நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 25, 2014

மார்கழிக் கோலம் 10

குறளமுதம்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (072)


தம்மையே - இந்த தரணிக்குத் தந்தவர்கள்!..

* * *
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை 10


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற
 அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம். 
* * *
ஆலய தரிசனம்
தில்லை விளாகம்.


மூலவராகப் பொலிபவன் - ஸ்ரீ வீர கோதண்டராமன்.

(பதிவிடும் போது மேனி சிலிர்த்து சில நிமிடங்கள் செயலற்றவனாகினேன்)
ஆளுமையுடன் விளங்கும் திருமேனி. 

பாத நரம்புகளும் திருவிரல் நகங்களும் மச்சங்களும் தெளிவாக மிகத் தெளிவாகத் திகழும் திருமேனி!..

ஹிரண்ய கர்ப்பமாக பூமிக்குள்ளிருந்து வெளிப்பட்ட திருமேனி. 

நேற்று வடுவூர் ஸ்ரீ கோதண்ட ராமனும் பூமிக்குள்ளிருந்து வெளிப்பட்டவன் எனக் கண்டோம்!.

மிகச் சமீபத்தில் அற்புதம் நிகழ்த்தியவன் - தில்லை விளாகம் ஸ்ரீராமன்!..

அந்த அற்புதம் நிகழ்ந்த ஆண்டு - 1862!.

அது அழகான கிராமம். தில்லை விளாகம் என்பது அதன் பெயர். 

அங்கே வேலுத் தேவர் என்பவர் ராமபிரானிடம் பக்தி கொண்டு வாழ்ந்தவர். அவருக்கு நெடுநாளாக ஆசை. 

ராமனுக்கென்று ஒரு திருப்பணி செய்ய வேண்டும் என்று!..

அதற்கான வேளையும் வந்தது. ஒரு நாள் விடியற்காலையில் கண்ட கனவை - ஸ்ரீராமனின் கட்டளையாகக் கொண்டார். 

ஊரில் ஒரு பகுதியில் இருந்த குளக்கரையில் ஊர் மக்கள் அனைவரும் கூடி பூமி பூஜை செய்து வேலையை ஆரம்பித்தனர். சில அடிகள் தோண்டியதுமே பூமிக்குள் புதைந்திருந்த செங்கற்கள் வெளிப்பட்டன. 

ஆச்சர்யம் கொண்ட மக்கள் பொறுமையாகத் தோண்டியவுடன் பூமிக்குள் புதையுண்டிருந்த பெரிய கட்டிடத்தைக் கண்டுபிடித்தனர். 

ஸ்ரீராமர், சீதா, இளையபெருமாள், அனுமன், ஸ்ரீ கிருஷ்ணன், ருக்மணி, சத்யபாமா, ஸ்ரீசுதர்சனம் - என அழகிய திருமேனிகள் வெளிப்பட்டன.


மந்தஸ்மிதம் எனும் மந்தகாசப் புன்னகை தவழ கம்பீரத்துடன் விளங்கும் ஸ்ரீராமனின் பேரழகிற்கு ஆட்பட்டனர் - அங்கிருந்த மக்கள். 

சிறைதாக குடில் அமைத்து அன்புடன் வழிபட்டனர்.

நாளடைவில் ஸ்ரீராமனின் அழகையும் அருளையும் உணர்ந்து கொண்ட மக்கள் பல திசைகளிலில் இருந்தும் வந்தனர் - வணங்கி வழிபடுவதற்கு!..

வந்து நிற்போரின் வாட்டம் தீர்த்தான் வள்ளல்!..

அப்படி வாட்டம் தீரப்பெற்றவர்களுள் ஒருவர் - லால்குடியைச் சேர்ந்தவர்.  ஸ்ரீமான் கோபால கிருஷ்ண ஐயர். பெருந்தனக்காரர்.

அவரது புத்திர தோஷம் இத்தலத்தில் நீங்கியதால் - தன் குறை தீர்த்த கோமகனுக்கு தனது செல்வத்தினையும் ஊர் மக்களின் ஒத்துழைப்பினையும் பேரருளாளனின் பெருந்திறத்தையும் கொண்டு திருக்கோயில் எழுப்பினார். 

திருக்கோயில் கட்டத் தொடங்கிய ஆண்டு - 1905.
திருக்குடமுழுக்கு நிகழ்ந்த ஆண்டு - 1913.

இத்திருக்கோயிலின் மூலஸ்தானத்தில் சிலா ரூபங்கள் கிடையாது. 

பூமிக்குள்ளிருந்து வெளிப்பட்ட பஞ்சலோகத் திருமேனிகளே மூலஸ்தான திருமேனிகளாக விளங்குகின்றன.

முன்மண்டபத்தில் கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் திகழ்கின்றார்.

கொடிமரம் பலிபீடம் கடந்தால் ஐயனின் சந்நிதி.

பார்க்கப் பார்க்கப் பரவசமாகின்றது. 
வள்ளல் ராமபிரானிடம் எதுவுமே கேட்கத் தோன்றுவதில்லை.
நமக்கு எதெல்லாம் தேவையோ - அவைகளை அவனே அருளுகின்றான்.

உற்சவத் திருமேனிகள் பின்னாளில் வடிக்கப்பட்டவை.

மூல மூர்த்தியாக விளங்கும் ஸ்ரீராமன் நாலரை அடி உயரமுடையவன். ஸ்ரீராமனின் திருக்கரத்தில் விளங்குவது கோதண்டத்துடன் ஸ்ரீராமசரத்தினை ஏந்தியவனாக ஸ்ரீராமன் விளங்குகின்றான்.

ஸ்ரீராமபிரானின் இடது கை மணிக்கட்டில் ரட்சை ஒன்று கட்டப்பட்டுள்ளது. அது - தன் பிள்ளைக்கு அன்னை கௌசலை கட்டியது என்கின்றனர் ஆன்றோர்.

அடக்க ஒடுக்கமாக - பணி கேட்டு நிற்கும் பாவனையில் ஆஞ்சநேயர்!..

பின்னும் கோயில் திருப்பணிக்காக அருகில் இருந்த குளக்கரையில் அகழ்ந்த போது - ஸ்ரீநடராஜப் பெருமானும் சிவகாமசுந்தரியும் வெளிப்பட்டனர்.

இந்த சம்பவம் நிகழ்ந்த ஆண்டு - 1892!..

தகவல் அறிந்த நாட்டுக் கோட்டை நகரத்தார் ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு திருக்கோயில் எழுப்பி திருவிளக்கேற்றி வைத்தனர்.

இரு திருக்கோயில்களும் அருகருகே விளங்குகின்றன.

சைவமும் வைணவமும் தழைத்திருக்கின்றது - தில்லை விளாகத்தில்!..

சிவபெருமானிடம் ஸ்ரீராமன் மந்த்ரோபதேசம் பெற்ற கோயிலூர் - இங்கிருந்து 15 கி.மீ.,

ராம காதையுடன் தொடர்புடையதாக -  

ஜாம்பவான் ஓடை, கழுவங்காடு, தம்பிக்கோட்டை, தாமரங்கோட்டை, அதிவீர ராமன்பட்டினம் (அதிராம்பட்டினம்) என தலங்கள் ஆங்காங்கே திகழ்கின்றன.


மயிலாடுதுறை - காரைக்குடி இருப்புப் பாதை தடத்தில் திருத்துறைப் பூண்டிக்கு அடுத்து உள்ள நிலையம். ஆனால் - இப்போது இந்த தடத்தில் ரயில்கள் இயங்குவதில்லை.

பட்டுக்கோட்டையிலிருந்து வேதாரண்யம் செல்லும் பேருந்துகள் திருக்கோயில் வாசலில் நின்று செல்கின்றன.

தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை வழியாக வேதாரண்யம் செல்லும் பேருந்துகளில் தில்லை விளாகத்திற்குப் பயணிக்கலாம்.

தாமரங்கோட்டையில் இருந்தபோது - பல முறை தில்லை விளாகம் ஸ்ரீராமனைத் தரிசனம் செய்திருக்கின்றேன்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளாயம் முதலிய நாட்களில் வேதாரண்யம் சென்று கடலில் நீராடுபவர்கல் திரும்பி வரும் போது இங்கும் தீர்த்தமாடி வழிபடுகின்றனர்.


அனைத்து வைபவங்களும் சிறப்புற நிகழ்கின்றன. 
கடந்த 23/3/2013ல் மஹாசம்ப்ரோக்‌ஷணம் நிகழ்ந்துள்ளது.

இதுவே தில்லை சித்ர கூடம் என்றும் குறிப்பிடுகின்றனர். 

ஆதியில் பரத்வாஜ ஆஸ்ரமம் இருந்த இடம்தான் இன்றைய தில்லைவிளாகம் என்று அறியப்பட்டுள்ளது. 

ராவணனை வீழ்த்திய பின் - அயோத்தி திரும்பும் வழியில் - பரத்வாஜ ஆஸ்ரமத்தில் தங்கி உணவு உண்டு இளைப்பாறியதாக ஐதீகம்..

இளைப்பாறிய ஸ்ரீராமன் - நம்மையும் இளைப்பாற்றுகின்றான்!..
களைப்பு தீர்ந்த ஸ்ரீராமன் - நம்மையும் கரையேற்றுகின்றான்!..

பாராளும் படர்செல்வம் பரதநம்பிக்கே அருளி
ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே
சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே
தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ!.. (723)

மலையதனா லணைகட்டி மதிளிலங்கை அழித்தவனே
அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே
கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே
சிலைவலவா சேவகனே சீராம தாலேலோ!.. (726)
குலசேகராழ்வார்.
* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 09


முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்கராவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்!..
* * *

திருக்கோயில்
திரு சிக்கல்


இறைவன் - நவநீதேஸ்வரர்
அம்பிகை - வேல்நெடுங்கண்ணி
தலவிருட்சம் - மல்லிகை
தீர்த்தம் - க்ஷீர தீர்த்தம்.

தலப்பெருமைஅழகே உருவான சுந்தர விநாயகர்.
திருமுருகன் சிங்கார வேலனாக அருளாட்சி புரியும் திருத்தலம்.
சைவமும் வைணவமும் ஒருங்கே விளங்கும் திருத்தலம். 

சூர சம்ஹாரத்திற்கு முன் முருகப்பெருமான் அம்மையையும் அப்பனையும் பணிந்து வணங்கியது இங்கேதான்!.. 

அவ்வேளையில் -  

சூரனைச்  சம்ஹாரம் செய்க!.. என்று  சிவபெருமான் வழங்கிய வேலாயுதத்தில்,  அம்பிகை தானும் உட்கலந்தனள். 

அதனாலேயே - முருகப்பெருமானின் திருக்கரத்தினில் திகழ்கின்ற வேல் சக்திவேல் - என்றானது.

சக்திவேல்!.. சக்திவேல்!.. சக்திவேல்!..  என்று வானவர் போற்றித் தொழ -

வஞ்சனையும் வல்வினையும் மாய்வதற்கு - என வந்த வடிவேலன்-

யாமிருக்க பயமேன்!.. - என சாந்நித்யம் கொண்டு பொலிந்த திருத்தலம்.


இன்றும் சூரசம்ஹாரப் பெரு விழாவில் - அன்னை வேல்நெடுங்கண்ணியின் திருக்கரங்களில் இருந்து -

எம்பெருமான் முருகன் வேலாயுதத்தினைப் பெறும் போது - அவன் திருமேனியில் முத்து முத்தாக வியர்க்கின்றது.

வசிஷ்ட மகரிஷி காமதேனுவின் பாலிலிருந்து திரண்ட வெண்ணெயை சிவலிங்கத் திருமேனியாகப் பூஜித்த திருத்தலம். 

வழிபாடுகள் நிறைவுற்ற பின் விசர்ஜனம் செய்ய முயற்சிக்கையில் சிக்கலானது. 

இறைவனின் நாட்டத்தால் வெண்ணெய் இறுகி அங்கேயே நிலைத்து விட்டது.

நவநீதம் என்றால் வெண்ணெய். 
எனவே, ஈசனுக்கு - வெண்ணெய்ப் பிரான் என்பது திருப்பெயர். 

கிழக்கு நோக்கிய திருக்கோயில். மாமன்னர் கோச்செங்கட்சோழர்  எழுப்பிய  மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று..


நெடிதுயர்ந்த ராஜகோபுரம். தலைவணங்கி திருக்கோயினுள் நுழைகின்றோம். 

கொடி மரம் பலி பீடம். நந்தியம்பெருமான். மேல் தளத்தில் சிவ சந்நிதி. 

வலப்புறம் அம்பிகை வேல்நெடுங்கண்ணியின் சந்நிதி!.. 

வேத வேதாந்தங்களைக் கடந்த வேதவல்லி.
வேதனைகளைத் தீர்ப்பதற்காக வேல்நெடுங்கண்ணி என விளங்குகின்றாள்.

நான் உன் அருகிருக்கையில் எதற்கு இந்த மனவாட்டம்!.. - என கருணை பொழிகின்றாள். 


திருஞானசம்பந்தப் பெருமான் பாடிப் பரவிய திருத்தலம்.

நெய்தல் நிலத்தில் நீல நிற மலர்கள் நிறைந்த சுனைகளைக்  கொண்டதும், சேல் எனும் மீன்கள் துள்ளி விளையாடும் வயல் வளம் நிறைந்ததுமான - சிக்கல் என்னும் திருத்தலத்தில்,

வேல் போன்ற ஒளி நிறைந்த கண்களை உடைய - தேவியை ஒரு பாகமாகக் கொண் பாலின் வண்ணமாக விளங்கும் வெண்ணெய்ப் பிரானின் திருவடிகளைப் போற்றி வணங்கிட  நம் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

- என்று ஞானசம்பந்தப்பெருமான் போற்றி வணங்குகின்றார்.

அம்பிகைக்கு உகந்த மல்லிகை இங்கே தல விருட்சமாகத் திகழ்கின்றது. 

வசிஷ்டரிடம் வளர்ந்த பசு - நந்தினி.  

இது காமதேனுவின் மகள். தாயைப் போலவே தயாள குணம். 
வசிஷ்டரின் சிவபூஜைக்காக - பாலைச் சுரக்க அது குளமாக தேங்கியது. 

அதுவே தீர்த்தம். பால் குளம் - க்ஷீரதீர்த்தம்.

சிவாலயத்தின்  திருச்சுற்றில் - 
ஸ்ரீ கோலவாமனப் பெருமாள் திருக்கோயில் கொண்டு விளங்குகின்றார். 

அருகில் ஸ்ரீவரசித்தி ஆஞ்சநேயரும் சந்நிதி கொண்டு அருள்கின்றார்.

வரசித்தி ஆஞ்சநேயருக்கு தயிரன்னம் நிவேத்யம் செய்து வழிபட எண்ணிய நல்ல செயல்கள் தடங்கல் இல்லாமல் ஈடேறுகின்றன. 
  
அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற திருத்தலம்.


நாகையில் வணிகம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் -  
கடலில் பெரும் புயல் மழையில் சிக்கி,
கரை காணாது தவித்தபோது  -
அவர்களுக்குக் காட்சி கொடுத்து
காப்பாற்றிக் கரை சேர்த்தவள் -


அன்னை வேல்நெடுங்கண்ணியே!.. 

இவளைத்தான் மொழியும் 
மொழியின் வளமையும் அறியாத மாற்றார் 
வேளாங்கண்ணி என்றனர்.

இன்னும் பலர் வேளாங்கன்னி என கற்பிதம் செய்து கொண்டு 
அதற்கொரு புனைவையும் கூறுகின்றனர்.

உலகின் எந்த ஒரு மூலையிலும் தாய்மை என்னும் 
தனித்துவத்திற்கு மாற்றமே இல்லை.


உலகில் அற்புதங்கள் நிகழ்த்துதற்காக - தயாபரன்
மகவாகத் தோன்றுங்கால் அவனுக்கும் 
ஒரு தாய் மடி தேவையாகின்றது.
அந்தவகையில் தாய்மை சிறப்பிக்கப்பட்ட நாள் இன்று.


எளியோர் ஏற்றம் பெற இவ்வுலகிற்கு வந்து
எளியோர்க்கும் எளியோனாக வாழ்ந்து காட்டிய
இயேசு கிறிஸ்து அவதரித்த நன்னாள்..

இறைமகனுக்குப் பல்லாண்டு!..
ஈன்றெடுத்த மாதரசி மரியாளுக்குப் பல்லாண்டு!..
தோள் கொடுத்துத் துணை நின்ற சூசையப்பனுக்கும் பல்லாண்டு!.

எந்த ரூபத்தில் எனைத் தியானித்தாலும் அந்த ரூபத்தில் 
அவர்களுக்கு இன்னருள் பொழிவேன்!.. 
என்பது கீதாச்சாரியனின் வாக்கு. 

யாதுமாகி நின்றாய் காளீ!..
என்கின்றார் மகாகவி பாரதியார்.

நீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய
சேலு மாலுங்கழ னிவ்வளம் மல்கிய சிக்கலுள்
வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்
பாலவண் ணன்கழ லேத்தநம் பாவம் பறையுமே!..(2/8)


திருஞானசம்பந்தர்.

திருச்சிற்றம்பலம்..
* * *

12 கருத்துகள்:

 1. முதல் படம் அருமை ஐயா
  இவ்வுண்மையை உணர்ந்தால்
  உலகில் சண்டை சச்சரவுகள் ஏது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தாங்கள் கூறுவது மிகச் சரியே..
   இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

   நீக்கு
 2. மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு ஐயா...

  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி..

   நீக்கு
 3. முதல் படம் மிக மிக அருமை. மற்ற படங்கள், செய்திகள் எல்லாம் அருமை.
  எளியோருக்கு எளியோனாக வாழ்ந்து காட்டிய இயேசுவை போற்றுவோம்.
  அன்பும், கருணையும் இந்த புவி எங்கும் தழைக்கட்டும்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. தில்லைவளாகம் சென்றுள்ளேன். தாங்கள் கூறிய கோயில்களைப் பார்த்துள்ளேன். தங்களது பதிவுகள் மூலம் மறுபடியும் அக்கோயில்களுக்குச செல்லும் வாய்ப்பு கிடைத்தது. களப்பணியின்போது புத்தர் சிலை என்று சொல்லி ஒரு சமணர் சிலை இவ்வூரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இக்கோயில்களுக்குச் சென்றுள்ளேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   கூடுதல் தகவல் அளித்தமைக்கு நன்றி..
   தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

   நீக்கு
 5. தில்லை வளாகம் பற்றியத் தகவல்கள் அறிந்துக் கொண்டேன்.
  இனிய கிறிஸ்துமஸ் தின நல வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகைக்கும் அன்பின் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி

   நீக்கு
 6. அருமையான பகிர்வு ஐயா...
  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..
   தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..