின்றது. 

பெருமாளை விட சற்று முன்பாக வஞ்சுளவல்லி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். 

நின்ற திருக்கோலத்தில் லக்ஷ்மி தரிசனம் விசேஷமானது என்கின்றார்கள்.

வீதியுலாவின் போதும் வஞ்சுளவல்லி முன்னே செல்கின்றாள். பின்னால் பெருமாள் எழுந்தருள்கின்றார்.

மாமனார் வீட்டில் மருமகனின் பாடு இப்படியாக இருக்கின்றது. 

திருநறையூர் என்பது திவ்யதேசத்தின் திருப்பெயர். நறை எனில் தேன் என்பது அர்த்தம். தேன் ததும்பும் மலர்கள் நிறைந்த மகிழ வனம் எனக் கொள்ளலாம்.     

ஆனால் - மஹாலக்ஷ்மியின் மீது கொண்ட வாஞ்சையினால் - மாமனார் சொன்னதற்குத் தலையாட்டி மாதவன் உடன்பட்டதனால் - க்ஷேத்திரம் - 

நாச்சியார் கோயில் என மஹாலக்ஷ்மியின் பெயராலேயே அமைந்து விட்டது.

நாச்சியாராகிய வஞ்சுளவல்லியின் உற்சவத் திருமேனி பேரழகு!..

திருக்கரத்தினில் கிளையினை ஏந்தியவளாக -
இடுப்பில் சாவிக் கொத்தினை அணிந்தபடி அருள்பாலிக்கின்றனள்.

மனைவி சொல்லே மந்திரம் என்பது நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

ஒரு வீட்டில் அனைத்தையும் பெண்தான் நிர்வாகம் செய்கின்றாள் என்பதை நிலைநாட்டுகின்றது - இத்தலத்தின் ஐதீகம்.


திருமங்கை ஆழ்வாருக்கு எம்பெருமானே ஆச்சாரியனாக எழுந்தருளிய திருத்தலம். 

ஆழ்வாரால், நூறு பாசுரங்கள் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட தலம். 

இத்தலத்தில், ஆண்டுதோறும் மார்கழியில் பிரம்மோற்சவம் எனும் முக்கோடி தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெறும்

24/12 அன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது

மாலை சூரியபிரபையில் பெருமாள் தாயார் வீதியுலா எழுந்தருளினர்விழா நாட்களில், காலை பல்லக்கிலும், மாலை பல்வேறு வாகனங்களிலும் பெருமாள் தாயார் வீதியுலா எழுந்தருளி சேவை சாதிக்கின்றனர். 

எதிர்வரும் 28/12 அன்று  பிரசித்தி பெற்ற கல் கருட சேவை நடக்கிறது

மூலவராகவும், உற்சவராகவும் அருள்பாலிக்கும் கல்கருடபகவான் 4,8,16, 32, 64 - என ஆட்கள் சுமக்க  வாகன மண்டபம் எழுந்தருள்கின்றார். 

அன்று இரவு பெருமாள் வஞ்சுளவல்லியுடன் -  கல் கருடன் வாகனத்தில் வீதியுலா எழுந்தருள்கின்றார்.

மறுநாள் மாலை, ஆறு மணியளவில் பெருமாள் தாயார் தெப்பம் உற்சவம் கண்டருள்கின்றனர்.

கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோயிலுக்கு சிறப்பான பேருந்து வசதிகள் உள்ளன. 

நாச்சியார் கோயில் பித்தளை விளக்குகள் பிரசித்தமானவை. 

விடையேழ் வென்றுமென் தேளாய்ச்சிக்கு அன்பனாய்
நடையால் நின்றமருதம் சாய்த்த நாதனூர்
பெடையோடு அன்னம் பெய்வளையார் தம்பின்சென்று
நடையோடு இயலிநாணி ஒளிக்கும் நறையூரே!..(1492)
திருமங்கை ஆழ்வார்.
* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 10பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒருதோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன்கோயில்பிணாப் பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏதவரைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்!..
* * *

திருக்கோயில்
திருஇரும்பூளை - ஆலங்குடிஇறைவன் -  ஆபத்சகாயேஸ்வரர் 
அம்பிகை - ஏலவார்குழலி
தீர்த்தம் - பிரம்மதீர்த்தம்
தலவிருட்சம் - பூளைச்செடி

தலப்பெருமை

கலங்காமல் காத்த விநாயகர் - கருணையே வடிவாக ராஜகோபுரத்தின் கீழ் அருள்கின்றார்..

எம்பெருமான் - ஆலகால விஷத்தினைத் தாமே அருந்தி தேவர்களைக் காத்தருளிய தலம் என்பதால் ஆலங்குடி என்கின்றனர்.

விஸ்வாமித்ர மகரிசி வணங்கி வழிபட்டதாக ஐதீகம்.

எல்லாம் வல்ல எம்பெருமான் சனகாதி முனிவர்களுக்குக் குருவாக அமர்ந்த திருத்தலம்.

திருஞானசம்பந்தப் பெருமான் பாடிப் பரவிய திருத்தலம். 

இத்திருத்தலத்தில் - தக்ஷிணாமூர்த்தி சந்நிதி விசேஷமானது.

கிழக்கு முகமான திருக்கோயில். ஆனால் கிழக்கு ராஜகோபுரம் வழியாக யாரும் நுழைவதில்லை.

தெற்கு ராஜகோபுரமே பிரதானம்.

தெற்கு கோபுரத்தடியில் தான் கலங்காமல் காத்த விநாயகர் கிழக்கு முகமாக அருளுகின்றார். 

கலங்காமல் காப்பதாக விநாயகப் பெருமான் - கை - நம்பிக்கை கொடுத்த பின்னும்,

சனகாதி முனிவர்களுக்குக் குருவாக விளங்கும் சிவப்பரம் பொருளை - 

நவக்கிரக மண்டலத்தில் இருக்கும் தேவகுரு பிரகஸ்பதியாகக் கொண்டு அவருக்கு ஊற வைத்த கொண்டைக் கடலை மாலையையும் மஞ்சள் வஸ்திரத்தையும் சூட்டி தேவகுரு பிரகஸ்பதிக்கு உரிய காயத்ரி மந்த்ரத்தைச் சொல்லி வழிபடுகின்றனர். 

21 நெய்விளக்கு என்று ஆரம்பித்து அதற்கு மேலும் சடங்கு சம்பிரதாயங்களை நுழைத்து திருக்கோயிலின் அமைதியைக் கெடுத்து விட்டார்கள்.

ஏதேதோ புனைவுகளைச் சொல்லி எப்படியெல்லாமோ செயல்படுகின்றனர்.


சிவாலயங்களில் தக்ஷிணாமூர்த்தியின் சந்நிதியிலும் சண்டிகேஸ்வரரின் சந்நிதியிலும் நிச்சயம் அமைதி காக்கப்படவேண்டும்!.. 

-  என்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர்.

நல்லவேளை சண்டிகேஸ்வரர் தப்பித்துக் கொண்டார்.

தக்ஷிணாமூர்த்தியின் சந்நிதியின் குறுக்காக இரும்புத் தடுப்புகளை வைத்து அடைத்து அங்கேயும் சிறப்பு தரிசனம் என்று வசூல் வேட்டை நடக்கின்றது.

சனகாதி முனிவர்களுடன் மோனத் தவத்திலிருக்கும் தக்ஷிணாமூர்த்தியின் நிலையைக் குலைத்ததற்காகத் தான் மன்மதன் எரிந்து சாம்பலாகிப் போனான்!

சிவரூபங்களின் தத்துவங்களை அறியாதவர்களாக - வியாழன் எனப்படும் தேவகுரு பிரகஸ்பதிக்கு செய்ய வேண்டிய பரிகாரத் தலம் என்று சொல்கின்றனர்.

முற்பிறவியில் செய்த பாவங்களுக்கு பரிகாரம் என்பதே கிடையாது. அவற்றை அனுபவித்துக் கழிக்க வேண்டும் என்பதே விதி!..

சிவாலயங்களில் தரிசனம் செய்வோர்களில் பெரும்பான்மையானவர்கள் -
வியாழன் வேறு!.. வேதமுதல்வன் வேறு - என்பதை அறிந்தார்களில்லை!..

அகிலாண்ட நாயகி - இத்திருத்தலத்தில் ஐயன் ஆபத்சகாயேஸ்வரருடன் ஏலவார் குழலியாக எழுந்து எல்லா உயிர்களுக்கும் இன்னருள் புரிகின்றாள்.

தெற்கு நோக்கிய சந்நிதி.

திருச்சுற்றின் மேல்புற கோஷ்டத்தில் லிங்கோத்பவர்.
எதிரில் வள்ளி தேவயானையுடன் ஸ்ரீசிவசுப்ரமண்யஸ்வாமி.

அருகில் அன்னை மஹாலக்ஷ்மி!..

தென்புறமாக சப்த லிங்கங்களுடன் காசி விஸ்வநாதர் அன்னை விசாலாட்சி!..

அகத்திய மாமுனிவரின் திருமேனியும் விளங்குகின்றது.

வடக்குப் புறத்தில் நான்முகன், ஸ்ரீதுர்கை, சண்டேஸ்வரர், கல்யாணசாஸ்தா, சப்த கன்னியர் மற்றும் நவக்கிரகங்கள் திகழ்கின்றனர்.

ஞானகூபம் எனும் தீர்த்தக் கிணறும் அங்கே விளங்குகின்றது.

நடன சபையில் ஆடல்வல்லானோடு அன்னை சிவகாம சுந்தரி!..

ஈசான்ய மூலையில் காலபைரவர். சனைச்சரன், சூரியன் - திகழ்கின்றனர்.

காவிரியின் தென்கரையில் விளங்கும் பஞ்ச ஆரண்யத் திருத்தலங்களுள் நான்காவது திருத்தலம்.

ஆலங்குடி - பூளைச்செடிகள் நிறைந்த வனம்.
மாலையில் வணங்க வேண்டிய திருத்தலம்.

வியாழக்கிழமைகளில் திருக்கோயிலில் தரிசனம் செய்வது மிக சிரமம்.

அருள் விளங்கும் சந்நிதிகள்..
அன்பு கொண்டு வழிபடுவோர்க்கு ஆறுதலும் தேறுதலும் அருள்கின்றார் - ஏலவார்குழலியொடு அருளும் ஆபத்சகாயேஸ்வரர்!.திருஞானசம்பந்தப் பெருமான் தமது திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களிலும் ஈசன் அம்பிகையுடன் சேர்ந்து அருள் பொழியும் அன்பினைப் பாடிப் பரவுகின்றார்.

அன்பின் நண்பர்களுக்கு அடியேனின் வேண்டுகோள்!..

ஐயன் எம்பெருமான் - தக்ஷிணாமூர்த்தி - ஆலின் கீழ் அமர்ந்து அன்று அறம் உரைத்த சிவப்பரம்பொருள்!..

சனகாதி முனிவர்களுக்கு குருமுகமாக அமர்ந்த பெருமான்!..

ஈசனை - ஞான குருவாகக் கொள்வதே சிறப்பு.

ஞான குருவாகி விளங்கும் தக்ஷிணாமூர்த்தியை -

நவக்கிரக மண்டலத்தில் விளங்கும் வியாழன் எனும் தேவகுரு பிரகஸ்பதி - எனக் கொள்ளாமல் வணங்கி வழிபட வேண்டுகின்றேன்.

அன்பால் அடிகை தொழுவீர் அறியீரே
மின்போல் மருங்குல் மடவாளொடு மேவி
இன்பாயிரும்பூளை இடங்கொண்ட ஈசன்
பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே!.. (2/36)
திருஞானசம்பந்தர்.

திருச்சிற்றம்பலம்.
* * *

14 கருத்துகள்:

 1. ஆலங்குடி கோயில்
  பலமுறை சென்று வந்த கோயில் ஐயா
  இன்று தங்களால் மீண்டும் சென்று வந்தேன்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

   நீக்கு
 2. கம்ப்யூட்டர் செய்த தொல்லையால், நாளும் ஒரு பாவையை நான் பார்க்காமல் போனேன். நேரம் கிடைக்கும் போது அனைத்தையும் படித்து விடுவேன்.

  ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் பற்றிய தகவல்கள் மற்றும் அங்கே அர்த்தமற்று நடக்கும் சம்பிரதாயங்கள் பற்றியும் நன்றாகவே சொன்னீர்கள். எல்லா இடங்களிலும் நடப்பதுதான். நானும் ஒருமுறை இந்த ஆலங்குடி சிவன் தலத்திற்கு சென்று இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   ஆலங்குடியின் நடப்புகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு
 3. தங்களால் மீண்டும் தரிசனம் கிடைத்தது ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

   நீக்கு
 4. வணக்கம் ஐயா!

  தினந்தினம் தந்திடும் திவ்விய தரிசம்!
  அழகிய படங்களும் அறியாத பல தகவல்களும் மிகச் சிறப்பு!

  நன்றியும் வாழ்த்துக்களும் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி..
   தங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. ஆலயங்களை அறியத் தந்தீர்கள் ஐயா...
  படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

   நீக்கு
 6. வணக்கம் நண்பரே... மன்னிக்க தங்களது இரண்டு, மூன்று பதிவுகள் வரமுடியவில்லை. காரணம் எனது கணினியை கூட்டிப்பெருக்கிறேன் அவ்வளவு விடயங்கள் வலைச்சரத்தில் கோர்த்த மாலையால்...

  பிரமாண்டமான பதிவு நிறைய விசயங்கள் அறியத் தந்தமைக்கு நன்றி.

  குறிப்பு நமது நண்பர் தேவகோட்டை திரு. ஜி. கணேசன் அவர்கள் தங்களைப் பாராட்டச் சொன்னார்கள் சொல்லி விட்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   கணினி பராமரிப்பு அவசியம் .. மிக அவசியம்..
   நண்பர் தேவகோட்டை திரு ஜி. கணேசன் அவர்களுக்கு எனது மகிழ்ச்சியைக் கூறவும்..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

   நீக்கு
 7. நாச்சியார் கோவில் கருடாழ்வார், மிக அழகாய் இருப்பார்.
  குடும்ப நிர்வாகத்தில் மனைவியின் பங்கு மிகவும் முக்கியம் இல்லையா!

  எல்லா நவக்கிரக கோவில்களும் இப்போது அமைதி இழந்து தான் போய் விட்டது. முன்பு நவக்கிரகவழி பாடு விமர்சிசையாக இல்லாத போது கோவில்கள் சுத்தமாக அமைதியாக இருந்தது.
  பாடல் பகிர்வும்,, கோவில் பற்றிய விரிவான செய்திகளும், படங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   ஆலயங்களின் நிலையைப் பதிவு செய்தமைக்கு நன்றி..
   தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..