நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 01, 2024

குரு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 18
திரு ஓணம்
புதன்கிழமை

இன்று 
நடராஜர் அபிஷேகம்


அரியானை அந்தணர் தம் சிந்தையானை 
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் 
திகழ் ஒளியைத் தேவர்கள் தம் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 6/1/1.
-: திருநாவுக்கரசர் :-


நிகழும் குரோதி வருடம் சித்திரை 18  புதன்கிழமை (1/5) கிருஷ்ண பட்சத்து, அஷ்டமி திதி, திருவோண நட்சத்திரம் கூடி விளங்குகின்ற நன்னாளில் பிரகஸ்பதியாகிய குருபகவான் சர வீடான மேஷ ராசியில் இருந்து ஸ்திர வீடான ரிஷப ராசிக்குள் மதியம் ஒரு மணியளவில் (மாலை 5 மணி) பெயர்ச்சியாகிறார்..

பிரகஸ்பதி எனும் இவர் தேவர்களுக்கு குருவாக - நவக்ரஹ மண்டலத்தில் விளங்குபவர்..

பொன்னன் என்ற சிறப்புடைய இவர் ஒருவர் மட்டும் தான் நவகிரகங்களில் முழு சுபக் கிரகமாகத் திகழ்பவர்..


புத்திகாரகன்.. நல்ல புத்திக்கு அதிபதி.. நல்ல புத்தியை அருள்பவர்..

சப்தரிஷிகளுள் ஒருவரான ஆங்கீரஸ முனிவருடைய மகனான இவர்
எண்ணற்ற யாகங்களைச் செய்து ஈசனை வணங்கி
தேவர்களின் குருவாக வரம் பெற்றார்.. 

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வதற்கு இவர் எடுத்துக் கொள்ளும் மாதங்கள் பன்னிரண்டு..

மீண்டும் ஒரு ராசிக்குள் பிரவேசிப்பதற்கு  பன்னிரண்டு வருடங்கள்.. இதுவே வியாழ வட்டம்.. 

குருவாகிய வியாழ பகவான் சிம்ம ராசியில் இருக்க, கும்ப ராசியில் (மாசி மாதத்தில்) சூரியன் இருக்க, மக நட்சத்திரமும், நிறை நிலவும் சேர்கின்ற நாளே மகாமகப் புண்ணிய நாளாகும்.. 

ஜோதிட இயலின்படி -
மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகியன  நட்பு
வீடுகள். 
கடகம் உச்ச வீடு.
தனுசு, மீனம் ஆட்சி வீடுகள்.. 
ரிஷபம் மிதுனம் துலாம் பகை வீடுகள்..

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை குருவின் நட்சத்திரங்கள்..


குருவிற்கு அதிதேவதை பிரம்மன்..
இவருக்குரிய உலோகம் பொன்..
இவருக்குரிய ரத்தினம் புஷ்பராகம்.
தானியம் கடலை.. இவருக்குரிய நிறம் மஞ்சள் ..
முல்லையும் ஆம்பலும் இவருக்குரியவை..
இவரது வாகனம் யானை.
திசை - வடகிழக்கு எனப்படும் ஈசான்யம்..

ஒரு ஜாதகத்தில் குரு நன்றாக அமைந்திருந்தால் நல்ல பிள்ளைகள், அவர்களால் முன்னேற்றம், மகிழ்ச்சி ஏற்படும்.. கம்பீரமான தோற்றம், புகழ், வெற்றி, நல்ல சுற்றம், நண்பர்கள், வீடு வாகனம் இவை குருவின் அருளால் அமைகின்றன..

குரு சரியாக அமையவில்லை எனில் - 
அந்த ஜாதகர் ஒழுக்க நெறிகளைக் கைவிடுவார்..
தெய்வ நிந்தனை விளையும்..
பெரியோர் சொல் கேட்காமல்   பொய் பேசுவார். உறவுகளுடன் பகை ஏற்படும்..

தீய பலன்கள் குறைந்து நல்ல 
பெருகுவதற்கு - குரு பகவானுக்கு உரிய வழிபாட்டினை 
சரியாகச் செய்தல் வேண்டும்..

எளியோர்க்கு - தான தர்மங்கள் செய்வது பரிகாரங்கள் ஆகும்..
(நன்றி - ஜோதிட மலர்)

ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு பொன் தானம் வழங்குவதும் 
கோயிலுக்கு மஞ்சள் தானம் செய்வதும் மஞ்சள் நிறத்தில் உடுத்திக் கொள்வதும்

மஞ்சள் நிற ஆடைகளையும் கடலையையும் எளியோர்க்கு தானம் கொடுப்பதும் வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வதும்   உகந்தவை.. 

வீட்டில் - குரு பகவானுக்கு என்று சுத்தமான நெய் தீபம் ஏற்றி முல்லை மலர்களுடன் வழிபடுதல் வேண்டும்..
முல்லை மலர் கிடைக்காத பட்சத்தில் நறுமணம் உடைய  மலரையும் எந்த சேர்த்துக் கொள்ளலாம்..

தென்குடித்திட்டை
குரு பகவான் சிவபெருமானை வணங்கிய தலம் - 
தஞ்சையை அடுத்து - தேவாரத் திருப்பதிகம் பெற்றதான,
தென்குடித் திட்டை ..

ஸ்ரீ குரு பகவான் - திட்டை
இங்கு அமைந்துள்ள ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக் கோயிலில் - சிவ மூலஸ்தானத்திற்கும்
அம்பிகை மூலஸ்தானத்திற்கும் நடுவில் - தெற்கு நோக்கி ராஜ குருவாக  சந்நிதி கொண்டுள்ளார்..

இவரது தலங்கள்:
திருச்செந்தூர், திருவலிதாயம்..

திருச்செந்தூரில் முருகப்பெருமானிடம் தேவர்களின் இன்னல்களையும்  சூரபத்மாதியரைப் பற்றியும் விவரித்துக் கூறியதாக புராணம்..

முருகப்பெருமானை வனங்குவதாலும் பிரம்மனை வனங்குவதாலும் பிரம்மன் வணங்கி நலம் பெற்ற சிவாலயங்களைத் தரிசிப்பதாலும் தேவகுருவாகிய குருபகவானின் அருளைப் பெறலாம்..

சிவ ஆலயங்களில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை சிவ திருக்கோலமாகவே வணங்க வேண்டும்.. வேறு விதமாக வணங்குதல் தகாது..

நிகழும் குருப் பெயர்ச்சியினால் அனைவரது வாழ்விலும் நன்மைகள் பெருகட்டும்..

பீஜ மந்திரம்
ஓம் பிரஹஸ்பதயே நம:

காயத்ரி
ஓம் விரு‌ஷபத் வஜாய வித்மஹே 
க்ருணி ஹஸ்தாய தீமஹி 
தந்நோ குரு: ப்ரசோதயாத்

ஸ்லோகம்
தேவாணாம் ச ரிஷிணாம் ச குரும் 
காஞ்சன ஸந்நிபம் புத்தி பூதம் 
திரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

 1. விளக்கமான தகவல்கள்.  நான் புனர்பூச கடகன்.  எனக்கு என்ன பலன்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இங்கு பலன்கள் ஏதும் சொல்ல வில்லையே..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம்...

   நீக்கு
 2. சிறப்பான பகிர்வு.

  குரு பகவானை வணங்கி நிற்போம் அனைவர் நலன்களையும் காக்க வேண்டுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி மாதேவி..

   நீக்கு
 3. ஓம் நமசிவாய
  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
 4. குருபார்க்க கோடி நன்மை என்பார்கள். குருவின் பார்வை அனைவருக்கும் கிடைக்கட்டும்.
  இன்று நடராஜர் அபிஷேக படங்கள், சாரின் அண்ணா அனுப்பி இருந்தார்கள். வீட்டில் செய்வார்கள். ஆலங்குடி மூலவர் அபிஷேக, அலங்கார காட்சிகளும் கிடைத்தன.

  இங்கும் தென்குடித் திட்டை கோவில், மற்றும் திருச்செந்தூர் முருகன் தரிசனம் கிடைத்தது.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குருபகவானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..