நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 19, 2024

அரசு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 6
ஞாயிற்றுக்கிழமை


அரச மரம்..

இம்மண்ணுக்கே உரிய மரம்..

ஒரு மணி நேரத்தில் அதிக அளவு உயிர்வளியை  இவ்வுலகிற்கு வழங்கி முதலிடத்தில் திகழ்வது - அரச மரம்..

அரசமரம்.. அதன் கீழ் பிள்ளையார்.. அருகில் ஒரு குளம்..

இது தானே அன்றைய கிராமங்களின் அடையாளம்!..

இப்படியான அரச மர நிழலில் தான் ஊர்ப் பஞ்சாயத்துக்கள் நடைபெற்றன.. 

அரச மரம் இருபத்து நான்கு மணி நேரமும் சுத்தமான காற்றை வெளியிடுவதாக  சொல்லப்படுகின்றது..


எனவே தான்  ஆறு குளம் போன்ற பொது
இடங்களில் இம்மரத்தை வளர்த்து அதன் கீழ் விநாயக மூர்த்தியை வைத்தனர்.. வனங்கினர் - ஆன்றோர்..

அரச இலைகளின் சலசலப்பு மணிகளைப் போல ஒலிக்கும்.. 

அரச மரத்தின் நிழலில் நேர் நிறை ஆற்றல் நிறைந்திருக்கும்.. 


அரச மரத்தின் வேரில்  பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் சிவபெருமானும் விளங்குவதாக புராணங்கள்.. இதனாலேயே இது அரச மரம்.. ராஜ விருட்சம்..

' மரங்களில் நான் அரசமரமாக இருக்கின்றேன்..  - என்பது கீதாச்சாரியனின் திருவாக்கு..


சமய உணர்வுடைய ஹிந்துக்களுக்கு புனித மரம்.. இதன் சுள்ளிகள்  வேள்விப் பொருட்களில் முதலிடம் பெறுபவை...

மக்கள் அரச மரத்தை வணங்கி நின்றதைக் கண்டு - எள்ளி நகையாடி இழித்துப் பழித்த போது - ஏதும் சொல்லுதற்கு இயலாதவர்களாகி நின்றோம்..

இன்றைக்கும் - மரத்தைக் கும்பிடுபவன் மடையன் என்றே நம் ஊரில் அறியப்படுகின்றது.. 

அரச மரம் தருகிஞ உயிர்வளி மட்டும் வேண்டும் என்றால் எப்படி?..

அரச மரத்தைச் சுற்றினால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இந்நாட்டின் சமயம் சார்ந்த மக்களின் நம்பிக்கை..
 
இதன் காரணமாகவே அரசினை நம்பி - என்றொரு சொல் வழக்கு உருவாகி - அரசனை நம்பி என்று சிதைந்து ஏளனத்துக்கு உள்ளானது..

அரச மரத்தைச் சுற்றி வந்து ஆதாயம் பெற்றோர் ஆயிரம் ஆயிரம் பேர்..

அரச மரம் வெளியிடுகின்ற காற்றைச் சுவாசிக்கின்ற பெண்களுக்கு மாதச்சுழற்சி மற்றும் கர்ப்ப சம்பந்தமான பிரச்னைகள் சீரடைகின்றன -  என்று அறியப்பட்டுள்ளது..

முன்னோர்களின் அறிவாற்றலுக்கு இதுவும் ஒரு சாட்சி..

இருந்தும் இன்று ஊருக்கு ஊர் செயற்கை மருத்துவ முறைகளை மக்கள்
நாடுவது வியப்பு தான்..

அன்றைய நாட்களில் பெண் குழந்தை தளர் நடை இடும் பருவத்தில் இடுப்பில் அரசிலை என்றொரு  ஆபரணம் சாற்றுவது வழக்கம்.. இது தாய் மாமன் செய்ய வேண்டிய சடங்கு..

அஞ்சாம் மாசம் அரசிலை செய்யப் போனவன் திரட்சியின் போது திரும்பி வந்தானாம்.. - என்று, கால தாமதத்திற்கான - சொல் வழக்கும் உண்டு..

இப்போது அரசிலை சாற்றுகின்ற சம்பிரதாய சடங்கு இல்லை..

அரசிலைக்கு  மேகலை என்றும் பெயர்..  அரச மகளிர்க்கான ஆபரணங்களில் மேகலையும் ஒன்று.. 

மகாபாரதத்தில் துரியோதனின் மனைவியுடன் கர்ணன் பகடை ஆடிய போது அவனுக்குப் பின்புறமாக தனது கணவன் வருவதை கண்ணுற்று -  அரசியான பானுமதி எழுந்திருக்க,

அது கண்டு கர்ணன் கை நீட்ட அதற்குப் பின் நிகழ்ந்தது நட்பின் உச்சம்..


மேலை நாகரிகத்தில் காதலின் அடையாளமாகக் குறிக்கப்படுகின்ற அடையாளம் இதயத்திற்கானது என்று சொல்லப்பட்டாலும் அது மேகலையின் அடையாளம்...

மேலும், அறிவாற்றல் இம்மரத்தின் நிழலில் விளைகின்றது என்பதும் உண்மையே.. 

இதன் பொருட்டே 
ஞானத்தின் வடிவாகிய விநாயகர் அரச மரத்தின் கீழ் திகழ்கின்றார்..

மதுரையம்பதியில் அரசரடி என்றொரு வட்டாரம் பிரசித்தம்.. அங்கே அரசரடிப் பிள்ளையார் சிறப்புடையவர்..


திருமூலர் திரு ஆவடுதுறையில் அரச மரத்தின் கீழ் யோகத்தில் இருந்தே
திருமந்திரம் எனும் ஞான நூலை அருளினார்..

சித்தார்த்தர் - ஞானம் பெற்று புத்தர் என்றானதும் அரச மரத்தின் கீழ் இருந்தே..

இம்மரத்தின் இலைகளில் புல்லை விட  கூடுதலாகப் புரதச் சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதனால் அவை எளிதில் செரிக்கப்பதில்லை - என்கின்றனர் வல்லுநர்கள்..

ஆயினும் ஆடு மாடுகள் விரும்பித் தின்கின்றன.. யானைகளுக்கு அரச இலை விருப்பமான உணவு..

அரசங்காய்கள் முத்து முத்தாக இலைக் காம்பினை ஒட்டியவாறு காணப்படும்.. அரசம் பழங்கள் பறவைகளுக்கு மிகவும் பிடித்தமானவை.. 

அரசங் கன்றுகள் ஆங்காங்கே முளைப்பதற்கு பறவைகளே காரணம்..

ஹிந்து திருமணங்களில் அரசாணிக்கால் (அரசாணைக் கால்) என்று நாட்டுவது அரச மரத்தின் சிறு கிளையைத் தான்..

அரசம் பட்டைகள் சித்த வைத்தியத்தில் மருந்து ஆகின்றன.. 

அரச மரத்தின் விதைகள் உயிர்த் திரளை அதிகரிக்க வல்லவை.. தக்க மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது..

அரச மரத்தை மனதில் நினைத்து வணங்கினாலே புண்ணியம் என்கின்றனர்..

அரசூர், அரசம்பட்டி என்று பல ஊர்கள் அதன் சிறப்பைக் காட்டுதற்கே..

அரச மரம் - திருவாவடுதுறை, திருநல்லம், திருப் பரிதிநியமம், ஆவூர்ப் பசுபதீச்சுரம் , திருஅரசிலி , திருவியலூர், திருவெண்காடு , திருச்சுழியல்  முதலிய சிவத்தலங்களின் தலவிருட்சம்.
 
அரச மரத்தை
வணங்குவோம்
வளம் பெறுவோம்..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. அரச மரத்தின் சிறப்புக்களைப் பற்றி நன்கு கோர்வையாக சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் ரசித்துப் படித்தேன்.

  எங்கள் அம்மா வீட்டில் வசித்த போதே இந்த அரச மரம் எங்கள் வீட்டு கோவில் அருகே இருந்தது. மிகப் பழைமையான நூறாண்டுகளுக்கும் மேலான மரம். எங்கள் தாத்தா காலத்தில் கன்றாக வைத்து பூஜித்து வளர்க்கப்பட்ட மரம். அருகிலேயே அழகான வாய்க்கால் ஓடிக் கொண்டிருந்தது. தினமும் காலையில், (காலை 9 மணிக்குள் பிரதட்சணம் செய்ய வேண்டுமென வீட்டுப் பெரியவர்கள் சொல்லி, அதன்படி பிரதட்சணம் செய்துள்ளேன்.) மந்திரம் ஜபித்தபடி பிரதட்சணம் செய்துள்ளேன்.

  உங்கள் பதிவை படிக்கையில் அம்மரத்தில் கூடி அமர்ந்திருக்கும் பட்சிகளின் இனிய சங்கேத மொழிகளும், காற்றில் ஆடும் இலைகளின் சங்கீத ஓசைகளும் எனக்கு மலரும் நினைவுகளாக வந்தன. பழைய நினைவுகளை பகிர்ந்தளித்த இந்தப்பதிவுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மலர்ந்த நினைவுகள்..
   மகா புண்ணியம்..

   மகிழ்ச்சி..
   நன்றி..

   நீக்கு
 2. சிறப்புகள் பற்றி அறிந்தேன். மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 3. அரசு என்பதை பார்த்ததும், ஆச்சரியம், நம்ம துரை அண்ணா அரசு பற்றி எழுதத் தொடங்கிருக்காரா என்று. பதிவுக்கு வந்ததும் தெரிந்தது அரச மரம் பற்றி நல்ல குறிப்புகள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /// அரசு என்பதை பார்த்ததும்,.. ///

   அந்த அளவுக்கெல்லாம் தகிரியம் கிடையாது..

   மகிழ்ச்சி..
   நன்றி சகோ

   நீக்கு
 4. அரசமரம் குறித்த தகவல்கள் சிறப்பு ஜி

  பதிலளிநீக்கு
 5. அரசமரம் பற்றிய விரிவான தகவல்கள். பலபுதியனவையும் அறிந்தோம்

  .பெண்குழந்தைக்கு இடுப்பில் அரசிலை ஆபரணம் அணிவது இப்பொழுதுதான் அறிந்தேன்.
  தங்கத்தில் கம்பி வளையத்தில் அரசிலை மாட்டி காதில் போடுவார்கள். இப்பொழுதும் போடுகிறார்கள்.

  கிராமங்களில் அரசு மரத்தின்கீழ் பிள்ளையார் வழிபாடு எமது நாட்டீலும் ஊருக்கு ஊர் இருந்திருக்கிறது. அரசடி, அரசடிவீதி, என்ற பெயர்களும் இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /// கிராமங்களில் அரசு மரத்தின் கீழ் பிள்ளையார் வழிபாடு எமது நாட்டிலும் ஊருக்கு ஊர் இருந்திருக்கிறது. ///

   மகிழ்ச்சி..
   நன்றி மாதேவி..

   நீக்கு
 6. அரசமரத்தைப் பற்றிய தகவல்கள் நன்று .

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 7. அரசமரத்தின் பெருமைகளை நன்றாக சொன்னீர்கள். பதிவு அருமை.
  இப்போதும் அரசமரத்தை சுற்றி நாகங்களை அமைத்து அதற்கு பால் அபிஷேகம் செய்து சுற்றி வர சொல்கிறார்கள்.
  திருவெண்காட்டில் பெரிய அரசமரம் நிறைய நாகசிலைகள் இருக்கும் , மூன்று குளத்திலும் நீராடி, மரத்தை சுற்றி வந்து நாகர் சிலை வடித்து வைப்பவர்கள் உண்டு. இங்கு(அரிசோனாவிலும்) மகா கணபதி கோவிலில் அரச மரம் இரண்டு உண்டு. அரசமரத்தின் அடியில் பிள்ளையார், ராகு, கேது வைத்து இருக்கிறார்கள் மக்கள் நம்பிக்கையுடன் சுற்றி வந்து வணங்குகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /// திருவெண்காட்டில் பெரிய அரசமரம் நிறைய நாக சிலைகள் இருக்கும் ///

   நான் தரிசனம் செய்திருக்கின்றேன்...

   மேலதிக விவரங்கள் சிறப்பு..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..